உண்மை மனிதனின் கதை | மூன்றாம் பாகம் | அத்தியாயம் – 04

ஸீனா அலுவலகத்தின் தன் வேலையை முடித்ததுமே அவளுடைய சீடன் ஆளோடியில் அவளை எதிர்பார்த்துக் காத்திருப்பான். ஸீனா பெருமிதம் துலங்க அவனுக்குக் கை கொடுப்பாள். இருவரும் ஹாலுக்குச் செல்வார்கள். கோடைகாலம் ஆதலால் அது வெறுமையாக இருக்கும். ஈடுபாடு மிக்க சீடன் அங்கே சீட்டாட்ட மேஜைகளையும் பிங்-பாங் மேஜையையும் முன்னரே சுவரோரமாக நகர்த்தி இடம் செய்து வைத்திருப்பான். ஸீனா அவனுக்குப் புதிய ஜதிவரிசையை ஒயிலுடன் ஆடிக்காட்டுவாள். அவளுடைய எழிலார்ந்த சிறு கால்கள் தரையில் இடும் கோலங்களை அலெக்ஸேய் புருவங்களை நெரித்தவாறு உன்னிப்பாகக் கவனிப்பான். அப்புறம் ஸீனா ஆழ்ந்த முகத் தோற்றத்துடன் கைகளைக் கொட்டி தாளக்கணக்கை எண்ணத் தொடங்குவாள்:

“ஒன்று, இரண்டு, மூன்று, வலப்புறம் சறுக்கல்…. ஒன்று, இரண்டு, மூன்று, இடப்புறம் சறுக்கல்… திருப்பம். அப்படித்தான். ஒன்று, இரண்டு, மூன்று… இப்போது சேர்ந்து ஆடுவோம்.”

கால்கள் இல்லாதவனுக்கு நடனமாடக் கற்றுக் கொடுக்கும் பொறுப்பு அவளுக்குக் கவர்ச்சி அளித்தது போலும். வெயிலில் பழுப்பேறிய நிறம், கரிய முடியும், பிடிவாதமும் “வெறியும்” சுடர் விட்ட விழிகளும் கொண்ட இந்தச் சீடனை அவளுக்குப் பிடித்து விட்டது போலும். அல்லது, இன்னும் சரியாகச் சொன்னால் இரண்டு உணர்ச்சிகளும் சேர்ந்து இருந்தனபோலும். என்னவாயினும் சரியே. தனது ஒய்வு நேரத்தை எல்லாம் ஈடுபடுத்தி உளப்பூர்வமாக அவள் அவனுக்குக் கற்பித்தாள்.

மாலை வேளைகளில், ஏரிக்கரையும் வாலிபால், போன்ற விளையாட்டுக்களுக்கான மைதானங்களும் காலியாகிவிடும் போது ஆரோக்கிய நிலையத்தினர் நடனத்தில் விருப்பத்துடன் ஈடுபடுவார்கள். அலெக்ஸேய் இந்த மாலை நிகழ்ச்சிகளில் கட்டாயமாகப் பங்கு கொள்வான், மோசமில்லாமல் நடனமாடினான். ஓர் ஆட்டத்தைக் கூட அவன் விடுவதில்லை. அவனுக்கு கடுமையான பயிற்சி நிபந்தனைகளை விதித்தது பற்றி அவனுடைய ஆசிரியை பல முறை பச்சாத்தாபப்பட்டாள். அக்கார்டியன் இசைக்கும், இணைகள் சுழன்று ஆடும் அலெக்ஸேயின் விழிகளில் கிளர்ச்சி சுடர்விட, உற்சாகம் பொங்க, சறுக்கல்கள், திருப்பங்கள், நிறுத்தங்கள் முதலியவற்றை எல்லாம் லாவகமாகச் செய்வான். தழல் வீசுவது போன்ற கூந்தல் கொண்ட மெல்லிய அழகியை அவன் சிரமமுன்றித் தன்னுடன் இட்டுச் செல்வது போல் இருக்கும். இந்த லாவகமுள்ள நர்த்தனைகளைப் பார்ப்பவர்கள் எவருக்கும், சில வேளைகளில் ஹாலிலிருந்து மறைந்து அவன் என்ன செய்கிறான் என்பதை அனுமானிக்கவே முடியாது.

