காதலனை ஒரு தடவை கூட நேரில் காணாத கடிதக் காதல் !

இந்த உணர்வைத் "தபால் காதல்” என அவன் குறித்தான். தான் காதல் கொண்டுவிட்டதாக, அதுவும் பள்ளிக்கூட நாட்களில் போன்று குழந்தைத்தனமாக அல்ல, உண்மையாகக் காதல் கொண்டுவிட்டதாக ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 37 ...

உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 12-அ

நாற்பத்து இரண்டாம் வார்டில் “ராஜ தோரணையான பொய்க்கால்கள்” வந்திருப்பது பற்றிக் காரசாரமான விவாதம் இன்னும் ஓர் இடத்தில் நடந்தது. மாஸ்கோ அரசாங்கப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பிரிவின் மூன்றாம் ஆண்டு வகுப்புதான் அந்த இடம். அந்தக் காலத்தில் இந்த வகுப்பில் மிகப் பெரும்பாலராயிருந்த மாணவிகள் அனைவரும், அன்யூத்தாவின் சொற்படி, நாற்பத்து இரண்டாவது வார்டு விவகாரங்களை நன்கு அறிந்திருந்தார்கள்.

“ராஜதோரணையான பொய்க்கால்களின்” தொடர்பாக மெரேஸ்யெவ் மறுபடி விமானம் ஓட்டுவானா மாட்டானா என்பது பற்றிச் சாப்பாட்டு அறையில் விரிவாக விவாதம் நடந்தது. விவாதத்தில் இளமையும் உற்சாகமும் பொங்கியது. இதில் பங்கு கொண்ட இரு தரப்பினரும் மெரேஸ்யேவ் பால் ஒரே மாதிரி அனுதாபம் காட்டினார்கள். சண்டை விமானம் ஓட்டுவதில் உள்ள சிக்கல்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு மெரேஸ்யெவால் இயலாது என்றார்கள் நம்பிக்கையின்மைவாதிகள். எதிரியிடமிருந்து தப்பி அடர் காட்டின் ஊடாக இரண்டு வாரங்கள் தவழ்ந்தும் ஊர்ந்தும் எத்தனையோ கிலோ மீட்டர் தொலைவைக் கடந்த மனிதனுக்கு இயலாதது எதுவும் இல்லை என்று வாதித்தார்கள் நம்பிக்கைவாதிகள். தங்கள் வாதங்களுக்கு ஆதாரமாக வரலாற்றிலும் புத்தகங்களிலும் இருந்து உதாரணங்கள் காட்டினார்கள் அவர்கள்.

படிக்க :
♦ ஜம்மு காஷ்மீர் : சரத்து 370-ஐ ரத்து செய்த பாசிசம் !
♦ காஷ்மீர் மண்ணையும் பெண்களையும் அபகரிக்கத் துடிக்கும் பாஜக !

இந்த விவாதங்களில் அன்யூத்தா கலந்து கொள்ளவில்லை. தனக்கு அறிமுகம் அற்ற விமானியின் பொய்க்கால்களில் அவளுக்கு அதிக அக்கறை ஏற்படவில்லை. அரிதாகக் கிடைத்த ஓய்வு நேரத்தில், கிரிகொரிய் க்யோஸ்தியேவுடனான தனது உறவுகளைப் பற்றியே அவள் எண்ணமிட்டாள். இவை மேலும் சிக்கலாகி வருவதாக அவளுக்குப் பட்டது. இத்தகைய துன்ப வாழ்க்கை கொண்ட வீரக் கமாண்டரைப் பற்றி அறிந்ததும் அவனுடைய துயரத்தை ஓரளவு குறைக்கும் தன்னலமற்ற விருப்பத்தால் தூண்டப்பட்டுத் தொடக்கத்தில் அவள் அவனுக்கு எழுதினாள். ‘அப்புறம், அவர்களுடைய கடித நட்பு வலுவடைய, தேசபக்தப் போரின் அருவ வீரனது உரு அகன்று அதன் இடத்தில், உண்மையான, உயிரோட்டமுள்ள இளைஞன் வந்துவிட்டான். இந்த இளைஞன் பால் அவளது அக்கறை வர வர மிகுந்து கொண்டு போயிற்று.

