புராண, இதிகாசங்களை நாட்டில் வெகுவாகப் பரப்பியதன் மூலமே, மக்களின் மூளைக்கு விலங்கிட்டனர் – பண்பாட்டுப் படையெடுப்பாளர்களான ஆரியர்கள்.

பாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்கள்தான் சனாதனத்தின் மூலதனம் ஆகும். வர்ணாசிரம தர்ம சமூகத்தின் குலதர்மத்தினைப் பிரச்சாரம் செய்ய கற்பனைகளைக்கூட, ‘கடவுள் அருளியது’, ‘பகவான் பகர்ந்தது’ என்று படித்த – படிக்காத இருசாரரான பாமர மக்களிடையே பரப்பி வருகின்றனர்.

அந்த வரிசையில் வேறு எந்த நூலையும் விட அதிகமான பிரச்சார வசதி பெற்று, மிகப்பெரிய அளவில் மக்களிடையே உலகம் முழுவதும் விளம்பரப்படுத்தப்பட்ட நூல் ‘பகவத்கீதை’யாகும்.

அது கற்பனைதான் என்று ஏற்றுக்கொள்ளும் மிகப்பெரிய தலைவர்கள், சிந்தனையாளர்கள்கூட, அதற்காக வேறு முறையில் வாதாடி, மக்கள் மனதில் நிலைக்க வைக்கும் தவறினை நீடித்துச் செய்து வருவது அறிவு விடுதலை அடைவதற்கும், சமத்துவ சமுதாயம் அமைவதற்கும் மிகப்பெரும் முட்டுக்கட்டையாகும்.

இந்நாட்டின் அறிஞர்கள் என்பவர்கள் கீதையில் இரண்டு சுலோகம் தெரிந்ததுபோல் காட்டிக்கொண்டால் தங்களுக்கு ‘அறிவு ஜீவி’ முத்திரை கிடைத்து, பக்திப் பரவச வேடத்தினால் பல்வேறு பயன் அடைய முடியும் என்று கருதி, அதனைக் கட்டுப்பாடாய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர் தொன்று தொட்டு இன்றுவரை!

…  “பைத்தியம் பிடித்தவனுக்கு மேலும் கள்ளையும் ஊற்றிவிட்டால் எப்படி இருக்கும்?” என்ற ஓர் அழகான உவமையை, தந்தை பெரியார் அவர்கள், பல கூட்டங்களில் பேசும்போது கூறியதைக் கேட்டிருக்கிறேன்.

நானும் அப்பேச்சினைக் கேட்ட மக்களைப்போல் அவ்வப்போது கைதட்டிச் சுவைத்ததுண்டு. அதற்கு முழுப் பொருள் அனுபவத்தோடு அறிந்த நிலை – உணர்ந்த நிலை – எப்போது ஏற்பட்டது என்றால், இந்தப் ‘பகவத் கீதை’யை ஆய்வுக் கண்ணோட்டத்தோடு ஆழ்ந்து படித்தபோதுதான் ஏற்பட்டது!

கிரேக்கத்து ஏதென்சில் வாழ்ந்த சாக்ரட்டீசின் சீடர் பிளாட்டோ. மாறி வந்த யுகத்தில் வாழ்ந்த தத்துவ ஞானி பிளாட்டோ. அவர் ஒரு விசித்திரமான கருத்தினை வெளியிட்டார்.

எகிப்து நாட்டு தேவ அரசர் (மக்கள் அவரை அன்று அப்படி நம்பினர்) தேமுஸ் என்பவர் கருத்துகளை எழுத்துகள் மூலம் வெளியிடும் தோத் என்பவரைப் பார்த்து, ”எதனையும் எழுதி வெளியிடும் இந்த புதிய கண்டுபிடிப்பால் கற்றறிந்தோரின் ஞானத்திற்கு ஊறு ஏற்படும். எப்படியெனில், மூளை ஏற்கெனவே அறிந்ததை மறந்துவிடக் கூடும். எதையும் வாயால் சொல்ல, காதால் கேட்டு, மூளையில் நினைவுமூலம் பத்திரப்படுத்திக் கொள்ளும் முறைக்கு அது விடை கொடுத்தனுப்பிவிடும்” என்றார்.

எனவேதான் நேருக்கு நேர் இருவர் உரையாடல் (Dialogue) முறைக்கே முன்னுரிமை அவர்கள் (சாக்ரடீஸ், பிளாட்டோ) காலத்தில் தரப்பட்டது. எழுதி, கருத்துகளைப் பரப்பும் (Writing) முறைக்கு இரண்டாவது இடமே!

