பி.எம்.சி. வங்கி முறைகேடு : வெளியே தெரியும் பனிமுகடு !

காராஷ்டிரா மாநிலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி, எதிர்வரும் ஆறு மாத காலத்திற்கு எந்தவொரு வணிக நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என ரிசர்வ் வங்கி செப்டெம்பர் மாத இறுதியில் உத்தரவு பிறப்பித்ததோடு, அவ்வங்கியைத் தனது முழுக் கட்டுப்பாட்டின் கீழும் கொண்டுவந்திருக்கிறது. அவ்வங்கி கடன்களை வழங்கியதிலும் வாராக் கடன்களை ரிசர்வ் வங்கியின் ஆய்விலிருந்து மறைப்பதிலும் பல முறைகேடுகளைச் செய்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

அவ்வங்கியை ஒழுங்குபடுத்துவது என்ற பெயரில் ரிசர்வ் வங்கி எடுத்திருக்கும் இந்த நடவடிக்கையால் அவ்வங்கியை மோசடி செய்த கார்ப்பரேட் முதலாளிகளோ, அவர்களுக்குத் துணையாக இருந்த அதிகார வர்க்கமோ பாதிக்கப்படவில்லை. மாறாக, இந்தக் கசப்பு மருந்தால் உடனடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் அந்த வங்கியைப் பெரிதும் நம்பித் தமது பணத்தைப் போட்டு வைத்திருந்த மிகச் சாதாரணமான வியாபாரிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர்தான்.

பி.எம்.சி. வங்கியின் முன்பாக அணிதிரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர்கள்.

அவ்வங்கியில் கணக்கு வைத்திருக்கும் யாரும் 1,000 ரூபாய்க்கு மேல் எடுக்க முடியாது என முதலில் உத்தரவிட்டது ரிசர்வ் வங்கி. இதனை எதிர்த்து அவ்வங்கியின் வாடிக்கையாளர்களும் பொதுமக்களும் போராடிய பிறகு, இந்தத் தொகை 10,000,- 25,000 என அடுத்தடுத்து அதிகரிக்கப்பட்டது. எனினும், இவ்வங்கியில் நிரந்தர வைப்புக் கணக்குகளில் (Fixed Deposits) தமது வாழ்நாள் சேமிப்பைப் போட்டு வைத்திருக்கும் பொதுமக்கள் தமது சேமிப்புத் திரும்பக் கிடைக்குமா என்ற அச்சத்தில் உறைந்துபோயுள்ளனர்.

இவ்வங்கியில் 74 இலட்ச ரூபாய் வரை சேமிப்புக் கணக்குகளில் போட்டு வைத்திருக்கும் தாமினி ஷா, “எனது மகள், தனது மேல்படிப்புக்காக வெளிநாடு செல்வதற்கு இந்தச் சேமிப்பைத்தான் நம்பியிருந்தேன். அவளின் கனவு சிதைந்துபோய்விடுமோ?” என அஞ்சிக் கொண்டிருக்கிறேன் என்கிறார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சலிமா குரேஷி, “எனது கதிரியக்கச் சிகிச்சைக்கு இவ்வங்கியில் போட்டு வைத்திருக்கும் சேமிப்புக்களைத்தான் நம்பியிருக்கின்றேன். அது கிடைக்காமல் போனால், எனது சிகிச்சையை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை” என உடைந்துபோய்க் கூறுகிறார்.

“ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளால் இவ்வங்கியில் போட்டு வைத்துள்ள பணத்தை எடுக்க முடியாததால், தினந்தோறும் வியாபாரத்தை நடத்த முடியாமல் தடுமாறுகிறோம்” எனக் கூறி, அவ்வங்கியின் கல்யாண் கிளையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள், காய்கறி வணிகர்கள்.

படிக்க:
எடப்பாடி கும்பலின் சாதிய திமிர்த்தனம் : மேலவளவு முருகேசன் கொலைக் குற்றவாளிகள் விடுதலை !
♦ ஏழைத்தாயின் மகன் # 2 – நீரவ் மோடியின் லண்டன் ‘அகதி’ வாழ்க்கை !

