உண்மை மனிதனின் கதை | மூன்றாம் பாகம் | அத்தியாயம் – 02

மின்சார ரெயில் சக்கரங்கள் கடகடக்க, ஊதல் அலற, மாஸ்கோ நகர்புறத்தில் உற்சாகமாக விரைந்தோடிக் கொண்டிருந்தது. அலெக்ஸேய் மெரேஸ்யெவ் ஜன்னல் அருகே உட்கார்ந்திருந்தான். அவனைச் சுவரோடு சுவராக நெருக்கியவாறு பக்கத்தில் அமர்ந்திருந்தார் மழித்த முகமுள்ள ஒரு முதியவர். விளிம்பு அகன்ற தொப்பியும், தங்க வில் கண்ணாடியும் அணிந்திருந்தார் அவர். களை வெட்டும் மண்வெட்டியும், வறண்டியும் செய்தித்தாளில் பாங்காகச் சுற்றி நாடாவால் கட்டப்பட்டு அவரது முழங்கால்களுக்கு இடையே துருத்திக் கொண்டிருந்தன.

அந்தப் பயங்கர நாட்களில் மற்ற எல்லோரையும் போலவே இந்த முதியவரும் யுத்தத்தைப் பற்றியே சிந்தித்தவாறு காலங்கழித்து வந்தார். மெரேஸ்யெவின் முகத்துக்கு முன் வறண்ட உள்ளங்கையை ஆட்டியவாறு பொருள் பொதிந்த கீழ்குரலில் அவன் காதோடு கிசுகிசுத்தார் அவர்:

“நான் சிவில் உத்தியோகஸ்தன் ஆயிற்றே என்று பார்க்காதீர்கள். நமது திட்டத்தை நான் நன்றாகப் புரிந்து கொண்டுவிட்டேன். பகைவனை வோல்காப் பிரதேச ஸ்தெப்பி வெளிகளுக்குக் கவர்ந்து இழுப்பது, ஆமாம், தனது போக்குவரத்து மார்க்கங்களை விரிவாக நீட்ட, இப்போது வழக்கமாகச் சொல்வது போல பிரதானத் தளத்திலிருந்து துண்டிக்கப்பட அவனுக்கு இடங்கொடுப்பது, பிறகு இதோ இங்கிருந்து, மேற்கிலும் வடக்கிலும் இருந்து பாய்ந்து தாக்கி, போக்குவரத்துத் தொடர்புகளைத் துண்டித்து, பகைவனைக் கூறுகளாக வகிர்ந்து விடுவது. ஆமாம்… இது மிகவும் புத்திசாலித்தனம். நமக்கு எதிராக ஒரு ஹிட்லர் மட்டும் இல்லையே. ஐரோப்பா முழுவதையும் அல்லவா தனது சாட்டையால் அடித்து நம் மீது ஏவிவிட்டிருக்கிறான் அவன். ஆறு நாடுகளின் சைனியங்களை எதிர்த்து நாம் தன்னந்தனியாகப் போராடுகிறோம். தனிப்போர் புரிகிறோம். விரிவான பரப்பையாவது அதிர்ச்சி தாங்கியாகப் பயன்படுத்தி இந்தக் கொடிய தாக்குதலின் உக்கிரத்தை மட்டுப்படுத்த வேண்டும். ஆமாம். அறிவுக்குகந்த ஒரே வழி இதுவே. பார்க்கப் போனால் நமது நேச நாடுகள் சும்மாதானே இருக்கின்றன!… இல்லையா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?”

“நான் நினைக்கிறேன், நீங்கள் சொல்வது வெறும் பிதற்றல் என்று. தாய்நாட்டின் நிலப்பரப்பு விலைமதிப்பற்றது. அதிர்ச்சி தாங்கியாக அதைப் பயன்படுத்துவது தகாது” என்று கடுகடுப்புடன் விடையளித்தான் மெரேஸ்யெவ்.

ஆனால் கிழவனாரோ அலெக்ஸேயின் காதோடு உதடுகளை அனேகமாக ஒட்டியவாறு தொணதொணத்துக் கொண்டே போனார். புகையிலை நெடியும் பார்லிக் காப்பி மணமும் அவரிடமிருந்து வந்தன.

