மோடி அரசின் தேசிய கல்வி கொள்கை -2019 நிராகரிக்க வேண்டும் – ஏன் ? | பு.மா.இ.மு-வின் வெளியீடு !

nep-wrapper-rsyf-Book-Cover

2019-தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை மோடி அரசு வெளியிட்டு கருத்துக்கேட்டு வருகிறது. இதுவே ஒரு நாடகம். ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் மத்தியில் மீண்டும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியவுடன் 100 நாட்களில் கல்வித்துறையில் மிகப்பெரிய சீர்த்திருத்தம் செய்யப்போகிறோம் என்று திட்டவட்டமாக அறிவித்தது. அடுத்த இரண்டு நாட்களில் ஏற்கனவே, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு தயாரித்த தேசிய கல்விக்கொள்கைக்கான வரைவு அறிக்கை ஆங்கிலத்தில் வெளியிட்டு ஜூன் 30-ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்றார்கள்.

தமிழகத்தில் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியதும், கால அவகாசத்தை ஜூலை-31 என்றும், அடுத்து 15 நாட்கள் நீட்டித்தும் அறிவித்து இருக்கிறார்கள். 484 பக்கங்கள் கொண்ட அறிக்கையை அந்தந்த மாநில மொழிகளில் வெளியிடாமல் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிட்டால் எப்படி அனைத்து மக்களும் கருத்து சொல்ல முடியும்? யாரும் சொல்ல வேண்டாம் என்பதுதான் அவர்கள் எண்ணம்.

இது ஏதோ புதிதாக தயாரிக்கப்பட்ட கல்விக்கொள்கை அல்ல. ஏற்கனவே 2000-ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான பி.ஜே.பி அரசு கார்ப்பரேட் முதலாளிகளான பிர்லா- அம்பானி தலைமையில் ஒரு கல்வி குழு அமைத்தது. அந்த குழு கொடுத்த பரிந்துரைகளின் அடிப்படைகள் இந்த தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் மையமாக இருக்கின்றது.

அதன்பின் 2014-இல் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது டி.எஸ் சுரமணியம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அது 2016-இல் வரைவு அறிக்கையை வெளியிட்டது. நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியதால் அது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. ஆனால், அந்த அறிக்கையை அடிப்படையாக வைத்துத்தான் இப்போது கஸ்தூரிரங்கன் குழு தேசிய கல்விக்கொள்கைக்கான வரைவு அறிக்கையை தயாரித்து வெளியிட்டுள்ளது. இதில் சொல்லப்பட்டுள்ள பல பரிந்துரைகள் கல்வியை சர்வதேச சந்தைக்கு திறந்துவிட வேண்டும் என்ற காட்ஸ் ஒப்பந்த அடிப்படையில் ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டன.

அதுமட்டுமல்ல, இப்போது இந்த அறிக்கையை வெளியிட்டு கருத்துக் கேட்டுக்கொண்டிருக்கும்போதே மத்திய பட்ஜெட்டில் அதில் உள்ள சில பரிந்துரைகளை குறிப்பாக, ‘இந்தியாவில் படியுங்கள் திட்டம்’, ‘தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை’ போன்ற திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி செயல்பாட்டுக்கு கொண்டு வந்துவிட்டனர். ஆனால் நாட்டு மக்களிடம் கருத்துக்கேட்டுத்தான் முடிவெடுக்கப்படப்போவதைப் போல் பேசுகிறார்கள். இது ஒரு நயவஞ்சக நாடகம். இதற்கு யாரும் பலியாகக் கூடாது. இது அனைத்து மக்களுக்குமான கல்விக் கொள்கையல்ல, கார்ப்பரேட்டுகள், காவிகள் நலனுக்கான கல்விக் கொள்கை.

பல்தேசிய இனங்களின் மொழி, இனம், கலாச்சாரம் அனைத்தையும் ஒழித்து கட்டிவிட்டு கல்வியை இந்திய பண்பாடு என்ற பெயரில் சமஸ்கிருதப் பண்பாட்டை புகுத்தி, இந்து – இந்தி – இந்தியா என்ற தனது நீண்ட கால கனவான இந்துராஷ்டிரத்தை அமைப்பதற்கான ஒரு கருவியாக கல்வியை பயன்படுத்துகிறது ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல்.

