மோடியின் தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் என்ற தலைப்பில் கடலூர் டவுன் ஹாலில் ஜூலை 30, 2019 அன்று அரங்கக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கல்விக் கொள்கை நாட்டின் பெரும்பான்மை மாணவர்களுக்கான கல்விக் கொள்கை அல்ல, ஒட்டுமொத்த கல்வித்துறையும் கார்ப்பரேட்டுகள் சூறையாட வழி வகுக்கும் நாசகார கொள்கை. அன்று இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழக மாணவர்கள் கட்டியமைத்த போராட்டத்தால் இந்தி ஆதிக்கம் முறியடிக்கப்பட்டது.

இன்று கார்ப்பரேட்டுகள் – காவிகளின் நலனுக்காக “மோடி அரசு திணிக்கும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக வலுவான போராட்டத்தை கட்டியமைப்போம்! வரைவு அறிக்கையை மொத்தமாக நிராகரிப்போம்! எந்த வடிவத்தில் இந்த கல்விக் கொள்கை வந்தாலும் மோதி வீழ்த்துவோம்! தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் அமைப்பாய்த் திரள்வோம்!” என்பதை முன்வைத்து இந்த அரங்கக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி கடலூர் மாவட்ட செயலாளர் தோழர் மணியரசன் தலைமை தாங்கினார். கருத்துரையாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்க மாநில செயலாளர் முனைவர் ஜானகி.ராஜா உரையாற்றினார். அவர் பேசும்போது, “கல்வியில் புதிய மாற்றங்கள் தேவைதான். புதிய மாற்றங்கள் வரக்கூடாது என்பது நமது நிலைப்பாடு அல்ல. ஒருங்கிணைந்த இந்தியா உருவாவதற்கு முன்பே அறிவுசார் தொடர்ச்சி இங்கு  இருந்துவந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் சங்க காலத்திலேயே ஆணும் – பெண்ணும் சமமாக கல்விகற்று, அறிவியலில் சிறந்து விளங்கியவர்களாக இருந்தனர். ஆக நாம் ஏதோ கல்வியறிவு அல்லது கல்விமுறை இல்லாது இருந்தோம் என்பதல்ல, நம்முடைய மரபிலேயே கல்வியானது இருந்துள்ளது.

இடைப்பட்ட காலத்தில் நம் கல்விமுறை மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து, அப்போதுதான் குருகுலக் கல்வி முறை என்பது வந்தது. குருகுலக் கல்வி முறை என்பது மாணவர்கள் குருவின் வீட்டுக்குச் சென்று குருவிற்கு பணிவிடை செய்து; அவர் வீட்டில் இருக்கும் வேலைகளை செய்து; குரு எப்போது ஓய்வாக இருக்கிறாரோ (எப்போது சொல்லிக் கொடுக்கிறாரோ) அந்த நேரத்தில் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அங்கு வீட்டுக்குள் செல்ல அனுமதி இல்லாதவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. குருகுல கல்வி என்பது சில குறிப்பிட்ட பிரிவுகளுக்கு மட்டுமானதாக இருந்தது.

அதிலிருந்து மாறி திண்ணை பள்ளி உருவானது. குருவின் வீட்டிற்குள் செல்லாமல் திண்ணையில் உட்கார்ந்து படிப்பது, இதிலும் அனைவரும் செல்ல முடியாது. தெருவில் நடமாட வாய்ப்பு இல்லாதவர்கள் திண்ணையில் எப்படி உட்கார முடியும் ? இதுவும் சிலருக்கு மட்டும் வாய்ப்பளித்தது.

1854 -ல் மெக்காலே கல்வி வந்த பிறகுதான் வாய்ப்பு மறுக்கப்பட்ட அவர்களுக்கும் கல்வி கிடைக்கும் வாய்ப்பு கிடைத்தது. கோத்தாரி கமிஷன் வந்த பிறகுதான் திறந்தவெளி பல்கலைக்கழகம் வந்தது. இது கல்வி நிலையங்களுக்கு சென்று படிக்க முடியாதவர்கள், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் வீட்டிலிருந்து படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியது.

