பரீஸ் பொலெவோய்

உண்மை மனிதனின் கதை | மூன்றாம் பாகம் | அத்தியாயம் – 07

தேர்வுக்குழுவின் முன் மெரேஸ்யேவ் முதலில் அழைக்கப்பட்டான். பிரமாண்டமான, முதிர்ந்து கனிந்த முதல் வரிசை இராணுவ மருத்துவர் கடைசியில் அலுவல் பயணத்திலிருந்து திரும்பித் தலைமைப் பீடத்தில் வீற்றிருந்தார். அலெக்ஸேயை அவர் உடனே அடையாளம் கண்டுகொண்டு அவனை வரவேற்க இருக்கை விட்டு எழுந்து முன் சென்றார்.

“என்ன, ஏற்க மாட்டோம் என்கிறார்களா அன்பரே. உமது விவகாரம் சிக்கலானது. சட்டத்தை மீற நேரிடும். சட்டத்தை எப்படித் தாண்டுவது?” என்று நல்லியல்புடன் பரிவு காட்டினார் அவர்.

அலெக்ஸேய் சோதித்துக் கூடப் பார்க்கப்படவில்லை. அவனுடைய காகிதத்தில் இராணுவ மருத்துவர் சிவப்புப் பென்சிலால் பின்வருமாறு எழுதினார்: “பணியாளர் நியமன அலுவலகத்துக்கு. விமானப் பயிற்சி ரெஜிமென்டுக்குச் சோதனைக்காக அனுப்பப்படலாம் என்று கருதுகிறேன்.” இந்தக் காகிதத்துடன் நியமன அலுவலகத் தலைவரான ஜெனரலிடமே நேரே சென்றான் அலெக்ஸேய். துணை அதிகாரி அவனை ஜெனரலிடம் போகவிடவில்லை. அலெக்ஸேய்க்குக் கோபம் பீறிட்டுக் கொண்டு வந்தது. இந்தத் துணையதிகாரி கறுகறுவென்ற மீசையும் வடிவமைந்த மேனியும் கொண்ட இளம் காப்டன். குதூகலமும் நல்லியல்பும் ஒளிர்ந்த அவனது முகத்தால் வசீகரிக்கப்பட்ட அலெக்ஸேய் அவனுடைய மேஜை அருகே உட்கார்ந்து தானே எதிர்பார்க்காத விதத்தில் தன் கதையை எல்லாம் சாங்கோபாங்கோமாக அவனுக்கு எடுத்துரைத்தான். டெலிபோன் மணி அவனுடைய கதையை அடிக்கடி இடை முறித்தது. காப்டன் மறுபடி மறுபடி எழுந்து தன் தலைமையதிகாரியின் அறைக்குப் போகவேண்டியிருந்தது.

ஆனால் அங்கிருந்து திரும்பியதுமே அவன் மெரேஸ்யெவுக்கு எதிரே உட்கார்ந்து, குழந்தைமையும் எளிமையும் ஆவலும் பாராட்டும் ஓரளவு அவநம்பிக்கையுங்கூடத் ததும்பும் விழிகளுடன் நோக்கியவாறு, “ஊம், ஊம், ஊம், அப்புறம்?” என்று அவசரப்படுத்துவான். அல்லது திடீரென்று கைகளை விரித்து விளங்காமைதோன்ற, “மெய்தான் சொல்லுகிறாயா? கடவுளாணை, பொய் சொல்லவில்லையே நீ? ம்-ம்-பிரமாதம்!” என்பான்.

ஒவ்வோர் அலுவலகமாகத் தான் அலைந்ததை மெரேஸ்யெவ் விவரித்தும் காப்டன் எரிச்சலுடன் கத்தினான்: “அடச் சைத்தான்களா! வீணாக உன்னை அலைகழித்திருக்கிறார்களே. நீ அருமையான ஆள், ஊம், எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை….. நீ அசாதாரண இளைஞன்! ஆனாலும் அவர்கள் செய்தது சரியே. கால்கள் இல்லாமல் விமானம் ஓட்ட முடியாது.”

