பரீஸ் பொலெவோய்

உண்மை மனிதனின் கதை | நான்காம் பாகம் | அத்தியாயம் – 04c

லெக்ஸேய் இப்போது பணியாற்றிய சண்டை விமான ரெஜிமெண்டுக்கு, டாங்கிச் சேனை பகையணிகளைப் பிளந்து முன்னேறத் தொடங்கியது முதல் போர்வேலை இடைவிடாது நெரித்தது. பகையணி பிளக்கப்பட்ட இடத்துக்கு மேலே ஸ்குவாட்ரன்கள் ஒன்று மாற்றி ஒன்றாகப் பறந்த வண்ணமாக இருந்தன. சண்டையிலிருந்து ஒரு ஸ்குவாட்ரன் திரும்பி தரையில் இறங்கியும் இறங்காததுமாக இன்னொரு ஸ்குவாட்ரன் அதற்கு மாற்றாகப் பறந்தது. இறங்கிய விமானங்களுக்குப் பெட்ரோல் நிரப்பப் பெட்ரோல் லாரிகள் விரைந்தன. காலிக் கலங்களில் பெட்ரோல் களகளவென்று தாரையாய்க் கொட்டியது. விமானிகள் தங்கள் அறைகளிலிருந்து இறங்கவில்லை. சாப்பாடு கூட, அலுமினியப் பாத்திரங்களில் அவர்களுக்கு இங்கே கொண்டு வந்து தரப்பட்டது. ஆனால் எவருமே அதைச் சாப்பிடவில்லை. அன்றைய தினம் சாப்பாட்டில் யாருக்குமே புத்தி போகவில்லை. கவளம் தொண்டையில் சிக்கிக் கொண்டது.

காப்டன் செஸ்லோவின் ஸ்குவாட்ரன் மறுபடி தரையில் இறங்கி, விமானங்கள் காட்டு மறைப்புக்கு இட்டுச் செல்லப்பட்டுப் பெட்ரோல் நிறைக்கப்படுகையில் மெரேஸ்யெவ் இன்பமான சோர்வினால் மூட்டுகளில் வலியை உணர்ந்தவனாக, பொறுமையின்றி வானத்தை நோக்குவதும் பெட்ரோல் நிரப்புவர்களிடம் கத்திப் பேசுவதுமாகப் புன்னகையுடன் விமானி அறையில் உட்கார்ந்திருந்தான். மீண்டும் மீண்டும் விமானச் சண்டையில் கலந்து கொள்ளவும் தன்னைச் சோதித்துப் பார்க்கவும் அவனுக்கு அடங்கா ஆசை உண்டாயிற்று. மார்பை ஒட்டினாற்போல் சட்டைக்குள் இருந்த சரசரக்கும் கடித உறையை அடிக்கடி தொட்டுப் பார்த்துக் கொண்டான். ஆனால் இவன் இத்தகைய சூழ்நிலையில் கடிதத்தைப் படிக்க அவன் விரும்பவில்லை.

மாலையில், சேனையின் தாக்கு வட்டாரத்தை மங்கல் நம்பகமாக மறைத்துவிட்ட பின்பே விமானிகள் இருப்பிடம் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். வழக்கமாகச் செல்லும் காட்டுக் குறுக்கு வழியில் போகாமல், சுற்று வழியாக, களைகள் மண்டிய ஊடே நடந்தான் மெரேஸ்யெவ்.

திடீரென எதிர்பாராத வகையில் ஜீப். சக்கரங்கள் கீச்சிட அது பாதையில் நிறுத்தப்பட்டது. திரும்பிப் பாராமலே அது ரெஜிமென்ட் கமாண்டர் என மெரேஸ்யெவ் ஊகித்துக் கொண்டான்.

“விமான நிலையம் முழுவதையும் சுற்றிப் பார்த்து விட்டேன்: எங்கே நம் வீரர்? எங்கே மறைந்து விட்டார் வீரர்? என்று. அவரோ, இங்கே உழாவுகிறார்” என்றார் கமாண்டர்.

ஜீப்பிலிருந்து குதித்து இறங்கினார் கர்னல். அவர் தாமே அருமையாகக் கார் ஓட்டுவார். ஒழிவு நேரத்தில் அதில் நேரத்தை செலவிடுவதை விரும்புவார். அவ்வாறே கடினமான வேலைகளில் தாமே ரெஜிமென்டைத் தலைமை வகித்து நடத்திச் செல்வார். பிறகு மாலை வேளையில் எண்ணெய் வழியும் எஞ்சின்களைச் செப்பம் செய்வதில் மெக்கானிக்குகளுடன் பாடுபடுவார். வழக்கமாக அவர் நீலப் பறப்பு உடை அணிந்து வளையவருவார். அவருடைய மெலிந்த முகத்தில் காணப்பட்ட அதிகார தோரணையுள்ள மடிப்புகளையும், புத்தம், புதிய, பகட்டான விமானித் தொப்பியையும் கொண்டே அவரை மெக்கானிக்குகளிலிருந்து தனிப்பிரித்து அறிய முடியும்.

