ஜான் லோ : மாபெரும் வீழ்ச்சி | பொருளாதாரம் கற்போம் – 30

பங்கு சந்தை வீழ்ந்து மொத்த பொருளாதாரமும் எப்படி சரியும் என்பதை, லோ -வின் வீழ்ச்சி இவ்வுலகிற்கு காட்டிற்று. | அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் தொடரின் 29-ம் பாகம்.

0
Political-economy-bubble-slider

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 30

மாபெரும் வீழ்ச்சி – பாகம் 2

அ.அனிக்கின்

1720 ஜனவரி மாதத்தில் லோ அதிகாரபூர்வமாக நிதித் துறையின் பொதுப் பொறுப்பாளரானார். அவர் நெடுங்காலமாகவே நாட்டின் நிதிப் பொறுப்பை கவனித்து வந்தார் என்பது உண்மையானது. ஆனால் இந்த நேரத்தில்தான் அவருடைய மாளிகையின் கீழ் நிலநடுக்கங்கள் ஏற்படுவது முதன் முதலாகத் தெரியவந்தது.

புதிய பங்குகளை விற்பனை செய்ததன் மூலமாகத் திரட்டிய பெரும் பணங்களைக் கம்பெனி எப்படி முதலீடு செய்தது?

அதில் சிறு தொகை கப்பல்கள் வாங்குவதிலும் பண்டங்களிலும் செலவழிக்கப்பட்டது; பெரும் பகுதி தேசியக் கடன் பத்திரங்களுக்குக் கொடுக்கப்பட்டது. கடன் பத்திரங்களை வைத்திருப்பவர்களிடமிருந்து அவற்றை வாங்கியதன் மூலம் ஏராளமாக இருந்த மொத்த தேசியக் கடன் முழுவதையும் (2,000 மில்லியன் லிவர் வரை) கம்பெனியே சமாளித்தது. நிதித்துறையில் ஒழுங்கைக் கொண்டுவரப்போவதாக லோ உறுதி கூறினாரே, அது இதுதான் போலும். பங்குகளை மேலும் மேலும் வெளியிடுவது எப்படி முடிந்தது? லோவின் வங்கி மில்லியன் கணக்கில் புதிய நோட்டுகளை அச்சடித்து அவற்றைச் செலாவணியில் ஈடுபடுத்திய வண்ணமிருந்தது .

இந்த நிலை அதிக காலத்துக்கு நீடிக்க முடியாது. லோ இதைப் பார்க்க மறுத்தார்; ஆனால் அவருடைய எதிரிகள், அவர் கெட்டுப் போக வேண்டுமென்று ஆசைப்பட்டவர்கள் -இவர்களுடைய எண்ணிக்கை ஏராளம்- இதை முன்பே பார்த்தனர். ஊக வாணிகத்தில் ஈடுபட்டவர்களில் தொலை நோக்குடையவர்களும் இதை முன்பே பார்த்தனர். அவர்கள் தங்களிடமிருந்த பங்குகளையும் வங்கி நோட்டுகளையும் தள்ளிவிடப் பார்த்தது இயற்கையே. இதற்கு எதிர் நடவடிக்கையாக லோ பங்குகளுக்கு நிலையான விலை இருக்குமாறு பின்பலம் கொடுத்தார்; நோட்டுகளைக் கொடுத்து உலோகம் பெறுவதைக் கட்டுப்படுத்தினார். ஆனால் பங்குகளுக்குப் பின்பலம் கொடுப்பதற்குப் பணம் தேவைப்பட்டபடியால் அவர் மேலும் மேலும் நோட்டுகளை அச்சடித்தார். இந்த மாதங்களின் போது அவர் வெளியிட்ட எண்ணற்ற உத்தரவுகள் குழப்பம் ஆரம்பமாகிவிட்டதென்ற அறிகுறிகளைக் காட்டுகின்றன.

