அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 46

அத்தியாயம் ஒன்பது | டியுர்கோ : சிந்தனையாளர், அமைச்சர், மனிதர்

அ.அனிக்கின்

தினாறாம் லுயீயின் கீழ் நிதித்துறைப் பொறுப்பாளராக டியுர்கோ பணியாற்றிய இரண்டு வருடங்களும் புரட்சிக்கு முந்திய பிரான்சின் வரலாற்றில் உணர்ச்சித் துடிப்புள்ள திடீர்த் திருப்பங்களைக் கொண்ட பகுதியாகும். அவர் செய்த சீர்திருத்தங்கள் வெற்றியடையவில்லை. ஏனென்றால் அன்று புரட்சியால் மட்டுமே திருத்தப்படக் கூடியனவற்றை அவர் சீர்திருத்தங்களின் மூலமாகச் செய்ய முனைந்தார்.

அந்த மனிதரிடம் ஏதோ ஒரு விதமான கற்பனாவாதத் தன்மை இருந்தது. உண்மை என்னவென்றால் அவர் இயற்கையிலேயே கற்பனாவாதி அல்ல, ஆனால் சந்தர்ப்பங்களின் நிர்ப்பந்தத்தினால் அவர் அப்படித் தோன்றினார்; அதிகமான அளவில் பகுத்தறிவுக்குப் பொருந்தக்கூடிய கருத்துக்களும் சாமர்த்தியமான நடவடிக்கைகளும் கூட சில சமயங்களில் கோமாளித்தனமாக முடிவதுண்டு. ஆனால் இந்த உதாரணம் இன்னொரு அம்சத்திலும் பொருத்தமானதே. டியுர்கோ தனிப்பட்ட முறையில் அதிகமான ஆன்மிகச் சிறப்பும் எந்த விதிவிலக்கும் இல்லாத உயர்ந்த கோட்பாடுகளும் அபூர்வமான தன்னல மறுப்பும் கொண்டவர். இவை பதினைந்தாம் லுயீ, பதினாறாம் லுயீயின் அரசவைகளுக்குச் சம்பந்தமில்லாத விசித்திரமான குணங்களாகும்.

சிந்தனையாளர்

டியுர்கோ 1727-ம் வருடத்தில் பாரிஸ் நகரத்தில் ஒரு பழைய நார்மன்டிய மேன் மக்கள் குடும்பத்தில் பிறந்தார். அந்தக் குடும்பம் நெடுங்காலமாக அரசுக்குச் சேவை செய்து வந்திருக்கும் மரபைக் கொண்டது. பாரிஸ் நகரத்தில் அவருடைய தகப்பனார் வகித்த பதவி இன்றுள்ள நகராட்சித் தலைவர் அல்லது மேயர் பதவிக்குச் சமமானதாகும். அந்தக் குடும்பத்தில் அவர் மூன்றாவது மகன்; மரபுப்படி அவர் திருச்சபையில் சேர வேண்டும். எனவே அன்றைய நிலைமைகளுக்கு மிகவும் சிறப்பான கல்வியை அவர் கற்றார். சமயக் கல்லூரியில் உயர்ந்த தகுதிகளோடு படிப்பை முடித்துக் கொண்டு பட்டம் பெறுவதற்காக ஸோர்போன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கே இருபத்து மூன்று வயது நிரம்பிய மதகுரு, ஸோர்போன் பல்கலைக்கழகத்துக்குப் புகழை ஈட்டித் தந்தவர், கத்தோலிக்க சமயத்தின் எழுச்சிச் சுடர் சமயப் பணிகளை மேற்கொள்வதில்லை என்று திடீரென்று முடிவு செய்தார்.

