பரீஸ் பொலெவோய்

உண்மை மனிதனின் கதை | நான்காம் பாகம் | அத்தியாயம் – 08

ரெஜிமென்ட் கமாண்டர் சட்டைக்கையைத் தாழ்த்தி விட்டுக் கொண்டார். கடிகாரம் இனித் தேவையில்லை. இழைய வாரிவிடப்பட்டிருந்த தலை வகிட்டை இரு கைகளாலும் தடவி விட்டு உணர்ச்சியற்ற கட்டைக் குரலில், “இனி அவ்வளவு தான்” என்றார்.

“நம்பிக்கைக்கே இடமில்லையா?” என்று ஒருவன் கேட்டான்.

“அவ்வளவு தான். பெட்ரோல் தீர்ந்துவிட்டது. எங்காவது இறங்கியிருப்பான் அல்லது குதித்திருப்பான். ஒரு வேளை…. ஊம், ஸ்டிரெச்சரை எடுத்துப் போங்கள்!”

கமாண்டர் மறுபுறம் திரும்பி, மெட்டை இரக்கமின்றிச் சித்ரவதை செய்தவாறு ஏதோ பாட்டைச் சீழ்கை அடிக்கலானார். பெத்ரோவின் தொண்டையில் கொதிக்கும் இறுகிய கட்டி ஒன்று குமிழிப் போலே மேலே வந்து அடைத்துக் கொண்டது. அதனால் அவனுக்கு மூச்சு முட்டியது. விந்தையான இருமல் ஒலி கேட்டது. விமானத் திடலின் நடுவே இன்னும் மௌனமாக நின்று கொண்டிருந்த ஆட்கள் திரும்பிப் பார்த்தவர்கள் அக்கணமே முகங்களைத் திருப்பிக் கொண்டார்கள்: காயமடைந்த விமானி ஸ்டிரெச்சரில் கிடந்தவாறு விம்மி அழுதான்.

“இவனை எடுத்துக் கொண்டுபோய்த் தொலையுங்களேன்!” எள்று வேற்றுக் குரலில் கத்திவிட்டு, கூட்டத்திலிருந்து மறுபுறம் திரும்பி, வேகமான காற்றில் போலக் கண்களைச் சுருக்கிக் கொண்டு அப்பால் போய்விட்டார் கமாண்டர்.

ஆட்கள் திடலில் மெதுவாகக் கலைந்து செல்லத் தொடங்கினார்கள். அதே கணத்தில் ஒரு விமானம் நிழல் போன்ற நிசப்தத்துடன், சக்கரங்களால் பிர்ச் மர முடிகளின் மீது கோடிட்டவாறு காட்டோரத்தின் பின்னிருந்து வெளியே துள்ளி வந்தது. ஏதோ ஆவி போல ஆட்களின் தலைகளுக்கு உயரேயும் தரைக்கு மேலும் வழுகி, அதனால் ஈர்க்கப்பட்டது போன்று மூன்று சக்கரங்களும் ஒரே சமயத்தில் புல்லில் படும் படி இறங்கியது. மந்தமான ஒலியும் பரல்களின் நெறுநெறுப்பும் புற்களின் சரசரப்பும் கேட்டன. இந்த சத்தங்கள் அசாதாரணமாக இருந்தன, ஏனெனில் இயங்கும் எஞ்சினின் இரைச்சல் காரணமாக இந்த ஒலிகளை விமானிகள் ஒரு போதும் கேட்பதில்லை. இவை எல்லாம் சற்றும் எதிர்பாரா விதத்தில் நிகழ்ந்துவிட்டன. ஆதலால் என்ன நடந்தது என்று ஒருவருக்கும் நிச்சயமாகப் புரியக் கூட இல்லை. பார்க்கப் போனால் நடந்தது சர்வ சாதாரணமான விஷயம். ஒரு விமானம் வந்து இறங்கியது. அதாவது “பதினொன்றாவது”. எல்லோரும் அவ்வளவு ஆவலாக எதிர்பார்த்த அதே விமானம்.

“அவன்!” என்று ஒருவன் இயல்புக்கு மாறான வெறித்த குரலில் கத்தினான். பிரமை பிடித்தவர்கள் போல நின்ற ஆட்களை இந்தக் கத்தல் சுயநிலைக்குக் கொண்டுவந்தது.

விமானம் ஓட்டுவதை முடித்து சக்கரங்கள் கிறீச்சிடும்படி பிரேக் போட்டு, விமானத் திடலின் கோடியில், மாலைக் கதிரவனின் இளஞ்செங்கிரணங்களால் ஒளியுறுத்தப்பட்டு வெண் தண்டுகளும் சுருட்டை முடிகளுமாக இளகிய இளம் பிர்ச் மரச் சுவருக்கு எதிரே நின்றது.