“…இல்லை, நீங்கள் படைவீரர். நீங்கள் சொல்லுங்கள், இது சரிதானா? இதோ ஓர் ஆண்டுக்கு மேலாக நாம் பாசிஸத்தைத் தன்னந்தனியே எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கிறோம். ஊம்? ஆனால் நேச நாடுகள் விஷயமோ? இரண்டாம் போர்முனை விஷயமோ? உதாரணமாக இந்தக் காட்சியைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். எதையும் சந்தேகிக்காமல் நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்துக் கொண்டிருந்த ஒரு மனிதனைத் திருடர்கள் பாய்ந்து தாக்குகிறார்கள். அவன், அந்த மனிதன், மனங்கலங்காமல் திருடர்களை எதிர்த்துத் தாக்கிச் சண்டை போடுகிறான். குருதியைப் பெருக்கியவாறு போரிடுகிறான், கையில் கிடைத்ததைக் கொண்டு திருடர்களை அடித்துப் புடைக்கிறான். அவன் தனியாள், திருடர்களோ பலர். அவர்கள் ஆயுதபாணிகள். நெடுங்காலமாகவே அவனுக்காகப் பதி போட்டுக் காத்திருந்தவர்கள். ஆமாம். அண்டைவீட்டாரோ இந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டு தங்கள் வீடுகளின் அருகே நின்று அனுதாபம் தெரிவிக்கிறார்கள். ‘சபாஷ், அருமை, அப்பனே, அருமை! இந்தத் திருட்டுப் பயல்களை இப்படித்தான் மொத்த வேண்டும். அடி அவர்களை, நொறுக்கு!’ என்று உற்சாகப்படுத்துகிறார்கள். திருடர்களை அடித்து விரட்ட உதவுவதற்குப் பதிலாக, கற்களையும் இரும்புத் துண்டுகளையும் அந்த ஆளுக்கு நீட்டுகிறார்கள். ‘இந்தா, இவற்றால் இன்னும் கடுமையாகத் தாக்கு’ என்கிறார்கள். தாங்களோ எட்ட நிற்கிறார்கள். ஆமாம், ஆமாம், இப்போது நேசநாட்டினர் செய்வது இதுவேதான்…”

மெரேஸ்யெவ் அக்கறையுடன் முதியவரைத் திரும்பிப் பார்த்தான். எத்தனையோ பேர் இப்போது அவர்கள் பக்கம் நோக்கிக் கொண்டிருந்தார்கள். செம்மச்செம்ம நிறைந்திருந்த பெட்டியின் எல்லாப் புறங்களிலுமிருந்து குரல்கள் ஒலித்தன:

“அவர் சொல்வது சரிதானே. தன்னந்தனியாகவே போரிடுகிறோம். எங்கே இந்த இரண்டாம் போர்முனை?”

“பரவாயில்லை, ஆண்டவன் அருளால் தனியாகவே காரியத்தைச் சமாளித்து விடுவோம். எல்லாம் முடிந்து இறுதி வெற்றி கிடைக்கும் சமயத்தில் அவர்களும் சேர்ந்து கொள்வார்கள் அதில் பங்கு பெற, இரண்டாம் போர்முனையைத் திறந்துவிடுங்கள்.”

நகர்புறக் குடியிருப்பு ஒன்றின் பிளாட்பாரத்தருகே ரெயில் நின்றது. பைஜாமாக்கள் அணிந்த சில காயமுற்ற படை வீரர்கள் கவைக் கோல்களையும் கைத்தடிகளையும் ஊன்றியவாறு பெட்டியில் ஏறினார்கள். பெர்ரிப் பழங்களும் சூரியகாந்தி விதைகளும் நிறைந்த மூட்டைகள் அவர்கள் கைகளில் இருந்தன. உடம்பு தேறுபவர்களுக்கான மருத்துவமனை ஒன்றிலிருந்து இவ்வூர்ச் சந்தைக்கு அவர்கள் வந்தார்கள் போலும். முதியவர் சட்டென இருக்கைவிட்டு எழுந்தார். ”உட்காருங்கள், தம்பீ, உட்காருங்கள்” என்று கட்டுப்போட்டாலும் கவைக்கோல்களுமாக நின்ற செம்பட்டைத் தலை இளைஞன் ஒருவனை வலுக்கட்டாயமாகத் தமது இடத்தில் உட்கார்த்தினார். “பரவாயில்லை, பரவாயில்லை, உட்காருங்கள். கவலைப்படாதீர்கள், நான் இதோ இறங்க வேண்டியவன் தான்” என்றார்.

