ல்கலைக்கழக அளவில், தமிழில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் பெரும்பாலும் சடங்குகளாகி வருகின்றன. பதவி உயர்வுகளுக்கு ஆய்வுப் பட்டங்கள் இன்றையமையாத் தகுதிகளாக வற்புறுத்தப்பட்ட பின்பு, ஆய்வாளர்களின் எண்ணிக்கை கூடியது. வருமானத்துக்காக மட்டுமே பதவிகளையும் படிப்பையும் ஏற்றவர்கள், ஆய்வுகளையும் செய்து தொலைக்க வேண்டிய கடனாகக் கருதினார். இதனால் புறநானூற்றில் பூச்சிகள், சிலப்பதிகாரத்தில் பூண்டுகள் என்ற போக்கிலேயே ஆய்வுகள் தொடர்கின்றன. தமிழ் ஆய்வுகளைப் பொறுத்தமட்டிலும் தரமான ஆய்வுகளைச் செய்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

தரமான ஆய்வு நூல்களைத் தேடிப்பிடிக்க வேண்டிய ஒரு சூழலில் மா.உத்திராபதியின் எம்.ஃபில். பட்டத்துக்கான ஆய்வு, ”காலந்தோறும் நந்தன் கதை” என்ற தலைப்பில் நூலாக வருகிறது.

எம்.ஃபில். பட்டத்துக்கான ஆய்வு என்ற எல்லைக்குள் நின்று இந்த நூலைப் படிக்கும்பொழுது, இது பத்தோடு பதினொன்று என்று எண்ணிச் செல்ல வேண்டிய ஒரு நூலாகப் படவில்லை. ஆய்வாளரின் ஈடுபாடும், முயற்சியும் நமது கவனத்தை ஈர்க்கின்றன. இது பார்வையிழந்த மாணவர் ஒருவரின் நூல் என்று யாராலும் பரிந்துரைக்கப்பட வேண்டிய தேவையைத் தவிர்த்து நிற்கின்றது.

‘அடியும் முடியும்’ என்ற நூலில், ‘புலைப்பாடியும் கோபுர வாசலும்’ என்ற கட்டுரையில், க. கைலாசபதி, நந்தன் கதையை ஆராய்ந்துள்ளார். இது அந்த ஆய்வின் தொடர்ச்சியாக நீள்கிறது. நந்தனைப் பற்றிய ஒரு புதினம், ஒரு சிறுகதை, ஒரு கதா காலட்சேபம், ஒரு நாடகம், ஒரு கவிதை,  ஒரு வில்லுப்பாட்டு ஆகியவை ஆய்வுக்குரியவையாகின்றன. இவை 1917-ல் இருந்து, 1982 வரை படைக்கப்பட்டவை. இந்தக் கால கட்டங்களில், நந்தன் என்ற கதாபாத்திரம் தமிழ்ச் சமுதாய மாற்றத்தின் தவிர்க்க முடியாத குறியீடாக இருக்கிறான்.

தீண்டாமைக்கும், சமூக ஒடுக்குமுறைக்கும் எதிரான குரல் ‘நந்தன்’ என்ற கதாபாத்திரத்தின் மூலமாகத்தான் உரக்கக் கேட்கிறது.

விவேகானந்தரிலிருந்து ஜெயகாந்தன் வரை நந்தன்களை மேல்நிலையாக்கம் செய்யும் நோக்கங்களை வலியுறுத்துகின்றனர். இந்த நோக்கங்கள் இன்றளவும் ஈடேறவில்லை; அது மட்டுமன்று நந்தனுக்குப் பூணூல் போட்டுப் பார்ப்பது எந்த அளவில் அவனை விடுதலை பெற்ற மனிதனாக்கும் என்பதும் நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.

… பூணூலும் வேத பாராயணமும், விடுதலைக்கான சின்னங்கள் அல்ல. அவை மரபு வழிப்பட்ட ஒடுக்குமுறைச் சின்னங்கள், இன்று கல்விகற்று அதிகாரத்தில் அமரும் ஒரு சில தாழ்த்தப்பட்டவர்கள் பூணூல் அணியாதிருக்கலாம். வேதம் ஓதாதிருக்கலாம் – ஆனால் அவர்கள் பெற்ற கல்வி விடுதலைக்கான கல்வி அன்று. வளர்த்துக்கொண்ட சிந்தனை விடுதலைக்கான சிந்தனையன்று. இதனால் அவர்கள் இந்த வாழ்க்கை முறையை உடைப்பதற்கு மாறாக உறவுகளை உடைத்துக் கொள்கிறார்கள், மனோபாவத்தால் ஒடுக்குமுறையாளர்களுடனேயே தங்களை அடையாளப்படுத்த விரும்புகிறார்கள். இங்கு மேனிலையாக்கம் என்பது இந்த வகையில் நடைபெறுகிறது என்று சொல்லலாம்…

… ‘காலந்தோறும் நந்தன் கதை’ ஆய்வு நூலைப் படித்து முடித்தால் இன்னும் நந்தன் கதைகளும், அவை தொடர்பான ஆய்வுகளும் வளரும் என்றே தோன்றுகிறது. நந்தனுடைய விடுதலை நந்தன் தன்னை அந்தணனாகக் காண்பதில் இல்லை, புலையனாகக் காண்பதில் இல்லை, மனிதனாகக் காண்பதிலேயே என்றும் கூறத் தோன்றுகிறது. (நூலுக்கான அணிந்துரையில் இன்குலாப்)

