பரீஸ் பொலெவோய்

உண்மை மனிதனின் கதை | நான்காம் பாகம் | அத்தியாயம் – 05

பொலபொலவென்று விடிவதற்கு முன்னே விமானிகள் எழுப்பப்பட்டார்கள். சோவியத் டாங்கிகள் பிளந்து உட்புகுந்த இடத்திற்கு அருகே பெரிய ஜெர்மன் விமான அணி ஒன்று முந்திய நாள் இறங்கியது என்று தகவல் வேவு வீரர்களிடமிருந்து சேனைத் தலைமை அலுவலகத்துக்கு கிடைத்திருந்தது. கூர்ஸ்க் பிரதேசத்தில் சோவியத் டாங்கிகள் பிளந்து உட்புகுந்து விட்டதனால் எதிர்ப்பட்டுள்ள அபாயத்தைப் பெரிதென மதித்து ஜெர்மன் படைத் தலைமையினர் ஜெர்மனியின் சிறந்த விமானிகளால் செலுத்தப்பட்ட “ரிஹ்த்கோபென்” விமான டிவிஷனை இங்கே தருவித்திருப்பதாக முடிவு செய்யத் தரை அவதானிக்கை விவரங்கள் இடமளித்தன. உளவு வீரர்களின் தகவல்கள் இவற்றை உறுதிப்படுத்தின. இந்த டிவிஷன் கடைசி முறையாக ஸ்தாலின்கிராதுக்கு அருகே தகர்த்து நொறுக்கப்பட்டிருந்தது. பின்பு ஜெர்மன் பின்புலத்தின் உள்ளே எங்கோ வெகு தொலைவில் மறுபடி அமைக்கப்பட்டது. இந்தப் பகை டிவிஷன் தொகையில் பெரியது, புத்தம் புதிய “போக்கே-வுல்ப்-190” ரக விமானங்களைக் கொண்டது, மிகவும் அனுபவம் உள்ளது என்று அலெக்ஸேயின் ரெஜிமென்ட் எச்சரிக்கப்பட்டது. விழிப்புடன் இருக்கும் படியும் பிளந்து உட்புகுந்த டாங்கிகளைத் தொடர்ந்து முன் செல்லத் தொடங்கியிருந்த மோட்டார்ப் படைப் பிரிவுகளுக்குத் திண்ணமான காப்பு அளிக்கும் படியும் உத்தரவிடப்பட்டிருந்தது.

“ரிஹ்த்கோபென்!” ஜெர்மன் கோயெரிங்கின் தனிப்பட்ட அரவணைப்பில் இருந்த இந்த டிவிஷனின் பெயரை அனுபவம் உள்ள விமானிகள் நன்றாக அறிந்திருந்தார்கள். நெருக்கடியான நிலைமை எதிர்பட்ட எல்லா இடங்களிலும் ஜெர்மானியர் இந்த டிவிஷனை அனுப்பி வந்தார்கள். இந்த டிவிஷன் விமானிகளில் சிலர் ஸ்பானியக் குடியரசுக்கு மேல் கொள்ளைத் தாக்கு நடத்தியவர்கள். டிவிஷன் விமானிகள் அனைவருமே திறமையுடன், உக்கிரமாகப் போரிட்டார்கள், மிகமிக அபாயகரமான பகைவர்கள் எனப் புகழ்பெற்றிருந்தார்கள்.

“ஏதோ ‘ரிஹ்த்கோபென்’ விமானங்கள் நம்முடன் சண்டைபோட வந்திருக்கின்றனவாமே. அவற்றை எதிர்பட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்! ஆகா, இந்த ‘ரிஹ்த்கோபென்’களுக்குச் சரியான சூடு கொடுத்தோமானால் அற்புதமாயிருக்குமே!” என்றுச் சாப்பாட்டு அறையில் பொரிந்து கொட்டினான் பெத்ரோவ். மெரேஸ்யெவுக்கோ, செயல் பற்றிய சர்ச்சையில் கேலிகளும் வெட்டிப் பேச்சுக்களும் பிடிக்கவில்லை. அவன் சொன்னான்:

