கேள்வி: //நடிகர் சூர்யா திடீர் என்று கல்வி கொள்கை பற்றி பேச காரணம் என்ன? இவ்வளவு நாள் இல்லாம, இப்போதைய அரசு தான் இதுக்கு காரணமா?

இதனால் நடிகர் சூர்யா படத்துக்கு தமிழக அரசு மூலம் பிரச்சனை வருமா?//

– விஜயகுமார்

ன்புள்ள விஜயகுமார்,

‘அம்மா’ ஆட்சி, அடிமைகள் ஆட்சியான பிறகு கமலஹாசனுக்கே துணிச்சல் வந்திருக்கும் காலத்தில் சூர்யாவும் பேசுகிறார். அவரது ‘அகரம்’ அறக்கட்டளை கல்வி உதவிகள் சிலவற்றை செய்கிறது. புதிய கல்விக் கொள்கையின் தீமைகளை அவரது பார்வை, அனுபவத்தில் இருந்து பேசுகிறார்.

“புதிய தலைமுறை” சூர்யா நமக்கு முன்மாதிரியா?

உடனே அதிமுக அடிமை அமைச்சர்கள் சூர்யாவை குறிவைத்து தாக்குகிறார்கள். பாஜக-வின் தயவில் பாசிச ஆட்சி படரந்து வரும் காலத்தில் இத்தகைய எதிர்ப்புக் குரல்கள் எழுவதை நாம் வரவேற்க வேண்டும். இதனால் சூர்யா படத்திற்கு தமிழக அரசு சார்பில் பெரிய பிரச்சினைகள் வர வாய்ப்பில்லை. ஏற்கெனவே பாஜக-வின் விளம்பரத்தால் மெர்சல் ஓடிய கதை அவர்களுக்கும் தெரிந்திருக்கும்.

 

♦ ♦ ♦

கேள்வி: //நீங்கள் இவ்வளவு சொன்னீர்கள் சரி, அப்போ தமிழ்நாட்டிற்கு யாரு தான் சரியான ஆளு?

எனக்கு தெரிந்த அளவிற்கு தமிழ்நாட்டில் சரியான ஆளு யாருநா அது சீமான் மட்டும் தான், மற்றவர்கள் எல்லாம் பணத்தாசை பிடித்தவர்கள்.

அப்போது தமிழ்நாட்டிற்கு சரியான முதல்வர் யார் என்று நீங்கள் கூறுங்கள்?//

– கு. செல்வராஜ்

ன்புள்ள செல்வராஜ்,

தமிழகத்தை முதலமைச்சர்தான் முற்றிலுமாக ஆள்கிறார் என்று நாம் சிந்தையில் பழகியிருக்கிறோம். இன்றைய தேதியில் முதலமைச்சரால் என்ன செய்ய முடியும்? மின் கட்டண உயர்வை தீர்மானிப்பது யார்? மின்சார ஒழுங்குமுறை ஆணையம். பெட்ரோல் டீசல் விலை உயர்வை தீர்மானிப்பது யார்? அதுவும் எண்ணையை சந்தைப்படுத்தும் நிறுவனங்கள். தனியார் பள்ளி, கல்லூரிகளில் கல்வி கட்டணத்தை அந்நிறுவனங்களே தீர்மானிக்கிறார்கள். கார்ப்பரேட் மருத்துவமனைகளில் கட்டணத்தை அந்தந்த மருத்துவமனை நிறுவனங்களே தீர்மானிக்கின்றன. மறைமுக வரியை மத்திய அரசு முதன்மையாக தீர்மானிக்கிறது. மக்கள் அதை எண்ணிறந்த வழிகளில் செலுத்துகிறார்கள்.

பொதுத்துறை வங்கிகள் யாருக்கு கடன் கொடுக்கும்? அதை முதலாளிகள் தீர்மானிக்கிறார்கள். ஆம்னி பேருந்து கட்டணத்தை அந்த நிறுவனங்களே தீர்மானிக்கின்றன. இந்நிலையில் தமிழகத்தில் காவல்துறைக்கு அதிகம் ஆட்களை எடுப்பதை மட்டுமே தமிழக அரசு செய்ய முடியும். அந்தக் காவல்துறையும் வேதாந்தா போன்ற முதலாளிகளுக்கு ஆதரவாக போராடும் மக்களைச் சுட்டுக் கொல்லும். கூட்டிக் கழித்துப் பார்த்தால் முதலமைச்சர் என்பவர் மேற்கண்ட செயல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு அவ்வப்போது சாலையில் ஊர்வல பந்தா மட்டுமே போக முடியும்.

