உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 8-இ

லெக்ஸேய் வெகு நேரம் தாமதித்து உறக்கத்திலிருந்து எழுந்தான். ஏதோ மகிழ்வு நிறைந்த உணர்வுடன் அவன் கண் விழித்தான். தூக்கமா? எப்பேர்பட்ட தூக்கம் … உறக்கத்தில் கூட அவன் கை இறுகப் பற்றியிருந்த சஞ்சிகை மீது அவன் பார்வை விழுந்தது. லெப்டினன்ட் கார்ப்போவிச் கசங்கிய பக்கத்திலிருந்து முன் போலவே விரைப்பாக, வீரம் திகழப் புன்னகை செய்து கொண்டிருந்தான். மெரேஸ்யெவ் சஞ்சிகையைப் பார்த்துக் கண் சிமிட்டினான்.

அதற்குள் முகங்கழுவித் தலைவாரிக் கொண்டு தயாராக இருந்த கமிஸார் புன்சிரிப்புடன் அலெக்ஸேயைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

“அவனைப் பார்த்து என்ன கண்ணடிக்கிறாய்?” என்று மனநிறைவுடன் வினவினார்.

“பறப்போம்” என்று விடையிறுத்தான் அலெக்ஸேய்.

“எப்படி? அவனுக்கு ஒரு பாதந்தான் இல்லை, உனக்கோ, இரண்டு கால்களுமே கிடையாதே?”

“ஆனால் நான் சோவியத் குடிமகன், ருஷ்யன் ஆயிற்றே!” என்றான் மெரேஸ்யெவ்.

அவன் லெப்டினன்ட் கார்ப்போவிச்சைக் கட்டாயம் முந்தி விடுவான், விமானம் ஓட்டுவான் என்பதை இந்த விஷயம் உத்தரவாதப்படுத்தியது போலிருந்தது இந்தச் சொற்களை அவன் உச்சரித்த தோரணை.

அறைத்தாதி கொண்டு வந்த காலையுணவு அனைத்தையும் சாப்பிட்டுவிட்டு, வெறும் தட்டுக்களை வியப்புடன் நோக்கி, இன்னும் கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டான். நரம்புக் கிளர்ச்சி நிலையில் இருந்தான் அவன். பாடினான், சீழ்கை அடித்துப் பார்த்தான், தனக்குத் தானே உரக்கத் தர்க்கம் செய்து – கொண்டான். தலைமை மருத்துவர் பார்வையிட வந்தபோது அவரது மனநிலை வாய்ப்பாக இருந்ததைப் பயன்படுத்திக் கொண்டு, விரைவில் உடல் நலம் அடைவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேள்விகளாகக் கேட்டு அவரைத் துளைத்து விட்டான். நிறைய சாப்பிடுவதும் உறங்குவதுமே இதற்குத் தேவை என்று அறிந்து, பகல் சாப்பாட்டின் போது இறைச்சி வடைகள் இன்னும் வேண்டும் என்று கேட்டுத் தின்னமாட்டாமல் திண்டாடிச் சிரமப்பட்டு அவற்றையே உள்ளே தள்ளினான். பகல் வேளையில் ஒன்றரை மணி நேரம் போல மூடிய கண்களுடன் படுத்திருந்தான் ஆயினும் அவனால் உறங்க முடியவில்லை.

இன்பம் மனிதனை சுயநலமி ஆக்கிவிடுகிறது. தலைமை மருத்துவரைக் கேள்வியால் நச்சரித்த அலெக்ஸேய், வார்டு முழுவதும் கருத்து செலுத்திய ஒரு விஷயத்தைப் பார்க்காமலே இருந்துவிட்டான். வஸீலிய் வஸீலியெவிச் வார்டைப் பார்வையிட வழக்கம் போலவே நேரம் தவறாமல் வந்துவிட்டார். பகல் போதில் வெயிலொளி மெதுவாக தரை மீது ஊர்ந்து வார்டு முழுவதையும் கடக்கும். அது சிலும்பு எழும்பிய பிளாச்சு விளிம்பை எட்டுவதும் அவர் அறைக்குள் வருவதும் ஒருங்கே நிகழும். அன்று வெளிப்பார்வைக்குத் தலைமை மருத்துவர் முன்போலவே கவனம் உள்ளவராக காணப்பட்டார்.

படிக்க:
மைய நீரோட்டமாக மாறிவரும் இந்து பயங்கரவாதம் !
மின் கட்டணம் : ஆணையங்களுக்கே ஆணையம் அமைக்கும் மோடி அரசு !

