பல வருடங்களுக்கு முன் என்னுடன் ஒருவர் வேலை செய்தார். அவர் ஒரு போர்த்துக்கீய பெண்ணை மணமுடித்து. அந்த நாட்டிலேயே தங்கிவிட்டவர். அப்பொழுது ஆப்கானிஸ்தான் பிரிவில் என்னுடன் பெஷாவாரில் வேலை பார்த்தார். அவர் பங்களுர்க்காரர் ஆகையால் கொங்கணி என்று ஒரு பாஷை இருக்கிறதாம், அதை பேசுவார். ஆங்கிலத்தையும் அதே மாதிரி பேசுவார். சில நிமிடங்களும், முதல் நாலு வார்த்தைகளும் தவறிய பிறகுதான் அவர் ஆங்கிலம் பேசுகிறார் என்பது எனக்கு பிடிபடும்.
அவரிடம் எல்லாமே இரண்டு இரண்டு பொருள்கள் இருக்கும். இரண்டு ரேடியோ, இரண்டு காமிரா, இரண்டு இஸ்திரிப்பெட்டி, இரண்டு டிவி, இரண்டு சமையல் அடுப்பு என்று இருக்கும். ஒரு நாள் ஏன் இப்படி என்று கேட்டேன். அதற்கும் அவரிடமிருந்து இரண்டு பதில் வந்தது.
1) திடீரென்று யாராவது விருந்தாளி வந்துவிட்டார். உங்கள் சமையல் அடுப்பு வேலை செய்யவில்லை. என்ன செய்வீர்கள்?
2) இந்த நாடுகளில் திருத்துவோரைப் பிடிப்பது கடினம். அப்படி ஏதாவது பொருளை அவர்கள் பழுதுபார்க்க எடுத்துப் போனாலும் ஒரு மாதம் கழித்துதான் திரும்பக் கிடைக்கும். அது வரைக்கும் என்ன செய்வது?
நியாயம்தான். இவர்தான் என்னை தூண்டியவர், ஒரு சட்ட விரோதமான காரியம் செய்வதற்கு. சட்டவிரோதமான காரியம் என்றால் யாருக்குத் தான் கசக்கும். உடனேயே சம்மதித்துவிட்டேன். இது 20 வருடத்திற்கு முந்திய சமாச்சாரம் என்பதால் அதைச் சொல்வதில் இன்றைக்கு ஒரு பிரச்சனையும் இருக்காது.
பிரிட்டிஷ்காரர் இந்தியாவை ஆண்டபோது ஆப்கானிஸ்தான் எல்லையில் இருந்து 40 மைல் தூரத்தில் இருக்கும் டாரா என்ற கிராமத்தினருக்கு 200 வருடங்களுக்கு முன்பாகவே துப்பாக்கிகள் செய்வதற்கு அனுமதி வழங்கியிருந்தனர். அன்றிலிருந்து இன்று வரை இந்தத் தொழில் அந்தக் கிராமத்தில் செழித்து வளர்ந்தது. பாகிஸ்தான் பிரிந்து தனியான சுதந்திர நாடாக இயங்கிய போதும் கூட இதில் ஒரு மாற்றமும் இல்லை. மாறாக இன்னும் முன்னேற்றமான மெசின்களில், மேலும் நுட்பமான துப்பாக்கிகளை அவர்கள் செய்தார்கள்.
டாரா பகுதியை tribal area என்று சொல்வார்கள். நாங்கள் அங்கே போவதற்கு அனுமதி கிடையாது. இங்கே பாகிஸ்தான் சட்டங்கள் செல்லாது. பழங்குடியினரின் சட்டதிட்டங்களே அங்கே செயல்படுத்தப்பட்டன. வாகனத்தில் செல்லும் போது அந்தப் பகுதியைக் கடந்து செல்லலாம். ஆனால் கால்களைக் கீழே வைக்கக்கூடாது.
