லகில் எங்கும் இருப்பதைவிட இந்தியாவில்தான் அதிகமான ஆலயங்கள் இருக்கின்றன. இந்தியா முழுமைக்கும் பார்த்தால் தமிழ்நாட்டில் தான் அதிகமான பெரிய ஆலயங்கள் (கோவில்கள்) இருக்கின்றன.

இந்தப்படி அதிகமான பெரிய ஆலயங்கள் கட்டப்பட்டிருப்பவை எல்லாம் பெரியதும் அக்கால அரசாங்க அரசர்களாலேயே கட்டப்பட்டவையாகும்.

இதற்குக் காரணம் என்னவென்றால், அக்காலத்தில் இந்த ஆலயங்கள் மூலம் அரசாங்கத்திற்குப் பணம் (நிதி) வருவாய்க்கு வழி செய்து கொள்ளும் ஏற்பாடு இருந்திருக்கிறது என்பதுதான்.

எதுபோலெவென்றால், சுமார் 40, 50 ஆண்டுகளுக்குமுன் வரையில் அரசாங்க நிதி (வரி) வசூலுக்கு அரசாங்கமே மதுக் கடைகளை ஏற்பாடு செய்து, அதை வியாபாரம் போல் செய்து பணம் சம்பாதித்து வரி நிதியோடு சேர்த்து வந்தது போலவேயாகும். அதனாலேயே கோவில் கட்டுவது என்பதை அரசாங்கத்திற்கே உரிமையாக வைத்துக் கொள்ளப்பட்டிருந்ததுடன், அரசாங்க அனுமதியில்லாமல் யாரும் கோவில் கட்டக்கூடாது என்கிற நிபந்தனையும் இருந்து வந்திருக்கிறது. இதற்கு ஆதாரம் நம் தேசத்தில் சுதேச சமஸ்தானங்கள் இருக்கும் வரை அந்த அரசாங்க அனுமதியில்லாமல் யாரும் எந்த கோவிலையும் கட்டக்கூடாது” என்ற நிபந்தனை இருந்து வந்திருப்பதேயாகும்.

சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் சாணக்கியர் என்ற ஒரு பார்ப்பனர் பொருளாதார நிபுணராக இருந்தார். அவர் உண்டாக்கிய அர்த்த சாஸ்திரம் என்னும் நீதி நூலில் இதைப்பற்றி விளக்கியுள்ளார். இந்த சாணக்கிய அர்த்த சாஸ்திரம் என்னும் நூலானது மனுதர்ம சாஸ்திரம், யாக்ஞவல்கியர் ஸ்மிருதி ஆகிய நூல்களுக்கும் முந்தியதாகும் என்பது ஆராய்ச்சியாளரின் முடிவு. இதிலிருந்து மனு. யாக்ஞவல்கியர் முதலிய நீதி நூல்களின் ஆயுள் சுமார் 2000 ஆண்டுகளுக்கு உட்பட்டதென்றே தெரிகிறது.

இந்த சாணக்கிய அர்த்த சாஸ்திரத்தில் மத சம்பந்தமான ஸ்தாபனங்களை மேற்பார்வை செய்யும் அரசாங்க அதிகாரி நகரங்களிலும் கிராமங்களிலும் உள்ள ஆலயங்களுக்குச் சொந்தமான சொத்துக்களில் வரும்படிகளையும் கோவில்களுக்கு பக்தர்களிடமிருந்து பணமாக வசூலித்து, அந்தப்படி வசூலிக்கப்படும் பணத்தையும் அரசாங்க வருவாய் நிதியுடன் சேர்க்க வேண்டும் என்ற விதிகள் இருந்திருக்கின்றன.

அரசாங்கத்திற்குப் புதிய வருவாய்த் திட்டங்களாக மக்களை ஏமாற்றி வசூலிக்கப் பல திட்டங்கள் இருந்தன. (நூலிலிருந்து பக்.4)

படிக்க:
அதென்ன ‘பிராமின்ஸ் ஒன்லி’ ? கக்கூஸ் கழுவவும் பிரமணாள் வருவாளா ?
சிதம்பரம் நடராசர் கோயிலை மீண்டும் கைப்பற்ற தீட்சிதர்கள் முயற்சி !

… “பார்ப்பான் தன்னலத்தையும் ஆதாயத்தையும் கருதி கோவில் களில் ஏமாற்றிப் பணம் பறிக்க எவ்விதத் தந்திரத்தையும் உபயோகிப்பான்” என்று பிரஞ்சு பாதிரியாரான கற்றறிந்த ஆபி டூபாய்’ ஒரு நூற்றாண்டுக்கு முன் எழுதியிருக்கிறார். மேலும், சாணக்கியர் கூறுவதாவது:

“அரசனது தோட்டத்தில் ஏதாவது ஒரு மரம் பால் வடித்தாலாவது அல்லது அகலமாகப் பூக்கவோ, காய்க்கவோ செய்திருந்தாலாவது அதில் கடவுள் தோன்றியிருக்கிறார் என்று பொது ஜனங்களிடம் காட்டி, பிரசித்தப்படுத்த வேண்டும்.”