இது முதிர்ச்சியும் சிந்தனைத் தெளிவும் உடைய ஒரு மனிதரின் முடிவு. இந்தக் காலகட்டத்தில் அவர் ஆங்கிலச் சிந்தனையாளர்கள் எழுதிய புத்தகங்களைப் படித்தார், தத்துவஞான நூல்களைப் படிப்பதில் அதிகமான நேரத்தைச் செலவிட்டார். புற உலகம் முழுவதுமே மனித உணர்வின் படைப்பு என்று கூறிய அகநிலைக் கருத்துமுதல்வாதத்தை மறுத்துக் கூறுகின்ற பல தத்துவ நூல்களை அவர் எழுதினார். அவருடைய திறமையைக் கண்டு அவரது ஆசிரியர்களும் நண்பர்களும் அதிசயித்தார்கள். அவருக்கு ஆறு மொழிகள் நன்றாகத் தெரியும்; பல விஞ்ஞானங்களை ஆராய்ந்து கற்றிருந்தார்; அவருடைய நினைவாற்றல் குறிப்பிடத்தக்கதாகும். அவருக்கு இருபத்திரண்டு வயதாகும் பொழுது, காகிதப் பணத்தைப் பற்றி ஆராய்ச்சி மிக்க புத்தகத்தை எழுதினார், அதில் லோவின் திட்டத்தையும் அதன் குறைபாடுகளையும் பற்றி விமர்சித்தார். எனினும், இந்தக் காலகட்டத்தில் விரிவான தத்துவஞான வரலாற்றுச் சுற்றுவட்டத்திற்குள்ளாகத்தான் அவர் பொருளாதாரப் பிரச்சினைகளில் ஈடுபாடு காட்டினார்.

1752-ம் வருடத்தில் டியுர்கோ சட்ட ஆலோசகர் பதவியையும் பிறகு பாரிஸ் நாடாளுமன்றத்தின் சட்ட இலாகாவின் துணை சபாநாயகர் பதவியையும் வகித்தார். எனினும் பல துறைகளைப் பற்றியும் அவர் தீவிரமாகப் படிப்பதையோ, பாரிஸ் நகரத்தின் அறிவுலக வாழ்க்கை ஒன்று குவிக்கப்பட்டிருந்த வரவேற்புக் கூடங்களுக்குப் போவதையோ அவருடைய பதவிப் பொறுப்புகள் தடை செய்யவில்லை. இளைஞரான டியுர்கோ வெகுசீக்கிரத்திலேயே சமூகத்தின் மேன்மக்களிடையேயும் தத்துவஞானிகள் குழுவினரிடையேயும் அறிவிற்சிறந்தவர் என்று புகழடைந்தார். டிட்ரோ , ட அலம்பேர் மற்றும் அவர்களோடு கலைக்களஞ்சியத்தை உருவாக்குகின்ற பணிகளில் ஈடுபட்டிருந்த உதவியாளர்களிடமும் அவர் நெருங்கிப் பழகினார். கலைக்களஞ்சியத்துக்குத் தத்துவஞான, பொருளாதார விஷயங்களைப் பற்றி சில கட்டுரைகள் எழுதினார்.

Turgot
டியுர்கோ

முற்போக்கான நிர்வாகி என்று புகழ்பெற்ற வென்சான் குர்னே டியுர்கோவின் வாழ்க்கையில் அதிக முக்கியமான பாத்திரத்தை வகித்தார்; அவர் பொருளாதாரத்துறையில் டியுர்கோவுக்கு ஆசிரியரானார். குர்னே-பிஸியோகிராட்டுகளைப் போலன்றி- தொழில்துறையும் வர்த்தகமும் ஒரு நாட்டின் வளத்துக்கு மிக முக்கியமான தோற்றுவாய்கள் என்று கருதினார். எனினும் அவர்களோடு சேர்ந்து குர்னேயும் கைத்தொழிற் குழுக்களின் மீது விதித்த கட்டுப்பாடுகளைக் கண்டித்தார், சுதந்திரமான போட்டியை ஆதரித்தார். நாம் முன்னர் குறிப்பிட்டது போல “சுதந்திர உற்பத்தி, சுதந்திர வர்த்தகம்” என்ற பிரபலமான கருத்தை அவர் கூறியதாகச் சொல்லுவதுண்டு. டியுர்கோ அப்பொழுது சப்ளை இலாகாவின் அதிகாரி பதவியை வகித்த குர்னேயோடு தொழில், வர்த்தகத் துறைகளை மேற்பார்வையிடுவதற்காக மாநிலங்களில் சுற்றுப் பயணம் சென்றார்.