குப்பென்று சிவந்த வதனத்தில் புன்னகை மிளிர, கைக்குட்டையை அலட்சியமாக வீசியவாறு அவன் வெளியில் வருவான். ஆனால் நிலைவாயிலைக் கடந்து இரவுக் காட்டின் இருட்டில் அடி வைத்ததுமே அவனது புன்னகை வேதனையால் ஏற்படும் சுளிப்பாக மாறிவிடும். அழியைப் பிடித்துக் கொண்டு வாயிற்படிகளில் முனகித் தள்ளாடியபடி இறங்கி, பனி பெய்து ஈரமாயிரக்கும் புல்லில் விழுவான். பகல் வெப்பத்தால் இன்னும் கதகதப்பாகயிருக்கும் ஈரத்தரையில் உடல் முழுவதும் படியும்படி அழுத்திக்கொண்டு, உழைத்துச் சோர்ந்து வார்களால் இறுக்கப்பட்ட கால்களில் ஏற்படும் காந்தும் வலி பொறுக்க மாட்டாமல் அழுவான்.

வார்களைத் தளர்த்திவிட்டுக் கால்கள் இளைப்பாற வசதி செய்வான். அப்புறம் பொய்க்கால்களை மறுபடி மாட்டி இறுக்கிக் கொண்டு துள்ளி எழுந்து விரைவாகக் கட்டிடத்துக்கு நடப்பான். யாரும் கவனிக்காதபடி ஹாலுக்குள் புகுவான். களைப்பாறிய அங்கவீனனான அக்கார்டியன் வாத்தியக்காரன் வியர்த்துக்கொட்ட அங்கே வாசித்துக் கொண்டிருப்பான். அலெக்ஸேய் தன்னைக் கூட்டத்தில் விழிகளால் தேடும் ஸீனாவை அணுகி, பீங்கான் போன்று வெண்மையான தன்வரிசையாக பற்கள் தெரியும் படி முகம் மலர முறுவலிப்பான். பிறகு, லாவகமும் வனப்பும் வாய்ந்த இருவரும் மறுபடி நடனத்தில் கலந்துகொள்வார்கள்.

கடினமான நடனப்பயிற்சியின் விளைவை விரைவிலேயே அலெக்ஸேய் கண்டான். பொய்க்கால்களின் தளைப்பூட்டும் பாதிப்பை வர வரக் குறைவாகவே அவன் உணரலானான். கொஞ்சங் கொஞ்சமாக அவை அவனுடைய அங்கங்கள் போல் ஆகிவிட்டன.

அலெக்ஸேய் மனநிறைவு கொண்டிருந்தான். இப்போது ஒரு விஷயம் மட்டுமே அவனுக்குக் கலவரம் ஊட்டியது. ஓல்காவிடமிருந்து கடிதமே வராததுதான் அந்த விஷயம். ஒரு மாதத்துக்கு முன் அவன் அவளுக்குக் கடிதம் எழுதியிருந்தான். அது முற்றிலும் அசட்டுத்தனமான கடிதம் என்று இப்போது அவனுக்குப் புலப்பட்டது. அதற்குப் பதில் இல்லை. தினந்தோறும் காலையில் உடற்பயிற்சியும் ஓட்டமும் (ஒவ்வொரு நாளும் ஓடும் தூரத்தை நூறு தாவடிகள் அதிகப்படுத்தி வந்தான்) முடிந்ததும் அவன் அலுவலகம் சென்று தபால் பெட்டியைப் பார்த்தான். “ம” என்ற முதலெழுத்துக்கு உரிய செருகு அறையில் எப்போதுமே மற்றவற்றைவிட அதிகக் கடிதங்கள் இருக்கும். ஆனால் இந்தக் கடிதக்கட்டை மறுபடி மறுபடி பிரித்துப் பார்த்ததும் வெறுங்கையுடனேயே திரும்புவான் அலெக்ஸேய்.

