NEP 2019 : ஒரு துளி பாலில் ஒரு குடம் விஷம் | CCCE திருச்சி அரங்கக் கூட்டம்

பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு - சார்பாக கடந்த 6.8.2019 அன்று திருச்சியில் நடைபெற்ற தேசிய கல்விக்கொள்கை-2019 பற்றிய அரங்க கூட்டத்தின் பதிவுகள்.

பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு – திருச்சி சார்பாக  தேசிய கல்விக்கொள்கை  2019 பற்றிய அரங்க கூட்டம் கடந்த 6.8.2019 அன்று திருச்சியில் சுமங்கலி மஹாலில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில்  கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள்,  சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு  அமைப்பினர் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பேரா. மன்சூர் தலைமையுரையில் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையைக்காட்டிலும் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை பயங்கரமானது என்றும் மாநில உரிமைகள் மீட்டெடுக்கப் படவேண்டும் என்றும் அரசுக் கல்லூரிகளே சுயநிதிக்கல்லூரிகளாக  மாறும்போது அரசு உதவி பெறும் கல்லூரி நிர்வாகங்கள் தங்களுக்கு வரும் பேராபத்தை உணராமல் இருப்பதையும் சுட்டிக் காட்டினார் .

இக்கூட்டத்தில் இந்திய மொழிப் பன்மைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்துப் பேசிய  பேரா. மதிவாணன் இந்த வரைவு அறிக்கையின் பரிந்துரைகள் மாநில மொழிகளை புறந்தள்ளி விட்டு ஒரே பண்பாட்டு மொழியாக சமஸ்கிருதத்தை கொண்டு வரத் துடிப்பதை அம்பலப்படுத்தினார். அடுத்து பேசிய பேரா.அய்யம்பிள்ளை வரைவு அறிக்கை CII, FICII, NASSCOM போன்ற பெருமுதலாளிகளுடைய சங்கங்களின்  பரிந்துரைகளை வழிமொழிவதாகவே உள்ளது எனவும் அடித்தட்டு மக்களுக்கு கல்வியை மறுப்பதையே  தேசிய கல்விக் கொள்கை முன்வைக்கிறது என  விபரங்களுடன்  விளக்கினார்.

அடுத்து பேசிய முனைவர் ரமேஷ் உயர்கல்வியை சர்வதேசியமயமாக்குதல் என்ற பெயரில் இந்தியா பெருமுதலாளிகள் / நிதிமூலதனங்களிடம் தாரைவார்ப்பதற்காக மோடி அரசு முன்வைத்துள்ள பரிந்துரைகளை  அம்பலப்படுத்தி பேசினார் . பேரா.கருணானந்தன் எங்கள் மாநில மக்கள் எதைப் படிக்க வேண்டும்? எப்படிப் படிக்க வேண்டும்? எந்த மொழியில் படிக்க வேண்டும்? என்று தீர்மானிக்க நீ யார்? என்ற கேள்வி எழுப்பினார். இப்போது இந்தியாவில் நவீன தேவாசுரப் போர் நிகழ்கிறது. அது கல்விக் கொள்கையிலும் வெளிப்படுகிறது. தமிழகம் போன்ற கல்வியில் முன்னேறிய மாநிலங்களின் கல்வியை ஒற்றைத் தலைமையின் கீழ் கொண்டு வந்து குலக்கல்வி என்ற பேராபத்தில் தள்ள முயலும் இந்த முயற்சியை அனைவரும் இணைந்து தடுத்தாக வேண்டும். எத்தனை சூழ்ச்சிகள் வந்தாலும் இந்தப் போரில் வெல்லப் போவது நாம் தான் என எழுச்சியுரையாற்றினார்.

படிக்க:
காஷ்மீர் துண்டாடப்பட்ட நாளின் முதல் பலி – 17 வயது சிறுவன் !
போலீசு ராச்சியத்தின் கீழ் தமிழகம் !

பெரும்பான்மை மக்களுக்கு கல்வியை மறுக்கும் தேசிய கல்விக் கொள்கை – 2019-ஐ முற்றாக நிராகரிக்க வேண்டும் என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இறுதியாக பேரா.மருதை நன்றியுரை கூறியதுடன் கூட்டம் நிறைவடைந்தது.

தகவல்:
பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு,
திருச்சி.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க