உண்மை மனிதனின் கதை | நான்காம் பாகம் | அத்தியாயம் – 05a

ணைகள் ஒன்றன் பின் ஒன்றாக வானில் சுற்றிவந்தன. காற்றில் சிக்கலான வட்ட நடனம் தொடங்கியது.

இந்தக் குழப்பத்தில் பகை விமானம் எது தன் விமானம் எது என்று அனுபவம் உள்ள கண்கள் தாம் பகுத்தறிய முடியும். காதுக் குழாய்கள் வழியே விமானியின் செவிகளில் பாயும் தனித்தனி ஒலிகளை வேறுபிரித்து அறிவது அனுபவம் உள்ள செவிகளுக்கே இயலுவது போல. அந்த நேரத்தில் வானத்தில் எத்தனை எத்தனை வித சத்தங்கள் ஒலித்தன : தாக்குபவனின் கரகரத்த வசவுச் சொற்களும், காயமடைந்தவனின் முனகல்களும் ஆழ்ந்த பெரு மூச்சின் கரகரப்பும் என்று இப்படிப் பற்பல ஒலிகள். ஒருவன் சண்டைப் போதையில் வேற்று மொழியில் பாட்டு முழங்கினான். மற்றொருவன் குழந்தைப் போல அரற்றி “அம்மா” என்றான். மூன்றாமவன் சுடுவிசையை அழுத்தியவாறு போலும், “இந்தா, இந்தா, இன்னும் இந்தா!” என்று வன்மத்துடன் கூறினான்.

திட்டமிட்டிருந்த இரை அலெக்ஸேயின் இலக்குக்குத் தப்பி விட்டது. அதற்குப் பதிலாக தனக்கு உயரே ஒரு “யாக்” விமானம் பறப்பதையும் நேரான இறக்கைகளைக் கொண்ட, சுருட்டு வடிவான “போக்” விமானங்கள் அதன் வாலுடன் ஒட்டினாற் போல விடாது தொடர்வதையும் அவன் கண்டான்.

“போக்” விமான இறக்கைகளிலிருந்து ஒரு போகான இரண்டு குண்டு வரிசைகள் “யாக்’ விமானத்தை நோக்கிப் பாய்ந்தன. அவை அதன் வாலில் பட்டுவிட்டன. அலெக்ஸேய் உதவிக்காக நேரே அம்பு போல மேலே விரைந்தான். கணப் போதின் ஒரு பகுதி நேரத்தில் அவனுக்கு மேலே கரு நிழல் ஒன்று தோன்றியது. அந்த நிழல்மீது தன் எல்லா பீரங்கிகளிலிருந்தும் முழு மூச்சாகக் குண்டுகளைப் பாய்ச்சினான் அலெக்ஸேய். “போக்” விமானத்துக்கு என்ன நேர்ந்தது என்பதை அவன் காணவில்லை. “யாக்” விமானம் சேதமுற்ற வாலுடன் தனியாகத் தொடர்ந்து பறந்ததை மட்டுமே அவன் கண்டான். இந்தக் களேபரத்தில் பெத்ரோவ் பின் தங்கிவிட்டானோ என்றுத் திரும்பிப் பார்த்தான் அலெக்ஸேய். இல்லை, பெத்ரோவ் அனேகமாக அருகருகவே பறந்தான்.

படிக்க:
கேள்வி பதில் : பாரத ரத்னா – சோசலிசம் – சீன அதிபர் வருகை !
பாபர் மசூதிக்கு கீழ் கோயிலுக்கான எந்த சான்றும் இல்லை – இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் !

“பின் தங்கிவிடாதே, தம்பி” என்று பற்களின் இறுக்கு வழியே கூறினான் அலெக்ஸேய்.

கணகணப்பும் சடசடப்பும் பாட்டும் காதுகளில் ஒலித்தன. வெற்றி முழக்கமும் அச்ச மிகுதியால் வீரிடலும், கரகரப்பும், பற்களை நெரிப்பதும், திட்டு வசவுகளும், ஆழ்ந்த பெருமூச்சும் கேட்டன. இந்த ஓசைகளை கேட்கையில் தரைக்கு வெகு உயரே சண்டை விமானங்கள் போரிடுவதாகத் தோன்றவில்லை. பகைவர்கள் ஒருவரையொருவர் கைகளால் இறுகப் பற்றியவாறு, கரகரப்பதும் பெருமூச்சு விடுவதுமாக, பலத்தை எல்லாம் ஒரு முனைப்படுத்தித் தரையில் புரள்கிறார்கள் என்று தோன்றியது.

