படை வீரன் என்பதை மறந்து விடு ! நீ நடை பழகும் குழந்தை !

இவன் என்னடா என்றால் திடுதிப்பென்று தாவுகிறான்! கால்கள் என்னதான் நல்லவை என்றாலும் சொந்தமானவை அல்லவே. ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 36 ...

உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 12

குளுமையான, மஞ்சள் பாரித்த, ஒளி வீசிய ஒரு கோடைக் காலையில் க்ளாவ்தியா மிஹாய்லவ்னா ஒரு முதியவரை வார்டுக்கு உபசாரத்துடன் இட்டு வந்தாள். இரும்பு விளிம்பு கட்டிய, பழைய மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தார் அவர். மருத்துவமனைக்கு உரிய, கஞ்சி போட்டு முடமுடப்பான புதிய மேலங்கி கூட அனுபவசாலியான கைவினைஞரின் தோற்றத்தை மாற்றவில்லை. வெள்ளைத் துணி சுற்றிய ஏதோ ஒன்றை அவர் கொண்டு வந்திருந்தார். மெரேஸ்யெவின் கட்டில் அருகே தரையில் அதை வைத்து ஏதோ செப்படி வித்தைக்காரர் போன்று பதபாகமாகவும் பெருமிதத்துடனும் முடிச்சை அவிழ்த்தார். அவர் கைகளுக்கு அடியில் தோல் கறகறத்தது. பதனிட்ட தோலின் சுள்ளேன்ற புளிப்பு மணம் வார்டில் பரவிற்று.

கிழவனார் கொண்டுவந்திருந்த பொட்டலத்தில் நெறு நெறுக்கும் இரு புதிய மஞ்சள் நிறப் பொய்க்கால்கள் இருந்தன. சரியாக அளவெடுத்துத் திறமையாகச் செய்யப்பட்டவை அவை. ஆனால் இந்த கைவினைஞரின் பெருமைக்குக் காரணமாக இருந்தவை பொய்க்கால்கள் அல்ல. புதிய மஞ்சள் நிற மாதிரிக் கட்டைகளில் அணியப்பட்டிருந்த பூட்சுகளும் இருந்தன. அந்தப் பூட்சுகள் அணிந்தால் உயிருள்ள கால்கள் போலத் தோன்றுமாறு திறமையுடன் செய்யப்பட்டிருந்தன அக்காலணிகள்.

தம் கைகளால் செய்த பொருள்களை மூக்குக் கண்ணாடி விளிம்புகளிகளுக்கு மேலாகப் பார்வையிட்டவாறே, “ரப்பர் மேல் ஜோடுகளைப் போட்டுக்கொண்டால் கலியாண மாப்பிள்ளை கெட்டான் கேடு! வஸீலிய் வஸீலியெவிச் தாமே எனக்கு உத்தரவிட்டார், ‘ஸ்யெவ், நிஜக் கால்களை விட மேலாக இருக்கும் படி பொய்க் கால்களைப் பாங்காகச் செய்து தா’ என்று. இதோ, பாருங்கள், ஸ்யெவ் செய்திருக்கிறான். ராஜ தோரணையானவை!” என்றார் தொழிற்கலைஞர்.

செயற்கைக் கால்களை கண்டதும் மெரேஸ்யெவின் நெஞ்சு சோம்பிப் குறுகியது. அது இறுகி உறைந்து விட்டது போல் ஆகிவிட்டது. எனினும் பொய்க்கால்களை விரைவில் அணிந்து பார்க்கவும், சுதந்திரமாக நடக்கவும் உண்டான வேட்கை மற்ற எல்லா உணர்ச்சிகளையும் மீறிக்கொண்டு மேலெழுந்தது. போர்வைக்கு அடியிலிருந்து நொண்டிக் கால்களை வெளியே எடுத்துச் சட்டென்று பொய்க்கால்களைப் போட்டுப் பார்க்கும் படி முதியவரை அவசரப்படுத்தினான். ஆனால் “சமாதானக் காலத்திலேயே” குதிரைப் பந்தயத்தில் காலை முறித்துக் கொண்ட யாரோ ”பெரிய சிற்றரசனுக்குப்” பொய்க்கால் செய்து கொடுத்ததாகச் சொல்லிக் கொண்ட அந்தக் கைதேர்ந்த பொய்க்கால் சிற்பிக்கு இந்த அவசரம் பிடிக்கவில்லை. தான் செய்த பொருள்கள் பற்றி அவர் மிகுந்த பெருமை கொண்டிருந்தார். அவற்றை ஒப்படைப்பதை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு இழுத்தடிக்க அவர் விரும்பினார்.