அவனிடமிருந்து கடிதங்கள் வராவிட்டால் தான் நிம்மதி இழந்து ஏங்கித் தவிப்பதை அவள் கவனித்தாள். இந்தப் புது அனுபவம் அவளுக்கு மகிழ்வு ஊட்டியது, அதே சமயம் அச்சம் உண்டாக்கியது. என்ன, இது காதலா? ஒரு மனிதனை ஒரு தடவை கூட நேரில் காணாமல், அவன் குரலைக் கூடக் கேட்காமல், காதலிக்க முடியுமா? இதே உணர்வு தன்னையும் ஆட் கொண்டிருப்பதாக க்யோஸ்தியேவ் ஒரு முறை அவளிடம் ஒப்புக்கொண்டான் – இந்த உணர்வைத் “தபால் காதல்” என அவன் குறித்தான். தான் காதல் கொண்டுவிட்டதாக, அதுவும் பள்ளிக்கூட நாட்களில் போன்று குழந்தைத்தனமாக அல்ல, உண்மையாகக் காதல் கொண்டுவிட்டதாக, அப்போது முதல் அன்யூத்தாவுக்கு உறுதி ஏற்பட்டது. தான் இப்போது இவ்வளவு பொறுமையின்றி எதிர்பார்க்கும் இந்தக் கடிதங்கள் வருவது நின்றுவிட்டால் வாழ்க்கை தனக்கு அர்த்தம் அற்றதாகி விடும் என்று அவளுக்குத் தோன்றியது.

இவ்வாறு, ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே அவர்கள் தங்கள் காதலை வெளியிட்டார்கள். இதன் பின்பு க்யோஸ்தியேவுக்கு ஏதோ விந்தையானது நிகழ்ந்துவிட்டது. அவனுடைய கடிதங்கள் பதற்றமும் அரைகுறைக் கருத்துக்களும் நிறைந்து விட்டன. பிறகு அவன் துணிவு அடைந்து தன் மனதிலிருப்பதை அப்படியே அவளுக்கு எழுதிவிட்டான். ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே காதலை வெளியிட்டது சரியல்ல என்றும் சூட்டுப்புண் அவனை எப்படி விகாரப்படுத்திவிட்டது என்பதை அவளால் கற்பனை செய்யவே முடியாது என்றும் அவளுக்கு அவன் அனுப்பிய போட்டாவை இப்போது அவன் சிறிதும் ஒத்திருக்கவில்லை என்றும் அவனுடைய கடிதம் கூறியது. தான் அவளை ஏமாற்ற விரும்பவில்லை என்றும், யாருடன் உறவாடுகிறோம் என்று அவள் தன் கண்களால் பார்க்கும் வரை தன் உணர்ச்சிகளைப் பற்றி எழுதுவதை நிறுத்திவைக்கும்படி கேட்டுக் கொள்வதாகவும் க்யோஸ்தியேவ் எழுதினான்…

அவன் மருத்துவமனையிலிருந்து வெளியேறும் நாள் நெருங்கியது. அவன் மேலும் அடிக்கடி கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்துக் கொள்ளலானான். ஒரு தரம் எட்ட நின்று விரைந்து மேல்நோக்காகத் தன்னைப் பார்வையிடுவான். மறு தரம் தன் விகாரமான முகத்தைக் கண்ணாடிக்கு வெகு அருகே கொண்டுவந்து புண்களையும் தழும்புகளையும் தடவித் தேய்த்துச் சீர்படுத்த முயல்வான். தொலைவிலிருந்து பார்க்க அவன் எவ்வளவோ நன்றாயிருந்தான். அகன்ற தோள்களும், குறுகிய இடையும், நேரான எஃகுத் தடிகள் போன்ற கால்களும் வலிய உடற்கட்டும் வாய்ந்தவனாகக் காணப்பட்டான். ஆனால் அருகிலோ! கன்னங்களிலும் மோவாயிலும் இருந்த சிவந்த காயத் தழும்புகளும் வரிகள் விழுந்து விரைப்பாயிருந்த தோலும் அவனுக்கு ஒரே உளச்சோர்வு ஏற்படுத்தின. அவள் பார்த்தால் என்ன செய்வாள்? அரண்டு போவாளோ? ஒரு பார்வை பார்த்துவிட்டுத் திரும்பி, தோள்களைக் குலுக்கி விட்டு அப்பால் சென்றுவிடுவாளோ? அல்லது – இது இன்னும் மோசம் உபசாரத்துக்காக அவனுடன் ஓரிரண்டு மணி நேரம், வார்த்தையாடி விட்டு, உணர்ச்சியற்ற சம்பிரதாயச் சொற்களைப் பகர்ந்து விட்டு விடைபெற்றுக் கொள்வாளோ? – இவ்வாறெல்லாம் கலவரத்துடன் எண்ணமிட்டான் க்யோஸ்தியேவ்.

இந்த மாதிரி ஏற்கனவே நடந்துவிட்டதுபோலப் பதற்றமடைந்து மனத்தாங்கலால் வெளிறிப்போனான் அவன்.

உதட்டைக் கடித்துக் கொண்டும் கொடிய வலி காரணமாக விழிகளிலிருந்து கட்டுக்கு அடங்காமல் துளித்த கண்ணீரை அடக்கிக் கொள்ள முயன்றவாறும் இருபத்து மூன்றாவது தடவை ஆளோடியில் நடந்து திரும்பி அன்றையப் பயிற்சியைச் சிரமத்துடன் முடித்தான் சீனியர் லெப்டினன்ட் மெரேஸ்யெவ்.

