னித குலத்தின் ஆகப்பெருங்கனவை நனவாக்கிய நவம்பர் -7 ரசிய சோசலிச புரட்சியின் 102-ம் ஆண்டை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக கொடியேற்று விழா, விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், பரிசளிப்பு விழா என மிகச் சிறப்பாக நவம்பர் புரட்சி தின விழா கொண்டாடப்பட்டது.

முதல் நாளான 6-ம் தேதி ம.க.இ.க. மாவட்ட அலுவலகம் அமைந்த மூவேந்தர் நகர் பகுதி மற்றும் காந்திபுரம் பகுதியில் நவம்பர் 7-ஐ பற்றி பேனர் வைத்து சிவப்புத் தோரணங்கள், அலங்கார மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு திருவிழாவிற்கான எழுச்சியோடு இருந்தது. அன்று மாலை சிறுவர்களுக்கான ஓட்டப்பந்தயம், சாக்குப்போட்டி, பாட்டிலில் நீர் நிரப்புதல் மற்றும் பெரியவர்களுக்கான பானை உடைத்தல், மியூசிக் சேர் என விளையாட்டு போட்டிகள் பகுதி மக்களின் பங்கேற்புடன் மிக விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான குழந்தைகள், பெண்கள் என  ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

அடுத்ததாக நடைபெற்ற தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபாடி போட்டியில் மூவேந்தர் நகர், கல்லாங்காடு, சோழராஜபுரம், அரவானூர், வாமடம், தென்னூர் பகுதிகளில் இருந்து கபாடிக் குழுக்களின் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இப்போட்டியை ம.க.இ.க. பாடகர் தோழர் கோவன் துவக்கி வைக்க  மாவட்ட செயலாளர் தோழர் ஜீவா, பு.ஜ.தொ.மு. தோழர் சுந்தரராசு கபாடி பயிற்சியாளரான தோழர் சாருவாகன், தோழர் மணி மற்றும் பகுதி இளைஞர்கள், மாற்றுக்கட்சி நண்பர்கள் ஆகியோர் நெறிபடுத்தி நடத்தினர்.

இப்போட்டியில் 70-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். ஏராளமான அருகமை பகுதி இளைஞர்கள் ஆர்வத்தோடு வந்திருந்து நள்ளிரவு வரை நடந்த இப்போட்டியை உற்சாகத்தோடு கைதட்டி வீரர்களை ஊக்கப்படுத்தினர். இறுதிச் சுற்றில் கல்லாங்காடு வீரர்கள் வெற்றிக்கோப்பையை தட்டிச்சென்றனர். இரண்டாவது பரிசான கேடயத்தை மூவேந்தர் நகர் வீரர்கள் பெற்றனர். இந்நிகழ்வில் பங்கேற்ற அனைத்து கபாடி குழுக்களுக்கும் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இது கலந்து கொண்ட அனைத்து அணி வீரர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியதாக கருத்து தெரிவித்தனர்.

மறுநாள் நவம்பர் புரட்சி தினத்தன்று காலை காந்திபுரத்தில் பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மாவட்ட செயலாளர் தோழர் ஜீவா தலைமையில் கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் தோழர் லதா அவர்கள் கொடியேற்றி வைக்க தோழர் சத்யா மற்றும் பாடகர் தோழர் கோவன் வாழ்த்துரை வழங்கினர்.

அடுத்ததாக மூவேந்தர் நகர் பகுதியில் அமைந்துள்ள  ம.க.இ.க.-வின் மாவட்ட அலுவலகத்தில் பாடகர் தோழர் கோவன் அவர்கள் கொடியேற்றி வைக்க பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியனின் முன்னாள் பொதுச்செயலாளர் தோழர் சுந்தரராசு அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இப்பகுதியிலும் பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

அன்று மாலை 6.30 அளவில் ம.க.இ.க. அலுவலகம் அருகே நவம்பர் புரட்சி தின விழா பறையோசையுடன் மிக எழுச்சியாக துவங்கியது. இவ்விழாவிற்கு தலைமையேற்ற ம.க.இ.க. மாவட்ட செயலாளர் தோழர் ஜீவா ரசிய சோசலிச புரட்சிக்குப் பின் அந்நாட்டிற்கு சென்று வந்த தந்தை பெரியார் அவர்கள் அங்கே பிச்சைகாரர்களே இல்லை எனவும் கலைவானர் அங்கு இரும்பு கதவுகள் இல்லை, இரும்பு தொழிற்சாலைகள்தான் நிறம்ப இருப்பதாக கூறியதை உணர்ச்சி பொங்க பேசினார்.

அடுத்து வாழ்த்துரை வழங்கிய பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியனின் பொதுச்செயலாளர் தோழர் உத்ராபதி அவர்கள் “தொழிலாளி வர்க்கமும் உழைக்கும் மக்களும் படும் துன்ப துயரங்களுக்கு காரணத்தை அறிவியல் பூர்வமாக உணர்ந்து அதற்குத் தீர்வாக தோழர் மார்க்ஸ்சும் தோழர் ஏங்கல்ஸ்சும் இணைந்து உருவாக்கி கம்யூனிச தத்துவம்தான் ரசியாவை மீட்டது. அத்தகைய புரட்சியை இந்தியாவிலே மலரச் செய்வதற்கு நாம் பணியாற்றுவோம்” என அறைகூவல் விடுத்தார்.