ஆனால் இப்போது கட்டமைப்பு செய்யப்பட்ட கஸ்தூரிரங்கன் அறிக்கை, மீண்டும் நம்மை பின்னோக்கி குருகுல கல்விக்கு இழுத்து செல்லும் முயற்சி. இந்தக் கல்விக் கொள்கை என்பது அனைவருக்கும் கல்வி இல்லை; சிலருக்கு மட்டுமே கல்வி என்பதாக மாற்றுகின்ற முயற்சி; கல்வி வசதி படைத்தவர்களுக்கானதாக மாற்றும் முயற்சி; ஆகவே நாம் இந்த கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம்.

இந்தக் கல்விக் கொள்கையில் இடம் பெற்று இருக்கக் கூடியவை பொது சமூகத்தின் கல்வி நலனுக்கு எதிரானது. இன்று இருக்கும் மத்திய அரசு வலிமையான கருத்தியலை கொண்ட அரசு, இந்துத்துவத்தை ஏற்றுக் கொண்டிருக்கக் கூடிய அரசு. இந்த அரசின் செயல்பாடுகள் அனைத்தும் இதை நோக்கித்தான் இருக்கும். வாஜ்பாய் ஆட்சியில் அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷி இந்துத்துவ பாடங்களை பள்ளியில் புகுத்துவதை அன்றே துவங்கினார். பாடநூலில் தீவிரவாதத்தை புகுத்தியவர் முரளி மனோகர் ஜோஷி

இன்று வந்திருக்கும் கல்விக் கொள்கையானது கல்வியை வணிகப் பொருளாக மாற்றுகிறது. பல நாடுகளில் கல்வி என்பது ஏழு வயதில் துவங்குகிறது ஆனால் இந்த கல்விக் கொள்கையில் மாணவர்களின் கல்வி மூன்று வயதில் துவங்குகிறது. மூன்றாவது 5-ஆவது, எட்டாவது, பத்தாவது, பன்னிரண்டாவது என பொதுத் தேர்வுகளை ஒருவர் எதிர்கொள்ள வேண்டும். இதில் மாணவர்கள் வடிகட்ட படுவார்கள், பன்னிரண்டாவது முடிக்கும் போது சில குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் இருப்பார்கள்

இந்தக் கல்விமுறை சமூகப் பணியாளர்களை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது, இந்த சமூகப் பணியாளர்கள் ஒரு மாணவனின் சாதியை அறிந்து, அவன் அப்பன் தொழிலை அறிந்து, ஒரு மாணவனுக்கு மதிப்பீடு அளிப்பார்கள். ஆக இது குலத்தொழிலை ஊக்குவிப்பதாகும்.

படிக்க:
தமிழ் – சமற்கிரத மொழிகளின் தொன்மை : வி.இ.குகநாதன்
♦ NEP 2019 : மனுநீதியின் புதிய பதிப்பு | பேராசிரியர் கருணானந்தன் நேர்காணல்

இந்தக் கல்விமுறை பள்ளி மாணவர்களுக்கு தச்சுத்தொழில், தோட்டக்கலை, மண்பாண்டம், கட்டிட வேலை ஆகியவை எப்படி செய்வது? என்பதை கற்றுத் தரப் போகிறது. ஆக இது முழுவதும் குல தொழிலுக்கு இட்டுச் செல்லும் முயற்சி.
இந்தக் கல்விக் கொள்கையில் இந்தி மயமாக்கப்பட்ட கல்வி முறை, இந்திய மயமாக்கப்பட்ட புராண இதிகாச கல்விமுறை இடம் பெற்றிருக்கிறது.

புராண இதிகாச குப்பைகளை ஆராய்ச்சி கட்டுரைகள் (ஆராய்ச்சியாளர்) என்ற போர்வையில் எழுதுகிறார்கள். இந்திய அறிவியல் மாநாடு மிகவும் முட்டாள்தனமான கருத்துக்களைக் கொண்டு நடைபெற்றது. நமது பிரதமர் முதல் முதலில் பிளாஸ்டிக் சர்ஜரி விநாயகருக்கு செய்யப்பட்டது என பேசுகிறார். இதே அறிவியல் மாநாட்டில் ஒரு நீதிபதி மயில்கள் புணர்ச்சி செய்து பிறக்கவில்லை, ஆண் மயில் கண்ணீர் விடும் பெண் மையில் அதனை அருந்தும் இதன் மூலம் கர்ப்பம் அடைகிறது என பேசுகிறார்.

