பி.பி.சி இணையதளத்தில் “கடன் செயலி மோசடி : கடன் வாங்கி விட்டு உயிர் பயத்தில் வாழும் இந்தியர்கள்’’ என்ற தலைப்பில் ஜூன் 9, அன்று ஒரு செய்தி வெளியிட்டிருந்தனர். அதில், பூனேவில் உள்ள ராஜ் என்பவர் ஆன்லைன் செயலியைப் பயன்படுத்தி கடந்த மார்ச் மாதம் உடனடிக் கடன் பெற்றுள்ளார். அதற்காக அவர்கள் சொல்லும் ஒரு செயலியை அவர் தனது செல்பேசியில் தரவிறக்கம் செய்துள்ளார். அவர்கள் கேட்கும் தன்னுடைய அடையாள ஆவணங்களையும், அவர்கள் கேட்கும் அனைத்திற்கும் அனுமதி அளித்து உள்ளார். அதன் பின்னர், ரூ.5,000 கடன் கேட்டுள்ளார். அவர் கேட்ட தொகையில் 70% தான் கிடைத்துள்ளது. மீதம் 30% “பிராசஸிங்’’ கட்டணம் என அவர்கள் எடுத்துக் கொண்டுள்ளனர். இருப்பினும், உடனடியாகப் பணம் கிடைத்துள்ளது.
அதன் பின்னர் 3 நாட்களில் உடனடியாக மூன்று மடங்கு பணத்தைக் கட்ட வேண்டும் என்று அந்தக் கடன் செயலி நிறுவனத்திலிருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், உங்களது குடும்பத்தைத் தொடர்பு கொள்வோம் அல்லது நீங்கள் வேலை செய்யுமிடத்தைத் தொடர்பு கொள்வோம். இது உங்களது கௌரவத்துக்கு இழுக்காக அமையும்.
மேலும், நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியில் உங்களைக் கருப்புப் பட்டியலில் வைக்குமாறு கோருவோம். எனவே, இந்த எச்சரிக்கைகளை உணர்ந்து உடனடியாகக் கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்துங்கள் என்று அக்கும்பலால் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், உன் தொலைபேசித் தொடர்பில் உள்ள அனைவருக்கும் உன் மனைவியின் போட்டோவை ஆபாசமாக மாற்றி அனுப்புவோம் என மிரட்டத் தொடங்கியுள்ளனர்.
படிக்க :
♦ இசக்கிமுத்துக்களை தற்கொலைக்குத் தள்ளும் கந்துவட்டி அரசுக் கட்டமைப்பு !
♦ ரூ. 10,72,000 கோடி : மோடியின் ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்ட வாராக்கடன் !
இவற்றைக் கண்டு பீதியடைந்த அவர் போலீசுத் துறையிடம் செல்லவும் பயந்துள்ளார். ஏனென்றால், அவர்கள் கூறும் செயலியை அவர் தனது செல்பேசியில் தரவிறக்கம் செய்யும் போதே, அவருடைய அனைத்துத் தரவுகளையும் (தொடர்பு எண்கள், கேலரி ஃபோட்டோக்கள் மற்றும் வீடியோக்கள்) இந்தக் கடன் வழங்கும் மோசடி கும்பல் தரவிறக்கம் செய்து கொண்டது. அவற்றை வைத்து அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து மிரட்ட முடியும்.
ஒரு செயலியில் இருந்து வாங்கிய கடனை திருப்பி தருமாறு மிரட்டல்விடும் நேரத்தில், வேறு ஒரு செயலி கடன் தருவதாக அவரிடம் விளம்பரம் செய்யும். அதிலும் கடன் பெற்று முன்பு கடன் வாங்கிய செயலிக்கு கட்டணம் செலுத்தியுள்ளார் ராஜ். அப்படி பல செயலிகளில் கடன் வாங்க வைத்து கூடுதல் பணம் கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளியுள்ளது போலி கடன் செயலில் மாஃபியா கும்பல்.