எனினும் இயல்புக்கு முற்றிலும் மாறான உள்ளார்ந்த ஞாபக மறதிக்கு அவர் ஆளாகியிருப்பதை எல்லாரும் கண்டார்கள். அவர் திட்டவில்லை. வழக்கம் போலக் காரசாரமான சொற்களைப் பிரயோகிக்கவில்லை. அவரது சிவந்து வீங்கிய கண்களின் ஓரங்களில் நரம்புகள் இடைவிடாது துடித்தன. மாலையில் அவர் வாடி, தென்படும் அளவுக்குக் கிழடு தட்டிப் போயிருந்தார். கதவுப் பிடியில் துணியை மறந்து விட்ட அறைத் தாதியை தணிந்த குரலில் கடிந்து கொண்டார். கமிஸாரின் உடற்சூடு பற்றிய குறிப்பைப் பார்வையிட்டார், அவரது சிகிச்சை முறையில் மாறுதல்கள் செய்தார், பின்பு அவர் போன்றே எங்கோ நினைவாக மௌனமாயிருந்த உதவியாளர்கள் பின் தொடர் வெளியே போனவர் நிலையில் இடறி விழத் தெரிந்தார். நல்லவேளையாக மற்றவர்கள் பிடித்துக் கொண்டதால் தப்பினார்.

மறுநாள் காலை எல்லாம் தெளிவாகிவிட்டது. தலைமை மருத்துவரின் ஒரே மகன் மேற்குப்போர் முனையில் கொல்லப்பட்டுவிட்டான். அவன் பெயரும் வஸீலிய் வஸீலியெவிச், அவனும் மருத்துவன். அவன் பெருத்த விஞ்ஞானி ஆவான் என்ற நம்பிக்கை இருந்தது. தகப்பனாருக்கு அவனைப் பற்றி ஒரே பெருமை, அவனே அவரது மகிழ்ச்சியாக இருந்தான். அத்தகைய மகனை அவர் பறிகொடுத்து விட்டார். தலைமை மருத்துவர் வழக்கம் போல வார்டுகளைச் சுற்றிப் பார்க்க வருவாரா மாட்டாரா என்று மருத்துவமனை முழுவதும் குறித்த நேரத்தில் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. நாற்பத்து இரண்டாவது வார்டுக்காரர்கள் தரை மீது வெயில் புலப்படா வகையில் மெதுவாக ஊர்வதை இறுக்கத்துடன் கவனித்துக் கொண்டிருந்தார்கள். முடிவில் வெயில் சிலம்பு எழும்பிய பிளாச்சு விளிம்பை எட்டியது. எல்லோரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள் – வர மாட்டார் என்று.

ஆனால் அந்தச் சமயத்தில் பழக்கமான கனத்த அடிவைப்பும் பல துணையாளர்களின் பூட்சொலியும் ஆளோடியில் கேட்டன. தலைமை மருத்துவர் முந்தைய நாளை விட நன்றாகக் கூடக் காணப்பட்டார். அவருடைய விழிகள் சிவந்திருந்தன, இமைகளும் மூக்கும் கடுமையான ஜலதோஷத்தின் போது இருப்பது போல வீங்கியிருந்தன என்பது உண்மையே. கமிஸாரின் மேஜை மேலிருந்து உடல் வெப்பக் குறிப்பை எடுத்தபோது, பருத்த தோலுரிந்த அவருடைய கைகள் வெளித்தெரியும்படி நடுங்கின என்பதும் உண்மையே. ஆனால், அவர் முன்போலவே சுறுசுறுப்பாகவும் காரிய நாட்டம் கொண்டவராகவும் இருந்தார். அவருடைய கத்தலும் அதட்டலும் தாம் மறைந்துவிட்டன.

காயமடைந்தவர்களும் நோயாளிகளும் தங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டவர்கள் போல எப்படியாவது அவருக்கு மகிழ்ச்சியூட்ட முயன்றார்கள். அன்று அவர்கள் எல்லோருக்கும் உடல்நிலை முன்பை விட சீர்பட்டு இருந்தது. மிகக்கடும் நோயாளிகள் கூட எதுவும் குறை சொல்லவில்லை, தாங்கள் குணமடைந்து வருவதாகக் கூறினார்கள். எல்லோருமே கொஞ்சம் அதியுற்சாகத்துடன் கூட, மருத்துவமனை ஒழுங்குமுறையைப் புகழ்ந்தார்கள். பல்வேறு சிகிச்சை முறைகள் ஏதோ மந்திர சக்தி போலப் பயன் விளைப்பதாகச் சொன்னார்கள். பொதுவான பெருந்துயரத்தால் ஒன்று இணைக்கப்பட்ட நட்பார்ந்த குடும்பமாக விளங்கியது மருத்துவமனை.

இன்று காலையிலிருந்தே தமக்கு இத்தகைய சிகிச்சை வெற்றி கிடைப்பது என்ன காரணத்தால் என்று வார்டுகளைச் சுற்றிப் பார்க்கையில் வியந்தார் வஸிலிய் வஸீலியெவிச்.

உண்மையில் வியப்படைந்தாரா? இந்த மௌனச் சூழ்ச்சியை ஒருவேளை அவர் கண்டுகொண்டார் போலும். அப்படிக் கண்டுகொண்டார் என்றால், தமது ஆற்ற முடியாத பெரும் புண்ணைத்தாங்கிக் கொள்வது அவருக்கு முன்பை விட எளிதாயிற்று போலும்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க