பரீஸ் பொலெவோய்

உண்மை மனிதனின் கதை | மூன்றாம் பாகம் | அத்தியாயம் – 02-அ

கட்டான பஸ்களின் ஜன்னல்களிலிருந்து வெளியே பார்த்தன பழுப்பேறிய, கிளர்ச்சி பொங்கும் முகங்கள். உயரமற்ற மேனியும் வழுக்கைத் தலையும் நொண்டும் காலும் கொண்ட ஓர் ஆர்மீனியன் கோடிட்ட பைஜாமா அணிந்து கெந்திக் கெந்தி நடந்தவாறு பஸ்களின் அருகே அலை பாய்ந்தான். இளைப்பாறுவோர் கூட்டம் ஒவ்வொன்றிலும் கட்டாயமாகக் காணப்படும், எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படும் வேடிக்கைப் பேச்சாளர்கள் மற்றும் சுய விருப்ப விகடகவிகளில் இவன் ஒருவன். கைத்தடியை வீசி ஆட்டியவாறு ஒரு பிரயாணிக்கு ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான் அவன்:

“ஏய், வானில் பாசிஸ்டுகளுக்கு என் வணக்கத்தைத் தெரிவியுங்கள்! பேத்யா! உன்னை ‘நிலவு ஸ்நானத்தை’ முடிக்க விடாமல் அடித்தற்காக அவர்களிடம் கணக்குத் தீர்த்துக்கொள். பேத்யா! தலைசிறந்த சோவியத் விமானிகளின் காதல் விவகாரங்களில் அவர்கள் குறுக்கிட்டது பண்பற்ற செய்கை என்று வானத்தில் அவர்களுக்குக் காட்டு. பேத்யா! போர்க்களத் தபால் நிலைய எண்ணை விரைவில் எழுதி அனுப்பு. ஸீனா உன்னுடைய இதயத்தைப் பதிவு அஞ்சலில் திருப்பி அனுப்புவாள்….”

மரச்சாலைத் திருப்பத்தில் பஸ்கள் மறைந்துவிட்டன. மாலை வெயிலில் பொன்மயமாக மின்னிய புழுதி அடங்கி விட்டது. மேலங்கிகளும் கோடிட்ட பைஜாமாக்களும் அணிந்த இளைப்பாறுவோர் மெதுவாகப் பூங்காவில் அவரவர் வழிகளில் நடக்கலானார்கள். நொண்டி ஆர்மீனியன், மெரேஸ்யெவை அலுவலகத்துக்குக் கொண்டுவிட்டுப் போனான். கிட்டத்தில் கூர்ந்து பார்க்கையில், பெரிய அழகிய, சோகம் ததும்பிய விழிகள் கொண்ட அவனது முகம் ஆழ்ந்த, அறிவார்ந்த தோற்றம் உள்ளதாகக் காணப்பட்டது. தான் மருத்துவ நிலாக் கமிட்டித் தலைவன் என்று வழியில் அவன் தன்னை வேடிக்கையாக அறிமுகப்படுத்திக் கொண்டான். நிலா ஸ்நானம் எந்தக் காயத்துக்கும் கைகண்ட மருந்து என்றும் இந்தக் காரியத்தில் தான்தோன்றித் தனத்தையும் ஒழுங்கின்மையையும் தான் அனுமதிப்பதில்லை என்றும் மாலை உலாவலுக்கு ஏற்ற ஆடைகள் பற்றித் தானே குறிப்பு எழுதித் தருவதாகவும் கூறினான். அவன் ஏதோ இயந்திரம் போல வேடிக்கை பேசினான். அப்போது அவனுடைய விழிகள் அதே ஆழ்ந்த தோற்றம் கொண்டிருந்தன, எதிரொளியை ஆவலுடன் கூர்ந்து நோக்கின.