” ’ரிஹ்த்கோபென்’ என்றால் ஏதோ சாமானியமாக எண்ணாதே. ‘ரிஹ்த்கோபென்’ எதிர்ப்படும் போது, களைச் செடிகளுக்கிடையே எரிந்து சாம்பலாக நீ விரும்பாவிட்டால், உன்னிப்பாக விழிப்புடன் இரு. காதுகளை கூராக வைத்துக் கொள், தொடர்பை இழந்துவிடாதே. ‘ரிஹ்த்கோபென்’ இருக்கிறதே, தம்பி, இது பயங்கர விலங்கு. நீ வாயைத் திறப்பதற்குள் அதன் பற்களுக்கிடையே நொறுங்கிக் கொண்டிருப்பாய், தெரிந்ததா…… ”

பொழுது புலர்ந்ததுமே முதல் ஸ்குவாட்ரன் புறப்பட்டு விட்டது. கர்னல் தாமே இதற்குத் தலைமை வகித்தார். அது போரிட்டுக் கொண்டிருக்கையிலேயே பன்னிரு விமானங்கள் கொண்ட இரண்டாவது அணி பறக்கத் தயாராக நின்றது. அதற்குத் தலைமை தாங்கி நடத்திச் செல்லவிருந்தார் சோவியத் யூனியனின் வீரர் என்ற பட்டம் பெற்ற மேஜர் பெதோத்தவ். ரெஜிமெண்டிலேயே கமாண்டருக்கு அடுத்தபடி யாவரிலும் தேர்ந்த அனுபவமுள்ள விமானி இவர். விமானங்கள் ஆயத்தமாக இருந்தன, விமானிகள் அறைகளில் அமர்ந்திருந்தார்கள். எஞ்சின்கள் குறைந்த வேகத்துடன் முடுக்கிவிடப்பட்டிருந்தன. இதனால் காட்டுத் திறப்பு வெளியில் குப்குப்பென்று காற்று வீசத் தொடங்கியது. இடிப் புயலுக்கு முன், தாகமுற்ற தரை மீது, பெரிய, கனத்த முதல் மழைத் துளிகள் சடசடக்கையில், தரையைப் பெருக்கி, மரங்கள் அலைத்தாட்டும் இளங்காற்றை ஒத்திருந்தது அது.

முதல் அணியைச் சேர்ந்த விமானங்கள் வானத்தில் வழுகுவது போன்று நேர்குத்ததாக கீழே இறங்குவதைத் தன் விமானி அறையில் உட்கார்ந்து கவனித்தான் அலெக்ஸேய். தன் வசமின்றியே விமானங்களை எண்ணினான். தரையில் இறங்கிய இரண்டு விமானங்களுக்கு நடுவே இடைவெளி இருப்பதைக் கண்டதும் அவனுக்கு பதைப்பு உண்டாயிற்று. இதோ கடைசி விமானம் தரை சேர்ந்துவிட்டது. அப்பாடா! அலெக்ஸேயின் நெஞ்சச் சுமை இறங்கியது போலிருந்தது.

கடைசி விமானம் ஒரு பக்கம் ஒதுங்கியதும் ஒதுங்காததுமாக மேஜர் பெதோத்தவின் விமானம் மேலே கிளம்பியது. சண்டை விமானங்கள் இணை இணையாக வானில் பறந்தன. இதோ அவை காட்டுக்கு அப்பால் அணி வகுத்துக் கொண்டன. இறக்கைகளை அசைத்துவிட்டு, பெதோத்தவ் தனது விமானத்தை நேரே செலுத்தலானார். நேற்று பிளந்து ஊடுருவப்பட்ட இடத்தை ஒட்டியவாறு ஜாக்கிரதையாகத் தாழப் பறந்தன விமானங்கள். மிக உயரத்திலிருந்து தூரக்காட்சியாகக் காண்கையில் எல்லாம் பொம்மைகள் போன்று தோற்றம் அளிக்கும். இப்போதோ, அவ்வாறின்றி, அலெக்ஸேயின் விமானத்துக்கு அடியே தரை அருகே பாய்ந்து சென்றது. முந்தின நாள் அவனுக்கு மேலிருந்து பார்ப்பதற்கு ஏதோ விளையாட்டு போலக் காணப்பட்டது இன்று பிரம்மாண்டமான, எல்லை காண இயலாத போர்க்களமாக அவன் முன்னே விரிந்தது.