ஒருநாள் அவன் நடனத்தில் ஈடுபட்டிருக்கும் போது பயிற்சி அறை ஜன்னலுக்கு வெளியே புர்நாஸியானின் கரிய தலை தென்பட்டது. அவன் கைகளில் தடியும் ஒரு கடிதமும் இருந்தன. அவன் எதுவும் சொல்வதற்குள், பள்ளி மாணவனது போன்ற குண்டு குண்டான எழுத்துக்களில் முகவரி எழுதப்பட்டிருந்த உறையை அலெக்ஸேய் வெடுக்கென்று பிடுங்கி கொண்டு வெளியே ஓடிவிட்டான். புர்நாஸியான் வியப்புடன் ஜன்னலருகேயும் கோபமுற்ற ஸீனா அறை நடுவிலும் நின்று கொண்டிருந்தார்கள்.

உறை நைந்து மங்கியிருந்தது. முகவரிக்கு உரியவனைத் தேடி நாட்டில் நெடுந்தூரம் சுற்றி வந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. அலெக்ஸேய் பதபாகமாக உறையைப் பிரித்துப் பார்த்தான். “முத்தங்கள், அன்பா! ஓல்கா” என்று முடிந்திருந்தது கடிதம். அவன் நெஞ்சை அழுத்திக்கொண்டிருந்த சுமை இறங்கியது போல் இருந்தது. நோட்டுப் புத்தகத்திலிருந்து கிழித்து எழுதப்பட்ட காகிதங்களை நிம்மதியுடன் மடியில் பரப்பி வைத்துக் கொண்டான் அலெக்ஸேய். காகிதங்களை மண்ணும் ஏதோ கரிய பொருளும் என்ன காரணத்தாலோ கறைப் படுத்தியிருந்தன, வத்தி மெழுகு அவற்றில் கொட்டியிருந்தது. நறுவிசாகக் காரியம் செய்யும் ஓல்காவுக்கு என்ன வந்துவிட்டது? இவ்வாறு எண்ணியபடியே கடிதத்தைப் படித்தான். படிக்க படிக்க கர்வத்தாலும் கலவரத்தாலும் அவன் நெஞ்சு விம்மியது. ஓல்கா அப்போது ஒரு மாதமாகத் தொழிற்சாலை வேலையை விட்டுவிட்டு எங்கேயோ ஸ்தெப்பி வெளிகளில் வசிக்கிறாள். அங்கே “ஒரு பெரிய நகரைச் சுற்றிலும்” டாங்கித் தடைப் பள்ளங்கள் தோண்டுவதிலும் சுற்றுக் காப்பரண் நிறுவுவதிலும் கமிஷினைச் சேர்ந்த பெண்கள் முனைந்திருக்கிறார்கள். இவ்வாறு ஓல்கா எழுதியிருந்தாள். “ஸ்தாலின்கிராத்” என்ற சொல் எங்குமே குறிக்கப்படவில்லை. ஆனால் இந்த நகரைப் பற்றி கவலையும் அன்பும் ததும்ப, கலவரமும் எதிர்கால நம்பிக்கையும் தொனிக்க அவள் எழுதியிருந்த தோரணையிலிருந்து அவள் குறிப்பது ஸ்தாலின்கிராத் நகரமே என்பது தெளிவாயிருந்தது.