அலுவலகத்தில் வெள்ளை நீளங்கி அணிந்த ஒரு பெண் மெரேஸ்யெவை எதிர்கொண்டாள். அவளுடைய கேசம் ஒரே செம்பழுப்பாக இருந்தமையால் அவளது தலை மூண்டெரியும் தீக்கொழுந்துகளால் சூழப்பட்டது போலத் தோற்றம் அளித்தது.

தான் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை வைத்து விட்டுக் கண்டிப்பான குரலில் கேட்டாள் அவள்: “மெரேஸ்யெவ்? அலெக்ஸேய் பெத்ரோவிச் மெரேஸ்யெவ்?” விமர்சனக் கண்களுடன் விமானியை ஏற இறங்க நோட்டமிட்டாள். “நீங்கள் என்ன என்னிடம் விளையாடுகிறீர்கள்? அதோ பதிவாகியிருக்கிறது: ‘மெரேஸ்யெவ், சீனியர் லெப்டினன்ட், கால்கள் இல்லாதவர்’ என்று. நீங்களோ….”

“என்ன ஆனாலும் நான்தான் அலெக்ஸேய் மெரேஸ்யெவ். இதோ என் நியமனப்பத்திரம்… நீங்கள் தாம் லோல்யாவா?”

“இல்லை. எங்கிருந்து இந்தப் பெயரைத் தேடிப் பிடித்தீர்கள்? என் என் பெயர் ஸீனா. உங்கள் பொய்க்கால்களா இப்படி இருக்கின்றன?” என்று நம்பிக்கை இன்றி அலெக்ஸேயின் கால்களைப் பார்த்தாள்.

“ஓகோ! அப்படியானால் பேத்யா தன் இதயத்தைப் பறி கொடுத்த அதே ஸீனாவா நீங்கள்?”

“மேஜர் புர்நாஸியான் என்னைப் பற்றி உங்களிடம் இப்படிக் கதை கட்டிவிட்டாரோ? அதற்குள் அவருக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டதே. ஐயே, இந்த புர்நாஸியானைக் கண்டாலே கரிக்கிறது எனக்கு! எதை எடுத்தாலும் கேலியும் நையாண்டியும், எதை எடுத்தாலும்! பேத்யாவுக்கு நான் நடனமாடக் கற்றுக் கொடுத்தேன் என்றால் இதில் என்ன பிரமாதம் வந்துவிட்டது? நல்ல வம்புதான் போ!”

“இப்போது எனக்குக் கற்றுக் கொடுப்பீர்கள், சம்மதம் தானே? ‘நிலவு ஸ்நானத்துக்கு’ எனக்கு அனுமதிச் சீட்டு தருவதாக புர்நாஸியான் வாக்களித்திருக்கிறார்.”

அந்தப்பெண் முன்னிலும் அதிக வியப்புடன் அலெக்ஸேயை நோக்கினாள்.

“நடனமாடப் போகிறீர்களா? எப்படி? கால்கள் இல்லாமலா? நல்ல வேடிக்கைதான். நீங்களும் எல்லாவற்றையும் பரிகசிக்கிறீர்கள் போலும்” என்றாள்.

இந்தச் சமயத்தில் மேஜர் ஸ்த்ருச்கோவ் அறைக்குள் ஓடிவந்து மெரேஸ்யெவை இறுகத் தழுவிக்கொண்டார்:

“ஸீனா, ஏற்கனவே பேசி வைத்துக்கொண்டோம் அல்லவா, சீனியர் லெப்டினன்ட் என் அறையில் தங்குவார் என்று”

ஒரே மருத்துவமனையில் நீண்ட காலம் தங்கிச் சிகிச்சை பெறுபவர்கள் அப்புறம் சகோதரர்கள் போல ஒருவரையொருவர் சந்தித்தார்கள். மேஜரை அனேக ஆண்டுகள் காணாதவன் போல அலெக்ஸேய் பெருங்களிப்பு அடைந்தான். ஸ்த்ருச்கோவின் சாமான் பை ஆரோக்கிய நிலையத்தில் இருந்தது. அவர் இங்கே சொந்த வீட்டில் போல விட்டாற்றியாக இருந்தார். எல்லாவற்றையும் தெரிந்து கொண்டிருந்தார், எல்லோருக்கும் அவரைத் தெரிந்தது.