பீரங்கிக் குண்டுகளாலும் வெடி குண்டுகளாலும் குழிபறிக்கப்பட்டிருந்த வயல்களும் புல்தரைகளும் சோலைகளும் விமான இறக்கைகளுக்கு அடியே தலை தெளிக்கும் வேகத்துடன் விரைந்தன. போர்க்களத்தில் இறைந்து கிடந்த பிணங்களும் படையினரால் விட்டுவிடப்பட்டுத் தனியாக நின்ற பீரங்கிகளும் முழு முழு பீரங்கிப் படைப்பிரிவுகளும் தோன்றித்தோன்றி மறைந்தன. அடிபட்ட டாங்கிகளும் உடைந்து தகர்ந்த இரும்புச் சட்டங்கள், கட்டைகளின் நீண்ட குவியல்களும் தென்பட்டன. பீரங்கிக் குண்டு மாரியால் அறவே மொட்டையாக்கப்பட்ட பெருங்காடு கீழே பெருகியோடிற்று. மேலிருந்து பார்க்கையில் அது பிரம்மாண்டமான குதிரை மந்தையால் மிதித்துத் துவைக்கப்பட்ட வயல்போலக் காட்சி அளித்தது. இவை எல்லாம் திரைப்பட பிலிம் போன்ற விரைவுடன் பாய்ந்தோடியது. இந்த பிலிமுக்கு முடிவே கிடையாது எனத் தோன்றியது. இங்கு எவ்வளவு பிடிவாதமான, இரத்தப் போக்குள்ள போர் நிகழ்ந்தது, எவ்வளவு பெருத்த இழப்புகள் ஏற்பட்டன, இங்கே அடையப்பட்ட வெற்றி – எவ்வளவு மகத்தானது என்பவற்றை இவை பறை சாற்றின.

விசாலமான திடல் முழுவதிலும் குறுக்கும் நெடுக்குமாக இரட்டைத் தடங்கள் பதிந்திருந்தன டாங்கிகளின் சங்கிலிப் பட்டைகள். அவை மேலும் மேலும் முன்னே, ஜெர்மன் அணியிடங்களுக்கு உள்ளே இட்டுச் சென்றன. இந்தத் தடங்கள் ஏராளமாக இருந்தன. நாற்புறமும் தொடுவானம் வரை இந்தத் தடங்களைக் காண முடிந்தது. இன்னவை என்று தெரியாத விலங்குகளின் பிரம்மாண்டமான கூட்டம் வழி தெரியாமல் வயல்களின் ஊடாகத் தெற்கு நோக்கிப் பாய்ந்தோடியது போலத் தோன்றியது. முன் சென்றுவிட்ட டாங்கிகளைத் தொடர்ந்து சென்றன மோட்டார் பீரங்கிகளும், பெட்ரோல் லாரிகளும் டிராக்டர்களால் இழுக்கப்பட்ட பிரம்மாண்டமான செப்பனிடும் தொழிற் கூட வண்டிகளும் கித்தானால் மூடப்பட்ட சரக்கு லாரிகளும். மேலிருந்து பார்க்கும் போது அவை மெதுவாகப் போவது போல் தெரிந்தது இளநீலப் புழுதிப்படலம். சண்டை விமானங்கள் உயரே எழும்பிய பிறகோ இவை எல்லாம் வசந்த கால எறும்புப் பாதைகளில் சாரிசாரியாக எறும்புகள் ஊர்வது போன்று தோற்றம் அளித்தன.

