ற்போது அறுபத்தி ஒன்பது வயதாகும் ராஜ், தனது 58 -வது வயதில் முதன் முறையாக மூச்சுத்திணறல் பிரச்சினையை எதிர்கொண்டார். முதலில் சாதாரண மூச்சுத்திணறல் என்று கருதப்பட்ட இந்தப் பிரச்சினை பின்னர் மருத்துவ பரிசோதனைகளுக்குப் பின் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (chronic obstructive pulmonary disease) என கண்டறியப்பட்டது. கடந்த 40 ஆண்டுகளாக, தனது 17 வயதில் இருந்து, நாள் ஒன்றுக்கு சராசரியாக 60 சிகரெட்டுகள் புகைத்தவர் ராஜ்.

“எனக்கு ஏற்பட்ட அறிகுறிகளை வைத்து ஏதோவொரு சுவாச நோய் என்பதை அனுமானித்தேன். ஆனால் அது நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் என்பது முதலில் தெரியாது. அதே போல் இந்த நோய் எந்தளவுக்கு முற்றிப் போகும் என்பதும், குணப்படுத்தவே முடியாத ஒன்று என்பதும் முதலில் எனக்குத் தெரியாது” என்கிறார் ராஜ்.

புகைப்பழக்கம் ராஜின் நோய்க்கான பிரதான காரணம். முன்பு வசதியாக வாழ்ந்து வந்த ராஜ், தற்போது ஒரு சிறிய வீட்டின் சுவர்களுக்குள் முடங்கிக் கிடக்கிறார். அவரது மகன் மற்றும் மருமகளின் தயவில் அவரது வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.

சதா நேரமும் செயற்கை சுவாசம் அளிக்கும் இயந்திரத்தின் துணையோடு சுவாசித்து வரும் ராஜின் நடமாட்டம் பெரிதும் குறைந்து போய் விட்டது. உடலில் சேரும் கரியமில வாயுவை வெளியேற்றும் ஆற்றலை அவரது நுரையீரல் இழந்து விட்டதால் எலும்புகள் வலுவிழந்து போயுள்ளன. குணப்படுத்தவே முடியாத இந்த நோய் மெல்ல மெல்ல அவரது உடலை உருக்குலைத்து உயிரைப் பறிக்கவுள்ளது – அவரைப் பொறுத்தவரை அவரது எஞ்சிய நாட்கள் நரகம்.

*****

நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயின் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் இந்தியர்கள் கொல்லப்படுகின்றனர் என்கிறது இந்தாண்டு மார்ச் மாதம் இந்தியா ஸ்பெண்ட் இணையதளம் வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கை. நோயாளிகளுக்கு மட்டுமின்றி ஆரம்ப நிலை மருத்துவர்களுமே இந்நோயை சாதாரண மூச்சுத்திணறல் என்றே கருதுகின்றனர். புகைப்பழக்கம் இந்நோய்க்கான ஒரு காரணம் என்றாலும், காற்று மாசுபாடு பிரதான காரணம் என்று தெரிய வந்துள்ளது. அறியப்பட்ட நோயாளிகளில் சுமார் 53 சதவீதம் பேருக்கு காற்று மாசுபாட்டின் விளைவாகவே இந்நோய் ஏற்பட்டுள்ளது.

காற்றுமாசு எனும் போது தொழிற்சாலைப் புகை, வாகனப் புகை போன்ற சுற்றுப்புற காரணங்களோடு விறகு மற்றும் சாண வறட்டிகள் கொண்டு எரிக்கப்படும் அடுப்பின் புகையும் இந்நோய்க்கு பங்களிக்கிறது.

கடந்த 2017 -ம் ஆண்டு வரையிலான 27 ஆண்டுகளில் (1990 துவங்கி) சுற்றுப்புற துகள் மாசுபாடு (ambient particulate pollution) 12.5 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் ஒரு க்யூபிக் மீட்டருக்கு 58 மைக்ரோ கிராமில் இருந்து 53 மைக்ரோ கிராமாக துகள் மாசுபாட்டின் அளவை சீனா குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கே மாசுபாட்டின் சராசரி அளவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றது என்பதை கவனிக்க வேண்டும் – ஏனெனில், மக்கள் நெருக்கமாக வாழும் நகரங்களில் காற்றில் கலந்திருக்கும் நச்சுத் துகள்களின் அடர்த்தி அதிகமாக இருக்கும்.

இது தவிற சுமார் 26.6 கோடி இந்தியர்கள் புகையிலை பயன்படுத்துவதாகச் சொல்கிறது உலக சுகாதார மையத்தின் 2018 -ம் ஆண்டுக்கான ஆய்வறிக்கை. புகையிலையால் ஏற்படும் மரணங்களில் 48 சதவீதம் இதய நோயின் விளைவாகவும், 23 சதவீதம் நாள்பட்ட சுவாசக் கோளாறுகளின் விளைவாகவும் ஏற்படுகின்றன. பீடி, சுருட்டு, சிகரெட் உள்ளிட்ட அனைத்து வகையான புகை வஸ்துக்களை கணக்கில் எடுத்துக் கொண்டால், 15 -ல் இருந்து 69 வயது வரையிலானவர்களிடையே 1998 – 2010 காலகட்டத்தில் சுமார் 27 சதவீதம் புகைக்கும் பழக்கம் குறைந்துள்ளது. ஆனால், இதில் சிகரெட்டை மட்டும் தனியே எடுத்துக் கொண்டால் 15 -ல் இருந்து 29 வயதினரிடையே நான்குமடங்கு புகைப்பழக்கம் அதிகரித்துள்ளது.