எழுத்து மூலம் வேதமோ, உபநிஷத்துகளோ மற்றும் இராமாயணம், பாரதம் போன்ற இதிகாசங்களோ முதலில் உருவாக்கப்படவில்லை என்பது அறிஞர்கள் ஆய்வு, செவி வழிச் செய்தியாக – பேச்சு வழக்கில் நிலவிய பிறகுதான் அவைகள் எழுத்து உருவத்தினைப் பிற்காலத்தில் கண்டன. இடைச்செருகல், திரிபுகளுக்கு அதனால் ஏராளமான வாய்ப்பு உண்டல்லவா?

படிக்க:
நயவஞ்சகன் இராமன் – டாக்டர் அம்பேத்கர்
இந்து மதம் : ஏகாதிபத்திய சந்தையை உறுதிப்படுத்த உருவாக்கப்பட்ட ஓர் கட்டமைப்பு !

… கீதை பாரதத்தில் இடைச்செருகல் என்பது பல அறிஞர்களின் முடிவு என்றாலும், செவி வழியாக மக்கள் கேட்டு, பாரம்பரியமாகச் சொல்லி பரப்பி வந்த கதைகளையே பிறகு எழுதியதாகக் கூறி, எழுத்துமுறை தோன்றிய பின் வெளியிட்டனர். அப்படி வெளியிடுகையில், பழைய காலப்பேச்சு வழக்கு – உரையாடல் போலவும் அமைத்தனர்.

கீதையையும் அதே பாணியைப் பின்பற்றி அர்ச்சுனன் கேள்விக்குக் கண்ணன் பதில் கூறியதாகவே உரையாடல் முறையைப் பின்பற்றி – எழுத்து வடிவங்களைக் கொண்டு பின் பாரதத்தில் சேர்த்திருக்கக் கூடும்!

புத்தரின் பிரச்சாரத்தினால் மூச்சுத் திணறி அழியும் நிலையில் இருந்த வர்ணாசிரமவாதிகள், இப்படி ஒரு முயற்சியை அந்தக் காலகட்டத்தில் தான் பயன்படுத்தியிருக்கக்கூடும்.

… இதன்மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டிய செய்தி, எழுத்து முறை மூலம் கருத்துப் பரப்புதல் ஏற்பட்ட கால கட்டத்தில்தான் கீதை பிறந்திருக்க முடியும் என்பதேயாகும்.

இந்த நூலை ஒரு புதினத்தைப் படிப்பதுபோல் படித்து முடித்து விட எண்ணாதீர்கள். ஒரு புதுமையை ஆய்வது போன்று, பொறுத்து, அசை போட்டுப் படித்துச் செரிமானம் செய்ய முயற்சியுங்கள்! (நூலின் முன்னுரையிலிருந்து…)

கீதை, மிகப்பெரிய ஒரு ராஜதந்திரியை அடையாளம் காட்டி உலகுக்கு தந்த நூல் என்று சில ஆய்வாளர்கள் – கீதை வியாபாரிகள் கூறுகிறார்களே, அக்கூற்று எவ்வளவு தூரம் உண்மையானது என்பதை நடுநிலைக் கண்ணோட்டத்தோடு துல்லியமாக எடைபோட்டுப் பார்க்க வேண்டாமா?

அதையும் இந்த அத்தியாயத்தில் ஆராய்வோம்.

வங்காளத்தின் பிரபல நாவலாசிரியரும், எழுத்தாளருமான பங்கிம் சந்திர சட்டர்ஜி (இவர் ஒரு வங்காளப் பார்ப்பனர்) தேச பக்தியால் உந்தப்பட்ட எழுத்தாளர் என்று நாட்டோருக்கு அறிமுகம் ஆனவர். வாழ்வின் துவக்கத்தில் ஒரு பகுத்தறிவாளர் என்று தன்னைச் சொல்லிக்கொண்டு பிறகு மதவாதக் கருத்துக்களுக்கு அவரது பிற்கால வாழ்க்கையில் சாய்ந்தவர் இவர்.

இவருக்கு கிருஷ்ணனின் தெய்வாம்சத்தில் அபார நம்பிக்கை! இவர் ‘கிருஷ்ண சரிதா’ என்று வங்காள மொழியில் எழுதிய ஒரு நூலில்- இது ஒரு கடவுள் அவதாரத்தின் வரலாறு அல்ல; ஒரு ராஜதந்திரியின் கதை என்று கூறியுள்ளார்!