எங்கோ நினைவாகக் கைத்தடியால் தரையைக் கிளறிக் கொண்டிருந்த மெரேஸ்யெவின் தோளைப் பற்றினார் கமாண்டர்.

“எங்கே, உங்களைப் பார்ப்போம்? சைத்தானுக்கே வெளிச்சம் – சிறப்பானது எதையும் காணோமே! இப்போது நான் ஒப்புக் கொள்ளலாம்: நீங்கள் இங்கு அனுப்பப்பட்டபோது, சேனையில் உங்களைப் பற்றிக் கூறப்பட்டவற்றை நான் நம்பவில்லை. சண்டையில் தாக்குப் பிடிப்பீர்கள் என்று நான் நம்பவில்லை. நீங்களோ, என்னமாய்ச் சண்டை செய்திருக்கிறீர்கள்! இது தான் ருஷ்ய அன்னையின் மகிமை! வாழ்த்துகிறேன். வாழ்த்துகிறேன், வணங்குகிறேன்” என்றார்….

அலெக்ஸேய் நிலவறைக்குள் போகவில்லை. பிர்ச் மரத்தின் அடியில் காளான் மணம் வீசும் ஈரக் கம்பளி போன்ற பாசியில் படுத்து, ஓல்காவின் கடிதத்தை உறையிலிருந்து பதபாகமாக வெளியே எடுத்தான். ஒரு நிழல்படம் கையிலிருந்து நழுவிப் புல்மேல் விழுந்தது. அலெக்ஸேய் அதை எடுத்தான். அவன் நெஞ்சு படபடத்தது.

நிழல் படத்திலிருந்து அவனை நோக்கியது பழக்கமான, ஆனால் அதே சமயம் இனங்காண முடியாத அளவுக்குப் புதிய முகம். இராணுவச் சீருடை அணிந்த ஓல்காவின் சீருடை அது. இராணுவ உடுப்பு, இடுப்புவார். செந்நட்சத்திர விருது ஆகியவையும் அவளுக்கு மிகவும் இசைந்தன. இராணுவ அதிகாரி உடுப்பு அணிந்திருந்த ஒடிசலான அழகிய பையன் போல இருந்தாள் அவள். ஒரே விஷயம் என்னவென்றால் இந்தப் பையனின் முகம் களைத்துச் சோர்ந்து இருந்தது, ஒளி வீசும் பெரிய, வட்ட விழிகள் சிறுவனுக்கு இயல்பு அல்லாத ஊடுறுவும் நோக்குடன் பார்த்துக் கொண்டிருந்தன என்பதே.

அலெக்ஸேய் அந்த விழிகளை நெடு நேரம் நோக்கியவாறு இருந்தான். அவன் உள்ளம் இனந்தெரியாத இனிய சோகத்தால் நிறைந்தது. விருப்பத்துக்கு உரிய பாட்டொலி மாலை வேளையில் தொலையில் இருந்து கேட்கும் போது உணர்வது போன்ற சோகம் இது. பையிலிருந்து பழைய ஓல்காவின் நிழல்படத்தை எடுத்துப் பார்த்தான் அலெக்ஸேய். அதில் அவள் பல்வண்ண உடை அணிந்து விண்மீன்கள் போல் செறிந்திருந்த வெண் சாமந்த மலர்கள் பூத்துக் குலுங்கிய புல் தரை மேல் உட்கார்ந்திருந்தாள். வேடிக்கை என்னவென்றால் இராணுவ உடையும், களைத்த விழிகளுமாக இருந்த, அவன் முன் கண்டிராத பெண் பழக்கமான பெண்ணைவிட அவனது அன்புக்கு உரியவளாக இருந்தாள். நிழல்படத்தின் மறுபக்கம், “மறந்து விடாதே” என்று எழுதப்பட்டிருந்தது.

– கடிதம் சுருக்கமாக, உற்சாகம் பொங்கித் ததும்புவதாக இருந்தது. ஓல்கா இப்பொழுது சேப்பர் பிளாட்டூன் தலைவி. அவளுடைய பிளாட்டூன் இப்போது சண்டையில் பங்கு கொள்ளவில்லை. அது அமைதி நிறைந்த ஆக்க வேலையில் ஈடுபட்டிருந்தது. ஸ்தாலின் கிராத் நகரை மீண்டும் நிறுவிக் கொண்டிருந்தார்கள் பிளாட்டூன்காரர்கள். ஓல்கா தன்னைப் பற்றிக் கொஞ்சந்தான் எழுதியிருந்தாள். மாபெரும் ஸ்தாலின் கிராத் நகரைப் பற்றியும், அதன் உயிர்த்தெழும் இடிபாடுகள் பற்றியும் மிக ஆர்வமுடன் விவரித்திருந்தாள்.

நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் இப்போது அங்கு வந்துள்ள மாதர்களும் மங்கையரும் சிறுமிகளும் போருக்குப்பின் எஞ்சியிருக்கும் நிலவறைகளிலும் காப்பரண்களிலும் காப்பகழ்களிலும் ரெயில் பெட்டிகளிலும் மண்காப்பறைகளிலும் வசித்துக்கொண்டு நகரைப் புதுப்பித்து நிறுவுவது பற்றி பரவசப்பட்டு எழுதியிருந்தாள். நன்றாக வேலை செய்யும் ஒவ்வொரு பணியாளுக்கும் புதுப்பித்து அமைக்கப்பட்ட ஸ்தாலின்கிராதில் பின்னர் இருப்பிடம் தரப்படுமாம். இது உண்மையானால் போர் முடிந்த பிறகு தங்கி இளைப்பாறத் தனக்கு இடம் இருக்கும் என்பதை அலெக்ஸேய் தெரிந்து கொள்ளட்டும்.

கோடைகால வழக்கப்படி விரைவாக இருட்டாகி விட்டது. கடைசி வரிகளை டார்ச் விளக்கு வெளிச்சத்தில்தான் அலெக்ஸேய் படித்தான். படித்து முடித்ததும் டார்ச் வெளிச்சத்தில் நிழல் படத்தை மறுபடி பார்த்தான். படைவீரப் பையனின் விழிகள் கண்டிப்பும் நேர்மையும் ஒளிர நோக்கின. அன்பே, அன்பே, உன் பாடு எளிதல்ல… போர் உன்னை விடவில்லை, எனினும் உன் உளவுறுதியைச் சிதைக்கவில்லை! எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாயா? எதிர்பார் எதிர்பார்! காதலிக்கிறாயா? காதலி, காதலி, அருமையானவளே! அவளிடமிருந்து, ஸ்தாலின் கிராத் போரில் பங்கு கொண்ட வீரப் பெண்ணிடமிருந்து தனது துர்ப்பாக்கியத்தை இந்த ஒன்றரை வருட காலமாகத் தான் மறைத்துவருவது குறித்து அவனுக்குத் திடீரென வெட்கம் உண்டாயிற்று. அப்போதே தன் அறைக்குப் போய் எல்லா விஷயங்களையும் உள்ளபடியே, ஒளிவு மறைவின்றி எழுதிவிட விரும்பினான். அவள் தீர்மானிக்கட்டும். எவ்வளவு சீக்கிரம் விஷயம் முடிவாகிறதோ அவ்வளவு நல்லது. எல்லாம் தெளிவுபட்டதும் இருவருக்கும் மனச்சுமை குறைந்துவிடும்.

இன்றையச் செயலுக்குப் பின் அவன் அவளோடு சமமாக உரையாட முடியும். அவன் வெறுமே விமானம் ஓட்டவில்லை, போரும் புரிகின்றான். தன்னுடைய எதிர்பார்ப்புகள் வீணாகி விட்டாலோ அல்லது தான் போரில் மற்றவர்களுக்கு ஒப்பாகப் பங்கு கொள்ளத் தொடங்கினாலோ அவளுக்கு எல்லா விஷயங்களையும் தெரிவித்துவிடுவதாக அவன் உறுதி பூண்டிருந்தான், சபதம் ஏற்றிருந்தானே. இப்போது அவன் நோக்கம் ஈடேறி விட்டது. அவனால் வீழ்த்தப்பட்ட இரண்டு பகை விமானங்கள் எல்லோர் கண்களுக்கும் முன்பாகப் புதரில் விழுந்து எரிந்து போயின. முறை அதிகாரி இன்றுப் போர்க்களச் செய்தித் தாள்களில் இந்தத் தகவலைப்பதிப்பித்து விட்டான்.

படிக்க:
காஷ்மீர் ஒடுக்குமுறைக்கு எதிராக பதவி விலகிய ஐ.ஏ.எஸ். கண்ணன் கோபிநாத் மீது குற்றப்பத்திரிகை !
கும்பல் வன்முறை தடுப்பு சட்டத்தை கிடப்பில் போட்ட குடியரசு தலைவர் கோவிந்து !

டிவிஷனுக்கும் சேனைக்கும் மாஸ்கோவுக்கும் இது பற்றிச் செய்தி அனுப்பப்பட்டுவிட்டது.

இதெல்லாம் மெய்யே. அவன் சபதம் நிறைவேறிவிட்டது. இப்போது எழுதலாம். ஆனால் கண்டிப்பாகச் சீர்தூக்கிப் பார்த்தால் “செருப்புக்காலி” சண்டை விமானத்துக்குச் சரியான பகைவன்தானா? நல்ல வேட்டைக்காரன் தன் வேட்டைத் திறமைக்குச் சான்றாக, தான், ஒரு பேச்சுக்குச் சொன்னால், முயலைச் சுட்டு வீழ்த்தியதாகக் கூ்றுவானா?…

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க