அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 13

நீர்மேல் குமிழிபோல் உருவாக்கப் பெற்ற இந்த ‘ஆரிய நாகரிகம், ஆரியப் படையெடுப்பு’ என்ற குமிழியை ‘மனித உற்பத்தி நூல்’ வல்லவர்கள் தங்கள் ஆராய்ச்சியால் சிதைத்துவிட்டார்கள். எப்படியென்றால் ஆசியாவிலும் ஐரோப்பாவிலுமுள்ள மக்கள் பல்வேறு வகுப்புகளைச் சேர்ந்தவர்களே என்றும், ஆரியர் ஒரு சிறு வகுப்பார்தான் என்றும் மனித உற்பத்தி ஆராய்ச்சியாளர்கள் கூறினார்கள்.

இதனால் ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் பரவியிருந்த மாபெரும் ஆரிய வகுப்பினர் ஒரு சிறிய கூட்டமாகக் குறைந்து விட்டார்கள். ஆரியரின் பூர்வீக நாட்டைப் பற்றி பாஸ்கி என்ற ஆராய்ச்சியாளர் பால்டிக் கடலோரம் என்றும், இத்தாலி ஆசிரியர் செர்ஜி ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்களென்றும், அவர்கள் ஐரோப்பா மீது படையெடுக்கும் போது காட்டுமிராண்டிகளாயிருந்தார்கள் என்றும் கூறுகிறார். ஆனால் மனித உற்பத்தி சாஸ்திர வல்லுநரான டாக்டர் ஹாடன், ஐரோப்பிய மக்களின் பூர்வ வரலாற்றைப் பற்றி 1991-ல் எழுதிய நூலில் இந்த “ஆரியர்’’ என்ற பேச்சையே எடுக்கவில்லை. எனவே ஐரோப்பாவைப் பொறுத்தவரை ‘ஆரிய நாகரிகம், ஆரியப் படையெடுப்பு’ என்ற கற்பனை புதைக்கப்பட்டு விட்டதெனலாம்.

ஒருவருக்கொருவர் கொள்வினை கொடுப்பினை இல்லாத எண்ணிறந்த வகுப்புகளைக் கொண்ட தற்கால இந்து சமூகத்தில் உயர்ந்த ஜாதிகள் எனப்படுவோர் தங்களை ஆரியர் என்று கூறிக்கொள்கிறார்கள். ஆரியர் படையெடுத்து வந்து இந்திய மக்களை நாகரிகப்படுத்தினார்களென்று ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் கற்பனை செய்து கூறிய போது, அது தங்களுக்குப் பெருமை தருவதென்று இந்த மேல் ஜாதிக்காரர்கள் அந்தக் கற்பனையை உற்சாகத்துடன் ஆதரிக்க முற்பட்டனர். இப்படித் தங்களை ஆரியர் என்று சொல்லிக்கொள்கிற இந்த மேல் வகுப்பினர் தங்கள் நரம்புகளில் சாதாரணச் சிவப்பு ரத்தமல்ல, நீல நிறமான ஆரிய ரத்தமே ஓடுகிறதென்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது உண்மையா என்பதைத் தற்கால முறைப்படி ஆராய்ச்சி செய்யலாமே? என்றால் மற்றெல்லாரையும் விட இந்த ‘மேல் ஜாதிக்காரர்கள்’தான் அவ்வித ஆராய்ச்சியைப் பலமாய் ஆட்சேபிக்கிறார்கள்.

வேதங்களிலே, ஆரியர் இந்தியா மீது படையெடுத்து வந்ததாக ஒரு குறிப்பேனும் காணப்படவில்லை. மேலும் தஸ்யூக்கள் அதாவது திராவிடர்கள் பட்டணங்களிலும் ஊர்களிலும் மரத்தினால் கட்டப்பெற்ற மாடமாளிகைகளில் வாழ்ந்திருந்தனர். இரதங்கள், குதிரைகள், ஆடு, மாடுகள் முதலியன அவர்களிடம் ஏராளமாயிருந்தன. ஆரியர்கள் அதைப்பற்றிப் பொறாமைப்பட்டு, திராவிட நகரங்களைக் கொள்ளையடிக்க நினைத்ததுண்டு என்று வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

திராவிட நாட்டு நிலையை உணராதாருக்கு 1940-ல் திருப்பதியில் நடைபெற்ற 10-வது அகில இந்திய கீழ்நாட்டுக் கலை மாநாட்டின் வரவேற்புக் குழுத்தலைவராக இருந்த, திருவாளர் T.A. இராமலிங்க செட்டியார் அவர்களின் சொற்பொழிவு விளக்கமளிக்கும் என்ற நம்பிக்கையுடன் அவர்களின் விரிவுரையைக் கீழே பிரசுரிக்கின்றோம்.