பொய்க்கால்களை அங்கிக் கையால் துடைத்தார், தோலின் மேலிருந்த கறையை நகத்தால் சுரண்டி, அந்த இடத்தில் ஊதி, பளிச்சிடும் வெண்ணிற அங்கி விளிம்பால் துடைத்து, பொய்க் கால்களைத் தரையில் வைத்தார். பிறகு துணியை நிதானமாக மடித்துச் சுருட்டிப் பைக்குள் வைத்துக் கொண்டார்.

“நல்லது பெரியவரே, போட்டுப் பார்க்கலாமே” என்று கட்டிலில் உட்கார்ந்து அவசரப்படுத்தினான் அலெக்ஸேய்.

வெட்டுண்ட வெறுங்கால்களை வேற்றாளின் கண்களால் இப்போது பார்வையிட்டு, அவற்றால் மனநிறைவு அடைந்தான் அலெக்ஸேய். அவை வலியவையாக, நரம்பு புடைத்திருந்தன. கட்டாயம் காரணமாக இயக்கம் இல்லாத நிலைமையில் வழக்கமாக ஏற்படுவது போன்று அவற்றில் கொழுப்பு சேரவில்லை. மாறாக, பழுப்பேறிய தோலுக்கு அடியில் தசைநார்கள் விறைத்து நின்றன. இவை வெட்டுண்ட கால்கள் அல்ல, நிறையவும் விரைவாகவும் நடக்கும் மனிதனின் முழுக்கால்கள் என்று தோன்றியது.

“என்னது, போட்டுப் பார்க்கலாமே, போட்டுப் பார்க்கலாமே?… ஆக்கப் பொறுத்தது ஆறப் பொறுக்காதா?” என்று முணுமுணுத்தார் கிழவர். ‘ஸயெவ், தனிப்பட்ட கவனம் செலுத்தி இந்தப் பொய்க்கால்களைத் தயாரி. லெப்டினன்ட் கால்கள் இல்லாமலே விமானம் ஓட்டத் திட்டம் இட்டிருக்கிறான்’ என்று வஸீலிய் வஸீலியெவிச் என்னிடம் சொன்னார். ஆகா, அப்படியே செய்கிறேன் என்றேன். இதோ, பாருங்கள், எப்படிச் செய்திருக்கிறேன் என்று. இந்த மாதிரிப் பொய்க்கால்களைக் கொண்டு நடக்க மட்டுந்தானா முடியும், சைக்கிள் விடலாம், இளம் பெண்களுடன் நடனம் ஆடலாமே. எப்பேர்பட்ட வேலைப் பாடு!” என்று பீற்றிக்கொண்டார்.

பொய்க்காலின் மெத்தென்றிருந்த அலெக்ஸேயின் வலது வெட்டுக்காலை நுழைத்து, இறுக்கு வார்களால் வலிவாகப் பொருத்திக் கட்டினார் கிழவர். சற்று அப்பால் சென்று அதைப் பார்வையிட்டார். நாக்கைச் சப்புக் கொட்டினார்.

“ஜோடு பார்வையாக இருக்கிறது! … வலிக்கவில்லையே? அதுதானே! ஸ்யெவை விடத் தேர்ந்த கைவினைஞன் மாஸ்கோவில் கிடையாது, தெரிந்து கொள். ஸ்யெவுக்குத் தங்கக் கைகளாக்கும், தங்கக் கைகள்” என்றார்.