தாம் சொல்வது உண்மை என்று காட்டுவதற்காக முதியவர் தமது களைக் கொட்டிகளையும் வறண்டியையும் எடுத்துக் கொண்டு கதவு அருகே நகரக்கூடச் செய்தார். பால்காரிகள் பெஞ்சில் ஒதுங்கி, காயமடைந்தவர்களுக்கு இடம் கொடுக்கத் தலைபட்டார்கள். எங்கோ பின்னாலிருந்து ஒரு பெண்ணின் கண்டனக் குரல் அலெக்ஸேயின் காதுகளை எட்டியது.

“இந்த ஆளுக்கு வெட்கமாயில்லையே! அங்கவீனமடைந்த படைவீரன் பக்கத்தில் நிற்கின்றான், தவிக்கிறான், எல்லோரும் அவனை நெருக்கி இடித்துத் தள்ளுகிறார்கள், ஆனாலும் இந்த ஆள், ஆரோக்கியசாலி, கழுத்து போல உட்கார்ந்திருக்கிறானா, ஏறெடுத்தும் பார்க்காமல். ஏதோ குண்டு தன்னைத் தாக்கவே முடியாது போல. இந்த அழகில் கமாண்டர், விமானி!” என்றது அந்தக் குரல்.

அநியாயமான இந்தச் சுடு சொற்களால் அலெக்ஸேய் கடுஞ்சீற்றம் அடைந்தான். அவனுடைய மூக்குத்துளைகள் கோப மிகுதியால் துடித்தன. ஆனால் சட்டென முகத்தில் களி சுடர்விட அவன் இடத்தைவிட்டுத் துள்ளி எழுந்தான்.

“உட்கார் தம்பீ!” என்றான்.

காயமடைந்தவன் கூச்சமுற்று மறுத்தான்.

”நீங்கள் என்ன, தோழர் ஸீனியர் லெப்டினன்ட்! கவலைப்படாதீர்கள், நான் நிற்கிறேன். ரொம்ப தூரம் இல்லை. இரண்டு நிறுத்தங்கள்தாம் பாக்கி” என்று கூறினான்.

குறும்புத்தனம் கொண்ட குதூகலம் அலெக்ஸேயின் உள்ளத்தில் ஊற்றெடுத்தது. “உட்கார் என்கிறேன்!” என உரக்கக் கத்தினான்.

இந்தச் சமயத்தில் ரெயில் கண்டக்டர் மாது அவன் போக வேண்டிய இடத்தின் பெயரை அறிவித்தாள். ரெயில் மெதுவாக நிற்கலாயிற்று. கூட்டத்தில் புகுந்து விலக்கிக் கொண்டு முன்னேறிய அலெக்ஸேய் கதவருகே கண்ணாடிக்காரக் கிழவரை மறுபடி எதிர்ப்பட்டான். அவர் நெடுநாள் பழகியவர் போல அவனை நோக்கிக் கண் சிமிட்டினார்.

“என்ன நினைக்கிறீர்கள்? என்னவானாலும் இரண்டாவது போர்முனை திறக்கப்படுமா?” என்று கிசுகிசுத்தார்.

“திறக்கப்படவில்லை என்றால் நாமே சமாளித்துக் கொள்வோம்” என்று பதிலளித்துவிட்டு மரப் பிளாட்பாரத்தில் இறங்கினான் அலெக்ஸேய்.

ஆரோக்கிய நிலையம் போகும் வழி மாஸ்கோவில் அவனுக்கு விவரமாக விளக்கப்பட்டிருந்தது. தேர்ந்த படைவீரன் ஆதலால் அவன் ஒரு சில அடையாளங்களைக் கொண்டு ஆரோக்கிய நிலையம் போகும் வழியைச் சிரமமின்றி கண்டு கொண்டான். ரெயிலடியிலிருந்து பதினைந்து நிமிட நடைத் தொலைவில், அமைதியான சிறு ஏரியின் கரையில் இருந்தது ஆரோக்கிய நிலையம்.