இரவுச் சாப்பாட்டுக்குப் பிறகு உடனேயே அலெக்ஸேய் கட்டிலில் ஏறி, மாலை மூடுபனி காரணமாக ஈரப்பதமாயிருந்த, குளிர்ந்த படுக்கை மீது நீட்டிப்படுத்து அக்கணமே உறங்கி விட்டான்.

அந்த இரவில் அவன் விந்தையான, கலவரமூட்டும் கனவுகள் கண்டான். நீலம் பாரித்த வெண்பனி, நிலா. காடு, சடை வலை போல அவனை மூடிப்போர்த்திருந்தது. இந்த வலையை அறுத்துக் கொண்டு அவன் விடுபட வேண்டும், ஆனால் வெண்பனி அவன் கால்களைப் பிணித்தது. இன்னதென்று விளங்காத, ஆனால் பயங்கரமான துன்பம் தனக்கு நேரப் போகிறது என்று உணர்ந்து அலெக்ஸேய் வேதனை அடைந்தான். கால்கள் வெண்பனியில் விரைத்துப் போயின, ஆனால் அவற்றை அங்கிருந்து அகற்ற அவனுக்கு வலுவில்லை. அவன் முனகினான், புரண்டான். அதற்குள் அவன் முன் காடு அல்ல, விமான நிலையம் இருந்தது. நெடுங்காலனான டெக்னீஷியன் யூரா இறக்கையற்ற, விந்தையான மெத்தென்ற விமானத்தின் விமானி அறையில் இருந்தான். அவன் கையை ஆட்டினான், சிரித்தான், பின்பு செங்குத்தாக மேலே கிளம்பி வானில் பறந்தான். மிஹாய்லா தாத்தா அலெக்ஸேயைத் தூக்கிக் கொண்டு குழந்தையிடம் சொல்வது போல, “கிடக்கிறான் அவன். போகட்டும். நீயும் நானும் வெந்நீரில் குளிப்போம், அங்கங்களைச் சூடுபடுத்திக் கொள்வோம், நன்றாக, இதமாக” என்றார். ஆனால் சூடான பலகையில் அல்ல, வெண்பனியில் அவனைக் கிடத்தினார் அவர்.

அலெக்ஸேய் எழுந்திருக்கப் பார்க்கிறான், முடியவில்லை. தரை அவனை வலுவாகத் தன்பக்கம் இழுத்து அழுத்துகிறது. இல்லை, இழுத்து அழுத்துவது தரை அல்ல, கரடி ஒன்று தன் சூடான உடம்போடு அவன் மேல் விழுந்து அவன் மூச்சைப் பிடித்தது, அங்கங்களை முறிக்கப் பார்த்தது, கொர் கொர்ரென்று செருமிற்று. விமானிகளை ஏற்றிக் கொண்டு பஸ்கள் அருகாகச் சென்றன. ஆனால் ஜன்னல்கள் வழியே சந்தோஷமாக வெளியே பார்த்துக் கொண்டிருந்த அந்த ஆட்கள் அவனைக் கவனிக்கவில்லை. அவர்களை உதவிக்கு வரும்படி கத்தி அழைக்க விரும்பினான் அலெக்ஸேய், அவர்களை நோக்கிப் பாய்ந்து ஓட, அல்லது கையால் ஜாடையாவது காட்ட அவன் முயன்றான். ஆனால் முடியவில்லை. வாய் திறந்தது எனினும் கிசுகிசுப்புதான் கேட்டது. அலெக்ஸேய்க்கு மூச்சுத் திணற ஆரம்பித்தது. இருதயத்துடிப்பு நிற்பதை அவன் உணர்ந்தான். கடைசி முயற்சி செய்து பார்த்தான்…..