பாரிசுக்குத் திரும்பிய பிறகு குர்னேயோடு கெனேயின் “மாடியறை மன்றத்துக்கு” அவரும் போவதுண்டு; ஆனால் பிஸியோகிராட்டிய மரபினரின் அதிகத் தீவிரமான கருத்துக்களை அதற்கு முன்பாகவே அவர் ஒதுக்கிவிட்டிருந்தார். அவர் கெனேயின் முக்கியமான கருத்துக்கள் சிலவற்றை ஒத்துக் கொண்டார், தனிப்பட்ட முறையிலும் அவரிடம் அதிகமான மரியாதை கொண்டிருந்தார். எனினும் அந்த விஞ்ஞானத்தின் பல துறைகளில் அவர் தனக்கென்று ஒரு தனி வழியைப் பின்பற்றினார். குர்னே 1759-ம் வருடத்தில் மரணமடைந்தார். அவர் மரணமடைந்தவுடனே டியுர்கோ வெளியிட்ட குர்னேக்கு அஞ்சலி என்ற புத்தகத்தில் அவர் காலஞ்சென்ற தன்னுடைய நண்பரின் கருத்துக்களை விளக்கி எழுதியதோடு, தன்னுடைய பொருளாதாரக் கருத்துக்களையும் முதல் தடவையாக முறைப்படி விளக்கி எழுதியிருந்தார்.

1761-ம் வருடத்தில் லிமோஜ் என்ற நகரத்தில் சப்ளை இலாகாவில் அதிகாரியாக டியுர்கோ நியமிக்கப்பட்ட பொழுது அவருடைய விஞ்ஞான, இலக்கியப் பணிகள் தடைபட்டன. அவர் அங்கே பதிமூன்று வருடங்களைக் கழித்தார்; அவ்வப்பொழுது பாரிஸ் நகரத்துக்குப் போய் வருவதுண்டு. மத்திய அரசின் முக்கியமான பிரதிநிதி என்ற முறையில் அந்த மாநிலத்தின் எல்லாப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும் சப்ளை இலாகா அதிகாரியே பொறுப்பாக இருந்தார். எனினும் அரசரின் சார்பில் வரிகளை வசூலிப்பது தான் அவருடைய முக்கியமான வேலையாகும்.

அங்கே நிலவிய கடுகடுப்பூட்டும் யதார்த்தத்தைப் பற்றி டியுர்கோ பின்வருமாறு எழுதினார்: “இங்கே எழுதப் படிக்கத் தெரிந்த விவசாயிகள் அநேகமாக யாரும் இல்லை. இவர்களில் அறிவும் நேர்மையும் கொண்டவர்கள் வெகு சிலரே; தங்களுடைய நன்மைக்காகச் செய்யப்படுகின்ற சீர்திருத்தங்களைக் கூட எதிர்க்கும் முரட்டுப் பிடிவாதம் கொண்டவர்கள்”.(1)

ஆனால் டியுர்கோ மனந்தளரவில்லை. அவர் சுறுசுறுப்பானவர்; சுய நம்பிக்கையும் அதிகார தோரணையும் உடையவர் என்று கூட அவரைச் சொல்லலாம். அதிகமான கஷ்டங்கள் இருந்த போதிலும் அந்த மாநிலத்தில் பல சீர்திருத்தங்களைச் செய்யத் தொடங்கினார். வரி வசூலிக்கின்ற முறையை சுலபமாக்குவதற்கு முயற்சி செய்தார்; எல்லோராலும் வெறுக்கப்பட்ட கட்டாயமாக சாலை அமைக்கும் முறைக்குப் பதிலாக வேறு முறையைக் கொண்டு வந்தார். அந்த வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய கூலியுழைப்பின் மூலம் சாலைகளை நன்கு செப்பனிட்டு வைத்திருக்க வேண்டுமென்று வற்புறுத்தினார்; நல்ல சாலைகளை அமைத்துக் கொடுத்தார்; கால்நடைகளுக்கு வரும் தொத்து நோய்களையும் பயிர்களை அழிக்கும் கிருமிகளையும் ஒழிப்பதற்குத் தீவிரமான இயக்கம் நடத்தினார்; உருளைக் கிழங்கைப் பயிரிடுமாறு செய்தார்; தனக்கும் தன்னுடைய விருந்தினர்களுக்கும் உருளைக் கிழங்கில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை தினமும் பரிமாற வேண்டுமென்று தன்னுடைய சமையற்காரனுக்கு உத்தரவு கொடுத்ததன் மூலம் மற்றவர்களுக்கு உதாரணமாக விளங்கினார்.