இன்னொரு பக்கம் பலலட்சம் கோடி வணிகம் புரளும் இந்திய கல்விச் சந்தையை கார்ப்பரேட் முதலாளிகள் சூறையாட திறந்து விடுவது. பெரும்பான்மை மக்களின் கல்வி உரிமையை மறுக்கின்ற இந்த தேசிய கல்வி கொள்கைக்கான வரைவை ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டும். அது எந்த வடிவில் வந்தாலும் சரி முறியடிக்க வேண்டும்.

கார்ப்பரேட்டுகள், காவிகளின் நலனை ஒன்றிணைத்து ஒட்டுரக வீரியத்தன்மையுடன் வரும் இந்த தேசிய கல்விக்கொள்கையை எதிர்த்து எமது பு.மா.இ.மு –வும், பல்வேறு அமைப்புகள், இயக்கங்களும் போராட்டங்களையும், விவாதக்கூட்டங்களையும் நடத்தி வருகிறது. அதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் தேசிய கல்விக்கொள்கை குறித்து விமர்சனப்பூர்வமான கட்டுரைகளின் தொகுப்பாக இந்த சிறு வெளியீட்டைக் கொண்டு வருகிறோம்.

படிக்க:
கார்ப்பரேட் – காவிமயமாகும் மருத்துவத்துறை ! தமிழகமெங்கும் மாணவர்களின் போராட்டம் !!
♦ தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! கடலூர் அரங்கக் கூட்டம்

இந்த வரைவு அறிக்கை வெளிவந்தவுடன் அதற்கெதிராக பொதுக்கல்விக்கான ஒருங்கினைப்பு குழு நடத்திய கூட்டத்தில் பல்வேறு கல்வியாளர்கள் ஆற்றிய உரைகளின் தொகுப்பை கொடுத்து உதவிய பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புகுழு-வுக்கும், கல்வியாளர்களுக்கும் எமது நன்றி.

பல மாநிலங்கள், பல மொழி பேசும் மக்கள், பல கலாச்சாரங்கள் கொண்ட நாட்டில் மாநிலங்களின் கல்வி உரிமையை பறிக்கின்ற வகையில் ஒற்றைத் தன்மை கொண்ட ஒரு தேசிய கல்விக்கொள்கை என்பது இருக்க முடியாது, இருக்கக் கூடாது. கல்வியை மாநிலப்பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும்.

பெரும்பான்மை மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்ட, தாய்மொழிவழியிலான, அறிவியல்பூர்வமான, இலவச – கட்டாயக் கல்விக்கல்வியை முன்னிறுத்தும் ஒரு மாற்றுக் கல்விக் கொள்கையை உருவாக்கும் போராட்டமாக இதனை வளர்த்தெடுக்க வேண்டும்.

போராட்டக்களத்தில் உள்ள மாணவர்களையும், ஆசியர்களையும், உழைக்கும் மக்களையும் ஒருங்கிணைக்கும் தொடர் முயற்சியின் ஒரு அங்கமாக இந்த சிறுவெளியீட்டை கொண்டு வருகிறோம். படியுங்கள்! பரப்புங்கள்! நன்றி!

வெளியீடு விவரம் : மோடி அரசின் தேசிய கல்வி கொள்கை -2019 நிராகரிக்க வேண்டும் – ஏன் ?

விலை : ரூபாய் 25/-

வெளியீடு சென்னையில் கிடைக்குமிடம்:

எண்: 7, மாதா கோவில் நகர்,
முதல் தெரு, நொளம்பூர், சென்னை – 95.
தொடர்புக்கு : 9445112675.

பிற ஊர்களுக்கு :

  • கடலூர் :    97888 08110
  • திருச்சி :    99431 76246
  • மதுரை :    82200 60452
  • நெல்லை : 99448 99190
  • தருமபுரி : 63845 69228
  • கரூர் :      96298 86351
புமாஇமு

தோழமையுடன் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

1 மறுமொழி

  1. இதனை மின்நூலகவும் வெளிட்டால் மிகுந்த நன்மை உண்டாகும் .உடன் செய்யவும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க