லோ போராடிக் கொண்டுதானிருந்தார், ஆனால் யுத்தம் தோல்வி அடைந்து வந்தது; அவருடைய அமைப்பு வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தது. 1720-ம் வருடத்தின் இலையுதிர் பருவத்தின் போதே நோட்டுகளின் மதிப்புக் குறைந்து பண வீக்க காலத்துக் காகிதப் பணமாகி விட்டன; இப்பொழுது அவற்றின் அறிவிக்கப்பட்ட மதிப்பில் கால் பங்கு வெள்ளியின் மதிப்பைக் கொண்டிருந்தன. எல்லாப் பண்டங்களின் விலைகளும் வேகமாக மேலே ஏறின. பாரிசில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. பொது மக்களின் அதிருப்தி பெருகியது. நவம்பர் மாதத்தில் இந்த நோட்டுகள் சட்டபூர்வமான நாணயம் அல்ல என ஆயிற்று: லோவின் திட்டத்தை ஒழித்துக் கட்டுவது ஆரம்பமாகிவிட்டது .

political-economy-John_Law
ஜான் லோ

லோ கடைசிக் கட்டம் வரை உறுதியாகப் போராடினார். ஜூலை மாதத்தில் ஆத்திரமடைந்த மக்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு மதிப்பில்லாத நோட்டுகளுக்குப் பதிலாக சட்ட பூர்வமான நாணயத்தைக் கொடுக்குமாறு அவரை மிரட்டினார்கள். அவர் உயிர் தப்பியது ஆச்சரியமே. பொறுப்பு அரசரின் அரண்மனைக்குள் அவர் ஒளிந்து கொள்ள முயற்சி செய்த பொழுது அது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. அவர் களைத்துச் சோர்ந்துவிட்டாரென்றும் அவருக்கு வழக்கமான தன்னம்பிக்கையையும் நாகரிகப் பண்பையும் இழந்து விட்டாரென்றும் எல்லோரும் குறிப்பிட்டார்கள். அவருடைய நாடி நரம்புகள் வெடிக்கும் நிலைக்கு வந்துவிட்டன.

லோவையும் பொறுப்பு அரசரையும் ஏளனம் செய்து பாட்டுக்களும் கற்பனைக் கதைகளும் கேலிச் சித்திரங்களும் பாரிஸ் நகரத்தில் சுற்றி வந்தன. பூர்போன் கோமகன் பங்கு ஊக வணிகத்தில் மட்டும் 25 மில்லியன் லிவர் லாபமடைந்ததாக வதந்தி; அவர் அவ்வளவு பணத்தையும் ஸ்திரமான பொருள்களில் முதலீடு செய்திருந்தார். அவர் லோவைப் பார்த்து இனி உமக்கு ஆபத்து ஏற்படாது; ஏனென்றால் பாரிஸ்வாசிகள் யாரை ஏளனம் செய்கிறார்களோ அவரைக் கொல்ல மாட்டார்கள் என்றாராம். ஆனால் லோ அப்படி நினைக்க முடியவில்லை. இதற்குக் காரணமும் இருந்தது. அமைச்சர் பொறுப்பிலிருந்து முன்பே விலக்கப்பட்டிருந்த போதிலும் பலமான பாதுகாப்பு இல்லாமல் அவர் வெளியே வருவதில்லை.

படிக்க:
♦ பங்கு சந்தை : காசேதான் கடவுளடா ! | பொருளாதாரம் கற்போம் – 29
♦ “ காஷ்மீரை சிறைச்சாலையாக மாற்றுவதை நிறுத்துங்கள் ” : செயல்பாட்டாளர்கள் போராட்டம் !

லோவை எப்பொழுதுமே எதிர்த்து வந்திருந்த பாரிஸ் நாடாளுமன்றம் லோவின் மீது விசாரணை நடைபெற வேண்டும், அவர் தூக்கிலிடப்பட வேண்டும் என்று கோரியது, பொறுப்பு அரசருடைய ஆலோசகர்கள் குறைந்த பட்சமாக லோவை பாஸ்டிலி சிறையில் கொஞ்ச காலத்துக்கு வைத்திருக்க வேண்டும் என்று ஆலோசனை கூறினார்கள். மக்களுடைய கொந்தளிப்பை அமைதிப்படுத்த வேண்டுமானால் தனது அன்புக்குரிய நண்பரைக் கைவிட வேண்டும் என்பதை ஃபிலீப் உணரத் தொடங்கினார். லோ பிரான்சை விட்டுப் போக அனுமதித்தார்; அது அவர் கடைசியாகச் செய்த உதவி.