எல்லாவற்றையும் தனிப்பட்ட முன்முயற்சிக்கும் சுதந்திரமான போட்டிக்கும் சம்பவங்களின் இயற்கையான வளர்ச்சிக்கும் விட்டுவிட வேண்டுமென்பது அவருடைய தத்துவமாகும். ஆனால் அந்த மாநிலத்தில் அறுவடைகள் மோசமாகி மக்கள் உணவு இல்லாமல் கஷ்டப்பட்ட பொழுது, இந்த நெருக்கடிகளைத் துணிச்சலாகவும் திறமையாகவும் சமாளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்ட பொழுது அவர் தம்முடைய தத்துவக் கோட்பாடுகளை ஒதுக்கி வைக்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டார். அவர் முற்போக்கும் இரக்க உணர்ச்சியுமுள்ள நிர்வாக அதிகாரியாக நடந்து கொண்டார். ஆனால் பதினைந்தாம் லுயீ ஆட்சி செய்த காலத்தில் அவரால் அதிகமாகச் செய்ய முடியவில்லை.

படிக்க:
உடல் நல ஆய்வு முடிவுகளை நம்பலாமா ?
♦ பொள்ளாச்சி பாலியல் குற்றத்துக்கு பெண்கள் தான் காரணம் ! இயக்குநர் கே. பாக்கியராஜ் பேச்சு !

அவர் லிமோஜிலிருந்த காலத்திலும் பாரிஸ் நகரத்துக்குப் போகும் பொழுதும் பிஸியோகிராட்டுகளின் வெற்றிகளைக் கூர்ந்து கவனித்தார். அவர் டுபோனோடு நட்புக் கொண்டு பழகினார்; பாரிஸ் நகரத்தில் ஆடம் ஸ்மித்தின் தொடர்பும் அவருக்குக் கிடைத்தது. எனினும் இந்தக் காலகட்டத்தின் போது அவர் அறிக்கைகளையும் கணக்குகளையும் அதிகாரபூர்வமான குறிப்புகளையும் சுற்றறிக்கைகளையுமே முக்கியமாக எழுதினார். அவருக்கு அபூர்வமாகக் கிடைத்த ஓய்வு நேரத்தில், எதிர்பார்க்கப்படாத பொழுதுகளில் மட்டுமே அவர் தன்னுடைய ஆழ்ந்த படிப்பைத் தொடர முடிந்தது.

ஆகவே 1766-ம் வருடத்தில் அவர் தன்னுடைய முக்கியமான பொருளாதார நூலாகிய செல்வத்தின் தோற்றம் மற்றும் வினியோகம் பற்றிய சிந்தனைகள் என்ற புத்தகத்தை எழுதிய பொழுது அதை ஒரு தற்செயலான சம்பவம் என்றே கூற வேண்டும். அந்தப் புத்தகத்தின் அடிப்படையான கருத்துக்களை வெகு காலத்துக்கு முன்பே அவர் சிந்தித்து முடிவு செய்திருந்தார்; அவற்றில் சிலவற்றை அவர் அரசாங்க ஆவணங்களில் எழுத்து வடிவத்திலும் குறித்து வைத்திருந்தார்.

இந்தப் புத்தகம் அசாதாரணமான வரலாறு உடையது. ஏசு நாதர் சபையைச் சேர்ந்த பாதிரிமார்கள் இரண்டு சீன இளைஞர்களை படிப்பதற்காகப் பிரான்சுக்குக் கூட்டிக் கொண்டு வந்திருந்தார்கள். நண்பர்களுடைய வேண்டுகோளின் பேரில் அந்த சீன இளைஞர்களுக்காக டியுர்கோ எழுதிய பாடபுத்தகம் அல்லது வழிகாட்டியே இந்தப் புத்தகம். டுபோன் இதை 1769-70-ம் வருடங்களில் வெளியிட்டார். அவர் வழக்கம் போல டியுர்கோவை ஒரு பிஸியோகிராட் என்று காட்டுகின்ற வகையில் அந்தப் புத்தகத்தைத் “திருத்தி” வெளியிட்டார்; அதன் காரணமாக அவர்களிருவருக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டது. 1776-ம் வருடத்தில் டியுர்கோ இந்தப் புத்தகத்தின் மறு பதிப்பைத் தானே வெளியிட்டார்..

அவருடைய சிந்தனைகள் மூதுரை வடிவத்தில் மிகவும் சிறப்பான முறையில் எழுதப்பட்டிருந்தது. அவற்றைப் படிக்கும் பொழுது பெட்டியின் மிகச் சிறந்த எழுத்துக்கள் நம் நினைவுக்கு வருகின்றன. அதில் நூறு சுருக்கமான பொருளாதாரத் தேற்றங்கள், ஆராய்ச்சிக் கருத்துக்கள் இருந்தன (இவற்றில் சில என்றுமே ஒத்துக்கொள்ளப்பட்டவை என்பது உண்மையே). டியுர்கோ எழுதிய தேற்றங்களை மூன்று தனிப் பகுதிகளாகப் பிரிக்க முடியும்.