இதற்கு மேல் தமிழக பட்ஜெட்டில் இருக்கும் நிதிப் பற்றாக்குறையோடு கடன் வாங்கி சில நலத்திட்டங்களை அமல்படுத்தலாம். கடன் வாங்கினால் அதற்கு ஆயிரத்தெட்டு நிபந்தனைகளை உலக வங்கியும், ஆசிய வங்கியும், இதர வெளிநாட்டு வங்கிகளும் போடும். எனவே பண ஆசை பிடித்தவரா ஒரு முதல்வர் என்ற பிரச்சினையை விட இங்கே பணத்தை கட்டுப்படுத்தும் அதிகாரமே முதலமைச்சருக்கு கிடையாது. சாலை ஒப்பந்தங்கள், இதர கட்டுமானங்களில் ஆளும் கட்சிகள் அடிக்கும் கொள்ளைகளை வைத்து நீங்கள் யோசிக்கிறீர்கள். அது உண்மைதான். இந்த அமைப்பு முறை ஆளும் கட்சிக்கு நிறைய ஊழல் செய்ய வாய்ப்பளிக்கிறது. அப்படி ஊழல் செய்யாமல் இருப்பவர்களே ஆனாலும் மக்களுக்கு அதிகாரத்தோடு நல்ல நடவடிக்கைகளை செய்வதற்கு வாய்ப்பளிக்கவில்லை என்பதும் முக்கியமானது. பரிசீலித்து பாருங்கள்!

எனவே யார் நல்ல முதல்வர் என்று ஆய்வதை விட இந்த அமைப்பு முறை மக்களுக்கானதாக இல்லை. அதை எப்படி மாற்றுவது என்பதே நம் முன் உள்ள கேள்வி!

படிக்க :
♦ கேள்வி பதில் : பாகிஸ்தான் – சீமான் – அரசு – அரசாங்கம்
♦ கேள்வி பதில் : திராவிட இயக்கம் பொருளாதார தளத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லையா ?

♦ ♦ ♦

கேள்வி: //புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி பட்டியலின வெளியேற்ற கோரிக்கையை வைத்து போராடுவதை தவறு என தெரிந்திருந்தும் ஏன் சமூக அக்கறை கொண்ட அமைப்புகள் டாக்டர் கிருஷ்ணசாமியை கண்டிக்கவில்லை?//

– நிலா

ன்புள்ள நிலா,

இந்த கோரிக்கையில் நமது சாதி ‘முன்னேறிய’ சாதிப் பட்டியலில் இணைந்து தாழ்த்தப்பட்டோர் என்ற இழிநிலைமை மறைந்து விடும் என்று பள்ளர் இன மக்களில் சிலர் கருத்துரீதியாக நம்ப வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஒரு வகையில் இது பார்ப்பனியமயமாக்கத்தோடு தொடர்புடையது. தன்னை ‘கீழ்’ சாதி என்று நடத்தும் கொடுமைகளை எதிர்த்து சமர் புரிவதற்கு பதில் தன்னை ‘மேல்’சாதியாக மாற்றிவிடுவதையே பார்ப்பனியமயமாக்கம் என்கிறோம்.

அவ்வகையில் இது சாதி உணர்வை பெருமைப்படுத்தும் கருத்தாகவும் இருக்கிறது. அதனால்தான் நீங்கள் குறிப்பிடும் சமூக அக்கறை கொண்ட அமைப்புகள் டாக்டர் கிருஷ்ணசாமியை நேரடியாக கண்டிப்பதற்கு அஞ்சுகின்றன. அமைப்புகள் மட்டுமல்ல பள்ளர் இன மக்களே கூட அப்படி கண்டிப்பதற்கு பயப்படும் நிலைதான் இருக்கிறது.