இந்தப் பகுதிகளில் ரத்தக் கொலைகள் சர்வ சாதாரணம். கொள்ளை அடிப்பது, ஆட்களைக் கடத்துவது, கார்கள் திருடுவது, போதைப் பொருள் வியாபாரம் செய்வது எல்லாம் அன்றாடம் நடக்கும் காரியம். ஆறு மாதங்களுக்கு முன் ஐ.நா ஊழியர்கள் நாலு பேரைக் கடத்தி, பிணையாக பல ஆயிரம் டொலர்கள் கேட்டார்கள். பாகிஸ்தான் அரசாங்கம் தலையிட்டு ஒருவாறு இவர்களை மீட்ட்டுக் கொடுத்தது.
டாராவில் பல விதமான துப்பாக்கிகள் செய்தார்கள், எல்லாமே நகல்தான். ஆனால் அசல் போல நம்பர்கூட இருக்கும். மூலத்துக்கும் நகலுக்கும் வித்தியாசமே காணமுடியாது. நூறு வருடத்துக்கு முந்திய பிரிட்டிஷ் துப்பாக்கிகள், AK 47, M16, கைத்துப்பாக்கி, சுழல் துப்பாக்கி என்று பலவிதமான உற்பத்திகள் நடந்தன. உங்களுக்குப் பிடித்த புது ரக துப்பாக்கியைக் கொடுத்தால் அதுபோலவே நகல் செய்து தருவார்கள். கிழமையில் எழு நாட்களும் பாகிஸ்தானியர்களும், ஆப்கானியர்களும் துப்பாக்கிகள் வாங்க இந்தக் கிராமத்துக்கு வருவார்கள். ஒரு நாளைக்கு இங்கே ஆயிரம் துப்பாக்கிகள் செய்கிறார்கள் என்று விவரம் அறிந்தவர்கள் சொன்னார்கள்.
படிக்க:
♦ ஆப்கான் – மத்திய ஆசியா – எண்ணெய் – இஸ்லாமிய தீவிரவாதம் !
♦ அமேசான் : பற்றியெரியும் பூமிப்பந்தின் நுரையீரல் !
இந்த இடத்துக்குப் போகக்கூடாதென்ற உச்சமான கட்டளை எங்களுக்கு இருந்தது. இங்கே போவதற்குத்தான் நண்பர் என்னை அழைத்தார். அவரிடம் இரண்டு வாகனங்கள் இருந்தன. அதிலே ஒரு நாலு சில்லு வாகனத்தைக் தெரிவு செய்தார். டாரா தடுக்கப்பட்ட இடம் என்றாலும் பாகிஸ்தானுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்தை எப்படியும் பார்த்த பிறகுதான் திரும்புவார்கள். சட்டவிரோதமான காரியங்களைச் செய்வதில் மனிதர்களுக்கு உள்ளூர பெரிய ஆசை உண்டு.
டாரா போவதென்றால் பெஷாவரில் இருந்து தெற்கே ஒன்றரை மணித்தியாலம் பயணம் செய்யவேண்டும். கரடுமுரடான பழங்காலத்து அரசர்களின் பாதைகள். வீடுகள் என்றால் தட்டைக் கூரைகளுடன் சுவர்களில் சின்னச்சின்ன சதுர ஒட்டைகள் வைத்து, ஒரு கோட்டை போல கட்டப்பட்டிருந்தன. சண்டை என்று வரும் போது இந்த ஒட்டைகள் துப்பாக்கியால் சுடுவதற்குப் பயன்படும்.