முதல் தேற்றத்திலிருந்து முப்பத்தொன்றாம் தேற்றம் வரையிலும் டியுர்கோ ஒரு பிஸியோகிராட்டாக, கெனேயின் மாணவராக இருக்கிறார். எனினும் நிகரப் பொருள் என்ற தத்துவத்துக்கு அவர் கொடுக்கின்ற புது அர்த்தம் மார்க்சைப் பின்வருமாறு சொல்லத் தூண்டியது: “டியுர் கோவிடம் பிஸியோகிராட்டிய அமைப்பு மிக அதிகமான அளவுக்கு வளர்ச்சியடைந்தது”,(2) பிஸியோகிராட்டுகளின் அமைப்பின் வளர்ச்சி எனப்படுவது அவர்களுடைய போலியான ஆரம்ப முற்கோள்களல்ல, ஆனால் அந்த அமைப்பின் சுற்றுவட்டத்துக்குள் யதார்த்தத்தை மிக அதிகமான அளவுக்கு விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து விளக்குதலே. டியுர்கோ உபரி மதிப்பைப் புரிந்து கொள்வதை நோக்கி வந்து கொண்டிருக்கிறார் – உபரி எனப்படுவது “இயற்கையின் பரிசுத்தமான அன்பளிப்பு” என்பதிலிருந்து மாறி அது விவசாயியின் உழைப்பினால் படைக்கப்படுகிறது; முக்கியமான உற்பத்திச் சாதனமாகிய நிலத்தின் உடைமையாளர் அதைத் தனக்கு ஒதுக்கிவிடுகிறார் என்ற கருத்தை நோக்கி மிக நுட்பமான வகையில் முன்னேறி வருகிறார்.

இதற்கடுத்த பதினேழு தேற்றங்களும் மதிப்பு, விலைகள், பணம் ஆகியவற்றை எடுத்துக் கூறுகின்றன. இந்தப் புத்தகத்திலும் டியுர்கோவின் மற்ற நூல்களிலும் நூறு வருடங்களுக்குப் பிறகு முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் அமோகமாகச் செழித்து வளர்ந்த அகநிலைத் தத்துவங்களின் முதல் விதைகளைக் கண்டனர். மொத்த பிரெஞ்சு அரசியல் பொருளாதாரத்தையும் போல டியுர்கோ உழைப்பளவை மதிப்புத் தத்துவத்துக்கு வந்து சேரவில்லை. ஒரு பண்டத்தின் பரிவர்த்தனை மதிப்பும் விலையும் தேவைகளுக்கிடையே உள்ள உறவுகளினால், பரிவர்த்தனையில் ஈடுபடுகின்ற நபர்களுடைய, அதாவது விற்பனையாளர், வாங்குபவருடைய விருப்பங்களின் தீவிரத்தினால் நிர்ணயிக்கப்படுகின்றன என்பது அவருடைய கருத்து. ஆனால் டியுர்கோவின் இத்தகைய கருத்துக்கள் அவருடைய போதனையின் முக்கியமான அம்சங்களோடு அதிகமான தொடர்புடையவை அல்ல.

கடைசியாக வருகின்ற ஐம்பத்திரண்டு தேற்றங்கள் தான் அரசியல் பொருளாதார வரலாற்றில் மிகவும் கௌரவமான இடங்களில் ஒன்றை டியுர்கோ அடைவதற்கு உரிமையைக் கொடுக்கின்றன.

