அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 40

பிராங்க்ளினுக்குப் பிறகு அமெரிக்காவில் அரசியல் பொருளாதாரம்

அ. அனிக்கின்
அ.அனிக்கின்

சுதந்திரப் போருக்கு (1775-1783) முன்பு அமெரிக்க பொருளாதாரச் சிந்தனை குடியேற்றங்களுக்கும் தலைமை நாட்டுக்கும் இடையே உள்ள உறவுகளைப் பற்றிய முக்கியமான, சூடான பிரச்சினைக்கு அப்பால் சிறிதளவே முன்னேறியிருந்தது. இது பிராங்க்ளினுக்கும் கூட பெருமளவுக்குப் பொருந்தக் கூடியதே.

சுதந்திரமான அரசு ஏற்பட்டதன் விளைவாக சமூகச் சிந்தனையின் வளர்ச்சிக்குப் புதிய வானங்கள் திறந்து விடப்பட்டன. எனினும் 18-ம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியிலும் 19-ம் நூற்றாண்டின் முற்பாதியிலும் அமெரிக்க அரசியல் பொருளாதாரம் குறுகிய பிராந்தியத் தன்மையைக் கொண்டிருந்தது, இங்கிலாந்திலிருந்தும் பிரான்சிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்ட கருத்துக்களையே பெருமளவுக்கு ஆதாரமாகக் கொண்டிருந்தது. ஆனால் மேற்கு ஐரோப்பாவின் அதிகமான வளர்ச்சியடைந்த நாடுகளோடு ஒப்பிடும் பொழுது ஒரு நூற்றாண்டுக் காலத்துக்குப் பிறகு தான் அமெரிக்காவில் முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் “முழு வேகத்தோடு” வளர்ச்சியடைந்தன. எனவே ஸ்மித், ரிக்கார்டோ ஆகியோரின் மரபாகிய மூலச்சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு அங்கே போதுமான அடிப்படை இருக்கவில்லை.

இங்கிலாந்தின் மூலச்சிறப்புடைய மரபினரிடம் பாரபட்சமற்ற வர்க்க ஆராய்ச்சியும் கண்டிப்பான சூக்குமமான சிந்தனையும் குறியடையாளமாக இருந்தன. அவர்களுடைய தத்துவம், செயல்முறை ஆகியவற்றின் மீது விமர்சன ரீதியான அணுகுமுறை அமெரிக்காவில் பின்பற்றப்பட்டது. மூலச் சிறப்புடைய மரபினர் முன்வைத்த பொருளாதாரக் கொள்கையில் சுதந்திரமான வர்த்தகமும் மிகக் குறைவான அளவுக்கு அரசின் தலையீடும் முக்கியமான கோட்பாடுகளாக இருந்தன. அட்லாண்டிக் மாகடலுக்கு அப்பால் இருந்த அரசைச் சேர்ந்த முதலாளிகளில் பெரும்பான்மையோருக்கு இவை அங்கீகரிக்க முடியாதவையாகவும் இருந்தன. அங்கே உள் நாட்டுத் தொழில் துறையைப் பாதுகாக்க அந்நிய இறக்குமதிகளுக்கு அதிகமான சுங்க வரி விதிக்க வேண்டும் என்று வலியுறுத்திய காப்புவாதிகளின் குரலே மேலோங்கியது. அரசியல் பொருளாதாரத்தின் இந்த செய்முறைப் பிரச்சினையே பொருளாதார எழுத்துக்களின் மையமாக இருந்தது. அமெரிக்கப் பொருளியலாளரான டர்னர் கூறியிருப்பது போல, ”1880-ம் வருடத்துக்கு முன்பு அமெரிக்கப் பொருளாதாரச் சிந்தனை என்பது சுங்கப் பிரச்சினையைப் பற்றிய ஆராய்ச்சியின் துணைப் பொருள் என்பதற்கு மேல் சிறிதும் அதிகமாக நினைக்க முடியாதவாறு இருந்தது”.(1) 