1720 டிசம்பரில் ஜான் லோ இரகசியமாக பிரஸ்ஸெல்ஸ் நகரத்துக்குத் தன் மகனோடு சென்றார்; அவர் மனைவி, மகள், சகோதரன் ஆகியோரைப் பாரிசிலேயே விட்டுவிட்டுப் போனார். அவருடைய சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுக் கடன் காரர்களுக்குக் கொடுப்பதற்காக உபயோகப்படுத்தப்பட்டன.

சமூகக் கருத்து நிலையில் லோவின் திட்டமும் அதன் வீழ்ச்சியும் எதைக் குறிக்கின்றன? இந்தப் பிரச்சினையைப் பற்றி சுமார் இருநூற்றைம்பது வருடங்களாக விவாதம் நடைபெற்று வருகிறது.

18-ம் நூற்றாண்டில் பொதுவாக லோவைத் தீவிரமாகக் கண்டனம் செய்தார்கள். ஆனால் இதில் அறநெறியின் அடிப்படையில் ஒரு ஆணவமான போக்கு அதிகமாக இருந்ததே தவிர நிதானமான மதிப்பீடு இல்லை. சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில் லூயீ பிளாங் (அவருடைய பிரெஞ்சுப் புரட்சியின் வரலாறு என்ற புத்தகத்தில்) மற்றும் அதே மாதிரியான கருத்துக்களைக் கொண்ட இதர சோஷலிஸ்டுகளும் லோ ”இழந்த பெயரை மீட்டுக் கொடுத்தார்கள்”; அவரை சோஷலிசத்தின் முன்னோடி என்று காட்டுவதற்கு முயற்சி செய்தார்கள். லோ தங்கத்தையும் வெள்ளியையும் “பணக் காரர்களின் பணம்” என்று கண்டித்தார்; ”ஏழைகளின் பணமான” காகிதப் பணத்தைக் கொண்டு செலாவணியை நடத்த விரும்பினார் என்று லுயீ பிளாங் கூறினார்.

எல்லாவற்றையும் கொண்டிருந்த வங்கி, வர்த்தக ஏகபோகம் ஆகியவற்றின் மூலமாக லோ, கொலைகாரத்தனமான முதலாளித்துவப் போட்டிக்குப் பதிலாக சோஷலிசத்தின் இணைப்புக் கோட்பாட்டைச் செயல்படுத்துவதற்கு முயற்சித்தார் என்று சொல்லப்படுகிறது. லோவின் பொருளாதார நடவடிக்கைகளில் சில உழைக்கும் மக்களின் வாழ்க்கையில் துன்பத்தைக் குறைப்பதற்காகவே செய்யப்பட்ட நடவடிக்கைகள் என்று லூயீ பிளாங் விளக்குகிறார்.

இது உண்மையிலிருந்து ஓரளவுக்கு மாறானதாகும். லோ எந்த வடிவத்தில் இணைப்புக் கோட்பாட்டைக் கையாள முயன்றாரோ அது கலப்பற்ற முதலாளித்துவக் கோட்பாடாகும். அது முதலாளித்துவத்துக்கு எதிரிடையாக நிற்கவில்லை, ஆனால் சமூகத்தைச் செயலற்றுப் போகும் வகையில் தனிப் பகுதிகளாகப் பிரித்து சமூக மேனிலையாக்கத்தை இல்லாமற் செய்த நிலப்பிரபுத்துவத்துக்கு அது எதிரிடையாக நிற்கிறது. அவர் தன்னுடைய கம்பெனியின் எல்லாப் பங்குதாரர்களையும் வங்கியின் வாடிக்கையாளர்களையும் – பிரபுவையும் முதலாளியையும், கைவினைஞரையும் வணிகரையும் – ஒன்று சேர்த்துச் சமம் என்று ஆக்க விரும்பினார்; ஆனால் அவர்களை முதலாளிகளாகவே ஒன்று சேர்க்க விரும்பினார்.