“ஓட்டமுடியும்….. இதோ….” என்று மெரேஸ்யெவ் பத்திரிக்கைத் துணுக்குகளையும் இராணுவ மருத்துவரது முடிவையும் அவரது சிபாரிசையும் எடுத்து வைத்தான்.

“ஆனால் கால்கள் இல்லாமல் நீ எப்படி விமானம் ஓட்டுவாய்? விசித்திரப் பேர்வழி! முடியாதப்பா. ருஷ்யப் பழமொழி கூட உண்டே, ‘காலில்லாதவன் நடனமாட முடியாது’ என்று.”

வேறு ஒருவன் இப்படிச் சொல்லியிருந்தால் மெரேஸ்யெவ் கட்டாயம் மனத்தாங்கல் கொண்டிருப்பான், ஒருவேளை கோபங்கொண்டு முரட்டுத்தனமாகப் பேசிக்கூட இருப்பான். காப்டனின் துடியான முகத்தில் காணப்பட்ட நல்விருப்பம் காரணமாக அவன் அப்படிச் செய்யாமல் சிறுவன் போன்ற உற்சாகப் பெருக்குடன் கூவினான்:

“முடியாதோ?” – இவ்வாறு கத்திவிட்டு எதிர்பார்ப்பு அறையிலேயே நடனம் ஆடத் தொடங்கிவிட்டான்.

காப்டன் பாராட்டுத் தோன்ற அவனைக் கவனித்தான், பின்பு ஒரு வார்த்தை பேசாமல் அவனுடைய காகிதங்களை எடுத்துக் கொண்டு தலைமையதிகாரியின் அறைக்குள் மறைந்தான்.

வெகு நேரம் வரை திரும்பவில்லை. கதவின் மறுபுறமிருந்து வந்த இரு குரல்களின் ஒலிகளைக் கேட்டுக் கொண்டிருந்த மெரேஸ்யெவின் உடம்பு முழுவதும் இறுகிக் குறுகியது, இதயம் கடுமையாக, விரைவாகத் துடித்தது – விரைந்தியங்கும் விமானத்தில் அவன் செங்குத்தாகப் பாய்ந்து இறங்குவது போல.

காப்டன் மனநிறைவைக் காட்டும் புன்னகையுடன் வெளியே வந்தான்.

“விஷயம் இதுதான். உன்னை விமானியாகச் சேர்த்துக் கொள்வது பற்றிய பேச்சைச் செவியேற்கவே ஜெனரல் விரும்பவில்லை. ஆனால் விமானப்படை டெப்போவுக்கு இதே சம்பளத்துடன் வசதிகளுடன் பணியாற்ற அனுப்பும் படி இதோ எழுதியிருக்கிறார். புரிந்ததா? இதே சம்பளத்துடன்…”

அலெக்ஸேயின் முகத்தில் மகிழ்ச்சிக்குப் பதில் ஆத்திரத்தைக் கண்டு காப்டன் பெருவியப்படைந்தான்.

“டெப்போவுக்கா? ஒருபோதும் இல்லை. அட உங்களுக்கு என் இது புரியமாட்டேன் என்கின்றது? வயிற்றுப்பாட்டையும் சம்பளத்தையும் பற்றி அல்ல நான் கவலைப்படுவது. நான் விமானி, புரிகிறதா? நான் விரும்புகிறேன் விமானம் ஓட்ட, போரிட!. இதை ஏன் ஒருவரும் புரிந்துகொள்ளவதில்லை? இது வெகு சுலபமான விஷயம் ஆயிற்றே….”