தன் விவகாரங்கள் ஓல்காவின் மனத்தை முழுமையாக ஆக்ரமித்திருந்தன என்பது நிச்சயம். ஏனெனில் அவற்றை விவரித்த பின்னரே அவள் அலெக்ஸேயின் கேள்விக்குப் பதில் அளித்திருந்தாள். அவனுடைய கடைசிக் கடிதம் இங்கே “காப்பகங்களில்” தனக்குக் கிடைத்தது என்றும், இந்தக் கடிதம் தன்னை அவமதித்து விட்டதாகவும் மட்டுமீறிய இறுக்கமும் பதற்றமும் உண்டாகும் போரில் அவன் ஈடுபட்டிராவிட்டால் இந்த அவமதிப்புக்கு தான் மன்னித்திருக்க முடியாது என்றும் எழுதியிருந்தாள் ஓல்கா.

“என் அன்பே, தியாகத்துக்கு அஞ்சுவது காதல் ஆகுமா? அம்மாதிரிக் காதல் கிடையாது, அருமை அலெக்ஸேய். இருந்தால் என் கருத்தில் அது காதலே அல்ல. என்னையே எடுத்துக்கொள்வோமே. ஒரு வாரமாக நான் குளிக்கவில்லை. காற் சட்டைகளையும் நுனிகள் பிய்ந்து விரல்கள் எல்லாப் புறங்களிலும் துருத்தும் பூட்சுகளையும் போட்டுக் கொண்டு வளையவருகிறேன். வெயிலில் அடிபட்டு என் தோல் நார் நாராக உரிந்து விழுகிறது. அதற்கு அடியில் ஊதா நிறமாக ஏதோ தென்படுகிறது. களைத்து, அழுக்கேறி, மெலிந்து, அழகற்றுப் போய்விட்ட நான் இப்போது இங்கிருந்து உன்னிடம் வந்தால் நீ என்னை அருவருத்து ஒதுங்கியிருப்பாயா, அல்லது கடிந்து கொள்ளத்தான் செய்வாயா? வேடிக்கையான ஆள் நீ, உனக்கு என்ன நேர்ந்தாலும் சரியே, என்னிடம் வா. எப்போதும் எந்த நிலையிலும் உன்னை எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்பதைத் தெரிந்து கொள்… நான் உன்னைப் பற்றி நிறைய நினைக்கிறேன். இங்கே “காப்பகங்கள் தோண்ட” வந்த பின் நாங்கள் எல்லோருமே படுத்ததுமே அடித்துப் போட்டாற் போல உறங்கி விடுகிறோம். அதற்கு முன் நான் அடிக்கடி உன்னைக் கனவில் கண்டு வந்தேன். நான் உயிரோடு இருக்கும்வரை உன்னை எதிர்பார்க்கிற, எப்போதும், எந்த நிலையிலும் எதிர்பார்க்கிற இடம் ஒன்று இருக்கும் என்பதை மனதில் இருத்திக் கொள்…” இவ்வாறு எழுதியிருந்தாள் ஓல்கா.

படிக்க:
கேள்வி பதில் : தேவேந்திர குல வேளாளர் – பட்டியல் வெளியேற்ற கோரிக்கை !
வீழ்ச்சியடைந்துவரும் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை !

“என்ன இது முன்னுணர்வா? ஊகத்திறனா?” என்று எண்ணமிட்டான் அலெக்ஸேய்.” ‘இதயம் முன்னுணர்வு உள்ளது’ என்று அம்மா எப்போதோ சொன்னாள். அது மெய்தானா? அல்லது காப்பகம் தோண்டும் வேலையின் கஷ்டங்களால் ஓல்காவின் அறிவு பக்குவம் அடைந்துவிட்டதோ? அவன் சொல்ல விரும்பாததை அவன் ”உய்த்து உணர்ந்து கொண்டாளோ?” – இப்படி நினைத்துக் கடிதத்தைப் பின்னும் ஒருமுறை படித்தான் அலெக்ஸேய். “அட, எவ்வித முன்னுணர்வும் இல்லை. எதைக் கொண்டு இப்படி எண்ணினேன்? என் சொற்களுக்கு அவள் பதில் அளித்திருக்கிறாள், அவ்வளவு தான். ஆனால் என்ன மாதிரி அளித்திருக்கிறாள் பதில்!”

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க