இன்னொரு பொய்க்காலையும் லாவகமாக அணிவித்து வார்களால் இறுக்கிக்கினாரோ இல்லையோ, மெரேஸ்யெவ் விற்கம்பி விசை போன்று சடக்கெனக் கட்டிலிலிருந்து தரையில் தாவிக் குதித்தான். சொத்தென்ற சத்தம் கேட்டது. மெரேஸ்யெவ் வலி தாளமாட்டாமல் வீரிட்டவன், அக்கணமே கட்டிலின் அருகே நெடுஞ்சாண்கிடையாக விழுந்து விட்டான்.

முதிய தொழிற்சிற்பியின் மூக்குக் கண்ணாடி வியப்பால் நெற்றிமேல் ஏறிவிட்டது. தன் வாடிக்கைக்காரன் இப்படித் துள்ளப் போகிறான் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. மெரேஸ்யெவ் அதிர்ச்சியடைந்து, ஜோடுகள் பொருத்திய பொய்க் கால்களை அகலப் பரப்பியவாறு புகலின்றித் தரையில் கிடந்தான். விளங்காமையும் மனத்தாங்கலும் அச்சமும் அவன் விழிகளில் ததும்பின. அவன் எண்ணியதெல்லாம் வெறும் ஏமாற்றுதானா?

மெய்யாகவே இப்போது அவன் நடக்கத் தெரியாத குழந்தையை ஒத்திருந்தான். தன்னால் நடக்க முடியும் என்பதை இயல்பூக்கத்தால் உணரும் அதே சமயத்தில் தனக்கு ஆதரவாகக் காக்கும் சுவற்றை விட்டு விலக அஞ்சும் குழந்தை போன்று இருந்தான்.

க்ளாவ்தியா மிஹாய்லவ்னா கைகளை உதறியவாறு அவனருகே பாய்ந்தாள். முதிய தொழிற்சிற்பியும் அவளும் சேர்ந்து அலெக்ஸேயைத் தூக்கிக் கட்டிலில் உட்கார வைத்தார்கள். அவன் துயரம் நெஞ்சை அழுத்த, துவண்டு போய் வருத்தம் ததும்பும் முகத் தோற்றத்துடன் உட்கார்ந்திருந்தான்.

“ஏ-ஏ-ஏ, அருமை மனிதா, இப்படிச் செய்வது சரியல்ல, கொஞ்சமும் சரியல்ல. ஏதோ உயிருள்ள கால்கள் திரும்ப வைக்கப்பட்டுவிட்டது போலத் துள்ளிப் பறந்தாயே. நல்ல ஆள் தான் போ. இதற்காக முகத்தைத் தொங்கப்போட்டுக் கொள்ளத் தேவையில்லை, அருமை நண்பா. ஒன்றுமட்டும் தெரிந்து கொள். நீ எல்லாவற்றையும் அடியிலிருந்து தொடங்க வேண்டும். நீ படை வீரன் என்பதை மறந்து விடு. நீ சின்னக் குழந்தை இப்பொழுது ஓர் அடி, இன்னோர் அடி என்று எடுத்து வைத்து நடை பழகும் குழந்தை. முதலில் கவைக்கோலுடன், அப்புறம் சுவற்றைப் பிடித்துக் கொண்டு, பிறகு கைத்தடியை ஊன்றியபடி நடக்க வேண்டும். எடுத்த எடுப்பிலேயே அல்ல, கொஞ்சங் கொஞ்சமாகப் பழக வேண்டும். இவன் என்னடா என்றால் திடுதிப்பென்று தாவுகிறான்! கால்கள் என்னதான் நல்லவை என்றாலும் சொந்தமானவை அல்லவே. அருமைத் தம்பீ, அம்மாவும் அப்பாவும் உண்டாக்கியவை போன்ற கால்கள் யாராலும் உனக்குச் செய்து தர முடியாது” என்று முணுமுணுத்தார் கிழவர்.