லோ தன்னுடைய முறையின் மூலம் தயாரிப்பு வேலையைச் செய்தார்; பிற்காலத்தில் முதலாளித்துவம் இதை முழுமையாகச் சாதித்தது: சரித்திர ரீதியாகப் பார்க்கும் பொழுது, முதலாளி வர்க்கம் மிகப் புரட்சிகரமான ஒரு பாத்திரத்தை வகித்துச் செயலாற்றியிருக்கிறது.

”எங்கெல்லாம் முதலாளி வர்க்கத்தின் கை ஓங்கிற்றோ, அங்கெல்லாம் அது சகல நிலப்பிரபுத்துவ உறவுகளுக்கும் தந்தை வழி உறவுகளுக்கும் சம்பிரதாய உறவுகளுக்கும் முடிவு கட்டியது. தன்னை ”இயற்கையாகவே மேம்பட்டவர்” என்போரிடம் மனிதன் கட்டுண்டு கிடக்கும்படி செய்த பல்வகை நிலப்பிரபுத்துவத் தளைகளை அது தயவு தாட்சணியமில்லாமல் அறுத்தெறிந்தது. அப்பட்டமான சுயநலத்தைத் தவிர, உணர்ச்சியற்ற “ரொக்கப் பட்டுவாடாவைத் தவிர,” மனிதர்களுக்கிடையே வேறு எந்த உறவும் இல்லாமல் அது செய்துவிட்டது” (1) என்று மார்க்ஸ், எங்கெல்ஸ் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையில் எழுதியிருக்கின்றனர்.

புவாகில்பேர் அளவுக்குக் குறைவான அர்த்தத்தில் கூட லோ ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் ஆதரவாளராக இருக்கவில்லை. ருவான் நீதிபதி மக்களிடம், விவசாயிகளிடம் காட்டினாரே உண்மையான பரிவு, அதை லோவின் புத்தகங்களில் சிறிது கூடப் பார்க்க முடியாது. மேலும், வீர சாகஸக்காரர், சூதாடி, லாபவேட்டைக்காரர் என்ற வகையில் லோவின் இயல்புக்கு அது முற்றிலும் பொருந்தாததாகும்.

லோ பெரிய, பணக்கார முதலாளிகளின் நலன்களை எடுத்துரைத்தார், அவர்களின் தொழிலூக்கத் திறமையில் அவர் நம்பிக்கை வைத்தார். அதுவே அவருடைய கொள்கை. அவருடைய கம்பெனியின் பங்குகளைப் பெரிய முதலாளிகள் வாங்கியிருந்தார்கள்; அவர் கடைசி வரை அந்தப் பங்குகளைத் தூக்கிப் பிடித்தார். அவருடைய வங்கி வெளியிட்ட காகித நோட்டுகள் இன்னும் விரிவான அடிப்படையில் பொது மக்களிடையே வினியோகிக்கப்பட்டிருந்தன; அந்த நோட்டுகளின் கதியை விதி எழுதியபடி விட்டுவிட்டார்.

அவருடைய திட்டமும் அதன் வீழ்ச்சியும் செல்வம், வருமானம் ஆகியவற்றைக் கணிசமான அளவுக்கு மறுவினியோகம் செய்தது. அது பிரபுக்களுடைய நிலையை ஏற்கெனவே இருந்ததைக் காட்டிலும் அதிகமாக அரித்து வீழ்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் அவர்கள் தங்களுடைய பண்ணைகளையும் மாளிகைகளையும் விற்று இந்த ஊக வாணிகத்தில் கலந்து கொண்டனர். பொறுப்பு அரசர் ஆட்சி செய்த காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் முடியாட்சி, பிரபுக்கள் ஆகியோருடைய நிலையை பலவீனப்படுத்தின.

படிக்க:
♦ தமிழகம் : சாதிவெறியர்களின் சொர்க்கபூமியாகிறது !
♦ மோடி அரசின் தேசிய கல்வி கொள்கை – 2019 நிராகரிக்க வேண்டும் – ஏன் ? | பு.மா.இ.மு வெளியீடு !