காப்டன் குழப்பமடைந்தான். நல்ல விண்ணப்பதாரன்தான் வந்து சேர்ந்தான்! இவன் இடத்தில் வேறு எவனும் மறுபடி களிப்பால் கூத்தாடத் தொடங்கியிருப்பான். ஆனால் இவனோ… வேடிக்கையான பிரகருதி! எனினும் இந்த வேடிக்கைப் பிரகருதி மேல் காப்டனுக்கு முன்னிலும் அதிக அன்பு உண்டாயிற்று. இவன்பால் பரிவு அவன் உள்ளத்தில் ஊறித் ததும்பியது. இவனது அசாத்தியத்தியமான முயற்சியில் எவ்வகையிலேனும் உதவக் காப்டனுக்கு விருப்பம் கிளர்ந்தெழுந்தது. சட்டென அவன் மனதில் ஓர் எண்ணம் உதித்தது. அவன் மெரேஸ்யெவைப் பார்த்துக் கண் சிமிட்டி, விரல் சைகையால் அவனை அருகே அழைத்து, தலைமையதிகாரியின் அறையை ஓரக் கண்ணால் நோக்கியபடி கிசுகிசுத்தான்:

“ஜெனரல் தம்மால் முடிந்ததை எல்லாம் செய்து விட்டார். இதற்கு மேல் அவருக்கு அதிகாரம் இல்லை. கால்கள் இல்லாதவனை விமானியாக நியமித்தாரானால் அவரையே பைத்தியக்காரர் என்று எல்லோரும் எண்ணிவிடுவார்கள். நேரே நமது உச்ச அதிகாரியிடமே போ. அவர்தான் உன் விருப்பத்தை நிறைவேற்ற முடியும்.”

அரைமணி நேரத்திற்கெல்லாம் மெரேஸ்யெவ் தன் புதிய நண்பனின் முயற்சியால் கிடைத்த நுழைவு அனுமதிச் சீட்டுடன் உச்ச அதிகாரியுடைய எதிர்பார்ப்பு அறையின் தரைக் கம்பளத்தின் மேல் பதற்றத்துடன் நடந்தான். முன்னமே இது அறிவில் படாமல் போயிற்றே! ஆம். இவ்வளவு நேரத்தை வெட்டியாகக் கழிக்காமல் எடுத்த எடுப்பிலேயே இங்கே வந்திருக்க வேண்டும். வெற்றியோ தோல்வியோ, இரண்டில் ஒன்று தீர்ந்து போயிருக்கும்… உச்ச அதிகாரி தாமே தேர்ந்த விமானியாக இருந்தவராம். அவர் கட்டாயம் புரிந்து கொள்வார். சண்டை விமானியை டெப்போவுக்கு அவர் ஒருபோதும் அனுப்பமாட்டார்!

படிக்க:
அசோக் லேலாண்ட் : மிகை உற்பத்தி ! வேலை நாள் குறைப்பு சதி !
சிந்துச் சமவெளி நாகரீகத்தின் குடிகள் யார் ? புதிய ஆதாரங்கள் !

எதிர்பார்ப்பு அறையில் ஜெனரல்களும் கர்னல்களும் நயப்பாங்குடன் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் தணிந்த குரலில் பேசிக்கொண்டிருந்தார்கள். சிலர் வெளிப்படையாகப் பதற்றப்பட்டார்கள். புகை குடித்துக் கொண்டிருந்தார்கள். அலெக்ஸேய் மட்டுமே தரைவிரிப்பின் மீது விந்தையான முறையில் எம்பி எம்பிக் குதித்தவாறு முன்னும் பின்னுமாக நடந்து கொண்டிருந்தான். காண வந்திருந்தவர்கள் எல்லோரும் கண்டு சென்ற பின் மெரேஸ்யெவின் முறை வந்ததும் அவன் துணையதிகாரியின் மேஜையருகே சட்டெனப் போய் நின்றான். ஒளிவு மறைவு அற்ற முகத்தினனான மேஜர் அந்தத் துணையதிகாரி.

“தோழர் சீனியர் லெப்டினன்ட், நீங்கள் உச்ச அதிகாரியையே பார்க்க வேண்டுமா?” என்று அவன் வினவினான்.

“ஆம், முக்கியமான ஒரு சொந்தக் காரியம் அவரால் எனக்கு ஆக வேண்டியிருக்கிறது.”