நாம் முன்னர் குறிப்பிட்டது போல பிஸியோகிராட்டுகள் சமூகத்தை உற்பத்தி செய்யும் வர்க்கம் (விவசாயிகள்), நில உடைமையாளர்கள், மலட்டு வர்க்கம் (மற்ற எல்லோரும்) என்ற மூன்று வர்க்கங்களாகப் பிரித்தனர். இந்தப் பகுப்பு முறையில் டியுர்கோ கூடுதலாக ஒன்றைச் சிறப்பாகச் சேர்க்கிறார். கடைசியாகச் சொல்லப்பட்ட வர்க்கத்தில் “இரண்டு உட்பிரிவுகள், இரண்டு வகைகள் இருப்பதாகச் சொல்லலாம். பட்டறைத் தொழில் அதிபர்கள், தொழிற்சாலை உடைமையாளர்கள் அதிகமான பணத்தை மூலதனமாக வைத்து அந்த முன்பணத்தைக் கொண்டு தொழிலாளர்களை உழைக்குமாறு செய்து லாபம் தேடுபவர்கள் எல்லோரும் முதல் வகையைச் சேர்ந்தவர்கள். தங்கள் கைகளைத் தவிர வேறு எவ்விதச் சொத்தும் இல்லாத சாதாரணமான தொழிலாளர்கள் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்கள் அன்றாட உழைப்பை மட்டும் தொழிலதிபர்களுக்குக் கொடுத்து கூலியைத் தவிர வேறு எந்த லாபமும் அடையாதவர்கள்.”(3) இந்தத் தொழிலாளர்கள் உயிரோடிருக்கத் தேவையான குறைந்தபட்ச அளவுக்குக் குறைவான கூலியே அவர்களுக்குக் கொடுக்கப்படுவதை டியுர்கோ வேறொரு பகுதியில் எடுத்துரைக்கிறார்.

இதே மாதிரியாக ”விவசாயி வர்க்கத்தினரையும் மலட்டு வர்க்கத்தினரைப் போல இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்: தொழிலதிபர்கள் அல்லது முதலாளிகளைப் போல எல்லா முன்பணங்களையும் கொடுப்பவர்கள் ஒரு பிரிவிலும் சாதாரணக் கூலி உழைப்பாளிகள் அடுத்த பிரிவிலும் அடங்குவர்” (4)

கெனேயின் மாதிரிப்படிவத்தில் சமூகம் மூன்று வர்க்கங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது; ஆனால் டியுர்கோ சமூகத்தை ஐந்து வர்க்கங்களாகப் பிரித்தார். இந்த மாதிரிப் படிவம் யதார்த்தத்தை அதிகமாக ஒட்டியிருந்தது. பிஸியோகிராட்டுகளுக்கும் இங்கிலாந்தைச் சேர்ந்த மூலச் சிறப்புடைய பொருளியலாளர்களுக்கும் இடையில் ஒரு பாலமாக டியுர்கோவின் மாதிரிப் படிவம் இருக்கிறது. மூலச் சிறப்புடைய பொருளியலாளர்கள் உற்பத்திச் சாதனங்களோடு கொண்டிருக்கும் உறவை அடிப்படையாக வைத்து சமூகத்தை நில உடைமையாளர்கள், முதலாளிகள், கூலி உழைப்பாளிகள் என்ற மூன்று முக்கியமான வர்க்கங்களாகப் பிரித்தார்கள். பொருளாதாரம் முழுவதையும் தொழில் துறை, விவசாயம் என்ற பிரிவுகளாக நிறுத்திவிட்டார்கள்; ஆனால் டியுர்கோ அவ்வாறு செய்யத் துணியவில்லை.

படிக்க:
நூல் அறிமுகம் : உபரி மதிப்பு என்றால் என்ன ?
♦ மூலதனம் நூலின் அனைத்து பாகங்களும் – PDF வடிவில் !

அவர் மூலதனத்தைப் பற்றிச் செய்த ஆராய்ச்சி அவருடைய மிகப் பெரும் சாதனைகளில் ஒன்றாகும். இது கெனே செய்த ஆராய்ச்சியைக் காட்டிலும் ஆழமானது, பலன் கொடுப்பது. மூலதனம் என்பது இயற்கையான வடிவங்களிலுள்ள பலவிதமான முன்பணங்களின் (மூலப் பொருள், கூலி, இதரவை) மொத்தம் என்று தான் கெனே பிரதானமாகக் கருதினார்; ஏனென்றால் அவரிடம் சமூகத்திலுள்ள வர்க்கங்களுக்கிடையே பொருளை வினியோகித்தல் பற்றிய பிரச்சினையோடு மூலதனம் போதுமான அளவுக்கு நெருக்கமாக இணைக்கப்பட்டிருக்கவில்லை. கெனேயின் அமைப்பில் லாபத்துக்கென்று இடம் கிடையாது; அவருடைய முதலாளி “நிர்வாகம் செய்ததற்காகக் கூலி வாங்கிக் கொண்டார்” என்று சொல்லப்பட்டது; ஆனால் இந்தக் ‘கூலியை’ நிர்ணயிக்கின்ற விதிகள் எவை என்பதைக் கெனே ஆராயவில்லை.