இப்படி ஓராயிரம் அழுகுரல்கள் கேட்டுவரும்போது, அரசோ, அவ்வங்கியின் முன்னாள் தலைவர் வார்யம் சிங், முன்னாள் மேலாண்மை இயக்குநர் ஜாய் தாமஸ் மற்றும் கடன் வாங்கி ஏப்பம் விட்ட ஹெச்.டி.ஐ.எல். நிறுவன முதலாளிகள் ராகேஷ் வாதவான், அவரது மகன் சாரங் வாதவான் ஆகிய நால்வரைக் கைது செய்திருப்பதையும், 3,500 கோடி ரூபாய் பெறுமான அக்கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்துக்களை முடக்கியிருப்பதையும் காட்டிச் சமாதானப்படுத்த முயலுகிறது.

எத்துணையோ வங்கி மோசடிகளைப் பார்த்திருக்கிறோம். ஆனால், பி.எம்.சி. வங்கி திவால் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் கதை தனி விதமானது. இந்த வங்கி கொடுத்திருக்கும் 8,880 கோடி ரூபாய் கடனில் அடிக்கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஹெச்.டி.ஐ.எல். குழுமத்திற்குக் கொடுத்துள்ள கடன் மட்டும் 6,500 கோடி ரூபாய். அதாவது, மொத்தக் கடனில் 73 சதவீதம். இப்படி ஒரே நிறுவனத்திற்குக் கடனை வாரிக்கொடுப்பது வங்கி விதிமுறைகளுக்கு எதிரானது என்கிறார்கள், நிதி ஆலோசகர்கள்.

பி.எம்.சி.வங்கியைப் பொருத்தவரை ஹெச்.டி.ஐ.எல். நிறுவனத்திற்குக் கடன் கொடுப்பதில் எந்தவொரு விதிமுறையும் பின்பற்றப்பட்டதே கிடையாது. காரணம், இந்த வங்கியை மறைமுகமாக இயக்கி வந்ததே அந்த நிறுவனம்தான். குறிப்பாக, தற்பொழுது கைது செய்யப்பட்டிருக்கும் இவ்வங்கியின் முன்னாள் தலைவர் வார்யம் சிங், ஹெச்.டி.ஐ.எல். நிறுவனத்தில் 2015-ஆம் ஆண்டு வரை அதன் இயக்குநர்களுள் ஒருவராக இருந்திருக்கிறார். அது மட்டுமல்ல, அந்நிறுவனத்திலும், அதன் குழும நிறுவனங்களிலும் பங்குதாரராகவும் இருந்திருக்கிறார். மேலும், ஹெச்.டி.ஐ.எல். நிறுவனத்தின் முதலாளியான ராகேஷ் வாதவானின் சகோதரரும் தற்பொழுது திவாலாகிவிட்ட திவான் ஹவுசிங் லிமிடெட் நிறுவனத்தின் தலைவருமான காலஞ்சென்ற ராஜேஷ் வாதவானும் இவ்வங்கியின் இயக்குநர்களுள் ஒருவராக இருந்திருக்கிறார்.

ஹெச்.டி.ஐ.எல்.-க்கு அளிக்கப்பட்டிருக்கும் கடன்களுள் பெரும்பாலானவை பி.எம்.சி. வங்கியின் இயக்குநர்களுக்கே தெரியாமல் சதித்தனமாக வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் கடன்கள் ரிசர்வ் வங்கிக்குத் தெரியாமலும் மறைக்கப்பட்டு வரவு-செலவு அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, இந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கடன்கள், 21,000-க்கும் அதிகமான போலி நிறுவனங்கள் பெயரில் கணக்குகள் தொடங்கப்பட்டு, அந்நிறுவனங்களுக்குக் கடன் கொடுத்தது போலக் காட்டப்பட்டிருக்கிறது. மேலும், ரிசர்வ் வங்கியின் ஆய்வின்போது வெறும் 200 கோடி ரூபாய் அளவிற்குத்தான் ஹெச்.டி.ஐ.எல். நிறுவனத்தின் வாராக் கடன் இருப்பதாக மோசடி அறிக்கைத் தரப்பட்டிருக்கிறது.

ஊரை அடித்து உலையில் போட்ட காசில் ஹெச்.டி.ஐ.எல். நிறுவன முதலாளி ராகேஷ் வாதவான் கட்டியிருக்கும் 22 அறைகளைக் கொண்ட சொகுசு பங்களா.