இப்போது அவரது கடன் தொகையானது, ரூ. 35,000 அளவுக்கு அதிகரித்துள்ளது. தன் மனைவியின் நகைகளை விற்று கடன்களை அடைத்துள்ளார். ஆனாலும் மிரட்டல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. “அவர்கள் என்னை உயிரோடு விடமாட்டார்கள்’’ என்று புலம்பிக் கொண்டிருக்கிறார் ராஜ்.
இதேபோன்ற போலி கடன் செயலியால் பாதிக்கப்பட்ட சந்தீப் கோர்கோன்கர் என்பவருக்கு மிரட்டல் விடுத்த கடன் செயலி கும்பல், அவரது புகைப்படங்களை நிர்வாணமாக மார்ஃபிங் செய்து 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு பகிர்ந்துள்ளது. இதனால் மன உலைச்சளுக்கு ஆளான சந்தீப் கடந்த மே 7 அன்று தற்கொலை செய்து கொண்டார். இதேபோல், செங்கல்பட்டு – மதுராந்தகம் அருகே ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கிய வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இப்படி எத்தனை பேர் பலியாகியுள்ளார்கள் என்ற விவரம் தெரியவில்லை.
இத்தகைய கடன் மோசடி செயலிகள் தற்போது புற்றீசல்கள் போலப் பெருகிவிட்டன. கடந்த ஜனவரி 1, 2020 முதல் மார்ச் 31, 2021 வரை இந்திய ரிசர்வ் வங்கி நடத்திய ஆய்வில், 600 சட்ட விரோத கடன் செயலிகள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக, மாகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து மட்டும் இத்தகைய மோசடி நிறுவனங்களைப் பற்றி 572 புகார்கள் ரிசர்வ் வங்கிக்கு வந்துள்ளன.
போலி கடன் வழங்கும் செயலிகளைக் கட்டுப்படுத்த முடியாத இந்திய அரசானது, இது போன்ற போலி செயலிகளை “கூகுள் பிளேஸ்டோர்”-லிருந்து நீக்குமாறு கூகுள் நிறுவனத்திற்கு அறிவுறுத்தியது. இதன்படி கடந்த ஆண்டில் 500 செயலிகளுக்கு மேல் கூகுள் நிறுவனமும் நீக்கம் செய்துள்ளதாகத் தெரிவித்தது. ஆனாலும், மோசடி செயலிகள் புதுப்புது பெயர்களில் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கின்றன.
ஆன்லைன் கடன் வழங்கும் செயலிகள் மட்டுமல்லாது, ஆன்லைன் சூதாட்டம் (ரம்மி), ஆபாச இணையதளங்கள், மாணவர்கள் – இளைஞர்களை அடிமையாக்கும் ஆன்லைன் வீடியோ கேம்கள் முதலானவற்றால் இன்று ஒட்டுமொத்த சமுதாயமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு சீரழிந்துக் கொண்டிருக்கிறது. இதனால் பல குடும்பங்கள் வீதியில் நிற்கின்றன. பல குடும்பங்கள் அவமானத்தால் தற்கொலை செய்து கொள்கின்றன.
ஆன்லைன் சூதாட்டத் தடைக்கான அவசரச் சட்டம் 2020-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்டது. உடனே ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் இதற்கெதிராக வழக்கு தொடுத்தன. இதை விசாரித்த உயர் நீதிமன்றமும் “ஆன்லைன் ரம்மி என்பது ஒரு சூதாட்டம் அல்ல; அது ஒரு திறன் சார்ந்த விளையாட்டு; இதைத் தடுக்க முடியாது; ஒழுங்குபடுத்தத்தான் முடியும்’’ என்று கூறி ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டம் செல்லாது என தீர்ப்பு அளித்தது.
மக்களிடம் இத்தகைய மோசடி செயலிகள், சூதாட்டங்களுக்கு எதிரான பொதுக்கருத்தும் குமுறலும் தீவிரமடையும்போது, அவற்றைத் தடுப்பதைப் போன்ற தோற்றத்தை அரசாங்கம் ஏற்படுத்துகிறது. ஆனால், கொல்லைப்புறமாக அதே மோசடி நிறுவனங்களை அரவணைத்துக் கொள்கிறது என்பதையே இத்தீர்ப்பு நிரூபித்துக் காட்டுகிறது.
