உண்மை மனிதனின் கதை | நான்காம் பாகம் | அத்தியாயம் – 04

கூர்ஸ்க் பிரதேசப் போர் தீவிரமடைந்தது. விறல்மிக்க டாங்கிப் படைகளின் சுருக்கமான தாக்குதலால் கூர்ஸ்கின் தெற்கிலும் வடக்கிலும் சோவியத் அரண் அமைப்புக்களைத் தகர்த்து, இடுக்கிப்பிடியை இறுக்கி, சோவியத் சேனையின் கூர்ஸ்க் வியூகங்கள் அனைத்தையும் சுற்றி வளைத்து அங்கே “ஜெர்மானியர் ஸ்தாலின் கிராத்துக்கு” ஏற்பாடு செய்வது ஜெர்மானியர் முதலில் போட்ட திட்டம். ஆனால் சோவியத் தற்காப்பின் நிலையுறுதி காரணமாக இந்தத் திட்டம் எடுத்த எடுப்பிலேயே சிடுக்காவிட்டது. தற்காப்பு அரண் அமைப்புக்களைப் பிளந்து ஊடுருவது தங்களுக்கு இயலாது என்பதும், இது ஒரு கால் இயன்றாலுமே கூட, இதில் ஏற்படும் இழப்புக்கள் மிக மிகப் பேரழிவாகவே இருக்கும் ஆதலால் இடுக்கிப் பிடியை இயக்குவதற்குப் போதிய படைபலம் எஞ்சியிராது என்பதையும் ஜெர்மானியச் சேனைத் தலைவர்கள் ஆரம்ப நாட்களிலேயே தெளிவாக உணர்ந்தார்கள்.

ஆனால் தாக்குதலை நிறுத்துவதற்குக் காலம் கடந்து விட்டது. ஹிட்லரின் எத்தனையோ நம்பிக்கைகள் போர்த் தந்திர வகைப்பட்டவை, செயல் தந்திர வகைப்பட்டவை, அரசியல் வகைப்பட்டவை ஆகியன – இந்த நடவடிக்கையுடன் இணைந்திருந்தன. வெண்பனிச் சரிவு தொடங்கிவிட்டது. அது வர வர அளவில் பெரிதாகி, வழியில் எதிர்ப்பட்டவற்றை எல்லாம் தன்னோடு சுருட்டித் தனக்குள் இழுத்துக் கொண்டு மலை அடிவாரத்தை நோக்கிப் பாய்ந்தது. அதை இடம் பெயரச் செய்வதற்காக இப்போது அதை நிறுத்தும் ஆற்றல் இல்லை. ஒவ்வொரு கிலோ மீட்டர் முன்னேறுவதற்குள் ஜெர்மானியர்கள் அனேகமாக முழு முழு டிவிஷன்களையும் படைப்பிரிவுகளையும், நூற்றுக்கணக்கில் டாங்கிகளையும் படைப் பிரிவுகளையும் ஆயிரக்கணக்கில் லாரிகளையும் மோட்டார்களையும் இழக்க நேர்ந்தது. தாக்கி முன்னேறிய சேனைகள் இடைவிடாத இரத்தப் பெருக்கின் விளைவாக வலுவிழந்தன. ஜெர்மன் படைத் தலைமை அலுவலுகம் இதைக் கணக்கில் எடுத்துக் கொண்டது. எனினும் நிகழ்ச்சிகளைத் தடுத்து நிறுத்தும் வாய்ப்பு இப்போது அதற்கு இல்லை. மூண்டெரியும் போர் நெருப்பில் மேலும் மேலும் புதிய சேமிப்புப் படைகளை ஆகுதி செய்வதைத் தவிர அதற்கு வேறு வழியில்லாது போயிற்று.

