ந்தியா டிஜிட்டல் மயமாகிவிட்டதாக மோடி அரசு பெருமை கொள்கிறது. இந்தப் பெருமை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம்கூட எடுபடவில்லை. சர்வதேச ஆய்வாளர்களைக் கொண்ட குழு ஒன்று இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் குறித்த அடிப்படைத் தகவல்களைக் கேட்டு 700 மின்னஞ்சல்களை அனுப்பியிருந்தது. இதில் 10% மட்டுமே பதில் மின்னஞ்சல் கிடைத்துள்ளது. 90% எம்.பி.க்கள் மின்னஞ்சலை கண்டுகொள்வதில்லை என்கிறது இந்த ஆய்வு!

“ஆய்வுக்குழுவில் இருந்து 727 மின்னஞ்சல்கள் எம்.பி.க்களுக்கு அனுப்பப்பட்டன. இதில் 69 மின்னஞ்சல்களுக்கு மட்டுமே பதில் மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றோம். அதாவது 9.5% மட்டுமே பதில் கிடைத்திருக்கிறது. பத்தில் ஒரு எம்.பி. மட்டுமே எங்களுடைய தகவலுக்கான வேண்டுகோளுக்கு பதில் அனுப்பியிருக்கிறார்” என அந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வில் மிலன் வைஷ்ணவ், சாக்‌ஷாம் கோஸ்லா, ஐடன் மிலிஃப், ரேச்சல் ஒஸ்னோஸ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

அனைத்து மின்னஞ்சல்களும் தொடர்புடைய எம்.பி-க்களின் தொகுதிக்குட்பட்டவர்களின் முகவரியுடன் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எம்.பி.-க்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கீடு பற்றிய தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன.

மற்ற ஜனநாயக நாடுகளில் குறிப்பாக வளர்ந்த நாடுகளிலும் வளர்ந்து வரும் தென் ஆப்பிரிக்கா போன்ற நாட்டிலும் இதுபோன்ற ஆய்வில் கிடைத்த மறுமொழியைக் காட்டிலும் மிக மிகக் குறைவான அளவிலேயே இந்திய எம்.பிக்களிடம் பதில் கிடைத்துள்ளதாக ஆய்வுக்குழு கூறுகிறது.

இதிலும்கூட மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநிலங்களவை உறுப்பினர்களைக் காட்டிலும் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் மக்களவை உறுப்பினர்களே பொறுப்புடன் பதில் அளித்துள்ளனர்.

பதில் அளித்தவர்களில் 58% உதவும்விதமாக பதில் அளித்துள்ளனர். ஒரு எம்.பியிடமிருந்து வந்த பதிலில், “உங்கள் மின்னஞ்சலுக்கு நன்றி. இந்த ஆண்டுக்காக கே.வி. பள்ளிகளின் சேர்க்கை முடிந்துவிட்டது. மாணவர்கள் தற்போது வகுப்பில் உள்ளனர். எங்களுடைய தொகுதி அலுவலகத்துடன் தொடர்பில் இருங்கள். அடுத்த ஆண்டுக்கான பட்டியலில் சேர்க்கலாம்” என பதில் அளித்துள்ளார்.

மற்றொரு எம்.பி. “நீங்கள் தாமதமாக கேட்கிறீர்கள். நாங்கள் ஏற்கனவே விண்ணப்பத்தையும் பெயர்களையும் அனுப்பி விட்டோம்” என முகத்தில் அடித்தாற்போல, யாதொரு உதவியும் செய்யாத பதிலை அனுப்பியுள்ளார்.

படிக்க:
♦ ஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் !
♦ மோடியின் டிஜிட்டல் இந்தியா : ஒராண்டில் சூறையாடப்பட்ட வங்கிப் பணம் 41,000 கோடி ரூபாய் !

இந்தியா போன்ற சமூகப் பிளவுகளை அதிகமாகக் கொண்ட நாட்டில் எம்.பி.க்களின் பதில் அளிக்கும்விதம் மதத்தை அடிப்படையாகக் கொண்டு மாறுகிறதா எனவும் இந்தக் குழு ஆய்வு செய்தது. முசுலீம்கள் அதிகமாக உள்ள தொகுதிகளில் பதிலளிக்க பாஜக எம்.பி.க்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதுபோல வளர்ந்த நாடுகள், இனப்பாகுபாடு பார்ப்பதும் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் கறுப்பின உறுப்பினர்கள், கறுப்பின பெயர்களுக்கு பதில் அளிப்பதற்கு முன்னுரிமை தந்துள்ளனர். அவர்களுக்கு உதவியான பதிலையும் தந்துள்ளனர். இது இந்தியாவின் முடிவுகளுடன் ஒத்துப்போகவில்லை என்றாலும் வர்க்கம், சாதி, பாலினம் வயது அல்லது மொழியின் அடிப்படையில் ஆராயும்போது வேறுபட்ட முடிவுகள் சாத்தியமாகியிருக்கும் என்கிறது ஆய்வு.

வியப்பூட்டும்வகையில் பாஜக எம்.பிக்களும், பணக்கார எம்.பிக்களும் அதிகமாக பதில் அளித்துள்ளனர். அவர்களின் விகிதாச்சாரம் 44%. அதே சமயம் காங்கிரஸ் எம்.பி.க்களின் பதில் அளிக்கும் விதம் மோசமான நிலையில் உள்ளது. வெறும் 6% பேர் மட்டுமே பதில் அளித்துள்ளனர்.

மேலும், இந்த ஆய்வில் சமூக ஊடகங்களில் தீவிரமாக இயங்கும் எம்.பி.க்கள் விசாரணைகளுக்கு பதிலளிக்க ஆர்வம் காட்டியுள்ளனர். தொழிற்நுட்பத்தை கையாள்வதில் திறன் மிக்க இளம்/படித்த எம்.பி.க்கள் பதிலளிக்க ஆர்வம் காட்டவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ் அப் அனுப்புவது மட்டுமே பரவலாக உள்ள டிஜிட்டல் தகவல்தொடர்பு என்பதையும் சுட்டிக்காட்டுகிறது ஆய்வு.

‘டிஜிட்டல்மயமான நிர்வாகம்’ என மோடி பெருமைசாற்றிக்கொள்ளும் அதே வேளையில், 786 பாராளுமன்ற உறுப்பினர்களில் 727 பேரின் இமெயில் முகவரி மட்டுமே சரியானதாக உள்ளது. மீதமுள்ள 173 எம்.பி.க்களின் இமெயில் முகவரிகள் எழுத்துப் பிழையுடனோ அல்லது செயல்படாததாகவோ உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் இந்தியாவில் மின்னணு நிர்வாகம் கடக்க வேண்டிய தூரம் நிறைய உள்ளது என்கிற உண்மையைச் சொல்லியிருக்கிறது இந்த ஆய்வு.


கலைமதி
நன்றி: தி வயர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க