“இருந்தாலும் உங்கள் விவகாரத்தை எனக்கும் தெரிவிக்கலாமா? உட்காருங்களேன். சிகரெட் பிடிப்பது உண்டா?” என்று சிகரெட் பெட்டியை மெரேஸ்யெவிடம் நீட்டினான் துணையதிகாரி.

மெரேஸ்யெவ் புகை பிடிப்பதில்லை என்றாலும் எதற்காகவோ ஒரு சிகரெட்டை எடுத்துக் கையில் பிடித்துக் கசக்கி விட்டு மேஜைமேல் வைத்தான். பின்பு, திடீரென்று தன் அசாதாரண அனுபவங்களை எல்லாம் கேப்டனுக்கு விவரித்தது போலவே ஒரு மூச்சில் சொல்லித் தீர்த்துவிட்டான். மேஜர் அவனுடைய கதையை வெறுமே மரியாதைக்காக இன்றி, மிகுந்த நட்புடனும் பரிவுடனும் கவனித்தும் கேட்டான். பத்திரிக்கைக் குறிப்பையும் மருத்துவரின் பரிந்துரையையும் படித்தான். அவனுடைய பரிவால் உற்சாகமடைந்த மெரேஸ்யெவ் துள்ளி எழுந்து, தான் இருக்கும் இடம் எது என்பதைக் கணப்பொழுது மறந்து மறுபடி நடனமாடிக் காட்ட முற்பட்டான்… அவனுடைய நோக்கமெல்லாம் பாழாகாமல் மயிரிழையில் தப்பியது. தலைவர் அறைக் கதவு சட்டெனத் திறக்கப்பட்டது. கருமுடியும் நெடிய ஒடிசலான மேனியும் உடைய ஒருவர் அங்கிருந்து வெளிப்பட்டார். போட்டோக்களில் பார்த்திருந்தமையால் அலெக்ஸேய் அவரை உடனே அடையாளம் தெரிந்து கொண்டான். நடந்தவாறே அவர் மேல் கோட்டுப் பொத்தான்களைப் போட்டுக் கொண்டு, தன் பின் வந்த ஜெனரலிடம் ஏதோ சொன்னார். கவலையில் வெகுவாக ஆழ்ந்திருந்தமையால் அவர் அலெக்ஸேயைக் கவனிக்கக் கூட இல்லை.

“நான் கிரெம்ளினுக்குப் போகிறேன்” என்று கடிகாரத்தைப் பார்த்து விட்டு மேஜரிடம் சொன்னார் அவர். “ஆறு மணிக்கு ஸ்தாலின்கிராத் செல்ல விமானத்துக்கு ஆர்டர் கொடுங்கள். வெர்க்னியா பொக்ரோம்னயாவில் விமானம் இறங்க வேண்டும்” என்று கூறி விட்டு வந்தது போலவே விரைவாக வெளியே போய்விட்டார்.

மேஜர் உடனே விமானத்துக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு, மெரேஸ்யெவை நினைவு படுத்திக்கொண்டு கைகளை விரித்தார்.

“உங்களுக்கு அதிர்ஷ்டமில்லை. இன்றே விமானத்தில் வெளியூர் போகிறோம். நீங்கள் காத்திருக்க நேரும். தங்க இடம் இருக்கிறதா உங்களுக்கு?” என்று கேட்டார்.

நிமிட நேரம் முன்பு பிடிவாதமும் சித்தவுறுதியும் தென்பட்ட அலெக்ஸேயின் சாமள முகத்தில் திடீரென ஒரே ஏமாற்றமும் சோர்வும் காணப்பட்டதைக் கவனித்த மேஜர் தன் தீர்மானத்தை மாற்றிக் கொண்டான்.

“நல்லது… நமது தலைமை அதிகாரியை நான் அறிவேன். அவரும் இப்படியே செய்திருக்கிறார்.”

இவ்வாறு கூறி, அலுவலகக் காகிதத்தில் சில வார்த்தைகளை எழுதி, காகிதத்தை உறையில் இட்டு, “பணியாளர் நியமன அலுவலக தலைவருக்கு” என்று எழுதி அலெக்ஸேயிடம் கொடுத்து அவன் கையைப் பற்றிக் குலுக்கினான்.

“நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்று உளமார விரும்புகிறேன்!” என்றான்.

காகிதத்தில் பின் வருமாறு எழுதப்பட்டிருந்தது: “லெப்டினன்ட் அ. மெரேஸ்யெவ் விமானப்படைத் தலைவரைக் காண வந்திருந்தார். அவர் விஷயத்தில் முழுக்கவனம் செலுத்தப் பட வேண்டும். அவர் விமானப் படைக்குத் திரும்ப முடிந்த வகையில் எல்லாம் உதவுவது அவசியம்.”

ஒரு மணி நேரத்திற்கெல்லாம் கருமீசை காப்டன் தன் தலைமையதிகாரியின் அறைக்கு மெரேஸ்யெவை இட்டுச் சென்றான். சினக் குறி காட்டும் பறட்டைப் புருவங்கள் கொண்ட பாரியான முதிய ஜெனரல் காகிதத்தைப் படித்து விட்டு, களி சுடரும் நீல விழிகளை உயர்த்தி அலெக்ஸேயைப் பார்த்து நகைத்தார்.

“அதற்குள் அங்கேயும் போய் வந்துவிட்டாயா!… துருசான ஆள்தான் நீ, படு துருக்காரன்! நான் உன்னை டெப்போவுக்கு அனுப்பியதால் மனத்தாங்கல் கொண்டவன் நீ தானே? ஹஹ்ஹஹ்- ஹா!” என்று அவர் கடகடவென்று உரக்கச் சிரித்தார். “சபாஷ்! உயர்தர விமானி நீ என்பதைக் கண்டு கொண்டேன். டெப்போவுக்குப் போக மாட்டானாம், அவமதிப்பாக நினைக்கிறான்….. சரியான வேடிக்கைதான்! நான் உன்னை என்ன செய்வது, ஊம், நடன சிகாமணி? விமானத்தோடு விழுந்து நொறுங்கினாயானால் என் தலையை வாங்கி விடுவார்களே. ‘கிழட்டு மட்டி, அவனை எதற்காக நியமித்தாய்?’ என்று கேட்பார்களே! ஆனால் நீ என்ன செய்வாய் என்று யார் கண்டது?… இந்த யுத்தத்தில் நம் ஆட்கள் உலகை பிரமிக்க வைத்து விட்டார்கள் என்றால் வெறுமேதானா… இப்படிக் கொடு அந்தக் காகிதத்தை” என்றார்.

படிக்க:
காஷ்மீர், நர்மதா : ஜனநாயகத்தை நொறுக்குவதற்கான சோதனைச் சாலைகள் !
அசாம் – தேசிய குடிமக்கள் பட்டியல் குறிப்புகள் : முசுலீம்களுக்கு எதிரான சதி !

காகிதத்தின் குறுக்கே நீல நிறப் பென்சிலால் விளங்காத கையெழுத்தில் அரைகுறைச் சொற்களில் “பயிற்சிப் பள்ளிக்கு அனுப்புக” என்று எழுதியிருந்தார் ஜெனரல். நடுங்கும் கைகளால் காகிதத்தைப் பெற்றுக் கொண்டான் மெரேஸ்யெவ். அப்போதே, மேஜை அருகிலேயே அதைப் படித்தான். அப்புறம் மாடிப் படி மேடையிலும், பிறகு கீழே அனுமதிச் சீட்டைச் சரிபார்க்கும் பாராக்காரனின் பக்கத்திலும், பின்பு டிராமிலும், முடிவில் நடைபாதையில் மழையில் நின்று கொண்டும் மறுபடி மறுபடி படித்தான். அலட்சியமாகக் கிறுக்கப்பட்டிருந்த இந்தக் சொற்களின் குறி பொருளை, இவற்றின் மதிப்பையும் புரிந்துகொள்ளக் கூடியவன் இந்தப் பரந்த உலகில் வாழும் மக்களில் அவன் ஒருவன் மட்டுமே.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க