சோவியத் சேனைத் தலைவர்கள் இங்கே தற்காப்பை மேற்கொண்டிருந்த படையணிகளின் பலத்தாலேயே ஜெர்மன் தாக்குதல்களை எதிர்த்து விலக்கினார்கள். பாசிஸ்டுகளின் சீற்றம் மேலும் மேலும் மிகுந்து கொண்டு போவதைக் கண்டு, அவர்கள் தங்கள் சேமிப்புப் படைகளைப் பின்புலத்தில் தொலைவில் பாதுகாப்பாக வைத்திருந்தார்கள் – பகைவரது தாக்குதலின் சடவேகம் தீர்ந்து போகும் நேரத்தை எதிர்பார்த்து. மெரேஸ்யெவின் ரெஜிமென்ட் தற்காப்புக்காக அன்றி எதிர்த் தாக்குக்காக அணி திரட்டப்பட்டிருந்த சேனைக்கு விமானப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதை அவன் பின்னர் தெரிந்து கொண்டான். எனவே தான் முதல் கட்டத்தில் டாங்கி வீரர்களும் இவர்களுடன் இணைந்த சண்டை விமானிகளும் மாபெரும் போர் பற்றி வெறுமே சிந்தனை செய்து கொண்டிருந்தார்கள். பகைவர்களின் படைபலம் அனைத்தையும் போரில் ஈடுபடுத்தி விட்டதும் விமான நிலையத்தில் ஆயத்த நிலை இரண்டு ரத்து செய்யப்பட்டது. விமானிகள் நிலவறைகளில் படுத்து உறங்கவும் இரவில் சீருடைகளைக் களையவும் கூட அனுமதிக்கப்பட்டார்கள்.

ஒரு நாள் காலை வேளை. இழுத்து மூடப்படாத வாயில் திரை வழியே பளிச்சென்ற வெயிலொளி ஊசியிலைகள் பரப்பிய நிலவறைத் தரை மீது விழுந்தது. நிலவறைச் சுவர்களில் அமைந்தப் படுக்கைகளில் நண்பர்கள் இருவரும் இன்னும் நீட்டிப் படுத்திருந்தார்கள். அப்போது மேலே பாதையில் யாருடைய காலடி ஒசையோ கேட்டது, போர்முனையில் மந்திர சக்திவாய்ந்த “தபால்காரன்!” என்ற சொல் ஒலித்தது.

இருவரும் போர்வைகளை உதறிவிட்டுத் துள்ளி எழுந்தார்கள். ஆனால் மேரேஸ்யெவ் பொய்க்கால்களைப் பொருத்திக் கொள்வதற்குள் பெத்ரேவ் தபால்காரனை எட்டிப் பிடித்து இரண்டுக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டு வெற்றிக் கோலத்துடன் திரும்பிவிட்டான். இரண்டும் அலெக்ஸேய்க்கு வந்திருந்தன. தாயாரிடமிருந்தும், ஓல்காவிடமிருந்தும். மெரேஸ்யெவ் அவற்றை நண்பன் கையிலிருந்து வெடுக்கெனப் பிடுங்கிக் கொண்டான். ஆனால் அதற்குள் விமான நிலையத்தில் தண்டவாளத் துண்டுகள் மீது உரக்கச் சேகண்டி அடிக்கப்பட்டது. விமானிகள் விமானங்களுக்கு அழைக்கப்பட்டார்கள்.

மெரேஸ்யெவ் கடிதங்களைச் சட்டைக்குள் மார்பருகே நுழைத்துக் கொண்டு அக்கணமே அவற்றை மறந்துவிட்டு, விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்துக்கு இட்டுச் சென்ற காட்டுப் பாதையில் பெத்ரோவின் பின் ஓடினான். கைத்தடியை ஊன்றிக் கொண்டு சற்றே சாய்ந்தாடியவாறு அவன் கணிசமாக விரைந்தோடினான். அவன் விமானத்தை நெருங்குவதற்குள் எஞ்சின் மீதிருந்த உறை கழற்றப்பட்டிருந்தது, அம்மைத் தழும்பிட்ட வேடிக்கைத் தோற்றமுள்ள வாலிபனான மெக்கானிக் விமானத்தருகே பொறுமையின்றித் தவித்துக் கொண்டிருந்தான்.