“அல்லது ஒரு கிணற்றில் அநேக தலைகளையுடைய பாம்பு ஒன்று இருப்பதாகச் சொல்லி, அதைப் பார்க்க வருபவர்களிடமிருந்து ஒற்றர்கள் பணம் வசூலிக்கலாம்.”

“ஒரு விக்கிரகத்தில் துவாரமிட்டோ அல்லது கோவிலின் இருட்டு மூலையிலோ அல்லது ஏதாவது பொந்திலோ பசியால் வாடிக் கிடக்கும் பாம்பு ஒன்றை வைத்து ஜனங்களைப் பார்க்கச் சொல்லி பணம் வசூலிக்கலாம்.”

“இம்மாதிரி தந்திரங்களை எளிதில் நம்பாத ஜனங்களுக்கு மயக்க மருந்து கலந்த நீரைத் தீர்த்தமென்றும், பிரசாதமென்றும் சொல்லி, குடிக்கும்படிச் செய்து அவர்கள் குடித்து மயங்கியவுடன் அதற்குக் கடவுள் கோபம் என்றும் சொல்ல வேண்டியது. அல்லது தாழ்ந்த ஜாதியானொருவனைப் பாம்பு கடிக்கும்படிச் செய்து, இம்மாதிரி துர்சகுனம் நேரிடாது தடுக்கப் போவதாகப் பாசாங்கு செய்து ஒற்றர்கள் பணம் வசூலிக்கலாம்.”

அத்திவரதரை தரிசிக்க குவிந்த மக்கள் கூட்டம்.

“தெய்வங்களுக்குச் சமர்ப்பிக்கப்படும் காணிக்கைகள் அரசனது பொக்கிஷத்தைச் சேர வேண்டும். அரசனது செலவுக்காக அரசன் வாழும் பொருட்டு பணம் வசூலிக்க ஒரே இரவில் தேவதைகளையும், பீடங்களையும் ஸ்தாபித்து திருவிழாக்கள் நடத்த வேண்டும். காணிக்கைகளைப் பெறுவதற்காக அடிக்கடி கடவுள்கள் தோன்றும்படிச் செய்ய வேண்டும். சாதாரணமாக மிக வெளிப்படையான தந்திரங்கள்தான் அதிகமாகப்பலனை அளிக்கின்றது. கடவுள் தம்மூலம் பேசுவதாகப் பாசாங்கு செய்து பணம் திரட்டும் வழி முன் காலத்தில்தான் மற்ற நாட்டுப் புரோகிதர்களாலும் கையாளப்பட்டு வந்தது. (நூலிலிருந்து பக்.5)

… கோயிலைப் பற்றி என்னுடைய கண்ணியமான அபிப்பிராயமெல்லாம் கோயில்கள் கண்டிப்பான பாதைக்கும், ஒழுக்கத்திற்கும் ஏற்பட்டது அல்லவென்றும், மக்களை மூடர்களாக அடிமைப்படுத்தவும், உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்கின்ற ஜாதி வித்தியாசத்தை நிலை நிறுத்தவும், ஒரு கூட்டத்தார் பாடுபடாமல் இருந்து கொண்டு சோம்பேறித்தனமாய் வயிறு வளர்க்க வேண்டி, பொதுஜனங்கள் பாடுபட்டு சம்பாதித்தப் பணத்தைக் கொள்ளை அடிக்கவும் வசதி செய்து கொள்வதற்காகவே ஏற்பட்டதாகும்.

முன் காலத்தில் இருந்த அரசர்கள் – மூடர்களும் அயோக்கியர்களுமாயிருந்ததால் இம்மாதிரி கோயில் சூழ்ச்சிக்கு அவர்களும் அனுகூலமாயிருந்து வந்திருக்கின்றார்கள். சில அரசர்களுக்கு இம்மாதிரியான கோயில் மூலமாகவே ஆட்சியும் அனுகூலமும் ஏற்பட்டிருக்கின்றன. ஆகையால் கோயில்கள் என்பது சோம்பேறிக் கூட்டமும் அரசர்களும் சேர்ந்து தங்கள் சுயநலத்திற்காக பாமர மக்களை ஏமாற்றுவதற்குச் செய்த சூழ்ச்சியேயாகும். (நூலிலிருந்து பக்.16)

நூல் : கோவில்கள் ! இங்கு கொள்ளையடிக்கப்படும்
ஆசிரியர் : தந்தை பெரியார்

வெளியீடு : சுயமரியாதை பதிப்பகம்,
அம்மன் காம்ப்ளக்ஸ் முதல் தளம், யாழ் தையலகம் எதிரில், வ.உ.சி. வீதி, உடுமலைப்பேட்டை – 642 126.
தொலைபேசி எண் : 97883 24474

பக்கங்கள்: 16
விலை: ரூ 5.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க