பிறகு அங்கியின் பையிலிருந்து நிழற்படத்தை எடுத்துக் கூர்ந்து பரிசீலித்தான். படத்தில் இருந்தாள் சதைப்பிடிப்புள்ள கன்னி. அவளுடைய நெற்றி விசாலமாக இருந்தது. அடர்த்தியற்ற, மென்மையான செழுங்கூந்தல் பின்புறமாக வாரிவிடப்பட்டிருந்தது. இயல்பான ருஷ்ய மூக்கு தடித்து, சற்றே மேல் தூக்கியிருந்தது. உதடுகள் குழந்தையினவை போல மென்மையாக இருந்தன. மேல் உதட்டில் அரிதாகவே புலப்படும் கரு மச்சம் இருந்தது. ஓரளவு உப்பிய விழிகள் – அவை சாம்பல் நிறமாகவோ, நீல நிறமாகவோ இருக்க வேண்டும் – கள்ளங் கபடமற்ற அந்த இன் முகத்திலிருந்து ஒளிவு இன்றி நேர்மையுடன் நோக்கின.

“நீ எப்படிப்பட்டவள்? ஊம், சொல்லு: மிரண்டு போய் விட மாட்டாயே? ஓடிவிட மாட்டாயே? என் அலங்கோலத்தைக் காணாதிருக்கும் அளவுக்கு உன் இதயம் விசாலமானதுதானா?” – நிழல்படத்தைத் துரவி ஆராய்ந்தவாறு மனத்துக்குள்ளாகவே அவன் வினவினான்.

அந்தச் சமயத்தில் சீனியர் லெப்டினன்ட் மெரேஸ்யெவ் கவைக் கோல்களை டொக் டொக்கென்று வைத்தவாறு, பொய்க் கால்கள் கறுமுறுக்க அளவாக அடியெடுத்து வைத்து ஆளோடியில் முன்னும் பின்னும் சளைக்காமல் நடை போட்டான். ஒரு முறை, இரண்டு, பத்து, பதினைந்து, இருபது முறைகள் கடந்து சென்றான். காலையிலும் மாலையிலும் தனது ஏதோ திட்டத்தின்படி அவன் நடந்து பழகினான். ஒவ்வொரு நாளும் அவன் தூரம் அதிகமாகிக் கொண்டு போயிற்று.

படிக்க:
போலோ ஸ்ரீராம் – ஜெய் கார்ப்பரேட் ! புதிய கலாச்சாரம் நூல் !
மோடி – அமித் ஷா கும்பலின் தொழிலாளர் சட்டம் ஒழிப்பு நடவடிக்கையை கண்டித்து பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம் !

“அருமையான ஆள்! விடாமுயற்சி உள்ளவன், பிடிவாதக்காரன். இவனுக்குத்தான் என்ன சித்தவுறுதி! கவைக் கோல்களின் உதவியால் விரைவாகவும் லாவகமாகவும் நடக்க ஒரு வாரத்தில் பயின்று விட்டான். மற்றவர்களுக்கு இவ்வாறு பழகச் சில மாதங்கள் பிடிக்கும். நேற்று ஸ்டிரெச்சர் வேண்டாம் என்று சொல்லிவிட்டுச் சிகிச்சை அறைக்கு மாடிப்படி இறங்கித் தானாகவே சென்றான். அங்கே போய்விட்டுத் தானே படிகள் ஏறித் திரும்பி வந்தான். கண்ணீர் முகத்தில் வழிந்தது, ஆனால் அவன் விடாது ஏறினான். உதவிக்கு வந்த தாதியை அதட்டக் கூடச் செய்தான். தானாகவே மேல் மாடியை அடைந்தும் அவன் முகந்தான் எப்படிச் சுடர்ந்தது! ஏதோ எல்ப்ரூஸ் சிகரத்தை எட்டிவிட்டவன் போல.” – இவ்வாறு அவனைப் பற்றிச் சிந்தித்தான் க்யோஸ்தியேவ்.

… மாலைப் பயிற்சிக்காக திரும்பிய அலெக்ஸேய் மெரேஸ்யெவ்வின் உடம்பு களைத்து நொந்துபோயிருந்தது. அடித்தொடைகள் இரத்தம் கட்டிக் காத்துவதையும் கவைக் கோல்கள் அழுத்தியதால் மரத்துப்போன தோள்கள் நோவதையும் அவன் உணர்ந்தான்.

டொக்,டொக். கர்ர், மர்ர். டொக்,டொக். கர்ர், மர்ர்.. உதட்டைக் கடித்துக் கொண்டும் கொடிய வலி காரணமாக விழிகளிலிருந்து கட்டுக்கு அடங்காமல் துளித்த கண்ணீரை அடக்கிக் கொள்ள முயன்றவாறும் இருபத்து மூன்றாவது தடவை ஆளோடியில் நடந்து திரும்பி அன்றையப் பயிற்சியைச் சிரமத்துடன் முடித்தான் சீனியர் லெப்டினன்ட் மெரேஸ்யெவ்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க