*****

நோய் உருவாவதற்கான புறக்காரணிகள் மற்றும் தனிப்பட்ட தீய பழக்கங்கள் அதிகரித்து வருவது ஒரு புறம் என்றால், இந்த நோய் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதும் மரணங்கள் அதிகரிப்பதற்கான காரணமாக அமைந்து விடுகின்றது. ராஜ் விசயத்தையே எடுத்துக் கொள்வோம். அவர் முதன் முதலில், 2006 -ம் ஆண்டு, மூச்சுத் திணறல் மற்றும் தொடர் இருமல் வந்த போது இதய நிபுணரிடம் ஆலோசனை பெற்றுள்ளார். முதலில் அவருக்கு வந்தது இதயம் சம்பந்தப்பட்ட சுவாசக் கோளாறாக இருக்கலாம் என்றே நினைத்துள்ளனர்.


அதன் பின் இரண்டாண்டுகள் கழித்து அவருக்கு திடீரென இரத்தத்தின் சர்க்கரை அளவு குறைந்துள்ளது. இந்த முறை பல்வேறு பரிசோதனைகள் செய்த பின்னரே அவருக்கு நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் தினசரி 60 சிகரெட்டுகள் வரை புகைத்தவருக்கு ஏற்பட்டிருப்பது நுரையீரல் தொடர்பான நோய் என்பதைக் கண்டறியவே இரண்டாண்டுகள் ஆகியுள்ளது. இத்தனைக்கும் ராஜ் படித்தவர், மேல் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்.

“நமது 25 வயதின் போது தான் நுரையீரல் அதன் உச்சகட்ட ஆற்றலோடு இயங்கும். அந்த சமயம் ஒவ்வொரு முறை மூச்சிழுக்கும் போதும் நான்கிலிருந்து ஆறு லிட்டர் காற்றை உள்ளிழுக்கிறோம். பின்னர் வருடம் செல்லச் செல்ல இந்த திறன் குறைகிறது. 25 மில்லியில் இருந்து 30 மில்லி அளவுக்கு ஆண்டு தோறும் குறைந்து வருகின்றது. இதே புகைபிடிப்பவர்களுக்கு ஆண்டொன்றுக்கு 80 மில்லியில் இருந்து 90 மில்லி அளவுக்கு ஆற்றல் குறைகின்றது” என்கிறார் பெங்களூருவில் உள்ள பகவான் மகாவீர் ஜெயின் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் சந்திர சேகர். புகைப்பழக்கம் கொண்ட ஒருவர் 45 வயதாகும் போது அவரது நுரையீரலுக்கு 75 வயதாகி விடுகிறது (75 வயதுக்கான ஆற்றலோடு செயல்படுகிறது).

படிக்க:
♦ புகை பிடிப்பது தீங்கானதா ? | மருத்துவர் BRJ கண்ணன்
♦ காற்று மாசுபாடு : தில்லியில் வாழ்வது தினசரி 20 சிகரெட் புகைப்பதற்கு சமம் !

பெரும்பாலான நோயாளிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினை திடீரென்று ஏற்பட்டதாக கருதிக் கொள்கின்றனர். மருத்துவர்களும் இந்த நோயைக் கண்டறியத் தவறுவதற்கு என்ன காரணம்?

♣ பெரும்பாலும் இந்நோயின் அறிகுறிகளை சாதாரண ஆஸ்துமா பிரச்சினை என்று முடிவு கட்டி விடுவது.

♣ நுரையீரலின் உள்ளிழுக்கும் திறன் மற்றும் வெளித் தள்ளும் திறனை கண்டறியும் ஸ்பைரோமெட்ரி சோதனை வசதி இந்தியாவில் பரவலாக இல்லாதிருப்பது.

♣ பெரும்பாலான மருத்துவர்கள் புகைப்பழக்கம் கொண்டவர்களுக்கே இந்நோய் வரும் என நினைப்பது.

♣ ஆஸ்துமாவுக்கான சிகிச்சையைத் துவங்கி விடுவது.

♣ நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயால் இதயம் பாதிக்கப்படும். இதயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவர்கள் அந்த பிரச்சினைக்கான மூல காரணம் நுரையீரலில் இருப்பதை கவனிக்கத் தவறுவது.

நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது ஒரு புறமிருக்க, தனிப்பட்ட பழக்க வழக்கங்களை முறைப்படுத்திக் கொள்வதும், புகை போன்ற தீய பழக்கங்களை கைவிடுவதும் அவசியம். மறுபுறம், சுற்றுச்சூழல் மாசுபடுவதற்கான காரணங்களை தடுப்பது தனிநபர்களின் கைகளில் இல்லை.

ஆலை மாசுபாடு, அதிகரிக்கும் வாகனங்களால் ஏற்படும் மாசுபாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசிடம் உள்ளது. அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்த இந்த நாட்களிலும், எந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பது கூடத் தெரியாமல் லட்சக்கணக்கான இந்தியர்கள் மரணிக்கும் கொடுமை முடிவு கட்டப்பட வேண்டும்.

வினவு செய்திப் பிரிவு
சாக்கியன்
மேலும் விரிவான வாசிப்புக்கு: ஸ்க்ரால்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க