மறுபக்கத்தில், லோ நிதித்துறையில் செய்த மாயவித்தை நகரங்களிலிருந்த ஏழைகளை அதிகமாக பாதித்தது. விலைகள் அதிகரித்த பொழுது அவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டார்கள், காகிதப் பணம் செல்லாது என அறிவித்த பொழுது கைவினைஞர்கள், சிறு கடைக்காரர்கள், வேலைக்காரர்கள் – விவசாயிகளும் கூட – சிறு தொகைகளாகக் கணிசமான அளவுக்குக் காகிதப் பணத்தைச் சேர்த்து வைத்திருந்தார்கள் என்று தெரியவந்தது. அந்தப் பணத்தை அவர்கள் இழந்தார்கள்.

லோவின் திட்டத்தினாலேற்பட்ட முக்கியமான சமூக விளைவு திடீர்ப் பணக்காரர்கள் முன்னுக்கு வந்ததாகும். இவர்கள் வரைமுறையற்ற ஊக வாணிகத்தின் மூலம் தாங்களுடைந்த செல்வத்தை எப்படியோ காப்பாற்றித் தக்கவைத்துக் கொண்டனர்.

லோ பாரிசை விட்டு ஓடிய பிறகு மேலும் எட்டு வருடங்கள் உயிரோடிருந்தார். அவர் ஏழையாகிவிட்டார். அதாவது பட்டினி கிடந்து மரணமடைகின்ற அளவுக்கு ஏழையல்ல; சொந்தத்தில் கோச் வண்டி வைத்துக்கொள்ள முடியாத ஏழையாக இருந்தார்; மாளிகையில் வசித்தவர் இப்பொழுது சிறு அறையொன்றில் வசித்தார். அவருக்குச் சொந்த நாடு இல்லை; ஆனால் அவர் எப்பொழுதுமே ஊர் ஊராகப் போய் நாடு கடத்தப்பட்டவரின் வாழ்க்கையை நடத்தி வந்தவர். எனவே அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. இதன் பிறகு அவர் தன்னுடைய மனைவியை (அந்தப் பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டதாகக் கூற முடியாது) அல்லது மகளை மறுபடியும் சந்திக்க முடியவில்லை. அவர் பிரான்சிற்குள் நுழைய அனுமதி கிடையாது; அவர்கள் பிரான்சை விட்டுப் போகக் கூடாதென்று தடை விதிக்கப்பட்டிருந்தது.

முதலில் சில வருடகாலம் வரை, சீக்கிரமே பிரான்சுக்குத் திரும்ப முடியும், அங்கே தன்னுடைய நிலையைப் பற்றி விளக்கிக் கூறி தன்னுடைய நடவடிக்கைகளைத் தொடர முடியும் என்று அவர் நம்பினார். பொறுப்பு அரசருக்கு அடிக்கடி கடிதங்கள் அனுப்பினார்; இவற்றில் நடந்த எல்லாவற்றையும் பற்றித் திரும்பத் திரும்ப விளக்கினார்; தான் செய்தவை சரி என்று வாதாடினார். இந்தக் கடிதங்களிலும் அவருடைய பொருளாதாரக் கருத்துக்களின் சாராம்சம் பழைய விதமாகவே இருந்தது. இனிமேல் அதிகமான கவனத்தோடும் பொறுமையோடும் நடந்து கொள்வதாகச் சொன்னதுதான் அவற்றிலிருந்த வேறுபாடாகும்.