♦ ♦ ♦

கேள்வி: //2019 பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியின் இழுபறிக்கு காரணம்?//

– டி. கண்ணன்

ன்புள்ள கண்ணன்,

சந்தேகமில்லாமல் சாதிய உணர்வுதான். இந்த தேர்தலில் திருமாவளவன் 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை வென்றிருக்கிறார். இந்த இழுபறிக்கு காரணம் திருமாவளவன் வெற்றிபெறக்கூடாது என்று பா.ம.க வரிந்து கட்டி வேலை செய்தது.

3 மாவட்டங்களில் பரந்திருக்கும் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில், அரியலூர், ஜெயங்கொண்டம், புவனகிரி, குன்னம், சிதம்பரம், காட்டுமன்னார் கோயில் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் அடங்கி இருக்கின்றன. இவை பெரும்பாலும் வன்னிய மக்களின் செல்வாக்கு கொண்ட தொகுதிகள்தான்.

எனினும் பல கிராமங்களில் சாதிய உணர்வை கடந்து வன்னிய மக்கள் திருமாவளவனுக்கு வாக்களித்திருந்தனர். அதனால்தான் அதிமுக – பாமக கூட்டணியின் சாதிய பலத்தினை தாண்டி மயிரிழையில் திருமாவளவன் வெற்றி பெற்றார். எனவே இதில் நல்லது கெட்டது இரண்டும் இருக்கிறது.

படிக்க :
♦ புதிய கல்விக் கொள்கை வரைவை நிராகரிப்போம் ! நெல்லை CCCE அரங்கக் கூட்டம் !
♦ வங்கி இணைப்பு – ஏர்போர்ட் தனியார்மயம் – உலகெங்கும் தொழிலாளர் போராட்டங்கள் !

♦ ♦ ♦

கேள்வி: //இந்தியாவில் இராணுவ ஆட்சி வரப் போகிறது என்று நக்கீரன் பத்திரிக்கையில் கூறுகிறார்கள். இராணுவ ஆட்சி வந்தால் மக்கள் எந்த மாதிரியான பிரச்சனையை சந்திக்க நேரிடும்?//

– திரு அன்பு

ன்புள்ள திரு அன்பு,

இந்தியாவில் அப்படி இராணுவ ஆட்சி வருவதற்கான சாத்தியமில்லை. அதே நேரம் இங்கிருக்கும் ‘ஜனநாயக’ ஆட்சியே ‘இராணுவ’ ஆட்சி போன்று சர்வ அதிகாரத்துடன் செயல்படுகிறது.

குஜராத் கலவரம் மற்றும் இந்துமதவெறியர்கள் குற்றம் சாட்டப்பட்ட குண்டு வெடிப்பு வழக்குகளில் இருந்து குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள். மாட்டுக்கறியின் பெயரில் முசுலீம்களை கும்பல் கொலை செய்த குற்றவாளிகள் குற்றப் பத்திரிகையிலேயே சேர்க்கப்படுவதில்லை. நீதித்துறை, கல்வி, வரலாறு அனைத்தும் காவி மயமாகி வருகிறது. மோடியை விமரிசிக்கும் அறிவுஜீவிகள் சிறைகளில் முடக்கப்படுகிறார்கள். இது போக காஷ்மீரும் சில வடகிழக்கு மாநிலங்களும் நீண்ட காலமாக இராணுவ ஆட்சியில்தான் வாழ்ந்து வருகின்றன.

Aryans

ஒருவேளை கற்பனையாக இராணுவ ஆட்சி இங்கு வந்தால் என்ன நடக்கும்? அரசியல் சட்டம் அளித்திருக்கும் அடிப்படை உரிமைகள் அதாவது பேச்சுரிமை, எழுத்துரிமை, சங்கம் வைக்கும் உரிமை, குடியுரிமை, இதர உரிமைகள் எதுவும் இருக்காது. அல்லது இராணுவம் முடிவு செய்யும். இன்றைக்கு காஷ்மீரில் இருக்கும் நிலைமை இந்தியா முழுவதற்கும் வந்து விடும். குறைந்த பட்சம் போராட்டம் நடக்கும் மாநிலங்களில் அப்படி முடக்கி விடுவார்கள்.

