உண்மை மனிதனின் கதை | மூன்றாம் பாகம் | அத்தியாயம் – 05-அ

லெக்ஸேய்க்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. ஆயினும் குதூகலப் புன்னகையுடன் உற்சாக அடி வைத்து ஹாலுக்குள் நுழைந்தான். குழுவினர் ஒரு பெரிய மேஜையின் அருகே அமர்ந்திருந்தார்கள். நடுவில் மாமிசமலை போல வீற்றிருந்தார் முதல் வரிசை இராணுவ மருத்துவர் மிரொவோல்ஸ்க்கிய். ஒரு பக்கத்தில் சிறு மேஜையின் பின்னே உட்கார்ந்திருந்தாள் ஸீனா. மேஜை மீது விமானிகளின் சொந்த விவரங்கள் அடங்கிய காகித அடுக்குக்கள் வைத்திருந்தன.

“நல்லது தம்பீ, சட்டையைக் கழற்றும்” என்று கண்களைச் சுருக்கிக் கொண்டு கூறினார் மருத்துவர்.

மெரேஸ்யெவ் அவ்வளவு உடற்பயிற்சி செய்ததும் வெயிலில் காய்ந்ததும் வீண்போகவில்லை. அவருடைய கட்டுக்குட்டான, முறுக்கேறிய வலிய உடலை வியந்து நோக்கினார் மருத்துவர். பழுப்புத் தோலுக்கு அடியில் ஒவ்வொரு தசையும் துலக்கமாத் தெரிந்தது.

மெரேஸ்யெவ் எல்லாச் சோதனைகளிலும் சுளுவாகத் தேறிவிட்டான். திட்ட அளவுக்கு ஒன்றரை மடங்கு வலுவுடன் கைகளை முட்டி பிடித்து இறுக்கினான். அளவைக் காட்டும் அம்பு கடைசி எல்லைக் கோட்டைத் தொடும்வரையில் மூச்சை வெளியிட்டான். அவனது இரத்த அழுத்தம் திட்ட அளவுப்படி இருந்தது. நரம்புகள் சிறந்த நிலையில் இருந்தன. முடிவில் வலிமை அளவிடு கருவியின் கைப்பிடியை அவன் அழுத்திய விசையில் கருவி பழுதாகிவிட்டது.

மருத்துவர் நாற்காலில் சாய்ந்துகொண்டு “சீனியர் லெப்டினன்ட் அ. பெ. மெரேஸ்யெவின் சொந்த விவகாரங்களின்” மூலையில் முடிவை எழுதப் பேனாவைப் பிடித்தவாறு, “விமானியா?” என்று கேட்டார்.

“ஆம்.”

“சண்டை விமானமோட்டியா?”

“ஆம்.”

“நல்லது, சண்டை போடப் புறப்படுங்கள். அங்கே இப்போது உங்களைப் போன்றவர்கள் எவ்வளவு தேவை, தெரியுமா?…. ஆமாம், நீங்கள் மருத்துவமனையில் எதற்குச் சிகிச்சை செய்து கொண்டிருந்தீர்கள்?”

எல்லாம் இதோ தகர்ந்து விழுந்துவிடப் போகிறது என்று உணர்ந்த அலெக்ஸேயின் முகம் வாடியது. ஆனால் மருத்துவர் அவனுடைய சொந்த விவரப் புத்தகத்தைப் படித்துவிட்டார். நல்லியல்பு ததும்பிய அவரது முகம் வியப்பால் நீண்டது.

“கால்கள் வெட்டி அகற்றப்பட்டனவா? இதென்ன அபத்தம்? தவறாக எழுதிவிட்டார்களா, என்ன? ஊம், என்ன பேசாதிருக்கிறீர்கள்?”

“இல்லை, தவறாக எழுதவில்லை“ என்று தணிந்த குரலில் மிக மெதுவாக, தூக்குமேடைப் படிகளில் ஏறுபவன் போல, உரைத்தான் அலெக்ஸேய்.