இம்முறையும் விமானி அறையிலிருந்து ஒருவரும் வெளிவரவில்லை. ஆட்கள் விமானத்தை நோக்கித் தலைதெறிக்க ஓடினார்கள். அவர்களுக்கு மூச்சுத் திணறியது. ஏதோ அவலம் நேர்ந்துவிட்டதென்றே முன்னுணர்வு ஏற்பட்டது. ரெஜிமென்ட் கமாண்டர் எல்லோருக்கும் முன்னே ஓடி, இறக்கைமேல் துள்ளி அனாயசமாக ஏறி, வளைமுகட்டைத் திறந்து விமானி அறைக்குள் எட்டிப் பார்த்தார். அலெக்ஸேய் மெரேஸ்யெவ் தலைகாப்பு இன்றி, மஞ்சு போன்று வெளிறிப் போய் உட்கார்ந்திருந்தான். இரத்தம் செத்துப் பசிய நிறங்கொண்டிருந்த உதடுகளை விரித்துப் புன்னகை செய்தான். அழுத்தக் கடிக்கப்பட்ட கீழுதட்டிலிருந்து இரத்தம் இரண்டுத் தாரைகளாக மேவாயில் வழிந்தது.

“உயிரோடிருக்கிறாயா? காயம்பட்டிருக்கிறதா?” என்று கேட்டார் கர்னல்.

சோர்வுடன் முறுவலித்து, களைப்பினால் செத்துச் சாவடைந்த விழிகளால் அவன் கர்னலை நோக்கினான்.

“இல்லை. சௌக்கியமாயிருக்கிறேன். மட்டுமீறிக் கிலி கொண்டுவிட்டேன் … ஒரு ஆறு கிலோமீட்டர்கள் பெட்ரோல் இல்லாமலே வந்தேன்” என்றான்.

விமானிகள் ஆரவாரித்தார்கள், வாழ்த்தினார்கள், கைகுலுக்கினார்கள். அலெக்ஸேய் புன்னகையுடன் சொன்னான்:

“அண்ணன்மாரே, இறக்கைகளை முறித்துவிடாதீர்கள் இப்படிச் செய்யலாமா? எல்லோரும் மேலே ஏறி குந்தி விட்டீர்களே….. நான் இதோ இறங்குகிறேன்.”

அந்தச் சமயத்தில், தனக்கு மேலே கவிந்திருந்த இந்தத் தலைகளுக்கு அப்பாலிலிருந்து பழக்கமான, ஆனால் எங்கோ தொலைவிலிருந்து வருவது போல ஈனமாகக் குரல் ஒன்று அவனுக்கு கேட்டது.

“அலெக்ஸேய், அலெக்ஸேய்!” என்று அழைத்தது அது. அக்கணமே அலெக்ஸேய் புத்துயிர் பெற்றுவிட்டான். அவன் துள்ளி எழுந்து, கைகளால் விளிம்பைப் பற்றிக் கொண்டு கனத்த கால்களை வெளியே எடுத்துப் போட்டுத் தரையில் குதித்தவன், ஒருவனை இடித்துத் தள்ளத் தெரிந்தான்.

பெத்ரோவின் முகம் தலையணை போன்று வெளுத்திருந்தது. குழிந்து மங்கியிருந்த விழிகளில் இரண்டுப் பெரியக் கண்ணீர்த் துளிகள் ததும்பி நின்றன.

“தம்பீ! நீ உயிரோடிருக்கிறாயா? அட பயலே!” இவ்வாறு கூறி, அலெக்ஸேய் ஸ்டிரெச்சருக்கு முன்னே சிரமத்துடன் முழந்தாள் படியிட்டு, தோழனின் பலமற்றுத் துவண்டு கிடந்த தலையை அணைத்து அவனுடைய நீல விழிகளை விழி பொருந்த நோக்கினான். அவற்றில் துன்பம் படர்ந்திருந்தது, அதே சமயம் மகிழ்ச்சி சுடர்ந்தது.

“உயிரோடு இருக்கிறாயா?”

“நன்றி, அலெக்ஸேய், நீ என்னைக் காப்பாற்றினாய். அருமையானவன் நீ, அலெக்ஸேய், அருமையானவன்…….”

“காயமடைந்தவனை எடுத்துத்தான் போய்த் தொலையுங்களேன்! வாயை அங்காய்த்துக் கொண்டு நிற்கிறீர்களே!” என்று திடீரெனச் சீறினார் கர்னல்.

ரெஜிமென்ட் கமாண்டர் அருகே நின்று கொண்டிருந்தார். அவரது சிறுகூடான துடிதுடிப்புள்ள மேனி பளபளப்பான இறுகிய ஜொடுகள் அணிந்த கால்கள் மேல் அசைந்தாடிக் கொண்டிருந்தது. நீல விமானி உடைக்குக் கீழே தெரிந்தன காலணிகள்.

“சீனியர் லெப்டினன்ட் மேரெஸ்யெவ், பறப்பைப் பற்றி அறிக்கை செய்யுங்கள். சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்கள் உள்ளனவா?”

“உள்ளன, தோழர் கர்னல். இரண்டு ‘போக்கே-வுல்ப்’ விமானங்கள்.”

“சந்தர்ப்பச் சூழ்நிலை?”