அங்கே போய் இறங்கியதும் ஒரு தொழிற்சாலையைப் பார்க்கப் போகிறோம் என்ற எண்ணமே எனக்கு இருந்தது. ஆனால் அப்படி ஒன்றும் இல்லவே இல்லை. இது ஒரு குடிசைக் கைத்தொழில் போலவே தொழில் நடந்தது. சாரதி எங்களை ஒவ்வொரு வீடாக கூட்டிச் சென்றார். ஒவ்வொரு வீட்டிலும் ஏதாவது ஒரு அயிட்டம் செய்தார்கள். துப்பாக்கி கைப்பிடி ஒரு வீட்டில், குழாய் ஒரு வீட்டில், விசைக் கருவிகள் ஒரு வீட்டில், இப்படி. செம்பட்டைத் தலை மயிரும், பச்சைக் கண்களும் கொண்ட சிறுவர் சிறுமியர் இந்தப் பணிகளில் சாதாரணமாக ஈடுபட்டிருந்தார்கள். பெரியவர்கள் கடினமான வேலைகளைச் செய்தார்கள். ஆனால் இந்த உதிரிப் பாகங்கள் எங்கே பொருத்தப்பட்டு துப்பாக்கியாக மாறுகின்றன என்பது தெரியவில்லை. நிரைநிரையாக இருந்த கடைகளில் பூர்த்தியான துப்பாக்கிகள் விற்பனைக்கு இருந்தன. யாரும் வாங்கலாம், ஒருவித தடையுமில்லை. உங்கள் பெயரைக்கூட அவர்கள் பதிவு செய்வதில்லை. ஒரு கேள்வியில்லை. கடைகளின் முன்னே போடப்பட்டிருந்த கயிற்றுக் கட்டில்களில் வாடிக்கைக்காரர்களும், வேடிக்கைக்காரர்களும் உட்கார்ந்து முதல் நாள் இரவு மிச்சம் வைத்த நித்திரையை தொடர்ந்தனர். இவற்றையெல்லாம் மீறி துப்பாக்கி விற்பனையும் அவ்வப்போது நடந்தது.
இதிலே எனக்கு பிடித்த அம்சம் ஒன்று இருந்தது. அமெரிக்கா போன்ற நாடுகளில் துப்பாக்கிக் கடைகளில் குறிபார்த்து சுட்டு வாங்குவதற்கு வசதிகள் இருக்கும். இங்கே அப்படி ஒன்றும் target வசதிகள் இல்லை. இவர்கள் துப்பாக்கி தேர்வு செய்வது வித்தியாசமாக இருந்தது.
நாங்கள் பார்வையிட வந்த கடையின் சொந்தக்காரர் முற்றிலும் நீல உடையில் காட்சியளித்தார். நீல தலைப்பா, நீல சப்பாத்து, நீல கமிஸ். ஒர் உருண்டையான தலையணையில் சாய்ந்தபடி மொகலாய மன்னர்கள்போல ஹுக்காவை இழுத்தபடி வீற்றிருந்தார். துப்பாக்கிகள் எப்படியும் தங்களைத் தாங்களே விற்றுக்கொள்ளும் என்ற பாவனையில் இவருடைய வியாபாரம் அசிரத்தையாக நடந்தது.
அவருக்கு முன்னால் விருந்தாளி போல காணப்பட்ட ஒருத்தர் நூல் நூலாக பிரிந்த இறைச்சியை கடித்து இழுத்துச் சாப்பிட்டார். உடம்பு முழுக்க ரத்தம் கட்டியது போல அவருடைய நிறம். கைச்சதைகள் திரண்டு உருண்டு போய் தெரிந்தன. அவர் கண்களில் ஒன்று மற்றதிலும் பார்க்க விரைவாக மூடித் திறந்தது. வழிப்பறிக் கள்வன் வேலை பார்ப்பவராக இருக்கலாம். எங்களைக் கண்டதும் ஒரு காலை மடக்கி இடம் விட்டார். இதுவே இவர் எங்களுக்குக் கொடுத்த அதிகபட்ச மரியாதை.