இன்று உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய கல்வி அறிவற்ற மூடர்களை உருவாக்கும் கல்வியாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இன்று அரசு, ஆட்சியாளர்கள், அறிஞர்கள், நீதிபதி அனைவரும் ஒரே கோட்டை வந்தடைகிறார்கள். மூன்று ஆண்டுக்கு முன் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் “அடுத்த தேர்தலில் நாம் தோற்றாலும், அடுத்த 25 ஆண்டுகள் இந்திய நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கும்” என்று பேசியுள்ளனர்.

ஏனென்றால் அனைத்து உயர்கல்வி நிலையங்களிலும் அவர்களுடைய பிரதிநிதிகள் இருக்கிறார்கள், நீதித்துறை, கல்வி, ஆட்சி அதிகாரம் என அனைத்திலும் சில குறிப்பிட்ட பிரிவுகள் வந்திருக்கிறார்கள்.

ஆக இந்தக் கல்விக் கொள்கை என்பது திருத்தப்பட வேண்டியது அல்ல திரும்பப் பெற வேண்டியது. இதைத் திருத்த வேண்டும் என்றால் முதலில் இருந்து கடைசி எழுத்து வரை மாற்ற வேண்டும்” என்று உரையாற்றினார்.

அவரைத் தொடர்ந்து பொது கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு, துணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் ரமேஷ் உரையாற்றினார். “இந்தக் கல்விக் கொள்கையை எதிர்த்து நாடு முழுவதும், குறிப்பாக தமிழகத்தில் மாணவர்கள்; மாணவர் அமைப்புகள்; ஜனநாயக சக்திகள்; பேராசிரியர்கள் என பேசிவருகிறார்கள், போராட்டம் நடத்தி வருகிறார்கள். போலீசு இதை கடுமையாக ஒடுக்கி வருகிறது ஆனால் மோடி அரசுக்கு இதைப் பற்றிக் கடுகளவும் அக்கறை இல்லை.

சமீபத்தில் டெல்லியில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மருத்துவர்கள் போராட்டம் நடத்தினார்கள், ஏனென்றால் மோடி அரசு தேசிய மருத்துவ ஆணையத்தை மாநிலங்களவையில் தாக்கல் செய்திருக்கிறது. இதனை கண்டித்து தான் மருத்துவர்கள் போராடினார்கள்.

மருத்துவர்கள் இதை எதிர்ப்பதற்கு முக்கியக் காரணம் : மருத்துவக் கல்விக்கு நீட் தேர்வு வந்தபிறகு 2017-18-ம் ஆண்டில், மருத்துவக் கல்வியில் சேர்ந்தவர்களில் CBSE-யில் படித்தவர்கள் 611 பேர். ஆனால் அரசு பள்ளி அல்லது அரசு உதவி பெறும் பள்ளியில் படித்தவர்கள் நான்கைந்து பேர் மட்டுமே.

இதற்கு முக்கிய காரணம் 2017-18 தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது 2018-19-ல் தேர்ச்சி பெற்றவர்களில் 85% பேர் ஒரே ஒரு கோச்சிங்(ஆகாஷ் கோச்சிங் சென்டர்) சென்டரில் படித்தவர்கள். இந்த செண்டர்களில், ஒரு ஆண்டு நீட் கோச்சிங்குக்கு ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய். இரண்டு ஆண்டுகளுக்கு 3 லட்ச ரூபாய் செலவு செய்தால் மட்டுமே உங்களால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் மருத்துவ கல்வி பெற முடியும்.

தேசிய மருத்துவ ஆணையத்தில் மோடி அரசு முக்கிய மாற்றத்தைச் செய்திருக்கிறது. தனியார் கல்லூரியில் மேனேஜ்மெண்ட் கோட்டா இருக்கிறது, அதில் நாம் போய் சேரலாம், அதற்கான கல்வி கட்டணத்தை அரசு தீர்மானிக்கும். இது பரவலாக அனைத்து மாநிலங்களிலும் இருக்கிற முறை. இதில் மோடி அரசு கொண்டுவந்த மாற்றம் 50% கட்டணம் மட்டும் அரசு தீர்மானிக்கும் மீதி உள்ள 50% கட்டணத்தை அந்த தனியார் நிறுவனமே தீர்மானித்துக் கொள்ளலாம்.