American Revolution 1775 - 1783உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தின் முன்னோடியும் பொருளாதாரத்திலும் அரசியலிலும் மிதவாதியும் ஓரளவுக்கு பிஸியோக்கிராட்டுமான பிராங்க்ளினால் கூட அமெரிக்காவில் செல்வாக்குள்ள பொருளாதார மரபை நிறுவ முடியவில்லை. 19-ம் நூற்றாண்டின் முதற் பாதியில் அலெக்ஸாந்தர் ஹாமில்டன் அமெரிக்கப் பொருளாதாரச் சிந்தனையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தினார். இவர் பழமைவாதக் கருத்துக்களைக் கொண்ட ராஜியவாதி; அரசாங்கம் பொருளாதாரத்தில் கணிசமான அளவுக்குத் தலையிட வேண் டும் என்ற கருத்தைக் கொண்டவர்; இவர் அமெரிக்காவில் காப்புவாத மரபை நிறுவினார்.

ஹாமில்டனைப் பின்பற்றியவர்களில் ஒருவரான டேனியல் ரேய்மான்ட் அமெரிக்காவில் அரசியல் பொருளாதாரத்தைப் பற்றி முறையாக எழுதப்பட்ட முதல் புத்தகத்தின் ஆசிரியர். அரசியல் பொருளாதாரத்தைப் பற்றிய சிந்தனைகள் என்ற தலைப்புக் கொண்ட அந்தப் புத்தகம் 1820-ம் வருடத்தில் வெளியிடப்பட்டது. ஸ்மித்துக்கும் மூலச்சிறப்புடைய மரபினர் அனைவருக்கும் எதிராகவும் ரேய்மான்ட் தன்னுடைய “அமெரிக்கப் பொருளாதார முறையை” நிறுவுவதற்கு முயற்சி செய்தார் (அவர் தீவிரமான தேசியவாதி). அவர் உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தையும் லாபத்தைப் பற்றி ஸ்மித்தின் கருத்துக்களையும் (லாபம் என்பது முதலாளிகளுக்குக் கிடைக்கும் கூலி என்று அவர் கருதினார்) பொருளாதார மிதவாதத்தையும் தாக்கி எழுதினார்.

கடைசியாக, ஹென்ரி சார்ல்ஸ் கேரி வருகிறார். இவர் கொச்சையான அரசியல் பொருளாதாரத்தின் பிரதிநிதிகளில் ஒருவர். அது மூலச் சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்திலிருந்து வேறுபட்டது. முதலாளி வர்க்கத்தின் நலன்களை ஆதரிப்பதையும் முதலாளித்துவம் நீதி நிறைந்தது, வளம் பெறக்கூடியது என்று காட்டுவதையும் உணர்ச்சி பூர்வமான நோக்கமாகக் கொண்டிருந்தது. இதைச் செய்வதற்கு இவர் ஓரளவுக்குத் தகுதியையும் பெற்றிருந்தார்.

படிக்க:
புற்றுநோயை கண்டறிவது எப்படி ? | மருத்துவர் BRJ கண்ணன்
♦ பொருளியலாளர் பிராங்க்ளின் | பொருளாதாரம் கற்போம் – 38

பிராங்க்ளினைப் போலவே கேரியின் கருத்துக்களும் அடிப்படையில் வட அமெரிக்காவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சியின் தனிவகையான கூறுகளோடு நெருக்கமாக இணைந்திருந்தன. எனினும், அமெரிக்காவில் பொருளாதார விஞ்ஞானத்தை நிறுவிய பிராங்க்ளினுக்கு ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு எழுதியவர் கேரி. இந்த ஒரு நூற்றாண்டுக் காலத்தில் நாட்டின் தோற்றமும் அதன் சமூக நிலைமைகளும் மாறியிருந்தன. தந்தை வழி விவசாயிகளையும் கைவினைஞர்களையும் கொண்டிருந்த நாடு வளர்ச்சியடைந்த முதலாளித்துவ உறவுகளைக் கொண்ட நாடாக மாறிவிட்டது. கேரியின் நீண்ட வாழ்க்கையின் கடைசிக் காலத்தில் மொத்த தொழிலுற்பத்தியின் அளவில் அமெரிக்கா இங்கிலாந்தை நெருங்கிக் கொண்டிருந்தது.