வலிய உடற்கட்டும் சிறந்த வளர்ச்சியும் கொண்ட அந்தத் துடியான வாலிபனை விஷயம் என்ன என்று விளங்காமல் நிலைக்குத்திட்டு நோக்கினார்கள் மருத்துவரும் தேர்வுக்குழுவினர் அனைவரும்.

“காற்சட்டை விளிம்பை மடித்துவிடுங்கள்!” என்று பொறுமையிழந்து உத்தரவிட்டார் மருத்துவர்.

அலெக்ஸேய் வெளிறிப் போய், காற்சட்டையைச் சிறிது மேலே தூக்கிவிட்டுக் கொண்டு, தோல் பொய்க்கால்கள் வெளித் தெரிய, குனிந்த தலை நிமிராமல், கைகளைத் தொங்கவிட்டவாறு மேஜைக்கு எதிரே அப்படியே நின்றான்.

“அப்படியானால், அருமைத் தம்பீ, எங்களை ஏன் போட்டு வதைக்கிறீர்கள்? இவ்வளவு நேரத்தைப் பறித்துக் கொண்டு வீட்டீர்களே. கால்கள் இல்லாமலே விமானப்படைக்குத் திரும்ப நினைக்கின்றீர்களா என்ன?” என முடிவில் கூறினார் மருத்துவர்.

“நான் நினைக்கவில்லை. கட்டாயம் திரும்புவேன்” என்று தணித்த குரலில் சொன்னான் அலெக்ஸேய். அவனுடைய ஜிப்ஸிக் கண்கள் பிடிவாத அறைகூவல் விடுபவை போலச் சுடர் வீசின.

“உங்களுக்கு மூளை புரண்டு விட்டதா? கால்கள் இல்லாமலா?”

“ஆமாம், கால்கள் இல்லாமலேதான் – கட்டாயம் விமானம் ஓட்டியே தீருவேன்” என்று பிடிவாதம் இன்றி மிக நிதானமாக விடையிறுத்தான் அலெக்ஸேய். பழைய மோஸ்தர் விமானிக் கோட்டுப் பையில் கையை விட்டு ஒழுங்காக மடிக்கப்பட்ட பத்திரிக்கைத் துணுக்கை அதிலிருந்து எடுத்தான். “பாருங்கள். இவர் ஒரு கால் இல்லாமல் விமானம் ஓட்டினாரே. நான் ஏன் இரண்டு கால்களும் இல்லாமல் ஓட்ட கூடாது?” என்றான்.

பத்திரிக்கைக் குறிப்பைப் படித்துவிட்டு மருத்துவர் அலெக்ஸேயை வியப்புடனும் மரியாதையுடனும் பார்த்தார்.

“ஆனால் இதற்கு அசுரப் பயிற்சி செய்ய வேண்டுமே. இவர் பத்து, ஆண்டுகள் பயிற்சி செய்தாராம், பார்த்தீர்களா? நிஜக்கால்கள் போன்றே பொய்க்கால்களைப் பயன்படுத்தப் பழக வேண்டும்” என்று கனிவுடன் சொன்னார்.

அப்போது அலெக்ஸேய்க்கு எதிர்பாராத விதத்தில் ஆதரவு கிடைத்தது. ஸீனா தன் மேஜை அருகே இருந்து தாவி முன்னே வந்து, பிராத்தனை செய்பவள் போன்று கைகளை மார்பில் வைத்துக் கொண்டு கன்னப் பொருத்துக்களில் வியர்வை துளிக்கும் அளவுக்கும் கன்றிச் சிவந்தாள்.

“முதல் வரிசை இராணுவ மருத்துவத் தோழர் அவர்களே. இவர் எப்படி நடனம் ஆடுகிறார் என்று பாருங்கள். ஊனம் இல்லாதவர்களை விட மேலாக ஆடுகிறார். மெய்யாகவே சொல்லுகிறேன்” என்று குழறலுடன் மொழிந்தாள்.