சமாதான காலத்தில் விமானிகள் மனைவிமாருடனும் சில வேளைகளில் குடும்பத்தினர் அனைவருடனும் இங்கே தங்கினார்கள். போர்க்காலத்தில் மருத்துவமனைச் சிகிச்சைக்குப் பின் உடம்பைத் தேற்றிக் கொள்ள அவர்கள் இங்கு அனுப்பப்பட்டார்கள். இரு மருங்கிலும் பிர்ச் மரங்கள் வளர்ந்திருந்த விசாலமான தார் ரோடு சுற்றி வளைத்துக் கொண்டு ஆரோக்கிய நிலையத்துக்குச் சென்றது. ஆனால் அலெக்ஸேய் அதில் போகாமல் ரெயிலடியிலிருந்து காட்டின் ஊடாக ஏரிக்கு நேரே சென்ற ஒற்றையடிப் பாதையில் நடந்தான். ஒரு வகையில் சொன்னால் அவன் பின்புலத்திலிருந்து ஆரோக்கிய நிலையத்தை அடைந்தான். ஒருவரும் அவனைக் கவனிக்கவில்லை. பிரதான வாயிலருகே பிதுங்கப் பிதுங்க ஆட்களால் நிறைந்த இரண்டு பஸ்கள் நின்றன. அவற்றைச் சூழ்ந்திருந்த ஆட்கள் கூட்டத்தில் அலெக்ஸேய் கலந்துகொண்டான்.

படிக்க:
காஷ்மீர் : உரிமைப் பறிப்புக்கு எதிராக வழக்கறிஞர்கள் கூட்டறிக்கை !
“காஷ்மீர் திறந்தவெளி சிறைச்சாலையாக மாறிவிட்டது” : உண்மையறியும் குழு அறிக்கை !

ஆரோக்கிய நிலையத்திலிருந்து நேரே போர்முனை செல்லும் விமானிகளை வழியனுப்பவே ஆட்கள் கூடியிருக்கிறார்கள் என்பதை உரையாடல்கள், கேலிப் பேச்சுக்கள், வழியனுப்புக் கத்தல்கள், வாழ்த்துக்கள் ஆகியவற்றிலிருந்து அலெக்ஸேய் தெரிந்து கொண்டான். பிரயாணிகள் குதூகலமும் இன்பக் கிளர்ச்சியும் கொண்டிருந்தார்கள் – தாங்கள் போவது ஒவ்வொரு மேகத்துக்கும் பின்னே சாவு தங்களுக்காகப் பதிபோட்டிருக்கும் இடத்துக்கு அல்ல, அமைதி நிறைந்த சொந்தப் படைத்தளங்களுக்கு என்பது போல. வழியனுப்புவோரின் முகங்களில் பொறுமையின்மையும் ஏக்கமும் ததும்பின. அலெக்ஸேய் இதைப் புரிந்து கொண்டான். தெற்கே நடந்து கொண்டிருந்த புதிய பிரமாண்டமான போர் தொடங்கியது முதலே அடக்கமுடியாத இந்தக் கவர்ச்சியை அவனும் உணர்ந்து வந்தான். போர்முனையில் நிகழ்ச்சிகள் விரிவடைந்து கொண்டும் நிலைமை சிக்கலாகிக் கொண்டும் போகப் போக இந்தக் கவர்ச்சி அதிகரித்தது. இராணுவ வட்டாரங்களில், தணித்த குரலிலும் எச்சரிக்கையுடனுந்தான் என்றாலும், “ஸ்தாலின்கிராத்” என்ற சொல் உச்சரிக்கப்படத் தொடங்கியதுமோ, இந்தக் கவர்ச்சி வேதனை தரும் ஏக்கமாக வளர்ந்துவிட்டது. மருத்துவமனையில் கட்டாயம் காரணமாகச் செயலற்று இருப்பது சகிக்க முடியாதது ஆகிவிட்டது.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க