தேச பக்தர்கள் என்ற பார்ப்பனர்கள், தேசபக்தி பெயரில் ஆரிய மதவாத பக்தியைப் பரப்ப கிருஷ்ணனை – சீதையை மிகச் சிறந்த கருவியாக  – அரிய பெரிய வாய்ப்பாகவே கருதினார்கள்; பயன்படுத்தினார்கள். பாலகங்காதர  திலகர் ‘கீதா ரகசியம்’ என்று எழுதியதும் இந்த அடிப்படையில்தான்!

முன்னே பார்த்து அடியெடுத்து வைத்து நாட்டை அழைத்துச் செல்வதற்குப் பதில், இந்த இதிகாசங்களைக் காட்டியதனால் பின்னே திரும்பிப் பிற்போக்குத்தனத்தினைத்தான் அவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ, விரும்பியோ, விரும்பாமலோ வளர்த்தார்கள் என்றுகூடப் பொத்தாம் பொதுவில் கூற முடியாதபடி , தெரிந்தே, வேண்டுமென்று இதனைச் செய்தனர் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

இராமனை, கிருஷ்ணனை வைத்து நவீன இந்தியாவை, புதிய தேசிய எழுச்சியை உருவாக்கிவிடலாம் என்ற ஒரு தப்புக்கணக்கினைப் போட்டுச் செயலாற்ற முனைந்தனர்! காந்தியாரின் இராமராஜ்யமும், பாரதிய ஜனதாவின் இராம இராஜ்யமும் – இராமஜென்மபூமி – அனுமன் வழிபாடும் இவைகள் எல்லாம் இந்த அடிப்படையில்தான்!

நீங்கள் கூறும் இராமன் யார் என்று காந்தியாரிடம் கேட்ட போது, எனது இராமன், தசரத குமாரன் இராமன் அல்ல; கடவுள் இராமன் என்றார்! இது அவரது குழப்பத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு கூற்றாகும். ( நூலிலிருந்து பக். 166-167)

கிருஷ்ணனுக்கு அடுத்தபடியாக இரண்டாவதாக முக்கியத்துவம் பெற்ற பலராமன், கிருஷ்ணனின் சொந்தப் பிள்ளைகளாக பிரதியும்னா (pradyumna), சம்பா ஆகிய இருவரும் இரண்டு அணிகளிலும் சேராமல் நடுநிலை வகித்தனர். சொந்தப் பிள்ளைகளையோ அல்லது தனக்கு அடுத்து துவாரகையில் முக்கியத்துவம் பெற்ற இரண்டாவது தலைமை பலராமனையோக் கூடத் தன்வசம் இழுக்க இயலாதவன் எப்படி எல்லோரையும் ஒன்றாக்கிய மிகப்பெரிய ராஜதந்திரியாவார்? (நூலிலிருந்து பக்.171-172)

… கீதையிலுள்ள முரண்பாடுகள் ஒன்றா இரண்டா? கீதையின் தொடக்க அத்தியாயங்களில் கிருஷ்ணன் அதிகம் வலியுறுத்திக் கூறுவது கர்மத்தைப்பற்றித்தான். மனிதன் எதையும் சீர்தூக்கிப் பார்த்துச் சிந்தித்துத் தானாகவே ஒரு முடிவுக்கு வந்து தன்னுடைய சொந்தக் கருத்தின் வழிச் செயல்படுவதே கர்மயோகம் எனப்படும், ஞானயோகத்தைவிட இந்தக் கர்ம யோகமே மிக உயர்ந்ததாகச் சொல்லப்படுகிறது.

இப்படிக் கர்மயோகத்தை வலியுறுத்தும் கண்ணபிரான் பின்னால் பதினொன்றாவது அத்தியாயம் 32-ஆவது சுலோகத்தில் “மக்களையெல்லாம் அழிப்பவன் நானே! நான் தான் மிகப்பெரிய காலனாவேன். இதோ எதிரில் இருப்பவர்களையெல்லாம் அழிப்பதற்காகவே வந்துள்ளேன். நீ இல்லையென்றாலும், நீ போரிடாவிட்டாலும் எதிர்ப்படையிலிருக்கும் அத்தனை வீரர்களும் அழிவது திண்ணம், எனவே அர்ச்சுனா எழுந்திரு! வெற்றிகொள்! பகைவரை வென்று பெரிய நாட்டினை அனு பவி! முன்னமேயே நான் அவர்களைக் கொன்றுவிட்டேன். எனவே அர்ச்சுனா! அவர்களை அழித்தவன் என்று பெயரளவில் காரியகர்த்தாவாக முன்னே இருக்க நீ வா!