கடையின் மறுபக்கத்தில் இன்னொரு வாடிக்கைக்காரர் AK47 துவக்குகளை ஆராய்ந்து கொண்டிருந்தார். அவருடைய உருவமும் உடையும் அவர் ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த பட்டான் ஆள் என்பதைக் காட்டியது. ஒரு துப்பாக்கியை தூக்கி ரோட்டுக்கு வெளியே போய் ஆகாயத்தைப் பார்த்து படபடவென்று சுட்டார். சிறுவர்கள் எல்லாம் அவர் காலில் விழுந்து உதிரி சன்னங்களைப் பொறுக்கினார்கள். அவர் உள்ளே வந்தார். இன்னொரு துப்பாக்கியை எடுத்தார் வெளியே போய் மறுபடியும் படபடவென்று சுட்டார். இப்படி மாறி நடந்தது. அவர் டெஸ்ட் பண்ணுகிறார் என்றார் கடையில் வேலைபார்த்தவர். அவர் சுடும்போது காதுகளைக் கூர்மையாக வைத்து அந்த ஒலிச்சீரை ஆராய்கிறார். கடைசியில் ஒன்றை வாங்கிக்கொண்டு காசு கொடுத்துவிட்டுப் போனார். எங்கள் சாரதி சொன்னார், அந்த ஒலி இழையின் நேர்த்தியில் இருந்து அவருக்கு துப்பாக்கியின் தரம் தெரிந்துவிடும் என்று. ஓர் இலக்கை நோக்கி சுடும் சோதனையெல்லாம் தேவையில்லை.
படிக்க:
♦ ஹேப்பி பர்த்டேவுக்கு காசு ! ஏகே47 இலவசம் !!
♦ கேள்வி பதில் : பா. ரஞ்சித் – தமிழ் அமைப்புகள் – வலது, இடது கம்யூனிஸ்ட்டுகள் !
ஒரு சிறுவன் AK47 துப்பாக்கி ஒன்றின் பாகங்களை ஒரு நிமிடத்தில் கழற்றிப் பூட்டினான். பிறகு துடைத்துவிட்டு இன்னொரு முறை பூட்டினான். கைத்துப்பாக்கிகள் அளவுக்கு மீறி துடைக்கப்பட்டு, தடவிக் கொடுக்க வேண்டும் என்ற ஆசையைக்கூட்டும் விதமாக, மினுமினுத்தன. சேர்ட்பைக்குள் வைக்கும் பேனைத் துப்பாக்கிகளும் இருந்தன. விலை ரூபா 250. பளபளவென்று மினுங்கும் ஏகே47 துப்பாக்கியின் விலை ரூபா 10,000. 1919-ம் ஆண்டு பிரிட்டிஷ்காரருடன் நடந்த போரில் ஆப்கானிஸ்தான் அரசர் அமானுல்லாகான் பாவித்தாக சொல்லப்பட்ட லீயென் ஃபீல்டு அசல் துப்பாக்கியின் விலை ரூபா 50,000 தான் என்று முதல் முறையாக வாய் திறந்து சொன்னார். கடை முதலாளி விமான எதிர்ப்பு பீரங்கியில் சுட்டுப் பார்ப்பதற்கு வெறும் 50 டொலர் கட்டணம்தான் என்றார். விமானத்தை வீழ்த்துவதற்கு எவ்வளவு பிடிக்கும் என்பதை நாங்கள் கேட்கவில்லை.
நண்பருக்கு ஒர் ஆசை பிறந்தது. துப்பாக்கியால் சுடும்போது எப்படி இருக்கும். ஒரு டொலர் காசு கொடுத்தால் ஏகே47ல் ஒருமுறை சுட்டுப் பார்க்கலாம். நண்பர் ஏகே47ஐ எடுத்து ஆகாயத்தை நோக்கி ஒருமுறை குருட்டாம் போக்கில் சுட்டார். அந்த குண்டு ஒரு டொலர் காசு போகும் தூரத்துக்குப் போனது. நண்பரின் முகத்தில் ஒரு காது வரைக்கும் நீண்ட சிரிப்பு தோன்றியது. இவரைப் பற்றி உங்களுக்கு ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இவர் எதை வாங்கினாலும் இரண்டு வாங்குவார், எதைச் செய்தாலும் இரண்டு தடவை செய்வார். இன்னொரு டொலர் கொடுத்து மறுமுறையும் சுட்டு தன் ஆசையைத் தீர்த்துக் கொண்டார்.