விளங்காத கலவர உணர்ச்சியுடன் விழித்துக்கொண்டான் அலெக்ஸேய். அறையில் நிசப்தம். லேசான ஒலிப்புடன் மூச்சுவிட்டவாறு உறங்கிக்கொண்டிருந்தார் மேஜர். நிலவொளித் தம்பம், அறையின் குறுக்கே சென்று தரையில் ஊன்றியிருந்தது. அந்தப் பயங்கர நாட்களின் மாதிரி உருவங்கள் ஏன் திடீரென்று திரும்பி வந்துவிட்டன? இந்த நாட்களை அலெக்ஸேய் அனேகமாக நினைவுபடுத்திக் கொள்ளவே இல்லை. எப்போதாவது ஞாபகப்படுத்திக் கொள்ளத் தொடங்கினாலும் அவை அவனுக்கு ஏதோ பிதற்றலான கட்டுக் கதையாகவே தோன்றின. ஒரு சீரான மெல்லொலி, உறக்க முணுமுணுப்பு, இரவுக் காற்றின் நறிய குளுமையுடன் நிலவால் ஒளியுறுத்தப்பட்ட விரியத் திறந்த ஜன்னல் வழியே அறைக்குள் பெருகியது. ஒரு சமயம் அது கிளர்ச்சியுடன் பொங்கி வந்தது, மறுசமயம் தொலைவில் அகன்று அமிழ்ந்தது, வேறு சமயம் கலவரம் நிறைந்த சீறல் ஒலியாக மாறியது. பைன் மரச் சோலையின் சலசலப்பு அது.

படிக்க:
ஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை ! என்ன நடக்கிறது ?
பெஹ்லு கானை கொன்றவர்களை விடுவித்தது நீதிமன்றம் !

அலெக்ஸேய் கட்டிலில் உட்கார்ந்து பைன் மரங்களின் மர்ம ஒலியை வெகு நேரம் கேட்டுக்கொண்டிருந்தான். பின்பு அந்த மாய மயக்கத்தை விரட்டியவன் போலத் தலையை வெடுக்கென்று அசைத்தான். பிடிவாதம் நிறைந்த மகிழ்பொங்கும் ஆற்றல் அவனுக்குள் மீண்டும் நிறைந்தது. ஆரோக்கிய நிலையத்தில் அவன் இருபத்து எட்டு நாட்கள் தங்கியிருக்க வேண்டும். அவன் போரிடவும் விமானமோட்டவும் வாழவும் போகிறானா அல்லது டிராமில் மற்றவர்கள் எப்போதும் அவனுக்கு உட்கார இடங்கொடுத்து விலகிக் கொள்ளவும் அனுதாபத்துடன் அவனைப் பார்க்கவும் வேண்டியிருக்குமா என்பது அதன் பிறகே தீர்மானிக்கப்படும். எனவே, இருபத்து எட்டு நாட்கள் கொண்ட இந்த நீண்ட அல்லது குறுகிய காலத்தின் ஒவ்வொரு நிமிடமும் உண்மை மனிதன் ஆவதற்குரிய போராட்டமாக விளங்க வேண்டும்.

நிலவு வெளிச்சத்தில் கட்டிலில் உட்கார்ந்துகொண்டு, மேஜரின் குறட்டையைக் கேட்டவாறே பயிற்சித் திட்டம் வகுக்கலானான் அலெக்ஸேய். காலை, மாலை உடற்பயிற்சி, நடை, ஓட்டம், கால்களுக்கு விஷேசப் பயிற்சி ஆகியவற்றை இந்தத் திட்டத்தில் அவன் சேர்த்துக் கொண்டான். அவனுக்குச் சிறப்பாகக் கவர்ச்சி அளித்தது, செயற்கைக் கால்களை எல்லா வகைகளிலும் பழக்கித் தேர்ச்சிபெறச் செய்வதாக நம்பிக்கை ஊட்டியது ஸீனாவுடன் உரையாடுகையில் அவனுக்கு உதித்த கருத்துத்தான்.

நடனமாடக் கற்றுக் கொள்வது என்று அவன் முடிவு செய்தான்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க