இசைக் கேடாகக் குதித்ததனால் கால்களில் கொடிய வலி உண்டாயிற்று. ஆயினும் பொய்க்கால்களை உடனேயே சோதித்துப் பார்க்க மெரேஸ்யெவுக்கு ஆசையாயிருந்தது. லேசான அலுமினியக் கவைக்கோல்கள் அவனுக்குத் தரப்பட்டன. அவற்றைத் தரையில் ஊன்றிக்கொண்டு கக்கங்களுக்கு அடியில் கைத்திண்டுகளை அழுத்தியவாறு மெதுவாக, ஜாக்கிரதையாகக் கட்டிலிலிருந்து வழுகிப் பொய்க்கால்களில் நின்றான். மெய்யாகவே இப்போது அவன் நடக்கத் தெரியாத குழந்தையை ஒத்திருந்தான். தன்னால் நடக்க முடியும் என்பதை இயல்பூக்கத்தால் உணரும் அதே சமயத்தில் தனக்கு ஆதரவாகக் காக்கும் சுவற்றை விட்டு விலக அஞ்சும் குழந்தை போன்று இருந்தான்.

தாயாரோ பாட்டியோ முதல் நடக்கக் கற்பிப்பது போலவே க்ளாவ்தியா மிஹாய்லவும் முதிய தொழிற்சிற்பியும் மெரேஸ்யெவைப் பரிவுடன் இரு புறங்களிலிலும் தாங்கிக் கொண்டார்கள். மெரேஸ்யெவ் ஓர் இடத்தில் நின்றான். பொய்க்கால்கள் பொருத்தப்பட்டிருந்த இடங்களில் பழக்கமின்மைக் காரணமாகக் கடும் வலி உண்டாயிற்று. அவன் தயக்கத்துடன் முதலில் ஒரு கவைக்கோலையும் பிறகு இரண்டாவதையும் முன்னே வைத்தான், உடல் பாரத்தை அவற்றின் மேல் போட்டவாறு ஒரு காலை எடுத்து வைத்து அப்புறம் மறு காலை வைத்தான். தோல் இறுக்கத்துடன் கறுமுறுத்தது. டொம் டொம் என்ற கனத்த ஓசைகள் தரையில் அதிர்ந்தன.

“ஊம், நல் அதிர்ஷ்டம் உண்டாகட்டும்” என்று வாழ்த்தினார் முதியவர்.

மெரேஸ்யெவ் பதபாகமாக இன்னும் சில அடிகள் எடுத்து வைத்தான். பொய்க்கால்களால் இந்த முதல் அடிகளை எடுத்து வைப்பது அவனுக்கு அரும்பாடாக இருந்தது. கதவு வரை போய் திரும்புவதற்குள் ஏதோ ஒரு மாவு மூட்டையை ஐந்தாவது மாடிக்குச் சுமந்து சென்றது போல அவனுக்கு அயர்வு உண்டாயிற்று. கட்டில் வரை சிரமப்பட்டு நடந்து பொத்தென்று அதில் சாய்ந்தான். உடம்பெல்லாம் வியர்த்தது. புரண்டு நிமிர்ந்து படுக்கக் கூடத் திராணி இல்லை .

“பொய்க்கால்கள் எப்படி? அதுதானே. ஆண்டவனுக்கு நன்றி செலுத்து, தொழிற்சிற்பி ஸ்யெவ் உலகில் இருப்பதற்கு!” என்று முதியவருக்கு இயல்பான தற்புகழ்ச்சியுடன் வார்களை அவிழ்த்து அலெக்ஸேயின் கால்களை விடுவித்தார் கிழவர். பழக்கம் இல்லாமையால் கால்கள் அதற்குள் கொஞ்சம் இரத்தம் கட்டி வீங்கியிருந்தன. “இந்த மாதிரிப் பொய்க்கால்களுடன் விமானந்தானா ஓட்டலாம், நேரே ஆண்டவனிடமே பறந்து போகலாமே. எப்பேர்பட்ட வேலைப்பாடு!” என்று தொடர்ந்தார் பெரியவர்.

