கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ரூ.10 லட்சம் கோடி மோசமான கடன்களை (bad loans) ‘தள்ளிவைப்பு’ செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதில் மோசமான விசயம் என்னவென்றால், இவ்வாறு தள்ளிவைக்கப்பட்ட கடன்களில் வெறும் 13 சதவிகிதத்தை மட்டுமே கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து மீட்டெடுக்க முடிந்தது. இந்தியன் எக்ஸ்பிரஸ்-இன் ஆர்.டி.ஐ தகவல் தற்போது இதை அம்பலப்படுத்தி உள்ளது.
மோடி அரசால் ‘பெரிய சீர்திருத்தம்’ என்று மெச்சிக்கப்பட்ட திவால் சட்டம் 2016-இன் (Insolvency and Bankruptcy Code, 2016) படுதோல்வியை இது எடுத்துக்காட்டுகிறது. கார்ப்பரேட்டுகள் இச்சட்டத்தை ஏன் கொண்டாடினார்கள் என்பதைத் தற்போது புரிந்து கொள்ள முடிகிறது. 87 சதவிகித கடன் ஹேர்கட் (இந்நிறுவனங்களிடமிருந்து கடனை மீட்க முடியவில்லை என்று வங்கிகளின் நட்டக்கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும் தொகை) ஆகிறது என்றால் கார்ப்பரேட்டுகளுக்கு உற்சாகம் ஏற்படாமலா இருக்கும்.
கொல்கத்தாவை மையமாக வைத்து தொழில் புரியும் பிரபல தொழிலதிபர் ஒருவர், திவால் சட்டத்தை யார் சாதுரியமாக பயன்படுத்துகிறார்கள் என்பது நகரில் ஒரு போட்டியாக உருவெடுத்துள்ளது என்று கூறினார். கார்ப்பரேட்டுகள் சராசரியாக 90 சதவிகிதம் கடனிலிருந்து ஹேர்கட் மூலம் தப்பிவிடலாம் என்றும் அவர் கூறினார். அவர் கூறியது உண்மைக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது என்பதை தற்போது கிடைத்துள்ள ஆர்.டி.ஐ தகவல் வெளிப்படுத்துகிறது.
படிக்க: ’ஹேர்கட்’ பெயரில் பொதுத்துறை வங்கிகளில் கார்ப்பரேட் கொள்ளை !
ரூ.10 லட்சம் கோடியில் வெறும் 13 சதவிகிதம் மட்டுமே மீட்கப்படுகிறது என்றால் அச்சட்டம் நடைமுறையில் எவ்வாறு அமல்படுத்தப்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். கடன் பெற்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் அதனைத் திருப்பி செலுத்தாவிட்டால், கடன் அளித்த வங்கிகள் கடனாளியின் சொத்துகளின் உரிமைகளை எடுத்துக்கொள்ளலாம். அவற்றை விற்பதன் மூலம் வங்கிக்கு ஏற்பட்ட நட்டத்தை ஈடு செய்து கொள்ளலாம்.
87 சதவிகிதம் ஹேர்கட் என்பது இச்சட்டம் பயனற்றது என்பதையே காட்டுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் தாங்கள் வாங்கிய கடன்களை தங்களின் நிறுவனங்களுக்கு வெளியே எடுத்துச் சென்று, வேண்டுமென்றே தங்கள் நிறுவனங்களை திவாலாக்கி, நீதிமன்றம் சென்று திவால் சட்டத்தின் கீழ் பார்த்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டு வங்கிகளில் இருந்து கொள்ளை அடிக்கிறார்கள். வெளித்தோற்றத்திற்கு இந்நிறுவனங்கள் நட்டமடைந்தது போல தோற்றம் அளிக்கும். ஆனால், அதிக இறக்குமதி செய்தது போல போலிக் கணக்கு காட்டிவிட்டு, வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் பணத்தைப் பதுக்கி வைத்து விடுவார்கள். இதுதான் கார்ப்பரேட்டுகள் காலங்காலமாக பின்பற்றும் வழிமுறை. அரசின் அரசியல் எதிரிகளை துரத்தி வேட்டையாடும் அமலாக்கத்துறை, கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அதே வீரியத்தை ஒருபோதும் காட்டுவதில்லை.
வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாமல் இருப்பவர்களின் (wilful defaulters) பட்டியலை வெளியிட வேண்டும் என்றும், அவர்கள் மீது முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் பிரதமர் அலுவலகத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் ரிசர்வ் வங்கியோ கடன் செலுத்தத் தவறிய கார்ப்பரேட்டுகளின் பட்டியலை இரகசியமாக வைத்துக் கொண்டது.
படிக்க: ரூ. 10,72,000 கோடி : மோடியின் ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்ட வாராக்கடன் !
இச்சட்டம் ஒரு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் கூடுதல் பின்னடைவைச் சந்தித்தது. கடனை திருப்பிச் செலுத்தாத நிறுவனங்களின் சொத்துக்களை எடுத்துக்கொள்ள கடன் கொடுத்த வங்கிகள் வேண்டுகோள் விடுத்தால் அதை ஏற்றுக் கொள்வதும் நிராகரிப்பதும் தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தின் (National Company Law Tribunal) விருப்பம் என்பதுதான் அந்த தீர்ப்பு. இந்த தீர்ப்பு வங்கிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. தள்ளி வைக்கப்பட்ட கடன்களில் 70 சதவிகிதம் பொதுத் துறை வங்கிகளில் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு வங்கிகள் கடன்களை தள்ளிவைப்பதற்காக (write off) அரசாங்கம் பல லட்சம் கோடிகளை வங்கிகளுக்கு அளிக்க வேண்டியுள்ளது. அதாவது, மக்களின் வரிப்பணம் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் ஓடிப் போன கார்ப்பரேட்டுகளின் கடனை சரிகட்ட பயன்படுத்தப்படுகிறது. நீதிமன்றங்கள் மூலம் அந்நிறுவனங்களின் சொத்துகளை விற்று மீட்டெடுப்பது என்பது மிக சொற்பமான அளவாகவே உள்ளது. மக்களின் வரிப்பணத்தைக் கொண்டு அரசு தங்களை காப்பாற்றும் என்ற தைரியத்தில் கார்ப்பரேட்டுகள் மீண்டும் கடன் வாங்குகிறார்கள்.
பொம்மி
நன்றி: தி வயர்