அலெக்ஸேய் தாக்குவதற்குப் பகை விமானத்தைத் தேடும் பொருட்டு வானத்தை சுற்றிலும் கண்ணோட்டினான். திடீரென்று அவனுக்கு முதுகுத்தண்டு திடீரெனச் சில்லிட்டு விட்டது போலவும் பிடரியில் மயிர்க் கூச்செறிவது போலவும் உணர்வு உண்டாயிற்று. தனக்குச் சற்றுக் கீழே “லா-5” விமானத்தையும் அதை மேலிருந்து தாக்கிய “போக்” விமானத்தையும் அவன் கண்டான். சோவியத் விமானத்தின் எண்ணை அவன் கவனிக்கவில்லை. ஆனால் அது பெத்ரோவ் என்பதை புரிந்து கொண்டான், உணர்ந்தான். தனது எல்லா பீரங்கிகளிலிருந்தும் சடசடவென்று குண்டு மழை பெய்தவாறு அவன் மேல் நேராகப் பாய்ந்தது “போக்கே-வூல்ப்” விமானம். இன்னும் அரை நொடியில் பெத்ரோவின் பாடு தீர்ந்துவிடும் போல் இருந்தது.

சண்டை மிக மிக அருகே நடந்துகொண்டிருந்த படியால் விமானத் தாக்கு விதிகளை கடைபிடித்தவாறு நண்பனுக்கு உதவ செல்வது அலெக்ஸேக்கு இயலாதிருந்தது. திரும்புவதற்கு நேரமோ இடமோ இல்லை. ஆபத்தில் இருந்த நண்பனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அபாயத்தை மேற்கொள்ளத் துணிந்தான். தன் விமானத்தைக் கீழ் நோக்கித் திருப்பி விரைவை அதிகப்படுத்தினான். தனது சொந்த கனத்தின் ஈர்ப்பு வேகம் சட வேகத்தாலும் எஞ்சினின் முழு ஆற்றலாலும் பன்மடங்காகி விடவே, விமானம் அசாதாரண இறுக்கத்தால் அதிர்ந்து நடுங்கியவாறு கல் போல – அல்ல, கல்போல அல்ல, ராக்கெட் போல – ‘போக்’ விமானத்தின் குட்டை இறக்கைகள் கொண்ட உடல் மீது நூல்கள் போன்று குண்டுவரிசைகளைப் பாய்ச்சியபடி விழுந்தது. இந்த தலைதெறிக்கும் வேகம் காரணமாகவும் திடீரென கீழே பாய்ச்சுவதாலும் நினைவு தப்புவதை உணர்ந்தான் அலெக்ஸேய்.

அகாதத்தில் விரைந்து வீழ்கையில் அவனது கண்கள் குறுதி நிறைந்து மங்கின. எனவே தன் விமானத்தின் உந்து சக்கரத்துக்கு முன்னே எங்கேயோ “போக்” விமானம் வெடித்துப் புகை சூழ்ந்ததை அவன் அரைகுறையாகக் கண்டான். பெத்ரோவ் எங்கே? அவன் எங்கோ மறைந்து விட்டான். எங்கே அவன்? அடித்து வீழ்த்தப்பட்டுவிட்டானா? குதித்துவிட்டானா? போய்விட்டானா?

சுற்றிலும் வானம் தெளிவாயிருந்தது. எங்கோ பின்னால் கண்ணுக்குத்தெரியாத விமானத்திலிருந்து அமைதியான குரல் வானில் ஒலித்தது குரல்:

“நான் – கடற்பறவை இரண்டு, பெதோத்தவ். நான்-கடற் பறவை இரண்டு பெதோத்தவ். அணிவகுத்துக் கொள்ளுங்கள் என் அருகே திரும்புவோம் நான் – கடற்பறவை இரண்டு…..”

பெதோத்தவ் அணியை விட்டுச் சென்றுவிட்டார் போலும்.

“போக்கே-வூல்பைச்” சுட்டு வீழ்த்திய பிறகு தன் விமானத்தை வெறிகொண்ட செங்குத்துத் தலைகீழ்ப் பாய்ச்சலிலிருந்து சம நிலைக்குக் கொண்டு வந்ததும் மெரேஸ்யெவ் பேரார்வத்துடன் ஆழ்ந்த மூச்சிழுத்தான். அபாயம் விலகி விட்டதால் ஏற்பட்ட களிப்பை, வெற்றி மகிழ்ச்சியை உணர்ந்தவாறு, நிலவிய அமைதியில் திளைத்தான் அவன். திரும்பு வழியை நிச்சயிப்பதற்காகத் திசைகாட்டியைப் பார்த்தான், பெட்ரோல் குறைவாக, விமான நிலையம் சேர்வதற்கே போதும் போதாதுமாக இருப்பதைக் கவனித்து முகம் சுளித்தான். ஆனால் சூனியத்துக்கு அருகே இருந்த பெட்ரோல்மானி முள்ளைவிட அதிக பயங்கரமான ஒன்று அடுத்த கணமே அவனுக்குப் புலனாயிற்று. பறட்டைப் பிடரி போன்ற மேகத்திலிருந்து அவனை நோக்கிப் பாய்ந்தது, எங்கிருந்தோ வந்த “போக்கே-வூல்ப்-190” விமானம். சிந்திக்க நேரமில்லை, விலகித் தப்ப இடமில்லை.

பகைவர்கள் ஒருவர் மீது ஒருவர் விரைவாகப் பாய்ந்தார்கள்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க