துரோணர், பீஷ்மர், ஜயத்ரதன், கர்ணன், பிற வீரர்கள் முதலியோர் எப்போதோ என்னால் கொல்லப்பட்டு விட்டார்கள், நீ இப்போது அவர்களை அழிப்பாயாக அஞ்சாதே! என்று கிருஷ்ணன் கூறுகிறான்.

33-வது சுலோகத்தில் தங்கள் சொந்தச் செயல்களாலேயே, தீயவர்கள் அழிகின்றனர். அவர்களை அழித்தவன் என்று ஒருவனைக் கூறுவது ஏதோ பெயரளவுக்குத்தான். எனவே கொன்றவனைப் பழிசாராது; அவனைப் பழிப்பதும் தவறென்றும் கூறப்படுள்ளது.

பிறகு 18-வது அத்தியாயம் 59-வது சுலோகத்தில் ”நான் என்ற உனது நினைப்பு உன்னைப் போரிடக் கூடாது என்று தடுக்கிறது. ஆனால் இயற்கை (பிரகிருதி) உன்னைப் போரிடுவதற்குக் கட்டாயப்படுத்தும். அஞ்ஞானத்தினால் நீ எதைச் செய்யக் கூடாதென்று கருதுகிறாயோ அதைச் செய்தே தீருவாய்! அது உனது கடமையாகும், அதிலிருந்து தப்ப வழியேயில்லை. நீ எப்படி நடக்க வேண்டுமென்பது முன்பே முடிவு செய்யப்பட்ட ஒன்றாகும். அர்ச்சுனா! ஒவ்வொருவர் மனதிலும் இருக்கும் ஈசன் மக்களைத் தனது மாயையினால் தன்னிச்சைப்படி இயங்கச் செய்கிறான்” என்கின்றான்.

படிக்க:
சாதி பற்றிய காந்தியின் வாதங்கள் பைத்தியக்காரத்தனமானவை | அம்பேத்கர்
பகவத் கீதையை தடை செய் !

மூன்றாவது அத்தியாயம் 33-வது சுலோகத்திலும் பின்வருமாறு சொல்லப்படுகிறது ”ஆத்மா தனித்து இயங்கினாலுங்கூட, நாம் உலக விவகாரங்களைப் பார்க்கும்போது, நம்முடைய செயல்கள், மிகத் தொன்மையான காலத்திலிருந்தே நடைபெறுகின்றன என்பதையும் ஆத்மா இவைகளை எவ்விதத்திலும் கட்டுப்படுத்த முடியாதென்பதையும் அறிவோம். படைக்கப்பட்ட எந்த உயிரும் எவ்வளவு உறுதியோடிருப்பினும் தங்களிச்சைப்படிச் செயல்பட முடியாது. இவ்வுலகில் நடக்கும் எல்லாச் செயல்களும் இறைவன் எப்படி விரும்புகிறானோ அப்படியே நடைபெறுகின்றன. அவனின்றி அணுவும், அசையாது.”

கீதையிலே உண்மைக்கு இடமில்லை

மேலே சொன்ன கருத்துக்கள் உண்மையானால் கர்மயோகம் என்ற பேச்சுக்கே இடமில்லையே! மனிதன் அதன்படி நடக்க வேண்டுமென்ற பிரச்னையே எழாதே! கவுரவர்களுடன் போரிட்டு அவர்களைக் கொல்வதற்கு இசையும்படிச் செய்வதற் காக அர்ச்சுனனைக் கிருஷ்ணன் வேண்டிக் கொள்ள வேண்டிய அவசியமே இருந்திருக்காதே! எல்லாம் இறைவனால் முன்பே முடிவு செய்யப்பட்டபடிதான் நடக்குமென்றால் கர்மயோகம் என்ற கோட்பாடு எப்படி உண்மையாகும்? கர்மயோகமும் இறைவன் விதித்தபடிதான் நடக்குமென்ற கருத்தும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகவல்லவா இருக்கின்றன? அப்படியானால் இவற்றிலே எதுதான் உண்மை ? ஒருக்கால் கீதையிலே உண்மைக்கே இடமில்லையோ! (நூலிலிருந்து பக்.211-212)

நூல் : கீதையின் மறுபக்கம்
ஆசிரியர் : கி.வீரமணி

வெளியீடு : திராவிடர் கழக வெளியீடு,
50, ஈ.வெ.கி. சம்பத் சாலை, சென்னை – 600 007.
தொலைபேசி எண் : 044 – 2661 8161; 8428 455 455

பக்கங்கள்: 384
விலை: ரூ 150.00 / ரூ 300.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : panuval | periyarbooks

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க