இங்கு தான் டியுர்கோ பெரிய அளவுக்கு முன்னேறிச் செல்கிறார். அவரால் “லாபம்” என்ற இனம் இல்லாமல் சமாளிக்க முடியவில்லை; இயல்பான அறிவுத்திறத்தோடு தொழில் முதலாளியிடமிருந்து தம்முடைய ஆராய்ச்சியைத் தொடங்குகிறார். இங்கே லாபம் எப்படித் தோன்றுகிறது என்பது மிக வெளிப்படையாகத் தெரிகிறது, ஏனென்றால் ”எல்லா உபரியுமே நிலத்திலிருந்துதான் வருகிறது” என்ற பிஸியோகிராட்டுகளின் தவறான எண்ணம் பிரச்சினையை மறைக்கவில்லை.

டியுர்கோ என்ற பிஸியோகிராட் ”இயற்கையான வரிசை முறையை மாற்றுவதற்கு” முன்னேறுகிறார், விவசாயத்தை இரண்டாவதாக மட்டுமே எடுத்துக் கொள்கிறார். ஆனால் அதற்காக அவர் மன்னிப்புக் கோருவது விந்தையானதே. ஏனென்றால் அவர் மன்னிப்புக் கோருவது அவசியமல்ல. இதற்கு மாறாக அவருடைய வாதம் மிகச் சரியானது. கூலி விவசாயிகளை உபயோகிக்கும் முதலாளித்துவ விவசாயி, தொழிற்சாலை உடைமையாளரைப் போலவே தன்னுடைய மூலதனத்தின் பேரில் அதே அளவு லாபமாவது பெற வேண்டும். இதோடு, நிலவுடைமையாளருக்கு வாரம் என்ற வகையில் கொடுப்பதற்காகச் சிறிதளவு உபரியும் சேர வேண்டும்.

இதில் மிகவும் வியப்பைத் தருவது அறுபத்திரண்டாவது தேற்றமே. உற்பத்தியில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் மூலதனம் சுய வளர்ச்சிக்கான திறமையைப் பெற்றிருக்கிறது. இந்த சுய வளர்ச்சியின் அளவை, அளவு விகிதத்தை நிர்ணயிப்பது எது?

மூலதனத்தினால் (உண்மையைச் சொல்வதென்றால் சம்பந்தப்பட்ட மூலதனத்தால் சுரண்டப்படுகிற உழைப்பினால்) படைக்கப்பட்ட பொருளின் மதிப்பு எதிலடங்கியிருக்கிறது என்பதை விளக்குவதற்கு டியுர்கோ முயற்சிகளைச் செய்கிறார். முதலாவதாக, தொழிலாளர்களின் கூலிகளையும் சேர்த்து ஏற்பட்டிருக்கும் மூல தனச் செலவை உற்பத்தி செய்யப்பட்ட பொருளின் மதிப்பு ஈடு செய்கிறது.(5) மற்றவை (அடிப்படையில் உபரி மதிப்பு) மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது.

அந்தப் பண மூலதனத்தின் உடைமையாளர் என்ற வகையில் முதலாளி ”எத்தகைய சிரமமும் இல்லாமல்” பெறக் கூடிய வருமானத்துக்குச் சமமாக இருக்கின்ற லாபம் முதற் பகுதியாகும். இது லாபத்தில் கடன் வட்டிக்குச் சரியாக வருகின்ற பகுதியாகும். தொழிற்சாலையில் அல்லது நிலத்தில் தன்னுடைய பணத்தை முதலீடு செய்ய முடிவு செய்கின்ற முதலாளியின் “உழைப்பு, அபாய நேர்வு, திறமை” ஆகியவற்றுக்குத் தரப்படும் கூலி லாபத்தின் இரண்டாம் பகுதியாகும். இது தொழிலூக்கத்தின் வருமானமாகும். ஆகவே டியுர்கோ தொழில்துறை லாபத்தில் ஒரு பிரிவைக் காண்கிறார் – பணத்தை கடனாகக் கொடுக்கும் முதலாளிக்கும் நிர்வாகம் புரிகின்ற முதலாளிக்கும் இடை யில் அந்தப் பிரிவினை உள்ளது.