1723-ம் வருடத்தில் பொறுப்பு அரசராக இருந்த ஃபிலீப் திடீரென்று மரணமடைந்தார். தன்னுடைய பதவியையும் சொத்துக்களையும் திரும்பப் பெற முடியும் என்று லோ கொண்டிருந்த நம்பிக்கைகள் அனைத்தும் உடனே வீழ்ச்சியடைந்தன. பொறுப்பு அரசர் அவருக்குக் கொடுக்கத் தொடங்கியிருந்த குறைவான ஓய்வூதியமும் நின்று விட்டது. அதன் பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் அவருடைய பெயரைக் கூடக் கேட்பதற்கு விரும்பவில்லை. லோ இப்பொழுது லண்டனில் வசித்து வந்தார். ஆங்கில அரசாங்கம் அவரைப் போதுமான செல்வாக்கும் நுண்ணறிவுமுடையவராகக் கருதி அவரை இரகசியமான வேலைக்காக ஜெர்மனிக்கு அனுப்பியது. ஆஹென், மூனிக் ஆகிய ஜெர்மன் நகரங்களில் அவர் ஒரு வருட காலம் இருந்தார்.

ஒரு காலத்தில் மாபெரும் நிதித்துறை வல்லுநராக, எல்லா அதிகாரங்களுமுடைய அமைச்சராகத் திகழ்ந்த லோ. இப்பொழுது அந்தப் பெருமையின் நிழலுருவமாக மட்டுமே இருந்தார். அவர் தன்னுடைய விவகாரங்களைப் பற்றி, தன்னைத் தற்காத்துக் கொண்டும் எதிரிகள் மீது குற்றம் சாட்டியும் எப்பொழுதும் தொண தொணவென்று பேசிக் கொண்டிருக்க ஆரம்பித்தார், அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டிருப்பதற்கும் ஆட்களுக்குக் குறைச்சலில்லை.

அவர் காகிதத்தைத் தங்கமாக மாற்றக் கூடிய இரகசியம் தெரிந்தவர் என்று பலர் நினைத்தார்கள். அவர் முட்டாளல்ல, எனவே தம்முடைய திரண்ட செல்வத்தில் ஒரு பகுதியையாவது பிரான்சுக்கு வெளியே பத்திரப்படுத்தியிருப்பார் என்று இன்னும் பலர் நினைத்துக் கொண்டார்கள். அந்தப் பணம் இருக்குமிடத்தைத் தெரிந்து கொள்ள நினைத்தவர்களும் உண்டு. இவர்களைக் காட்டிலும் அதிகமான மூட நம்பிக்கை உள்ளவர்கள் அவரை ஒரு மந்திரவாதியென்றே நம்பினார்கள்.

லோ தன்னுடைய கடைசி வருடங்களை வெனிஸ் நகரத்தில் கழித்தார். அவர் தன்னுடைய ஓய்வு நேரத்தை சூதாட்டத்திலும் (அவரிடமிருந்த சூதாட்ட வெறியை மரணம்தான் குணப்படுத்தியது) இன்னும் ஏராளமாகத் தன்னைப் பார்க்க வந்து கொண்டிருந்தவர்களோடு பேசிக் கொண்டிருப்பதிலும் பொறுப்பு அரசர் காலத்தில் நிதி விவகாரங்களின் வரலாறு என்ற பெரிய புத்தகத்தை எழுதுவதிலும் செலவிட்டார். பிற்காலத்தினருக்குத் தன்னுடைய நிலையை விளக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்தப் புத்தகம் எழுதப்பட்டது. அதற்கு இருநூறு வருடங்களுக்குப் பிறகுதான் அது முதன்முறையாக வெளியிடப்பட்டது.

புகழ் வாய்ந்த மொன்டெஸ்க்யூ ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் வந்தபொழுது 1728-ம் வருடத்தில் அவரைச் சந்தித்தார். லோ ஓரளவுக்கு முதுமையின் தளர்ச்சியை அடைந்துவிட்டதாக அவர் கருதினார். எனினும் தான் செய்தவை சரியானவை என்பதில் அவர் வெறிகொண்ட நம்பிக்கை வைத்திருந்ததோடு எப்பொழுதும் தன்னுடைய கருத்துக்களை ஆதரித்துப் பேசத் தயாராக இருந்தார் என்பதையும் கண்டார். ஜான் லோ 1729 மார்ச்சில் வெனிசில் நிமோனியாக் காய்ச்சலால் இறந்தார்.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1)  K. Marx, F, Engels, Selected Works, in three volumes, Vol. 1, Moscow, 1973, p. 111.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க