காற்று வீசாமல் அசைவற்றிருந்த வானில் வெகு உயரே எழுந்த புழுதி வால்களுக்குள் மேகங்களில் போல மூழ்கியவாறு சண்டை விமானங்கள் படை வரிசைகளுக்கு மேலாகப் பறந்து முன்வரிசை ஜீப்புகள் வரை சென்றன. டாங்கிப் படைத் தலைமை அதிகாரிகள் அந்த ஜீப்புகளில் இருந்தார்கள் போலும் டாங்கிப் படை வரிசைகளுக்கு உயரே வானம் தூய்மையாக இருந்தது. ஆனால் தொலைதூரத் தொடுவானத்தின் மங்கிய விளிம்பின் அருகே சண்டை நடப்பதற்கு அறிகுறியாக ஒழுங்கற்ற புகைப்படலங்கள் தென்பட்டன. விமான அணி திரும்பிப் பாம்பு போல வானில் நெளிந்து போய்விட்டது. அதே சமயத்தில் தொடுவானக் கோட்டின் அருகே தரையை ஒட்டினாற் போலத் தொங்கிய ஒரு வரையுருவை முதலிலும் பின்பு வரையுருக்களின் முழுத் திரளையும் அலெக்ஸேய் கண்ணுற்றான். ஜெர்மன் விமானங்கள்! அவையும் தரையை அடுத்தாற் போல் பறந்தன. களைகள் மண்டிய செம்மைபடர்ந்த வயல்களுக்கு உயரே வெகு தூரம் தென்பட்ட புழுதி வால்களையே நோக்கி அவை முன்னேறின. அலெக்ஸேய் இயல்பூக்கத்தால் தூண்டப்பட்டுத் திரும்பிப் பார்த்தான். அவனுடைய பின்னோடி மிகக் குறுகிய இடைவெளிவிட்டு அவனைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான்.

படிக்க:
மதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளர் தேர்வை நேர்மையாக நடத்துக !
காஷ்மீர் ஒடுக்குமுறைக்கு எதிராக பதவி விலகிய ஐ.ஏ.எஸ். கண்ணன் கோபிநாத் மீது குற்றப்பத்திரிகை !

அலெக்ஸேய் உற்றுக் கேட்டான். எங்கோ தொலைவிலிருந்து ஒலித்தது குரல்:

“நான் – கடற்பறவை இரண்டு, பெதோத்தவ்; நான் கடற் பறவை இரண்டு, பெதோத்தவ். கவனியுங்கள்! என் பின்னே வாருங்கள்!”

வானத்தில் ஒழுங்குக் கட்டுப்பாடு மிகக் கடுமையானது. விமானியின் நரம்புகள் தாங்கும் எல்லைவரை இறுக்கம் அடைந்திருக்கும். எனவே, சில வேளைகளில் கமாண்டர் உத்தரவின் கடைசிச் சொல்லை உச்சரிப்பதற்கு முன்பே கூட விமானி அவருடைய விருப்பத்தை நிறைவேற்றி விடுகிறான். கண கணப்புக்கும் சீழ்கைக்கும் இடையே எங்கோ தொலைவில் ஒலித்தன புதிய கட்டளையின் சொற்கள். அதற்குள் அணி முழுவதும் இணை இணையாக, அதே சமயம் நெருக்கமான வரிசையை விடாமல், ஜெர்மானிய விமானங்களை குறுக்கிட்டுத் தாக்கத் திரும்பியது. பார்வையும் செவிப்புலனும் சிந்தனையும் எல்லாம் முடிந்தவரை கூராகி விட்டன. கண்களுக்கு எதிரே விரைவாகப் பெரியவையாகிய வேற்று விமானங்கள் தவிர எதையும் அலெக்ஸேய் காணவில்லை. தலைகாப்பின் காதுக் குழாயில் வந்த கணகணப்பையும் கிறீச்சொலிகளையும் தவிர எதையும் அவன் கேட்கவில்லை. இந்தக் குழாய் வழியே உத்தரவு இதோ ஒலிக்க வேண்டும். ஆனால் உத்தரவுக்குப் பதிலாக ஜெர்மன் மொழியில் கிளர்ச்சியுடன் ஒலித்த குரல் அவனுக்கு மிகத் தெளிவாகக் கேட்டது.

“பகை விமானங்கள்! பகை விமானங்கள்! ‘லா-5.’ பகை விமானங்கள்!” என்று கத்தினான் ஒருவன். அவன் ஜெர்மானியத் தரைக் குறி வைப்போனாக இருக்க வேண்டும். ஆபத்து பற்றித் தனது விமானங்களை அவன் இவ்வாறு எச்சரித்தான்.