எஞ்சின் சீறி முழங்கிற்று. ஸ்குவாட்ரன் கமாண்டர் ஓட்டும் “ஆறாவது” விமானத்தின் மீது மெரேஸ்யெவ் கண்ணோட்டினான். காப்டன் செஸ்லோவ் தம் விமானத்தை காட்டோர் வெளிக்குக் கொண்டு வந்தார். இதோ அவர் அறையிலிருந்த படி கையை உயர்த்தினார். “கவனியுங்கள்!” என்பது அதன் பொருள். எஞ்சின்கள் முழங்கின. அவற்றின் காற்று வேகத்தால் தரையோடு தரையாக அழுத்தப்பட்ட புல் வெளிறடைந்தது. பிர்ச் மரங்களின் பச்சைப் பிடரிகள் விமானங்கள் கிளப்பிய சுழல் காற்றில் விரித்து, கிளைகளுடன் மரங்களிலிருந்து பிய்த்துக் கொண்டு கிளம்பத் தயாரானவைப் போலப் படபடத்தன.

படிக்க:
காஷ்மீர் : இளம் பெல்லட் குண்டு மருத்துவர்கள் !
ஈராக்கை உலுக்கிய மக்கள் போராட்டம் ! படக் கட்டுரை

டாங்கிக்காரர்கள் தாக்குதல் தொடங்கப் போவதாக அலெக்ஸேயை முந்திக் கொண்டு ஓடிய விமானிகளில் ஒருவன் வழியிலேயே அவனிடம் சொன்னான். பீரங்கிப்படைகளால் உடைத்துத் தகர்த்தப்பட்ட பகையரண்களின் ஊடாக டாங்கிப் படைகளுக்கு மேலே வானத்தைப் பகை விமானங்களும் இல்லாதவாறு செய்து அதைக் காவல் காப்பது இப்போது விமானிகளின் பொறுப்பு என்றுத் தெரிந்தது. வானத்தைக் காவல் காப்பதா? எல்லாம் ஒன்றுதான். இம்மாதிரி இறுக்கம் நிறைந்த சண்டையில் இந்தக் காவல் வேலையும் வெறும்பறப்பாக மட்டும் இருக்க முடியாது.

அலெக்ஸேய் கிளர்ச்சியுற்றான். ஆனால் இது சாவு குறித்த அச்சம் அல்ல. மிக மிக வீரமுள்ள, பதற்றமற்ற மனிதர்களுக்குக் கூட இயல்பான, ஆபத்து பற்றிய முன்னுணர்வும் இல்லை இது. அவன் கவலைப்பட்டது வேறு விஷயங்கள் பற்றி. மெஷின்கன்களையும் பீரங்கிகளையும் சுடுகருவிப் பணியாளர்கள் சரிப்பார்த்தார்களோ இல்லையோ; போரில் சோதிக்கப்படாத புதிய தலைக்காப்பில் ஒலிபரப்பி பழுதாகிவிடாமல் இருக்க வேண்டுமே; பெத்ரோவ் பின் தங்கி விடாமல் இருக்க வேண்டும்; விமானச் சண்டை நிகழ்த்த நேரிட்டால் அவன் அதிசாமர்த்தியம் பண்ண முற்படாமல் இருக்க வேண்டும். கைத்தடி எங்கே? வஸீலிய் வஸீலியெவிச்சின் அந்தப் பரிசு கெட்டுப் போய்விட்டதா என்ன? பெத்ரோவுடன் தான் பிரிவு சொல்லிக் கொள்ளவில்லை என்பது மெரேஸ்யெவின் நினைவுக்கு வந்தது. அறையில் இருந்த படியே அவனை நோக்கிக் கையை ஆட்டினான். ஆனால் பெத்ரோவ் அதைக் கவனிக்கவில்லை. அந்தப் பின்னோடியின் முகம் செம் புள்ளிகள் நிறைந்து கனல் வீசியது. கமாண்டரின் உயர்த்தப்பட்ட கையைப் பொறுமையின்றி நோக்கிக் கொண்டிருந்தான் அவன்.