படிக்க :
♦ ஏர் இந்தியா – டாடாவுக்கு ! அதன் கடன்சுமை மக்களுக்கு !!
♦ மதுரை : கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை
இணைய தளத்தின் வழியாகப் பணப் பரிவர்த்தனை நடப்பதென்பது, தகவல் தொழில்நுட்பத் துறையில் நிகழ்ந்துள்ள ஒரு புதிய பாய்ச்சலின் விளைவாகும். இது, மூலதனம் வெகுவிரைவாக சுழல்வதற்கு வாய்ப்பை வழங்குகிறது. முதலாளித்துவ நிறுவனங்கள் இத்தகைய முறையில், பண பரிவர்த்தனை மட்டுமின்றி கடன் வழங்கவும் செய்கின்றன. இதில் யார் நேர்மையானவர், யார் போலி என்று கண்காணித்து கட்டுப்படுத்தும் அதிகாரம் இந்திய அரசாங்கத்துக்கு இல்லை. ஏற்கெனவே இருந்த பெயரளவிலான கட்டுப்பாடுகளும் தாராளமயத்துக்குப் பின்னர் கைவிடப்பட்டுள்ளன. இதனால், இவற்றைச் சாதகமாக்கிக் கொண்டு புற்றீசல்போல் பல்வேறு மோசடி நிறுவனங்கள் உருவாகி மக்களை ஏமாற்றி வருகின்றன.
அரசு வங்கிகளில் திரட்டப்பட்டுள்ள நமது சேமிப்புகளை எடுத்து, தனியார் முதலாளிகளுக்குக் கடன் கொடுத்து சேவை செய்வதுதான் தனியார்மயம் – தாராளமயம். பெரும் கடன்களை திருப்பிச் செலுத்தாமல் வாராகடன்களாக மாற்றி வருகின்றனர் கார்ப்பரேட் முதலாளிகள். பின்னர், இந்த வாராக்கடனைகளை வசூலிக்க இயலாது என்று தள்ளுபடி செய்கிறது அரசு.
தேக்குப் பண்ணைத் திட்டம், இறால் பண்ணைத் திட்டம், ஈமு கோழித் திட்டம் என்ற பெயரில் மோசடிகள் தொடர்ந்தாலும், இணையத்தில் ஆபாசக் காணொளிகள் ஏராளமாக நிரம்பி வழிந்து சமுதாயத்தைச் சீரழித்தாலும் அவற்றையெல்லாம் தடுக்க முடியாத இந்திய அரசாங்கம், கடன் வழங்கும் மோசடி நிறுவனங்களை மட்டும் எப்படி தடுக்கும்?
ஏகாதிபத்திய சார்பு, தனியார் ஏகபோக முதலாளித்துவக் கொள்ளைக்கு ஆதரவு என்பதற்குப் பதிலாக, மக்கள் நலனையும் கொண்ட ஒரு அரசாங்கம்தான் நமக்குத் தேவை. ஆன்லைன் மோசடிகளையும் சூதாட்டங்களையும் தடுத்து நிறுத்தும் ஆற்றல் கொண்ட அரசாங்கம்தான் நமக்குத் தேவை. மோசடிகளையும் தில்லு முல்லுகளையும் கொள்ளையையும் உழைக்கும் மக்களின் நேரடிக் கண்காணிப்பில் வைத்து இயங்கக் கூடிய ஒரு மக்கள் அரசாங்கம்தான் நமக்குத் தேவை. அத்தகைய மக்கள் அரசாங்கத்தை நிறுவுவதற்கு, தனியார்மய – தாராளமயத்துக்கு எதிரான ஒரு புரட்சிப் போரில் உழைக்கும் மக்கள் இறங்குவதே இன்றைய முதல் தேவை.
ஓவியா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க