“நன்றி, நன்றி, பெரியவரே, வேலை பிரமாதம்’ என்று தணிந்த குரலில் சொன்னான் மெரேஸ்யெவ்.

“வஸீலிய் வஸீலியெவிச் என்னிடம் சொன்னார்: ‘ஸ்யெவ், அசாதாரணமான பொய்க்கால்கள் வேண்டும். மோசம் பண்ணிவிடாதே’ என்று. அட ஸ்யெவ் மோசம் பண்ணுவது எங்காவது உண்டா? சந்தர்ப்பம் நேரும் போது நீங்கள் வஸீலிய் வஸீலியெவிச்சிடம் சொல்லுங்கள், வேலை திருப்தியாக இருந்தது என்று” எனக் கூறினார் கிழவர்.

பின்பு வாய்க்குள் ஏதோ முணுமுணுத்தவாறு அவர் போய்விட்டார். மெரேஸ்யெவ் கட்டில் அருகே கிடந்த தன் புதுக் கால்களைக் கவனமாகப் பார்த்தபடி படுத்திருந்தான். அவற்றைப் பார்க்க பார்க்க அவற்றின் அமைப்பில் காணப்பட்ட மதி நுட்பமும் திறமையான வேலைப்பாடும் அவை லேசாயிருந்ததும் அவனுக்கு உவப்பூட்டின. பொய்க்கால்கள் அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டன.

படிக்க:
பள்ளி மாணவர்களுக்கு மனநல கவுன்சிலர்கள் தேவையா ? | வில்லவன்
உ.பி. யில் இராணுவ பள்ளியைத் தொடங்குகிறது ஆர்எஸ்எஸ் !

அன்றே ஓல்காவுக்கு களிபொங்கும் விரிவான கடிதம் எழுதி அனுப்பினான் மெரேஸ்யெவ். விமானங்களைச் சோதித்துப் பார்க்கும் தனது வேலை முடியும் தறுவாயில் இருக்கிறது என்றும் தலைமை அதிகாரிகள் தனது வேண்டுகோளை ஏற்றுக் கொள்வார்கள் என நம்புவதாகவும் சலிப்பூட்டும் பின்புறத்தில் இந்த அலுப்புத்தரும் வேலையிலிருந்து தான் இலையுதிர் காலத்திலோ அல்லது அதிகமாய்ப் போனால் குளிர்காலத்திலோ போர்முனைக்கு, தன் ரெஜிமென்டுக்கு அனுப்பப் படலாம் என்றும் ரெஜிமேண்டில் தோழர்கள் தன்னை மறக்கவில்லை என்றும் கடிதத்தில் விவரித்திருந்தான் விபத்து நேர்ந்த நாளுக்குப் பின் அவன் எழுதிய முதலாவது மகிழ்ச்சிக் கடிதம் இதுவே.

தான் எப்போதும் அவளையே நினைத்து ஏங்கிக் கொண்டிருப்பதாக இந்தக் கடிதத்தில்தான் அவன் தன் மணப்பெண்ணுக்கு முதல் தடவை தெரிவித்திருந்தான். ஒருவேளை தாங்கள் போருக்குப் பின் சந்திக்கலாம் என்றும் அவள் தன் கருத்தை மாற்றிக் கொள்ளா விட்டால் சேர்ந்து வாழலாம் என்றும் தன் நெஞ்சில் நெடுநாளாக வைத்திருந்த எண்ணத்தை – மிகுந்த கூச்சத்துடன்தான் என்றாலும் இதில்தான் அவன் வெளியிட்டிருந்தான். கடிதத்தை ஒரு சில தடவைகள் திரும்பிப் படித்தபின் பெருமூச்செறிந்து கடைசி வரிகளைக் கவனமாக அடித்துவிட்டான்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க