இதோ கை தாழ்த்தப்பட்டது. விமானி அறைகள் மூடப்பட்டன.

மூன்று விமானங்கள் கொண்ட அணி புறப்படும் இடத்தில் சீறிற்று, இயங்கத் தொடங்கிற்று, ஓடிற்று, அதன் பின்னே தொடர்ந்தது இரண்டாவது அணி. மூன்றாவது அணியும் இயங்கத் தொடங்கிற்று. முதல் விமான அணி வானில் கிளம்பிற்று. இதன்பின்னே ஓடிற்று மெரேஸ்யெவின் அணி. தட்டை நிலம் கீழே இடமும் வலமுமாக இசைந்தாடிற்று. முதல் விமான அணியைப் பார்வையிலிருந்து நழுவவிடாமல் அலெக்ஸேய் தன் அணியை அதனுடன் ஒத்தவாறு அமைத்துச் செலுத்தினான், அவனது அணியை ஒட்டினாற் போலப் பறந்தது மூன்றாவது அணி.

முனைமுக முன்னணிக்கு மேலே அவை பறந்தன, பகைவரின் பின்புலத்துக்கு மேலே அரைவட்டமிட்டன, மறுபடி முன் வரிசையைத் தாண்டின. அவற்றை எவரும் சுடவில்லை. தரை தனது கடினமான நிலவுலக விவகாரங்களில் மும்முரமாக முனைந்திருந்த படியால் தனக்கு மேலே பறந்த ஒன்பது சிறு விமானங்களைக் கவனிக்க அதற்கு நேரமில்லை. ஆமாம், டாங்கிப் படைகள் எங்கே? ஆகா, இதோ இருக்கின்றன அவை. தழைமரக் காட்டின் தளதளப்பான பசுமையிலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக டாங்கிகள் வெளிவந்ததை மெரேஸ்யெவ் கண்டான். மேலிருந்து பார்ப்பதற்கு அவை பாங்கற்ற சாம்பல் நிற வண்டுகள் போலத் தென்பட்டன. நொடிப் பொழுதில் அவை மிகப் பலவாகி விட்டன. எனினும் நுரைத்த பசுமையிலிருந்து மேலும் மேலும் டாங்கிகள் வெளிவந்து பாதைகள் வழியே முன் சென்றன, பள்ளங்களைக் கடந்தன. முன் சென்ற டாங்கிகள் மேட்டின் மேல் ஏறின, குண்டுகளால் உழப்பட்ட நிலத்தை அடைந்துவிட்டன. அவற்றின் பீரங்கிக் குழாய்கள் வழியாகச் செந்தீப் பொறிகள் பறக்கலாயின. இந்தப் பிரம்மாண்டமான டாங்கித் தாக்கு, எஞ்சிய ஜெர்மன் காப்பரண் வரிசைகளின் மீது நூற்றுக் கணக்கான டாங்கிகளின் இந்தப் பாய்ச்சல், ஒரு குழந்தையையோ, பதற்றமுள்ள பெண்களையோ கூட, அவர்கள் மேரேஸ்யெவ் போல வானிலிருந்து அதை அவதானித்திருந்தால், அச்ச மூட்டியிராது. இவ்வாறு அவன் எண்ணமிட்டுக் கொண்டிருக்கையில் தலைக்காப்பின் காதுக் குழாய்களை நிறைத்த இறைச்சலுக்கும் கணகணப்பொலிகளுக்கும் ஊடாக வந்தது காப்டன் செஸ்லொவின் குரல். அது கம்மலாகவும் இப்போது சோர்வுள்ளதாகவும் கூட தொனித்தது.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க