அவருக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. தலையைச் சாய்த்து விநோதமாக என்னைப் பார்த்தார். வாழ்க்கையில் ஏகே47ஐ நேருக்கு நேராக நான் சந்தித்ததில்லை. இப்பொழுது தொட்டும் பார்த்தாகிவிட்டது. தோளிலே வைத்துச் சுடும்போது தோளை இடித்துப் புண்ணாக்கிவிடும் என்று முன்பு கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் சும்மா இலக்கில்லாமல் ஆகாயத்தில் சுடுவதில் எனக்கு சம்மதமில்லை. ரோட்டுக்கு மற்றப் பக்கம் சிறுவன் ஒருவன் பழைய லிடோ டின்னை கொண்டுபோய் வைத்தான். ஆபத்து குறைவாகத் தெரிந்த ஒரு ஏகே47ஐ நான் தெரிவு செய்தேன். ஒரு டொலரை கொடுத்ததும் கடைக்காரர் துவக்கு கட்டையை தோளில் எங்கே வைப்பது, எந்தத் துளையில் குறி பார்ப்பது, எப்படி விசையை அழுத்துவது என்று சொல்லித்தந்தார். ஒரு டொலர் காசுக்கு இது மிகவும் அதிகமான பயிற்சியாகவே பட்டது. அவர் சொன்ன உதாரணம் டுத் பேஸ்டை அமுக்குவது போல மெதுவாக, மெதுவாக விசையை அமுக்க வேண்டும் என்பது.
அர்ச்சுனன் மச்சத்தில் இலக்கு வைத்ததுபோல குறி பார்த்து ஆடாமல் நின்றேன். என்னுடைய கையில் ஒரு மனித உயிரைக் கணத்திலே பறிக்கும் சக்தி கூடியிருந்தது. முன்பு பார்ப்பதற்கு வாட்டசாட்டமாகவும், பயங்கரமாகவும் தெரிந்த பட்டான் ஆள் இப்பொழுது சிறு குழந்தை போல காட்சியளித்தான். என் தேகபலம் பத்து மடங்கு அதிகமாகிவிட்டது.
விசையை அழுத்தினேன். தோளிலே தலையணையால் என் நாலு வயது மகள் அடித்ததுபோல் ஓர் அதிர்ச்சி, அவ்வளவுதான். சத்தம்கூட எனக்கு பெரிதாகக் கேட்கவில்லை, மேலே பறப்பது போன்ற ஓர் அற்புதமான உணர்வு. எனக்குப் பக்கத்தில் குழுமியிருந்த சிறுவர்கள் பாய்ந்த விழுந்து ரவைச் சிதறலைப் பொறுக்கினார்கள். அதற்கு பிறகு தான் டின்னைப் பார்த்தேன். அது அப்படியே சேமமாக இருந்தது.
யாரோ என்மீது பூதம் ஒன்றை ஏவிவிட்டது போல இன்னும் பல தடவை இதைச் செய்யவேண்டும் என்ற ஆசை கட்டுக்கடங்காமல் உண்டானது. கண்ணுக்கு தெரியாத பெரிய பவர் என்னிடம் சேர்ந்து அசாதாரணமான தைரியமும், உற்சாமும் தூக்கியது. நான் இரண்டாவது முறை முயற்சி செய்யவில்லை. செய்திருந்தால் அந்த மந்திரக் கட்டில் முற்றாக என்னை இழந்திருப்பேன்.
ஒரு விஷயத்தை என்னால் மறக்க முடியவில்லை. நண்பரிடம் கேட்டபோது அவர் சொன்னது வித்தியாசமாக இருந்தது. முட்டை வாங்கும்போது வெளிச்சத்திலே தூக்கிப் பிடித்து வாங்குகிறோம். சுருட்டு வாங்கும்போது காதுக்கு கிட்டே வைத்து உருட்டி, ஒலியை ஆராய்ந்து அதன் தரத்தை நிர்ணயிக்கிறோம். ஒரு சதத் குற்றியைக்கூட கடித்துப் பார்த்துதான் எடுக்கிறோம், அது போலத்தான் இதுவும். சுடும்போது துப்பாக்கியில் பிறக்கும் ஒலியை வைத்து அதன் தரத்தை சிலரால் தீர்மானிக்க முடியும் என்றார்.