இப்பொழுது கொண்டு வந்த மாற்றத்தினால் நீட் தேர்வில் 450 மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு சீட் கிடைக்கவில்லை என்றால், மேனேஜ்மன்ட் கோட்டாவில் இணையலாம். ஆனால் கேட்கப்படும் கட்டணம் ஒரு கோடி ரூபாய் வரை இருக்கிறது. இதனால் இந்தியாவை விட்டு மாணவர்கள் வெளிநாட்டுக்கு மருத்துவம் படிக்கச் செல்கிறார்கள். ரஷ்யாவில் ஒரு ஆண்டு படிப்பதற்கு 30 லட்சம் செலவாகிறது, இந்தியாவில் மேனேஜ்மென்ட் கோட்டாவில் படிக்க ஆண்டு கட்டணம் ஒரு கோடி ரூபாய்.

இனி எந்த உயர்கல்வி படிக்க வேண்டும் என்றாலும் தேசிய அளவில் நுழைவுத்தேர்வு வைக்கப் போகிறார்கள். அந்த தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நாங்கள் தேர்வு செய்யப் போகிறோம் என்கிறார்கள். நீட் தேர்வு பெரும்பான்மை கிராமப்புற மாணவர்கள், ஏழை மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்களை மருத்துவ கல்வியில் இருந்து விலக்கி வைத்துள்ளது, இதை யாராலும் மறுக்க முடியாது.

ஆக இதே தேர்வை எல்லா உயர்கல்வி படிப்புக்கும் கொண்டு வந்தால் நிலைமை என்னவாகும்? தேசிய அளவில் ஒரு தேர்வு எதிர் கொள்ள வேண்டுமென்றால் நீங்கள் கோச்சிங் சென்டர் போகாமல் தேர்ச்சி பெற முடியாது. 3, 5, 8-ம் வகுப்பு தேர்வு எழுதுவதற்கு கோச்சிங் சென்டர் போக வேண்டும். அதேபோல் பன்னிரண்டாவது முடித்த பிறகும் கோச்சிங் சென்டர் செல்ல வேண்டும்.

இந்த கல்விக் கொள்கையின் நோக்கம் பெரும்பான்மை மக்களை கல்வியில் இருந்து அப்புறப்படுத்தி, அவர்களை குலக்கல்வி வடிவத்தில் மாற்றுவது.

இந்தியாவில் 50% பேர் இளைஞர்கள், இவர்கள் எல்லோரும் படிக்க வேண்டும். ஆக இந்தக் கல்விச் சந்தையின் மதிப்பு பல லட்சம் கோடி. இதை எப்படி தம்முடைய கட்டுப்பாட்டில் கொண்டு வருவது என்பதுதான் முதலாளிகளின் திட்டம். இந்த அறிக்கையில் கல்லூரியை மூன்று விதமாக பிரித்து வைத்திருக்கிறார்கள்.

1. ஆராய்ச்சி பல்கலைக்கழகங்கள்.
2. பயிற்றுவிப்பதற்கான பல்கலைக்கழகங்கள்
3. இங்கு உள்ள கல்லூரிகள் என பிரித்து வைத்திருக்கிறார்கள்.

இதில் மையமாக கூறுவது இங்கு உள்ள முதல் பகுதியில் உள்ள ஆராய்ச்சி பல்கலைக்கழகங்கள் வெளிநாடுகளுடன் சேர்ந்து இங்கு உயர் கல்வியை கொடுக்க வேண்டும். இந்தியாவில் மொத்தம் உள்ள பல்கலைக்கழகங்கள் எண்ணிக்கை 902 இதில் 399 மாநில அரசால் நடத்தப்படுகிறது. மத்திய அரசு பல்கலைக்கழகங்கள் 40 மொத்தம் இருக்கக்கூடிய கல்லூரிகளின் எண்ணிக்கை 42 ஆயிரம், உயர்கல்வி படிக்க கூடிய மாணவர்களின் எண்ணிக்கை 3.66 கோடி பேர்.

