நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் தொடர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். மிரட்டல் !

இந்துத்துவ எதிர்ப்பு கருத்துக்கள் எந்த தளத்திலும் வெளிவரக்கூடாது என கண்கொத்திப் பாம்பாக கவனிக்கும் ஆர்.எஸ்.எஸ் தற்போது நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைமை குறிவைத்துள்ளது.

1

நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற இணையதளங்களில் எடுக்கப்பட்டுள்ள தொடர்களில் இந்துத்துவத்துக்கு எதிரான கருத்துக்கள் உள்ளதாகக் கூறி, அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என மிரட்டத் தொடங்கியிருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.

இணைய தொடர்களுக்கு தணிக்கை இல்லை என்பதால், படைப்பாளிகள் சுதந்திரத்துடம் இயங்கும் சூழல் உள்ளது. வெகுஜென சினிமாக்கள் மோடி, இந்துத்துவ புகழ்பாடிக்கொண்டிருக்கும் நிலையில் நெட்ஃபிளிக்ஸில் வெளியான ‘லைலா’ என்ற தொடர், இந்துத்துவத்தை விமர்சித்திருந்தது.

இந்நிலையில், சங்க பரிவாரங்கள் இவற்றுக்கு முடிவு கட்ட, தொடர்புடைய நிறுவனங்களை மிரட்டி பணிய வைக்கக் கிளம்பியுள்ளன. ஆர்.எஸ். எஸ். பிரதிநிதிகள், நெட்ஃபிளிக், அமேசான் நிர்வாகிகளுடன் இது குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக எகனாமிக்ஸ் டைம்ஸ் தெரிவிக்கிறது.

டெல்லி, மும்பையில் உள்ள இந்த இணையதளங்களின் அலுவலங்களில் இதுவரை ஆறு சந்திப்புகள் நடந்துள்ளது. “இந்தியாவுக்கு எதிரான, இந்துவுக்கு எதிரான உள்ளடக்கம் உள்ள தொடர்களை கட்டுப்படுத்த வேண்டும். உண்மையான இந்திய கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் அவர்கள் காட்ட வேண்டும்” என்கிறார் ஒரு ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி.

முன்னதாக, தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இணைய தொடர்களை முறைபடுத்துவது தொடர்பாக இந்த நிறுவனங்களின் பங்குதாரர்களிடம் திரைப்பட சான்றிதழ் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் சந்திப்பு நடத்தியுள்ளதாக கூறியிருந்தார்.

காஷ்மீர் குறித்தும் இந்து குறியீடுகள், இந்திய இராணுவம் குறித்தும் விமர்சனத்துக்குரிய உள்ளடக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். கேட்கிறது. ‘லைலா’ தொடருக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், நெட்ஃபிளிக்ஸ் தளம் புது டெல்லியில் ஆர்.எஸ்.எஸ். பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

ட்விட்டர் நிர்வாகம் இந்துத்துவ ட்ரோல்கள் சிலரின் கணக்குகளை முடக்கியபோது, அதுகுறித்து பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் நாடாளுமன்ற கமிட்டியிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் ட்விட்டர் நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ட்விட்டர் நிர்வாகம் முடக்கிய கணக்குகளை செயல்படுத்தியது.

படிக்க:
கீழடி அகழாய்வு சான்றுகளை பாதுகாப்போம் ! பரப்புவோம் !
அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணை தள்ளி வைப்பு !

இந்த சம்பவத்தைக் கூறி, ஆட்சி அதிகாரம் தங்களிடம் இருப்பதாக மிரட்டும் தொனியில் பேசும் ஆர்.எஸ்.எஸ். காரர் ஒருவர், “இந்த நிறுவனங்கள் கதையை தேர்வு செய்யும்போது இந்திய உணர்வுகளின் அடிப்படையில் செயல்பட வேண்டும். இந்தியா குறித்து பேசும் கதைகளில் இந்தியர்களை அதிகம் ஈடுபடுத்த வேண்டும் எனவும் நாங்கள் கேட்டிருக்கிறோம்” என்கிறார்.

இராஜஸ்தானில் நடந்த ஒரு ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் அதன் தலைவர் மோகன் பகவத்திடம் இதுகுறித்து எடுத்துரைக்கப்பட்டதாகவும் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி தெரிவித்துள்ளார். பல தொடர்களில் கும்பல் கொலைகள் குறித்து சித்தரிக்கப்பட்டுள்ள விதம் குறித்து அவர் கவலை கொண்டதாகவும், கும்பல் கொலைகளை இந்து தேசியவாதிகளுடன் தொடர்புபடுத்தி எடுக்கப்படுவதாகவும் இது சிறுபான்மையினர் என்ற பெயரில் சில கெட்ட சக்திகளுக்கு அவை உதவுவதாகும் என்று மோகன் பகவத் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மோகன் பகவத்

“ஏற்கனவே பலமுறை இணைய தொடர்கள் குறித்து வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், ஒவ்வொரு வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டதே நடந்தது. இணைய தொடர்களை முறைப்படுத்துவது கடினம். இதில், சுய தணிக்கை மட்டுமே சாத்தியமானது” என்கிறார் எம்.எக்ஸ் பிளேயர் என்ற இணையதளத்தின் முதன்மை செயல் அதிகாரி கரண் பேடி.

ஆனால், ஆர்.எஸ்.எஸ். விடுவதாக இல்லை. தனித்தனியாக திரைப்படக் கலைஞர்கள், திரைக்கதை எழுத்தாளர்களிடம் பேசி இந்தியாவின் ஒளிமயமான பக்கம் குறித்து எழுதுங்கள் எனக் கேட்கத் தொடங்கியிருக்கிறார்களாம். பாரதிய சித்ர சாதனா, சன்ஸ்கார் பாரதி என்ற ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்புகள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அமேசானில் ஒளிபரப்பான ‘ஃபோர் சாட்ஸ்’ தொடரில் பெண்கள் குறித்த சித்தரிப்பு, நெட்ஃபிளிக்ஸின் தயாரிப்புகளான ‘கவுல்’, ‘சேக்ரட் கேம்ஸ்’, ‘லைலா’… ஜீ தளத்தில் இராணுவம் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டதாக இரண்டு தொடர்கள் குறித்து சங்க பரிவாரங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. அண்மையில் வெளியான நெட்ஃபிளிக்ஸ் தொடரான ‘ஃபேமிலி மேன்’ இந்தியாவுக்கு எதிரான உள்ளடக்கத்தைக் கொண்டிருந்ததாக ஆர்.எஸ்.எஸ். ஏடான பாஞ்சசன்யா எதிர்ப்பு கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது.

நெட்ஃபிளிக்ஸ், அமேசான் போன்ற தளங்கள் அரசாங்கத்தின் சட்ட திட்டங்கள், மிரட்டல் உருட்டல்களுக்கு உட்பட்டவை. ஹசன் பங்கஜ் என்ற நகைச்சுவை கலைஞர் துபாய் அரசை விமர்சித்தார் என்பதற்காக அவருடைய நிகழ்ச்சியை அந்த அரசாங்கம் கேட்டுக்கொண்டபடி நீக்கியது நெட்ஃபிளிக்ஸ். இது இந்தியாவிலும் நடக்கலாம்.

அரசாங்கமும் நிறுவனங்களும் கூட்டாளிகள்தான் என்றபோதும், கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எதேச்சதிகார அரசை விமர்சிக்கும் கலைஞர்கள் பாராட்டுக்குரியவர்கள்.


– அனிதா
நன்றி: எகனாமிக்ஸ் டைம்ஸ்.