யாரையும் எப்போதும் கைது செய்யலாம். பிணை மறுக்கப்படும். எங்கேயும் எப்போதும் எதையும் சோதித்தறியலாம். நீதி என்பது ஒருவழிப்பாதையாக ஆளும் அரசின் நலன்களுக்காக மட்டும் இருக்கும். இராணுவம் செய்யும் கொலைகள், அட்டூழியங்களை கேள்வி கேட்க முடியாது. இவையெல்லாம் உலகில் இராணுவ சர்வாதிகாரம் நடந்த நாடுகளில் பரவலாக பார்க்க முடியும்.

உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் இக்காலத்தில் முன்னேறிய நாடுகளில் கூட கடும் சட்டங்களை இயற்றி அதிகாரப்பூர்வமாகவே அதிக அதிகாரத்தை அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. எனவே நேரடி இராணுவ ஆட்சியும் சரி, மறைமுக இராணுவ ஆட்சியும் சரி தன்மையில் பெரிய வேறுபாடுகளைக் கொண்டிருக்கவில்லை.

♦ ♦ ♦

கேள்வி: //உண்மையான தலைவர் யார் தான் இப்போது தமிழ் நாட்டில் ?//

– அசபு லிங்கம்

ன்புள்ள லிங்கம்,

மீம்களை வைத்துப் பார்த்தால் வடிவேலுதான் பெரும் தலைவர்! அரசியல் விமர்சனங்களை மீம்கள் வழியாக போட்டுத் தாக்கும் தமிழக இளைஞர்களுக்கு வடிவேலு கை கொடுக்கிறார். மற்றபடி இந்தியாவிலேயே அதிகம் போராட்டம் நடக்கும் மாநிலமாக தமிழகம் இருப்பதால் இங்கே மக்கள்தான் தலைவர்களாக இருக்கிறார்கள். தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டமாக இருக்கட்டும், தஞ்சை மீத்தேன் எதிர்ப்பு போராட்டமாக இருக்கட்டும், எட்டு வழிச்சாலையாக இருக்கட்டும், போக்குவரத்து தொழிலாளர் போராட்டமாக இருக்கட்டும் அனைத்திலும் மக்களே முன்னணியாக இருக்கின்றனர்.

இந்தப் போராட்டங்களை வாக்கு வங்கி அரசியலில் உள்ள கட்சிகள் நடத்தவில்லை. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் தலைவர்கள் எவரும் இப்படி ஒரு போராட்டத்தை கட்டியெழுப்பி தொடர்ச்சியாக போராடுவதில்லை. போராடும் மக்களுக்கு வாக்குறுதி கொடுப்பது, போராட்டத்தின் தீவிரத்தை தணிப்பது என்பதைத் தாண்டி அவர்கள் போவதில்லை. எனவே போராட்டம்தான் உண்மையான தலைவர்களை உருவாக்கும் என்ற விதிப்படி இன்றைக்கு தமிழகத்தில் தலைவர்கள் என யாரைச் சொல்ல முடியும்?

♦ ♦ ♦

கேள்வி: //இந்தியாவில் முஸ்லீம் தீவிரவாதத்தை விட இந்து மதவெறி தீவிர விளைவை ஏற்படுத்தும் என்பது உண்மையா? (அதாவது நாட்டையும் மக்களையும் துண்டாடுவது)//

– ஜெயபால்

ண்மைதான். முஸ்லீம் தீவிரவாதமே இந்துமதவெறியின் எதிர் விளைவுதான். இந்துமதவெறி என்பது பெரும்பான்மை மக்களின் பெயரில் செயல்படுவதால் அது அரசு, அரசாங்கம், நீதித்துறை, ஊடகம், என அனைத்து அதிகார பீடங்களின் நேரடி மற்றும் மறைமுக ஆதரவை பெற்றிருக்கிறது. மோடி பிரதமராகவும், குஜராத் 2002 முசுலீம் மக்கள் இனப்படுகொலைக்கு காரணம் அவர்தான் என்று உத்திரவு போட்ட முன்னாள் போலீசு அதிகாரி சஞ்சீவ் பட் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருப்பதும் சமீத்திய சான்று. இன்னும் மாட்டுக்கறியின் பெயரில் படுகொலை செய்யப்பட்ட பெஹ்லூகான், அக்லக் வழக்குகளில் குற்றவாளிகள் பகிரங்கமாக விடுதலை செய்யப்படுவதும், அவர்கள் பொது இடத்தில் வரவேற்கப்படுவதும் இப்படி பல சம்பவங்கள் இருக்கின்றன.