புகழ் பெற்ற ஜெர்மன் விமான டிவிஷன் “ரிஹத்கோபென்” தனது வழக்கப்படி போர்க்களத்தில் குறிவைப்போரையும் தரை அவதானிக்கையாளர்களையும் வலைப்பின்னல் போல விரிவாக நியமித்திருந்தது. விமானச் சண்டைகள் நடக்கக்கூடிய இடங்களில் இவர்கள் வானொலிபரப்பு கருவிகளுடன் இரவில் போதிய நேரம் முன்பே பாராஷூட்டுக்களின் உதவியால் இறக்கப் பட்டிருந்தார்கள்.

கரகரப்பும் எரிச்சலும் கொண்ட இன்னொரு குரல் முன்னதை விடக் குறைந்த தெளிவுடன் ஜெர்மன் மொழியில் சொல்லிற்று:

“இடப்பக்கத்தில் ‘லா-5’! இடப்பக்கத்தில் ‘லா-5’! ” இந்தக் குரலில் கோபத்துடன் கூடவே நன்கு மறைக்கப்படாத கலவரமும் ஒலித்தது.

அலெக்ஸேய் மெரேஸ்யெவ் பகை விமானங்களைக் கூர்ந்து பார்த்தான். இவை “போக்கே-வூல்ப்-190″ ரகத் திடீர்த் தாக்குச் சண்டை விமானங்கள். விறலும் லாவகமும் உள்ளவை. அண்மையில் தான் இவை போர்ப்படைகளில் முழங்கத் தொடங்கியிருந்தன. சோவியத் விமானிகள் இவற்றுக்குப் “போக்கு”கள் என்று பெயரிட்டிருந்தார்கள்.

எண்ணிக்கையில் அவை அலெக்ஸேயின் அணியைப் போல் இரு மடங்காக இருந்தன. “ரிஹ்த்கோபென்” டிவிஷனின் அணிகளுக்குரிய தனிச்சிறப்பான, கண்டிப்பான வரிசையில் அவை பறந்தன. பின் தொடரும் ஒவ்வொரு விமானமும் முன்னுள்ளதன் வாலைக் காக்கும் படியான அமைப்பில் படிவரிசை அணியாக இணை இணையாய்ச் சென்றன அவை. உயரத்தில் தமக்கு இருந்த மேம்பாட்டைப் பயன்படுத்திக் கொண்டு பெதோத்தவ் தமது அணியைத் தாக்கில் ஈடுபடுத்தினார்.

அலெக்ஸேய் தனக்கென்று ஒரு பகை விமானத்தை மனதுக்குள் குறித்துக் கொண்டான். மற்ற விமானங்களைப் பார்வையிலிருந்து தப்ப விடாமல், அந்தப் பகை விமானத்தை இலக்குக் காட்டியின் மையத்துக்குக் கொண்டுவர முயன்றவாறு அதன் மேல் பாய்ந்தான். ஆனால் வேறொரு குழு பெதோத்தவை முந்திக் கொண்டுவிட்டது. “யாக்” விமானங்களைக் கொண்ட அந்தக் குழு வேறு புறமிருந்து வந்து ஜெர்மன் விமானங்களை மேலிருந்து இடைவிடாது தாக்கிற்று. ஜெர்மன் வரிசையைத் தகர்த்து சிதற அடிக்கும் அளவுக்கு வெற்றிகரமாக இருந்தது அந்தத் தாக்கு. வானில் ஒரே அமளி குமளி ஏற்பட்டது. இரு அணிகளும் தனித்தனியே சண்டையிடும் இணைகளாகவும் நால் விமானக் குழுக்களாகவும் பிரிந்தன. பீரங்கிக் குண்டுகளைப் பொழிந்து பகை விமானங்களை இடை மறிக்கவும் வாலில் தாக்கவும் விலாப்புறம் சுட்டுவீழ்த்தவும் முயன்றன சோவியத் சண்டை விமானங்கள்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க