கடந்த ஏழு ஆண்டுகளாக நடந்துவந்திருக்கும் இம்மோசடிகள் ரிசர்வ் வங்கி உள்ளிட்ட எந்தவொரு அரசின் ஆய்விலும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான் ஆச்சரியமானது. இவ்வளவு ஏன், ஹெச்.டி.ஐ.எல். நிறுவனம் கடன் தவணைத் தொகையைத் திருப்பிச் செலுத்தி வருவது போலக் காட்டுவதற்காக, அந்நிறுவனத்திற்குப் புதிதாக 96 கோடி ரூபாய் அளவிற்குக் கடனாகக் கொடுத்து, அதனைத் தவணைத் தொகையாகத் திரும்ப வாங்கியிருக்கிறது, வங்கி நிர்வாகம்.

தவணைத் தொகையைக் கட்டத் தவறும் விவசாயிகளின் டிராக்டர்கள் தூக்கப்படுகின்றன. அவர்கள் அடித்து அவமானப்படுத்தப்பட்டுத் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள். கல்விக் கடன் வாங்கிய மாணவர்கள், அவர்களது பெற்றோர்களின் புகைப்படங்கள் வங்கி வாசலில் ஓட்டப்பட்டு அவமதிக்கப்படுகிறார்கள். சிறுதொழில் நிறுவனங்கள் கடன் தவணை தவறும்போது சீல் வைக்கப்படுகின்றன. ஆனால், கார்ப்பரேட் முதலாளிகளுக்கோ கடனை வாரி வழங்குவதில் மட்டுமல்ல, கடன் தவணையைத் திருப்பிச் செலுத்துவதிலும் முறைகேடான சலுகைகள் காட்டப்படுகின்றன.

இம்மோசடிகளெல்லாம் ஏதோவொரு வங்கியில் மட்டும் நடைபெற்றிருப்பதாகக் கருத முடியாது. ரிசர்வ் வங்கி பி.எம்.சி. வங்கியையும் உள்ளிட்டு 24 நகரக் கூட்டுறவு வங்கிகளைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருக்கிறது. பல பொதுத்துறை வங்கிகள் புதிதாகக் கடன் கொடுப்பதற்குக் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. லட்சுமி விலாஸ் வங்கி, யெஸ் வங்கி உள்ளிட்ட தனியார் வங்கிகள் வாராக் கடன் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கும் இரகசியங்கள் பத்திரிகைகளில் கசிந்து வெளியே வருகின்றன.

“ஆசிய-பசிபிக் பகுதியிலேயே இந்திய வங்கிகள்தான் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், இதற்கு ஒரு சில நிறுவனங்களுக்கே கடன்கள் வாரி வழங்கப்பட்டிருப்பதுதான் காரணமென்றும்” மூடிஸ் தர நிர்ணயக் கழகம் கூறியிருக்கிறது. இந்த மோசடிகளை மூடிமறைக்கும் நோக்கில்தான் பொதுத்துறை வங்கிகளை இணைத்திருக்கிறது, மைய அரசு.

படிக்க:
புதுச்சேரி – நெல்லையில் நவம்பர் 7 சோசலிச புரட்சி நாள் கொண்டாட்டம் – படங்கள் !
♦ PMC வங்கி முறைகேடு : டெபாசிட் பணத்தை இழந்த இருவர் மரணம்

பொருளாதார வளர்ச்சியைச் சாதிப்பது என்ற பெயரில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வங்கிக் கடன்கள் வாரி வழங்கப்பட்டன. அந்தக் கடன்கள் அனைத்தும் வாராக் கடன்களாக மாறிப் பொதுத்துறை வங்கிகள் திவால் நிலைக்குத் தள்ளப்பட்ட பின், அவற்றின் நிர்வாகம் சரியில்லை எனக் கூறப்பட்டு, அதற்குத் தீர்வாக வங்கிகளைத் தனியார்மயமாக்கும் திட்டம் அரங்கேற்றப்படுகிறது.

வங்கிகள் அரசின் கட்டுப்பாட்டிலும் ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழும் இயங்கிவரும்போதே இத்துணை தூரத்திற்கு கார்ப்பரேட் கொள்ளை நடந்திருக்கிறது என்றால், பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்பட்டால், பொதுமக்களின் சேமிப்புகளுக்கு என்ன பாதுகாப்பு கிடைக்கும்?

திருடனின் கையில் பெட்டிச் சாவியை ஒப்படைப்பதற்கும் வங்கி தனியார்மயத்திற்கும் இடையே வேறுபாடு காண முயலுவது மதியீனம்!

அறிவுமதி

– புதிய ஜனநாயகம் நவம்பர் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க