இதனை இரட்டிப்பாக்குவது எப்படி என்றால் அதிகப்படியான பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் கட்ட வேண்டும். இல்லையென்றால் மாற்ற முடியாது, இந்திய அரசு இந்தியாவில் படிக்கும் 3.66 கோடி பேருக்கு ஒதுக்கும் நிதி 33 ஆயிரம் கோடி. இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு சென்று படிக்கும் மாணவர்கள் 2 லட்சம் பேர். அவர்கள் செலவு செய்யும் பணம் 50 ஆயிரம் கோடி.

இதை எப்படி இந்தியாவுக்கு கொண்டு வருவது, இந்தியாவில் ‘உலகின் தலைசிறந்த’ பல்கலைக்கழகங்களை உருவாக்குவது. இதற்காக 30 பல்கலைக்கழகங்களை அரசு அறிவித்துள்ளது. அதில் 10 அரசுப் பல்கலைக் கழகம், 20 தனியார் பல்கலைக்கழகம். அரசின் நோக்கம் வெளிநாட்டுக்கு சென்று படிக்கும் மாணவர்களை இந்தியாவிற்கு கொண்டு வருவதால் அதிக வருமானம் வரும் என்கிற முடிவு.

ஆனால் அந்த வருமானம் யாருக்கான வருமானம்? அம்பானி ஜியோ பல்கலைக் கழகத்தை ஆரம்பிப்பதாகக் கூறி ஒன்றரை வருடம் ஆகிறது. இன்றுவரை ஒரு செங்கல் கூட கிடையாது. அதற்குள் அதை இந்திய அரசு ‘தலைசிறந்த பல்கலைக் கழகமாக’ அறிவித்திருக்கிறது.

வெளிநாடுகளிலிருந்து யார் யாரெல்லாம் ஆரம்பிக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் அனுமதி கொடுங்கள் என்கிறது இந்த அறிக்கை. அந்தப் பல்கலைக்கழகத்தின் கட்டணத்தை அவர்களை தீர்மானித்துக் கொள்ளலாம் என்கிறது.

இந்த அறிக்கையின் பின்பக்கம் யாரிடம் கருத்து கேட்கப்பட்டது என்கிற விவரத்தை கஸ்தூரிரங்கன் குறிப்பிடுகிறார். ஒன்று ஆர்.எஸ்.எஸ்-ஐ சேர்ந்த 4 அமைப்புகளிடம் கருத்து கேட்கப்பட்டு இருக்கிறது. (அகில பாரதிய விஷ்வ பரிசத் போன்ற அமைப்புகள்) இரண்டாவதாக அரசாங்கத்தின் பல்வேறு துறைகள், மூன்றாவதாக இந்தியாவில் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் வைத்திருக்கக்கூடிய முதலாளிகள் அவர்களின் கூட்டமைப்பிடம் கருத்து கேட்கிறார்கள். இங்குள்ள ஆசிரியரிடமோ, மாணவர்களிடமோ, மாணவர் அமைப்புகளிடமோ, பெரும்பான்மை மக்களிடமோ கருத்து கேட்கப்படவில்லை.

ஆக இந்த அறிக்கையை மாற்ற முடியாது, முற்றிலும் நிராகரிக்க வேண்டும்! இந்தக் கல்வி கொள்கை கருத்து கேட்கும் நிலையில்தான் உள்ளது. ஆனால் இதிலுள்ளவற்றை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த பட்ஜெட்டில் நிதி அமைச்சகம், இதற்கு நிதி ஒதுக்கியுள்ளது. கருத்து கணிப்பு என்பதெல்லாம் கண்துடைப்பு நாடகம். நாம் என்ன செய்யவேண்டும்?

பெரும்பான்மை மக்கள்; மாணவர்கள் பங்களிப்பு இல்லாமல் இதை தடுத்து நிறுத்த முடியாது இது அரங்கத்தில் மட்டும் பேசக் கூடிய விஷயம் அல்ல. மக்கள் போராட்டங்கள் மூலம் தான் இந்த மக்கள் விரோத கல்விக் கொள்கையை தடுத்து நிறுத்த முடியும்” என பேசினார்.

அதன் பின்னர், நன்றியுரையுடன் கூட்டம் நிறைவேறியது.


தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கடலூர், தொடர்புக்கு : 97888 08110

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க