“ஒன்று செங்குத்துத் தாக்கில். அது பெத்ரோவின் விமான வாலை ஒட்டிப் பறந்து கொண்டிருந்தது. இரண்டாவது பொதுச் சண்டையிடத்திற்கு வடக்கே மூன்று கிலோ மீட்டர் தொலைவில் தலைமோதல் தாக்கில் வீழ்த்தப்பட்டது.”

“தெரியும். தரை அவதானிக்கையாள் இப்போது தான் தகவல் தெரிவித்தான்….. நன்றி.”

“சோவியத் யூனியனுக்குத் தொண்டு செய்கிறேன்” என்ற வழக்கமான இராணுவப் பதில் வாக்கியத்தைச் சொல்ல வாயெடுத்தான் அலெக்ஸேய்.

ஆனால், வழக்கமாகக் குற்றங்கண்டு பிடிப்பவரும் விதிகளைக் கறாராக கடைப்பிடிப்பவருமான கமாண்டர் நட்புடன் அளவளாவும் குரலில் அவனை இடை முறித்தார்.

“அருமையான வேலை! நாளைக்கு ஸ்குவாட்ரன் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்…. மூன்றாவது ஸ்குவாட்ரனின் கமாண்டர் இன்று தளத்துக்குத் திரும்பவில்லை. அவருக்கு மாற்றாக….” என்றார்.

தலைமை அலுவலகத்துக்கு அவர்கள் நடந்து சென்றார்கள். அவருடைய பறப்புகள் முடிந்துவிட்டபடியால் கூடியிருந்தவர்கள் எல்லாரும் அவர்களைப் பின் தொடர்ந்தார்கள். தலைமை அலுவலகமிருந்த பசிய மேடு நெருங்கிவிட்ட போது அங்கிருந்து அவர்களை எதிர் கொண்டு ஓடிவந்தான் முறை அதிகாரி. வெறுந்தலையும் களிபொங்கும் முகமாக அவன் எதையோ கத்துவதற்கு வாயெடுத்தான். ஆனால் கர்னால் அவனைத் தடுத்து, வறண்ட, கடுமையான குரலில், “தொப்பி இல்லாமல் ஏன் வந்தீர்கள்? நீர் என்ன, இடைவேளையில் பள்ளிப் பையனா?” என்றார்.

“தோழர் கமாண்டர், பேச அனுமதியுங்கள்!” என்று விரைப்பாக நின்று ஒரே மூச்சில் விண்ணப்பித்துக் கொண்டான் லெப்டினன்ட்.

“ஊம்?”

“நமது அருகாமையிலுள்ள “யாக்” விமான ரெஜிமென்ட் கமாண்டர் உங்களை டெலிபோனில் கூப்பிடுகிறார்.”

“ஏன், என்ன விஷயம்?”

கர்னல் விர்ட்டென்று நிலவறைக்குள் பாய்ந்து புகுந்தார்.

“அவர் உன்னைப் பற்றித்தான்…..” என்று அலெக்ஸேயிடம் சொல்லத் தொடங்கினான் முறை அதிகாரி.

ஆனால் கீழிருந்து முழங்கிற்று கமாண்டரின் குரல்: “மெரேஸ்யெவை என்னிடம் அனுப்புங்கள்!”

படிக்க :
மொத்த 20 IIM-களுக்கும் சேர்த்து வெறும் 11 தலித் பழங்குடியின ஆசிரியர்கள் மட்டுமே !
சாக்கடை தூர்வாரும் பணியில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்காத அரசு !

மெரேஸ்யெவ் அவர் அருகே போய், இராணுவ முறைப்படி கைகளை உடையுடன் சேர்த்து வைத்தவாறு அசையாமல் நின்றான். கர்னல் டெலிபோன் குழாயை உள்ளங்கையால் முடிக் கொண்டு சீறி விழுந்தார்:

“என்ன நீங்கள் என்னைக் காலை வாரி விடுகிறீர்கள்? பக்கத்து ரெஜிமென்ட் கமாண்டர் டெலிபோனில் கேட்டார், ‘உம் பதினொன்றாம் எண் விமானத்தில் பறப்பது யார்?’ என்று. ‘சீனியர் லெப்டினன்ட் மெரேஸ்யெவ்’ என்றேன். ‘அவன் கணக்கில் எத்தனை விமானங்கள் எழுதினாய்?’ என்று கேட்டார். ’இரண்டு’ என்று சொன்னேன். ‘இன்னும் ஒரு விமானம் அவன் கணக்கில் எழுது. என்னை நெருங்கித் துரத்திய ஜெர்மன் விமானத்தை சுட்டு வீழ்த்தினான் அவன். பகை விமானம் தரையில் விழுவதை நானே கண்டேன்’ என்றார். ஊம்? என்ன பேசாமல் இருக்கிறீர்கள்? அவரிடமே பேசிக் கொள்ளுங்கள், இந்தாருங்கள். ஹலோ, கேள். சீனியர் லெப்டினன்ட்! மெரேஸ்யெவ் போன் அருகே நிற்கிறார். போனை அவரிடம் கொடுக்கிறேன்.”

பழக்கமற்ற கம்மிய குரல் அலெக்ஸேயின் காதில் இரைந்தது.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க