வேதங்கள், பிராமணங்கள், உபநிடதங்கள், ஆரண்யங்கள் போன்ற மிகப்பழமையான நூல்களில் எண்ணற்ற கதைக் குறிப்புகள் காணக்கிடக்கின்றன. இவை பின்னர் இதிகாசங்களாகவும் புராணங்களாகவும் காப்பியங்களாகவும் உருப்பெற்றன. இவ்வாறு உருவாகிய கதைகளில் வரும் கதை மாந்தர்களின் பெயர்கள் மக்களின் அன்றாடப் பேச்சு வழக்கிலும் அடிப்படுவதைக் காணலாம். அந்த அளவிற்கு இவை மக்களின் அடிமனத்தில் இடம் பெற்றுள்ளன.

… தமிழ் இலக்கியத்திலும் இம் மரபைக் காணலாம். கண்ணகியைப் பற்றிய கதைகள் பலவும் இம் மரபில் தோன்றியவை. பெரிய புராணத்தில் கூறப்பட்டிருக்கும் அறுபத்தி மூன்று நாயன்மார்களின் கதைகளில் பல இம் மரபில் பிற்காலத்தில் பல்வேறு வடிவங்களில் இலக்கியப் படைப்புகளாக உருப்பெற்றிருக்கின்ற. இங்ஙனம் இம்மரபிற்கு உட்படுத்தப்பட்ட கதைகளில் திருநாளைப் போவார் எனும் நந்தனார் கதையும் ஒன்று.

தமிழ்நாட்டில் சாதி அடிப்படையில் உயர்வு தாழ்வு கருதுவதும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு மனித உரிமைகள் மறுக்கப்படுவதும் பன்னெடுங்காலமாக இருந்து வருகின்றன. கீழ்ச்சாதியினருக்கும் மேற்சாதியினருக்கும் இடையேயுள்ள முரண்பாடுகளின் தன்மை காலத்திற்குக் காலம் வேறுபட்டு வந்துள்ளது. கீழ்ச்சாதியினர் தம் நிலையை உயர்த்திக் கொள்ள பலவாறு முயற்சிகள் மேற்கொண்டு வந்துள்ளனர். இம்முயற்சிகள் இன்றும் முரண்பாடுகளுக்குத் தீர்வு காணுமளவிற்கு வெற்றிபெறவில்லை. தொடர்ந்து நிலவும் முரண்பாடுகள் படைப்பிலக்கியத்தின் கவனத்தை ஈர்ப்பது இயல்பே. கீழ்ச்சாதியைச் சேர்ந்த நந்தனின் கதை இலக்கியப் படைப்பாளிகளால் மீண்டும் மீண்டும் மறுபரிசீலனை செய்யப்பட்டு, புதிய கருத்துக்களுடன் மறுவார்ப்பு செய்யப்படுவதை காணலாம்.

இந்த ஆய்விற்கு இருபதால் நூற்றாண்டில் படைக்கப் பெற்ற ஆறு படைப்புகள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டன… ஒவ்வோர் இலக்கிய வடிவத்திற்கும் ஒரு நூல் மட்டுமே ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

படிக்க:
கார்ப்பரேட்களின் நன்கொடையில் 93 % பெற்றது பாஜக தான் !
தில்லை கோயில் உரிமைக்காக நடந்த போராட்ட விவரங்கள் !

நூல், முன்னுரை, முடிவுரை நீங்கலாக, ஏழு இயல்கள் கொண்டது. முதல் இயலில், புராணக்கதைகள், பழங்கதைகள் ஆகியவை இலக்கியங்களில் ஏன் இடம்பெறுகின்றன என்பது பற்றியும் யுங், பிரை, கைலாசபதி, ஆகியோர் கருத்துக்கள் விவாதிக்கப்படுகின்றன… அடுத்த ஆறு இயல்களில் முறையே நந்தன் கதையின் தாக்கத்தில் படைக்கப்பட்ட ஆறு நூல்களும் ஒவ்வொன்றாக ஆய்விற்கு உட்படுத்தப்படுகின்றன. ஒவ்வோர் இயலிலும், அந்நூல் தோன்றிய காலத்து சமூக அரசியல் சூழல் விவரிக்கப்பட்டு அவ்வக் காலக் கருத்துக்கள் எவ்வாறு இலக்கியப் படைப்பைப் பாதித்திருக்கின்றன என்பது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. காலத்தேவையை பூர்த்தி செய்வதில் ஒவ்வொரு நூலும் எந்த அளவிற்கு வெற்றி கண்டுள்ளது, எவ்வகையில் குறைபாடுடையது என்பனவும் விவாதிக்கப்படுகின்றன. (நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து)

நூல் : காலந்தோறும் நந்தன் கதை
ஆசிரியர் : மா. உத்திராபதி

வெளியீடு : அலைகள் வெளியீட்டகம்,
எண் : 5/ 1 ஏ, இரண்டாவது தெரு,
நடேசன் நகர், இராமாபுரம்,
சென்னை – 600 089..
தொலைபேசி எண் : 98417 75112.

பக்கங்கள்: 124
விலை: ரூ 50.00

இணையத்தில் வாங்க : marinabooks

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க