அமெரிக்காவில் முதலாளித்துவப் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டிருந்த அபரிமிதமான வாய்ப்புக்களும் உயர்ந்த வளர்ச்சி விகிதங்களும் கேரியின் கருத்துக்களிலடங்கியிருந்த எதிர்கால நம்பிக்கைக்குக் காரணமாகும். முதலாளித்துவ வளர்ச்சிக்கு எல்லையற்ற வாய்ப்புக்கள் ஏற்பட்டிருப்பதைப் பற்றி அவர் முழு உற்சாகமும் நம்பிக்கையும் கொண்டிருந் தார். வட அமெரிக்காவில் முதலாளித்துவ வளர்ச்சியின் விசேஷமான நிலைமைகள், முதலாளித்துவ சமூகத்திலிருக்கும் குறைகளும் முரண்பாடுகளும் மறைந்துவிடக் கூடியவை, விசேஷமான கவனத்துக்கு உரியவை அல்ல என்று கேரி நினைப்பதற்குக் காரணமாக இருந்தன.

ஐரோப்பாக் கண்டத்தில் முதலாளித்துவ வளர்ச்சியில் எதிர்மறையான அம்சங்கள் (தீவிரமான வர்க்கப் போராட்டமும் பொருளாதார நெருக்கடிகளும்) தவிர்க்க முடியாதபடி ஏற்பட்டிருந்தன; ஆனால் அமெரிக்காவில் இவற்றைத் தவிர்த்துவிட முடியும் என்று அமெரிக்காவின் தனித்துவம் என்று சொல்லப்படும் தத்துவம் கருதியது. இத்தத்துவத்தோடு கேரியின் பெயர் இணைந்திருக்கிறது. இந்தத் தத்துவம் இன்றளவும் கூட முழுமையாக மறைந்து விடவில்லை.

கேரி ”முக்கியமான அமெரிக்க உறவுகளை சூக்குமமான வடிவத்தில் எடுத்துரைத்தார்; அதிலும் பழைய உலகத்துக்கு எதிரான நிலையில் எடுத்துரைத்தார்…”(2)   என்று மார்க்ஸ் அவரை ஓரளவுக்குப் பாராட்டுகிறார்.

Henry charles carey Political Economy
ஹென்றி சார்லஸ் கேரி.

இங்கிலாந்திலிருந்த சமூக உறவுகள் இயல்பு மீறியவை; ”இலட்சிய வடிவத்திலுள்ள” முதலாளித்துவத்துக்கு (அதாவது அதன் அமெரிக்கப் பதிப்புக்கு) அந்நியமான கூறுகள் அங்கே அவற்றின் வளர்ச்சியைக் குறுக்கிவிட்டன என்று கூறி அமெரிக்க சமூக உறவுகளை இங்கிலாந்தின் சமூக உறவுகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது அவருடைய ஆராய்ச்சியின் பிரதான முறையாக இருந்தது. இங்கிலாந்தில் இன்னும் நிலப்பிரபுத்துவத்தின் மிச்சங்கள் இருந்தன; அவை உண்மையிலேயே பலமானவையாக, பெருஞ்சுமையாக இருந்தன. கேரி இவற்றைக் குறிப்பிட்டிருந்தால் அவர் சொல்வது ஓரளவுக்குச் சரியாக இருந்திருக்கும். ஆனால் அவர் வரிகளையும் தேசியக் கடனையும் முதலாளித்துவ வளர்ச்சியில் உள்ளீடான வேறு சில நிகழ்வுகளையுமே “இயல்பான நிலைமைகளைத் திரிப்பதாகக்” குறிப்பிட்டார்.

முதலாளிகளின் வர்க்க நலன்களும் பாட்டாளிகளின் வர்க்க நலன்களும் எதிரானவை என்பதை மறுத்து முதலாளித்துவ சமூகம் வர்க்கங்களின் உண்மையான சங்கமத்தை ஏற்படுத்துகிறது என்னும் ”நலன்களின் ஒத்திசைவு” என்ற தத்துவத்தின் மூலமே அவர் முக்கியமானவராகக் கருதப்படுகிறார். ஆனால் மிக ஆரம்பத்திலேயே, 19-ம் நூற்றாண்டிலேயே இந்தத் தத்துவம் தவறானதென்று உண்மையான சம்பவங்கள் நிரூபித்தன. 19-ம் நூற்றாண்டின் எண்பதுக்களில் அமெரிக்காவில் ஏற்பட்ட வலிமை மிக்க தொழிலாளர் வேலை நிறுத்தங்கள் அங்கே நவீன தொழிலாளி வர்க்க இயக்கத்தின் தோற்றுவாய்களில் ஒன்றாகும்.