இந்த நாட்டில் ஜனநாயகம் முறையாக வேலை செய்யவில்லை, இந்துமதவெறிக் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்ற நிலைமையே சில முசுலீம் இளைஞர்களை தீவிரவாதத்தின் பக்கம் தள்ளிவிடுகிறது. அப்படி முறையாக ஆர்.எஸ்.எஸ் சங்க பரிவாரத்தினர் தண்டிக்கப்பட்டிருந்தால் எந்த முசுலீம் இளைஞன் தீவிரவாதம் பக்கம் போகப் போகிறார்?

இது தொடர்பாக ஃபேஸ்புக்கில் பத்திரிகையாளர் அருள் எழிலன் பகிர்ந்திருந்த செய்தியை பொருத்தம் கருதி இங்கே இணைக்கிறோம்.

நமது இந்தியாவின் நாயகர்கள்!

2002 இருண்ட காவி இருள் இஸ்லாமிய மக்களை குஜராத்தில் வேட்டையாடிய நாட்கள் அவை. துடிக்க துடிக்க பல்லாயிரம் இஸ்லாமியர்கள் குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என வேட்டையாடப்பட்ட அந்நாளில் இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது அந்த புகைப்படங்கள். காப்பாற்றக் கோரி ரத்தக்காயங்களுடன் கெஞ்சும் குத்புதீன் அன்சாரி..

காவி ரிப்பனுடன் கொலைவாளோடு வெறிக்கூச்சலிடும் அசோக் மோச்சி. குஜராத் கலவரம் இந்தியாவின் மாடலாக அரசியல் அரங்கில் மாற்றப்பட்டது. அதன் வடிவத்தை மாற்றி பல இடங்களிலும் பரிசோதனை செய்து அவர்கள் வெற்றி பெற்றுக் கொண்டிருக்க, அசோக் மோச்சி என்னும் செருப்பு தைக்கும் தொழிலாளியை அரசியல் படுத்தினார்கள் கம்யூனிஸ்டுகள்.

2014–ம் ஆண்டு கேரளாவில் நடந்த கம்யூனிஸ்ட் மாநாட்டில் அசோக் மோச்சியும், குத்புதீன் அன்சாரியும் ஒரே மேடையில் ஏறினார்கள். காவி பயங்கரவாதிகளின் அரசியலை புரிந்து கொண்ட அசோக் மோச்சி அந்நாட்களில் தான் நடந்து கொண்டமைக்காக மன்னிப்புக் கேட்டார். அதுவரை தான் வாழ்ந்த வாழ்வை மற்றி சமூக நல்லிணக்கத்திற்கானதாக மாற்றினார்.

அகமதாபாத்தில் அசோக் மோச்சியின் ‘ஏக்தா சப்பல் கர்’ என்ற செருப்புக்கடையை குத்புதீன் அன்சாரி திறந்து வைத்துள்ளார்.

இதோ அகமதாபாத்தில் அசோக் மோச்சியின் ‘ஏக்தா சப்பல் கர்’ என்ற செருப்புக்கடையை குத்புதீன் அன்சாரி திறந்து வைத்துள்ளார். இருவருக்குமிடையில் ஆழ்ந்த நட்பை அன்பை பரஸ்பரம் மரியாதையை உருவாக்கியுள்ளது இந்த காலம். “இந்து வர்ணாசிரம அமைப்புதான் என்னை செருப்பு தைக்கும் நிலைக்கு உள்ளாக்கியது. இந்து வர்ண அமைப்பு எங்களை முன்னேற அனுமதிக்காது. அதனால் நடக்கும் அநீதிக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பேன்” என்கிறார் அசோக் மோச்சி.

காலமும் மனித மனமும் எத்தனை உன்னதமானது அன்பை விடமதங்களும் சாதியும் எதுவும் இல்லை என்பதை அசோக் மோச்சி நிரூபித்திருக்கிறார். நாம் விரும்பும் இந்தியா இதுதானே?

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்