அடுத்ததாக சிறப்புரையாற்றிய மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட  ஒருங்கிணைப்பு குழு தோழர் ராஜா “1917-ல் நடந்த ரசிய புரட்சியும் அதன் சாதனைகளும் சாதாரணமாக கிடைத்தது அல்ல. அது நம் நாட்டில் நடைபெறும் ஆட்சி மாற்றம் போல் சாதாரணமானதும் அல்ல. புரட்சி நடந்த பின் சோவியத் குடியரசை காப்பதற்காக கிட்டத்தட்ட 2 கோடி மக்கள் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். புரட்சியில் தோழர் லெனினோடு பக்கபலமாக நின்றவர் தோழர் ஸ்டாலின். 1917-ம் ஆண்டு முதல் 1925 ஜெர்மன், இத்தாலி நாடுகள் சோவியத்தை தாக்கிய போது சோவியத்தை காக்க போராடியதில் தோழர் ஸ்டாலின் பங்கு மகத்தானது. ஏராளமான தொழிற்சாலைகள், கட்டுமானங்கள் அமைத்து உற்பத்தியிலே பல சாதனைகளை படைத்துள்ளனர். என ரசியாவில் புரட்சிக்கு பிறகு நடந்த உழைக்கும் மக்களுக்கான முன்னேற்றங்களையும் பற்றி விரிவாக பேசி தனது சிறப்புரையை முடித்தார்.

பிறகு குழந்தைகளுக்கான மாறுவேடப் போட்டிகள் நடைப்பெற்றது. அதில் தோழர் பகத்சிங், விவசாயி வேடம் அணிந்து சிறுவர்கள் பேசினார்கள். அடுத்ததாக மணப்பாறையில் போர்வெல் குழியில் விழுந்து இறந்த சுஜீத்தின் மரணத்தில் அரசின் கையாலாகாததனத்தை அம்பலப்படுத்தி இரு குழந்தைகள் பாடல் பாடினர். கவிதைகள் வாசிக்கப்பட்டது. புரட்சிகர மாணவர்கள் கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் என்ற ஆல்பத்திலிருந்து “ஆண்ராய்டு காலத்துல வேண்டாத சாதி, மதம்” என்ற பாடலை பாடினர். ம.க.இ.க. தோழர் சரவணன் “கோ பேக் மோடி” என்ற புதிய பாடலை பாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, திருச்சி ம.க.இ.க. சார்பாக தோழர் சத்யா மற்றும் குழுவினர் தயாரிப்பில் நாடகம் நடத்தப்பட்டது. அதில் சாமியார்களின் ஏமாற்று நடவடிக்கைகள், படித்த மாணவர்கள் ஏன் செயின் பறிப்பில் ஈடுபடுகின்றனர், நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் வாங்கிய கடனை கொடுக்க முடியாததால் தனது குழந்தை, மனைவி என குடும்பத்துடன் தீக்குழித்து இறந்த அந்த சம்பவத்தை தத்ரூபமாக நடித்து தோழர்கள் பார்வையாளர்களை கண்கலங்கச் செய்தனர். ம.க.இ.க. கலைக்குழு பாடகர் தோழர் கோவன், தோழர் லதா ஆகியோர் புரட்சிகர பாடல்கள் பாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர்.

போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கும், பங்கேற்றவர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை சிறப்பு அழைப்பாளர்கள் மூத்த வழக்குரைஞர்கள் தோழர் போஜகுமார், தோழர் ஆதிநாராயணமூர்த்தி உடன் தோழர் முருகானந்தம், பு.மா.இ.மு. மாவட்ட ஒருங்கிணைபாளர் தோழர் பிரித்தீவ் மற்றும் மூவேந்தர் நகர் பகுதி பெண் கவிதா ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

கபடிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் சிறப்பு அழைப்பாளர் தமிழக விவசாய சங்கத்தை சேர்ந்த அய்யா மா.ப.சின்னதுரை, மக்கள் அதிகாரம் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் ஆகியோர் வழங்கினர்.

படிக்க:
நான் ஏன் ஒரு இஸ்லாமியனாக இருக்கிறேன் | மனுஷ்ய புத்திரன்
அமெரிக்க இளம் தலைமுறையிடம் வளரும் சோசலிச ஆதரவு !

இறுதியாக ம.க.இ.க. தோழர் சரவணன் நன்றியுரையாற்றி விழாவை நிறைவு செய்தார். இவ்விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மாட்டுக்கறி பிரியாணி வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மழை காரணமாக மண்டபத்தில் நடத்தப்படும் இவ்விழா இந்தாண்டு குடியிருப்பு பகுதியில் மக்கள் பங்கேற்புடன் திருவிழாவாக நடைபெற்றது.

தகவல்:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருச்சி.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க