“நடனம் ஆடுகிறாரா? எப்படி? இது எப்படி முடியும்?” என்று மருத்துவர் தோள்களைக் குலுக்கினார். தேர்வுக் குழுவினரின் பக்கம் நல்லியல்புடன் கண்ணோட்டினார்.

ஸீனா குறித்துக் காட்டிய கருத்தை மகிழ்வுடன் பயன்படுத்திக் கொண்டான் அலெக்ஸேய்.

“நீங்கள் சாதகமாவோ பாதகமாவோ எதுவும் எழுதாதீர்கள். இன்று மாலை எங்கள் நடனக் கூடத்துக்கு வாருங்கள். என்னால் விமானம் ஓட்ட முடியும் என்பதைக் கண்டுகொள்வீர்கள்” என்றான்.

தேர்வுக் குழு உறுப்பினர்கள் எதைப் பற்றியோ ஆர்வம் பொங்கச் சர்ச்சை செய்வதைக் கதவுப் பக்கம் போகும் பொழுது கண்ணாடியில் கண்டான் அலெக்ஸேய்.

மதிய சாப்பாட்டுக்கு முன் ஸீனா பூங்காவின் வெறுமை மூலையில் அலெக்ஸேயைத் தேடிப்பிடித்தாள். அவன் போன பிறகு வெகு நேரம் வரை தேர்வுக் குழுவினர் அவனைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்ததாகவும், “மெரேஸ்யெவ் அசாதரணமான இளைஞன். ஒருவேளை உண்மையாகவே அவன் விமானம் ஓட்டக்கூடும், யார் கண்டது? ருஷ்ய மனிதன் எதுவும் செய்யத் திறன் உள்ளவன்!” என்று மருத்துவர் சொன்னதாகவும் தெரிவித்தாள். மருத்துவர் சொன்னதை மறுத்து, விமானப் பறப்பின் வரலாறு இத்தகைய உதாரணங்களை அறியாது என்று தேர்வுக் குழு உறுப்பினர் ஒருவர் கூறினாராம். விமானப் பறப்பின் வரலாறு எத்தனையோ விஷயங்களை அறியாது என்றும் இந்த யுத்தத்தில் சோவியத் மக்கள் அதற்கு எத்தனையோ விஷயங்கள் கற்பித்திருக்கிறார்கள் என்றும் அவருக்குப் பதில் சொன்னாராம் மருத்துவர்.

தெரிந்தெடுக்கப்பட்ட தொண்டர்களை (ஆரோக்கிய நிலையத்தில் இத்தகையவர்கள் இருநூறு பேர் வரை இருந்தார்கள்) போரிடும் சைனியத்திற்கு அனுப்புவதற்கு முந்திய மாலை, விரிவான நிகழ்ச்சித் திட்டத்துடன் நடனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. மேலெல்லாம் வியர்த்துக் கொட்ட, களைப்பில்லாமல் நடனமாடினார்கள் விமானிகள். தனது செம்பொன் கூந்தல் துணைவியுடன் குதூகலமாகவும் லாவகமாகவும் துடியாகவும் அவர்களுக்கிடையே நடனமாடினான் அலெக்ஸேய். அருமையான ஜோடி!

இராணுவ மருத்துவர் மிரொவோல்ஸ்க்கிய் குளிர்ந்த பீர்க் குவளையும் கையுமாகத் திறந்த ஜன்னல் அருகே உட்கார்ந்து மெரேஸ்யெவையும் அவனுடைய தழல்முடித் துணைவியையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் மருத்துவர், அதிலும் இராணுவ மருத்துவர். நிஜக்கால்களிலிருந்து பொய்க்கால்கள் எப்படி வேறுபடுகின்றன என்பதை கணக்கற்ற உதாரணங்கள் வாயிலாக அவர் தெரிந்து கொண்டிருந்தார்.