நிலவாரம் மூன்றாவது பகுதியாகும். இது விவசாயத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் மூலதனத்துக்கு மட்டுமே இருப்பது. இந்த ஆராய்ச்சி பொருளாதார விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் ஒரு முன்னேற்றம் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் டியுர்கோ உடனே அதை விட்டு விலகிப் போய்விடுகிறார். லாபம் என்பது உபரி மதிப்பின் பிரதானமான, பொதுமையான வடிவம்; வட்டி, வாரம் ஆகிய இரண்டுமே அதிலிருந்து தான் கிடைக்கப் பெறுகின்றன என்ற சரியான கருத்தை விட்டுப் போய்விடுகிறார். முதலில் அவர் லாபத்தை வட்டி என்று வகைப்படுத்துகிறார்; குறைந்த பட்சமாக இதைப் பெறுவதற்கு ஒவ்வொரு முதலாளிக்கும் உரிமை உண்டு என்கிறார். தன்னுடைய நாற்காலியில் அமைதியாக உட்கார்ந்திருப்பதற்குப் பதிலாக தொழிற்சாலையின் புகைக்கும் வியர்வைக்கும் நெருப்பைப் போல எரிக்கும் வெய்யிலில் நடுவே சென்று தன்னுடைய தொழிலாளிகளை மேற்பார்வை செய்வதற்கு அவருக்குக் கொஞ்சம் கூடுதலாகவே கொடுக்க வேண்டும், விசேஷமான கூலி கொடுக்க வேண்டும். வட்டி, அதன் பங்குக்கு, நிலவாரமாக வகைப் படுத்தப்படுகிறது; ஏனென்றால் மூலதனத்தைக் கொண்டு ஒரு வயலை விலைக்கு வாங்கி அதைக் குத்தகைக்கு விடுவது தான் சுலபமாகச் செய்யக்கூடியதாகும். எனவே இப்பொழுது உபரி மதிப்பின் முக்கியமான வடிவம் நிலவாரமே, மற்றவை எல்லாம் அதிலிருந்து கிடைப்பவை மட்டுமே. மேலும் சமூகம் முழுவதுமே நிலத்திலிருந்து மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்ற “கூலிகளைக் கொண்டு உயிர்வாழ்கிறது”, டியுர்கோ இப்பொழுது பிஸியோகிராட்டுகளின் மடிக்குத் திரும்பிவிடுகிறார்.

மாபெரும் சிந்தனையாளர்களின் தவறுகளும் கூட முக்கியமானவை, அவை பலன் தருபவை என்பது நமக்குத் தெரியும். இது டியுர்கோவுக்கும் பொருந்துகின்றது. வெவ்வேறு வகையான மூலதன முதலீடுகளை ஆராய்கின்ற பொழுது அவர் மூலதனங்களின் போட்டி என்ற முக்கியமான பிரச்சினையை எழுப்புகிறார்; ஒரு முதலீட்டுத் துறையிலிருந்து வேறொரு துறைக்கு மூலதனத்தை மாற்றக்கூடிய சாத்தியத்தின் காரணமாக, லாபம் இயற்கையிலேயே சரி மட்டத்தை அடைவதைப் பற்றிய பிரச்சினையை எழுப்புகிறார். அடுத்தபடியாக, இந்தப் பிரச்சினைகளின் தீர்வுக்கு முக்கியமான அடி எடுத்து வைப்பவர் டேவிட் ரிக்கார்டோ. பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளின் மூலச் சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தில் ஏற்பட்ட இத்தகைய தேடல்கள் படிப்படியாக முன்னேறி மார்க்ஸ் காட்டுகின்ற தீர்வை அடைந்தன. அவருடைய மூலதனம் என்ற நூலின் மூன்றாவது புத்தகத்தில் லாபம் மற்றும் உற்பத்தி விலையின் தத்துவத்திலும் கடன் மூலதனம் மற்றும் வட்டியின் தத்துவத்திலும் நிலவாரத்தைப் பற்றிய தத்துவத்திலும் அவர் இந்தத் தீர்வை எழுதியிருக்கிறார்.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

 (1) D. Dakin, Turgot and the Ancien Regime in France, N.-Y., 1965, பக்கம் 37ல் இந்த மேற்கோள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

(2) K. Marx, Theories of Surplus-Value, Part I, p. 54.

(3) Turgot, Textes choisis et preface par Pierre Vigreux, Paris, 1947, p. 112.

(4) Ibid., p. 114.. 

(5) பொருளின் மதிப்பில் எதிர்பாராத செலவுகளுக்காக (கால்நடை நோய் முதலியன) ஒதுக்கிவைக்க வேண்டிய காப்புத் தொகையை டியுர்கோ விசேஷமாகக் குறிப்பிடுகிறார்.

 

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க