திரும்பும்போது ஓர் அசம்பாவிதம் நடந்துவிட்டது. எங்கள் பயணத்தை ஆரம்பித்து சில நிமிடங்களில் ஒரு டயர் வெடித்தது. அதை மாற்றிக்கொண்டு புறப்பட்டோம். சொல்லி வைத்தாற் போல் இரண்டு நிமிடமாகவில்லை, இன்னொரு டயரும் வெடித்தது. நாங்கள் இன்னும் போக வேண்டிய தூரம் 60 மைல் இருந்தது. பழங்குடியினர் பிரதேசத்தை தாண்டவில்லை. இருட்டிக்கொண்டு வேறு வந்தது. ஒருவித சட்டங்களும் செல்லாத இடத்தில் மாட்டிவிட்டோம்.
எதிரே வந்த ஒரு வாகனத்தில் இடம்பிடித்து டிரைவர் டயரை பழுது பார்க்க எடுத்துக்கொண்டு போய்விட்டார். சில கார்கள் எங்களைத் தாண்டிப் போகும்போது சந்தோஷமாக இருந்தது, பயமும் பிடித்தது. அப்போது எங்களைக் கடந்து ஒரு குதிரை வண்டி போனது. அதற்குள்ளே இரண்டு பர்தா அணிந்த பெண்களும் ஒரு பதினைந்து குழந்தைகளும் இருந்தார்கள். அந்தப் பெண்களுடைய கண்கள் மாத்திரம் ஓட்டை வழியாக எங்களைத் துளைத்துப் பார்த்தன. அரை மணிநேரம் கழித்து தூரத்தில் ஒரு வாகனம் தெரிந்தது. அவர்களும் எங்களை திரும்பிப் பார்த்த படி போனார்கள். இந்த அத்துவானக் காட்டில் எங்களை யாராவது கூறு கூறாக வெட்டிப் புதைத்தாலும் கேட்க ஆளில்லை. டிரைவர் கடைசியில் ஒரு ஒட்டோவில் பழுதுபார்த்த டயருடன் வந்து சேர்ந்தார். எப்படியோ அவசரமாக சில்லை மாட்டிக்கொண்டு வீடு போய்ச் சோந்தோம்.
இந்தப் பயணத்தில் என்னுடைய சாதனை ஒன்று இருந்தது. துப்பாக்கியால் முதல் தடவை குறி பார்த்து சுட்டது அல்ல, பாகிஸ்தான் சட்டங்கள் செல்லுபடியாகாத பழங்குடி வீதி ஒன்றில் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு திரும்பியது அல்ல. இவ்விரண்டு பொருள்கள் சேகரிக்கும் நண்பர் இரண்டு துணை டயர்கள் வைக்காதது எப்படி நடந்தது. தனிமையான ரோட்டோரத்தில், இருட்டில் காத்திருந்தபோது இந்தக் கேள்வி எனக்கு தொண்டை மட்டும் வந்தது. இதைக் கேட்காமல் இரண்டு மணி நேரம் சமாளித்தது என் வாழ்வில் பெரிய சாதனை என்றே நினைக்கிறேன்.
அ. முத்துலிங்கம்
எழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்
எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு :
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.
(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)
இந்தப் பயணத்தில் என்னுடைய சாதனை ஒன்று இருந்தது. துப்பாக்கியால் முதல் தடவை குறி பார்த்து சுட்டது அல்ல, பாகிஸ்தான் சட்டங்கள் செல்லுபடியாகாத பழங்குடி வீதி ஒன்றில் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு திரும்பியது அல்ல. இவ்விரண்டு பொருள்கள் சேகரிக்கும் நண்பர் இரண்டு துணை டயர்கள் வைக்காதது எப்படி நடந்தது. தனிமையான ரோட்டோரத்தில், இருட்டில் காத்திருந்தபோது இந்தக் கேள்வி எனக்கு தொண்டை மட்டும் வந்தது. இதைக் கேட்காமல் இரண்டு மணி நேரம் சமாளித்தது என் வாழ்வில் பெரிய சாதனை என்றே நினைக்கிறேன்.
அருமை…அற்புதம்😂😂😂😂😂