கட்டுவாய்ந்த மேனியும் பழுப்பேறிய நிறமும் கொண்ட இந்த லெப்டினன்ட் சிறுகூடான, ஒயிலுள்ள ஆட்டத் துணைவியோடு அழகுற இணைந்தாடுவதை இப்போது காண்கையில் இதெல்லாம் சிக்கலான ஏதோ ஏமாற்று என்ற எண்ணத்தை அவரால் விடவே முடியவில்லை. கடைசியில், கைதட்டி ஆர்வாரித்த வட்டத்துக்கு நடுவே மகிழ்ச்சிக் கூக்குரலுடன் உள்ளங்கைகளால் தொடைகளிலும் கன்னங்களிலும் தட்டிக் கொண்டு மிடுக்காக ருஷ்ய நடனம் ஆடிமுடித்து விட்டு அலெக்ஸேய் வியர்த்து விறுவிறுக்க, களிபொங்க ஆட்களை விலக்கிக் கொண்டு மிரொவோல்ஸ்க்கியிடம் சென்றான். அப்போது அவர் மரியாதையாக அவன் கையைப் பற்றிக் குலுக்கினார். மெரேஸ்யெவ் ஒன்றும் பேசவில்லை. ஆனால் மருத்துவரை ஒரே பார்வையாக நோக்கிக் கொண்டிருந்த அவனுடைய விழிகள், விடையை வேண்டின, கோரின.

“உங்களை நேரே படைப்பிரிவுக்கு அனுப்ப எனக்கு உரிமை கிடையாது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் என் முடிவை உங்களுக்கு நான் தருகிறேன். தக்க பயிற்சி அளிக்கப் பட்டால் நீங்கள் விமானம் ஓட்டுவீர்கள் என்ற எங்கள் கருத்தை நான் எழுதுகிறேன். சுருக்கமாக எந்த நிலையிலும் என் வாக்கு உங்களுக்கு ஆதரவாகவே இருக்கும் என எண்ணிக் கொள்ளுங்கள்” என்றார் மருத்துவர்.

படிக்க:
சிந்துச் சமவெளி நாகரீகத்தின் குடிகள் யார் ? புதிய ஆதாரங்கள் !
பணமதிப்பழிப்பு : இன்னும் என்னென்ன பாடுபடுத்துமோ ?

அனுபவம் முதிர்ந்த இராணுவ மருத்துவரான ஆரோக்கிய நிலையத்தின் இயக்குநருடன் கைகோத்துக் கொண்டு ஹாலிலிருந்து வெளியேறினார் மிரொவோல்ஸ்க்கிய். இருவரும் பரவசமடைந்திருந்தார்கள், ஒரே குழப்பம் அடைந்திருந்தார்கள். சோவியத் மனிதன் ஒரு விஷயத்தை அடைய உண்மையாகவே விரும்பிவிட்டால் எதையும் செய்ய வல்லவன் என்பது பற்றி உறங்குவதற்கு முன் சிகரெட்களைப் புகைத்தவாறு வெகு நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்..

கீழே இன்னும் இசை முழங்கிக் கொண்டிருந்தது, ஆடுவோரின் நிழல்கள் ஜன்னல் வெளிச்சத்தின் நீள் சதுரங்களில் தரைமீது இயங்கிக் கொண்டிருந்தன. அந்தச் சமயத்தில் அலெக்ஸேய் மெரேஸ்யெவ் மேலே இறுகத் தாளிட்ட குளிப்பறையில் உதட்டை இரத்தம் வரும்படி கடித்துக் கொண்டு, குளிர் நீரில் கால்களைத் தொங்கவிட்டபடி உட்கார்ந்திருந்தான். வலி பொறுக்க மாட்டாமல் அநேகமாக உணர்வு இழக்கும் நிலையில் இருந்தான். பொய்க்கால்களின் ஆவேச இயக்கம் காரணமாக உண்டாகியிருந்த நீலம் பாரித்த இரத்தக் காய்ப்புகளையும் அகன்ற புண்களையும் தண்ணீரால் நனைத்துக் கொண்டிருந்தான் அவன்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க