ரேய்மான்ட், ஸ்மித்தைத் தாக்கியதைக் காட்டிலும் அதிகமான தீவிரத்தோடு கேரி ரிக்கார்டோவைத் தாக்கினார். அவர் ரிக்கார்டோவின் தத்துவம் வர்க்கங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்துகின்ற ஒன்று என்றார்; சுதந்திரமான வர்த்தகத்தைப் பற்றிய அவருடைய கருத்துக்களும் அமெரிக்க முதலாளிகளைத் தனிப்படத் தாக்குவதாகும் என்று கூறலாம் என்றார். ஆங்கில முதலாளியும் நேர்மையான மனிதரும் மாபெரும் அறிவாளியுமான ரிக்கார்டோ அவருக்கு ஒரு சோஷலிஸ்டாக, கிளர்ச்சிக்காரராக, அழிவில் நம்பிக்கை கொண்டவராகத் தோன்றினார்.

படிக்க:
சோவியத் யூனியனுக்கு வேலை தேடிச் சென்ற அமெரிக்கர்கள் ! | கலையரசன்
♦ பங்குச் சந்தை 4 : மிசிசிப்பி கம்பெனி – உலகின் முதல் பொது பங்கு நிறுவனம்

19-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் மிக முக்கியமான தோற்றுவாய்களில் கேரியின் எழுத்துக்களும் ஒன்று என்பது மார்க்சின் கருத்து. பொருளாதார விஞ்ஞானத்தில் கடன், வாரம், இன்னும் சில பிரச்சினைகளைப் பற்றி கேரி மிகச் சிறப்பான வகையில் சரிவர ஆராய்ந்திருக்கிறார் என்று மார்க்ஸ் சுட்டிக் காட்டினார். சோவியத் நிபுணரான எல். ஆல்டெர் அமெரிக்காவில் அரசியல் பொருளாதாரத்தின் வளர்ச்சியைப் பற்றிய தமது புத்தகத்தில் பிரான்ஸ், ஜெர்மனி, ருஷ்யா ஆகிய நாடுகளில் பொருளாதாரச் சிந்தனையில் கேரியின் செல்வாக்கின் அளவையும் தன்மையையும் எடுத்துக் கூறியுள்ளார்.(3)  

19-ம் நூற்றாண்டின் இருபதுகளிலும் முப்பதுகளிலும், ஆங்கில மற்றும் பிரெஞ்சு கற்பனாவாத சோஷலிசத்தின் தாக்கத்தின் விளைவாகவும் தொழிலாளி வர்க்க இயக்கம் வளர்ச்சியடைந்ததின் தொடர்பாகவும் அமெரிக்காவில் பொருளாதாரச் சிந்தனையில் முதலாளித்துவ எதிர்ப்புப் போக்குகள் முதன்முறையாகத் தோன்றின. அந்த இளம் முதலாளித்துவ ஜனநாயக அரசில் மக்கள் குடியேறாத நிலங்கள் மிகவும் ஏராளமாக இருந்தபடியால் பழைய உலகமான ஐரோப்பாவைச் சேர்ந்த பல கற்பனாவாதிகளுக்கும் சமூக சீர்திருத்தவாதிகளுக்கும் அது “சொர்க்க பூமியாகத்” தோன்றியது.

ராபர்ட் ஓவன் அமெரிக்காவில் தன்னுடைய கம்யூனைத் தொடங்கினார்; பிரெஞ்சுக் கம்யூனிஸ்டான எட்டியேன் கபே அங்கே பல வருட காலம் பிரச்சாரம், செயல்முறை நடவடிக்கைகள் ஆகியவற்றைச் செய்து வந்தார். அங்கேயிருந்த சில கம்யூன்களில் சார்லஸ் ஃபூரியேயின் திட்டங்களை நிறைவேற்ற முயற்சிகள் செய்யப்பட்டன. இவற்றின் விளைவாகப் பல புத்தகங்கள் வெளிவந்தன; இவற்றின் ஆசிரியர்கள் கற்பனாவாத சோஷலிசத்தின் பல்வேறு போக்குகளின் கருத்து நிலையிலிருந்து பொருளாதாரப் பிரச்சினைகளை ஆராய்ந்தார்கள். ஐரோப்பாவில் இந்தப் போதனைகளை நிறுவியவர்கள் கூறிய முக்கியமான கருத்துக்களுக்கு அப்பால் இவர்கள் புதிதாக எதுவும் சொல்லவில்லை. (அச்சு நூலில் – பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் அத்தியாயங்களைப் படிக்கவும்).