“ஜெர்மனியில் இன்று ஆரியர்கள் உயர்ந்தவர்கள் என்றும், உலகத்துக்கே அவர்கள் நாகரிகத்தை ஏற்படுத்தப் போவதாகவும், மற்றவர்கள் தங்களுக்குக் கட்டுப்பட்டவர்களென்றும் சொல்லி வருவது யாவர்க்கும் தெரியும். இதனால் மிகவும் பயங்கர முடிவு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை .

இந்து சமவெளிப் பிரதேசத்திலும், மொஹஞ்சதாரோ பிரதேசத்திலும் வெட்டி எடுக்கப்பட்ட பண்டைக்காலத்துச் சின்னங்களிலிருந்து, ஆரிய நாகரிகத்திற்கு முன் ஒரு நாகரிகமிருப்பது நன்கு விளங்கும்.

மேற்கு ஆசியாவில், மத்திய தரைக்கடல் ஓரமாகவும் வட இந்தியாவிலும்தான் பண்டைய நாளையில் சிறந்த நாகரிகமடைந்த மக்களிருந்து வந்தனர் என்று சொல்லப்படுமானால், இந்தியாவில் ஆரியர்கள் வரவால் நாகரிகம் புகுத்தப்பட்டதென்று சொல்வதில் ஏதேனும் அர்த்தம் இருக்க முடியுமோ? என்பது யோசிக்க வேண்டியதாகும்.

நாகரிகம் தெற்கேயிருந்து வடக்கு நோக்கியோ, அல்லது கிழக்கிலிருந்து மேற்குத் திக்கை நோக்கியோ அல்லது அதற்கு நேர் எதிராகவோ பரவியிருக்கக்கூடும்.

படிக்க:
தமிழுக்கு பார்ப்பன எதிர்ப்பென்று பேர்!
தலித் இளைஞரோடு திருமணம் – மகளுக்கு ஆணவக் கொலை மிரட்டல் விடுத்த பாஜக எம்எல்ஏ !

பழைய கால நிர்ணய நூல் பிரகாரம் பார்த்தால், ஆரியர்கள் இந்தியாவுக்கு மிகப் பிந்திய காலத்திலே வந்திருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டியதாயிருக்கிறது.

தென்னிந்தியாவின் பழக்க வழக்கங்களை நம்பினால் தெற்கே ஓர் உபகண்டமிருந்ததாகவும், அதன் பெரும் பாகத்தைக் கடல் கொண்டுவிட்டதாகவும். அப்பாகங்களில் உலகிலே தலை சிறந்ததாகக் கருதப்படும் நாகரிகம் இருந்து வந்ததாகவும் தெரிய வருகிறது.

தமிழ்க் கலைகள், மக்கள் சுதந்திரத்தோடு இருந்து வந்ததாகவும், மக்கள் எத்தகைய துன்பத்தையும் கண்டறியாதவர்கள் என்றும் கூறுகின்றனர்.

பழைய பெருமையைக் குறித்துப் பேசுவதில் பலனில்லை என்று நாம் கருதுகிறோம்.

நமது முன்னோர்கள் கலையாச்சாரத்தைக் குறித்தோ, மொழியைக் குறித்தோ சிறிதும் கவனம் செலுத்தியதில்லை தெற்கே எங்கும், பழைய நாகரிகத்தைக் கண்டறியக் கூடிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆரியர்கள்தான் குரு, சமஸ்கிருத மொழிதான் உயர்ந்த மொழி என்று கொண்டதால்தான், மற்றவை மூலமாக ஏதாவது கற்றுக் கொள்ளலாம் என்பது அடியோடு புறக்கணிக்கப்பட்டது.

T.A. இராமலிங்க செட்டியார்.

இதைக் குறித்து ஏதோ, அங்கொருவர் இங்கொருவர் ஆட்சேபிக்கிறார்களேயல்லாது, சமீப காலம் வரை யாரும் பலமாகத் தங்கள் ஆட்சேபணைகளைத் தெரிவிக்கவேயில்லை. இந்தியாவில் உள்ள பலதிறப்பட்ட ஜாதிகள் கலந்து விட்டனவென்றாலும், ஜாதியில் உள்ள உயர்வு தாழ்வு ஒரு சிலரைத் தாங்கள்தான் சுத்தமான ஆரிய வம்சத்தினர் என்றும், சமஸ்கிருதம்தான் உயர்ந்த மொழியென்றும் மற்ற மொழிக்கும், கலைக்கும், நாகரீகத்திற்கும் தாங்கள்தான் பாதுகாப்பாளர் என்றும் சொல்லும்படி செய்து வருகின்றது.