Robert_Owen_Political_economy
இராபர்ட்டு ஓவன்

19-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மேற்குத்திசையிலுள்ள புதிய நிலங்களை நோக்கிப் பெருந்திரளான மக்கள் புறப்பட்டார்கள். அது ஒரு இயக்கமாக மாறியது. அது அமெரிக்காவின் சமூகச் சிந்தனையில் ஒரு விசேஷமான கற்பனாவாதப் போக்கை ஏற்படுத்தியது. பெரிய அளவு தொழில் துறை, வங்கிகள், வர்த்தகச் சூதாடிகள் இல்லாத, சுதந்திரமான விவசாயிகளையும் கைவினைஞர்களையும் மட்டுமே கொண்ட ஒரு ஆனந்தமான சமூகத்தைக் கற்பனை செய்தார்கள். அங்கே மக்களை ஒடுக்கும் அரசியல் இயந்திரம் இருக்காது. இத்தகைய கற்பனைகள் சமூக வளர்ச்சியின் யதார்த்தமான போக்குகளுக்கு முற்றிலும் விரோதமான வகையில் இருந்தன; எனவே அவை தோல்வியடைந்தது இயற்கையே. எனினும் அமெரிக்காவில் விவசாயக் கைத்தொழிற் சமூகங்களைப் பற்றிய கற்பனைகள் மிக அதிகமான வரவேற்பைப் பெற்றன.

19-ம் நூற்றாண்டின் ஐம்பதுக்களில் அமெரிக்காவில் முதல் மார்க்சிய ஸ்தாபனங்கள் தோன்றின. மார்க்ஸ், எங்கெல்சின் நண்பர்களும் அவருடைய இலட்சியங்களை ஏற்றுக் கொண்ட தோழர்களும் அவற்றுக்குத் தலைமையேற்றார்கள். அவர்கள் 1848-49 -ம் வருடப் புரட்சிக்குப் பிறகு ஜெர்மனியிலிருந்து தப்பி வந்தவர்கள். அமெரிக்காவில் முதன் முதலாக விஞ்ஞான சோஷலிசத்தைப் பரப்பியவர்களில் முன்னணியிலிருப்பவர்களில் ஒருவர் பிரெடெரிக் ஸோர்கே. இவர்களும் இந்த ஸ்தாபனங்களும் அமெரிக்காவில் மார்க்சிய பொருளாதார போதனையைப் பரப்பத் தொடங்கினர்.

எனினும் பல்கலைக்கழகங்களிலும் பத்திரிகைகளிலும் கல்வித் துறையிலும் அரசியல் துறையிலும் முதலாளித்துவ சித்தாந்தம் ஆதிக்கம் வகித்த காலத்தில் முதலாளித்துவ அமைப்பைக் குறை கூறியவர்களுடைய பலமும் வாய்ப்புக்களும் மிகவும் குறைவாகவே இருந்திருக்கும். 19-ம் நூற்றாண்டின் பிற்பாதியிலும் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் அமெரிக்காவில் முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் செல்வாக்கு மிக்க மரபுகள் தோன்றின; இவை அமெரிக்காவில் மட்டுமல்லாமல் ஐரோப்பாவுக்கும் உலகத்தின் மற்ற பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

 (1) Quoted from J. Bell, A History of Economic Thought, N.-Y., 1953, p. 484.

(2)  K. Marx, Fondements de la critique de l’économie politique, Vol. 2, Paris, 1968, pp. 549-50.

(3)  எல். ஆல்டெர், அமெரிக்காவில் முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம், மாஸ்கோ, 1971, பக்கங்கள் 108-126 பார்க்கவும் (ருஷ்ய மொழியில்).

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க