இந்த நிலையை இப்படியே விட்டுக்கொண்டு போனால், இதனால் வரும் பலன் மிக்க பயங்கரமாயிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .

தென்னிந்தியாவில் சமஸ்கிருதத்தைப் புகுத்தச் செய்த முயற்சிகள் எல்லாம், பிரிட்டிஷ் ஆட்சி நிலைக்கும் வரை வெற்றி பெறவில்லை.

பிரிட்டிஷ் ஆட்சி இந்நாட்டில் வேரூன்ற ஆரம்பித்த பிறகுதான், சமஸ்கிருத மொழியாளர்கள் (ஆரியர்கள்) நிர்வாகிகளாகவும், வழக்கறிஞர்களாகவும், நீதிபதிகளாகவும் வரமுடிந்தது; அவர்களால், தங்கள் ஸ்மிருதியைப் புகுத்த முடிந்தது. அதன் பின்தான் ஸ்மிருதியில் கண்டதே சட்டமாயிற்று.

இதனால் நான் ஏதாவது துவேஷம் கற்பிப்பதாகக் கொள்ளலாகாது.

இந்நாட்டின் பழக்கவழக்கங்கள், ஒழுங்குமுறைகள் என்னவென்பது அவர்களுக்குத் தெரியவில்லை. சில சமயங்களில் தாங்கள் புகுத்தும் முறைகள் சிறந்தவை என்று நம்பி விடுவதும் உண்டு.

ஸ்மிருதி புகுத்தப்பட்டதினால் வந்த பலனை அறிய ஒரே ஒரு உதாரணம் போதும் என்று கருதுகிறேன். அதாவது சொத்துக்கு உரிமை கொண்டாடுவதற்குச் சிரார்த்தம் என்பதே என்ன என்று தெரியாத மக்களுக்குக் காட்டுப் பிண்டம் (சிரார்த்தத்தில் ஒரு வகைச் சடங்கு) எடுப்பதை ஆதாரமாக வைத்து நீதி வழங்கப்படுகிறது. இன்னும் வினோதம் என்னவென்றால், ஒரு பார்ப்பனன் ஒரு பார்ப்பனரல்லாத பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டால் செல்லத் தக்கதென்றும், ஒரு பார்ப்பனரல்லாதான் ஒரு பார்ப்பனப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டால் செல்லத்தகாதென்றும் கூறுவதாகும்.

(தொடரும்)

அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.

ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.

முந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை

1 மறுமொழி

  1. என்ன விவாதித்து என்ன பயன்?! யாரை எதிர்த்து ஈ.வெ.ரா இயக்கம் கண்டாரோ, அந்தப் பிரிவினரிடமே அவர் உயிரோடு இருக்கும் போதே, எம்.ஜி.ஆர். ஆட்சியிலேயே எம்.ஜி.ஆர். வாயிலாக உள்ளே நுழைந்த ஜெயலலிதாவால் எல்லாம் தலைகீழாகத் தானே மாறிப் போயிற்று?! தமிழர்களிடம் உள்ள சினிமாக் கவர்ச்சி மாயையை இனி அவ்வளவு எளிதில் களைந்து விட முடியுமா என்ன?!

    மீண்டும், மீண்டும் தமிழக மக்கள் நடிகர், நடிகைகளிடமும் அவர்களோடு கூட்டணி வைத்துக் கொள்ளையடிக்கும் சாதிய சக்திகளிடமும் தமிழ் மக்கள் ஏமாற மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது?!

    அதே போல, அண்ணாவின் வழி வந்தவர்களாகக் காட்டிக் கொண்டவர்களும், அண்ணாவுமே கூடத் தங்களது மொழியின அடையாளங்களை(தெலுங்கு மொழியின அடையாளத்தை) மறைத்ததும் பெரும் கயமைத் தனம் தானே?! சினிமா நடிகர்கள், நடிகைகள், அரசியல்வாதிகளுக்குப் பொருந்தும் இதே லாஜிக் (தங்களது இருமொழியாளர் அடையாளத்தை மறைத்தல் என்ற அதே லாஜிக்) பத்திரிக்கைகளுக்கும் பொருந்தவே செய்யும்….! அந்த வகையில் வினவுவாகிய நீங்களும், விகடன்.காமும் கூட ஒரு இருமொழியாளர்கள் தானே?! இதைப் பகிரங்கமாகப் பொதுவெளியில் ஒத்துக் கொள்வதால் தங்களின் பத்திரிக்கை வணிகம், தொழில் பாதிக்கப்படும் என்பதால் தானே இவற்றைப் பகிரங்கமாக உங்கள் வாயாலேயே ஒத்துக் கொள்ள மறுக்கிறீர்கள்?!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க