“பரமசிவனின் அருளால் இந்தக் கடவுச்சீட்டை வைத்துள்ளவர்கள் பதினான்கு லோகங்களிலும், பதினோரு பரிமாணங்களிலும், கைலாயத்திலும் நுழைய முடியும்” என்கிறது அந்த “நாட்டின்” இணையதளம்.  “கடவுச்சீட்டு வைத்துள்ளவர்களின் பக்தியையும், தனது பூலோக அவதாரத்துடன் ஒன்றியிருப்பதையும் கணக்கில் கொண்டு தன்னோடு ஏற்றுக் கொள்கிறார் பரமசிவன்” என்று மேலும் விவரிக்கிறது “அந்நாட்டின்” அதிகாரப்பூர்வ இணையதளம்.  இது பிற நாடுகளுக்கு பயணம் செய்ய பயன்படும் பாஸ்போர்ட் மட்டுமல்ல – கைலாயத்துக்காக கைலாயமே வழங்கும் பாஸ்போர்ட்.

ஆம் மக்களே, உருவாகிவிட்டது ஒரு புதிய நாடு. இந்துக்களுக்கேயான நாடு.

மேற்படி நாட்டின் பெயர் கைலாஷ். தேசம் என்றால் தேசப்பிதா இல்லாமலா, கைலாய நாட்டின் தேசப்பிதா நித்தியானந்த பரமஹம்ச; தேசத் தாய் ரஞ்சிதா. என்ன, அமிலத்தில் வாய் கொப்புளித்தது போல் இருக்கிறதா? இன்னும் இருக்கிறது மேலே செல்லுங்கள். ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்கிற கனவு எப்போது நித்தியானந்தாவுக்கு ஏற்பட்டிருக்கும் என்பதை இந்த விசாரணையின் போக்கில் நீங்களே புரிந்து கொள்வீர்கள். இந்த விசயம் வெளியே தெரிய வந்தது குஜராத் வழக்கைத் தொடர்ந்து என்பதால் அதை முதலில் பார்த்து விடுவோம்.

***

னார்தன் ஷர்மா என்பவருக்கு நான்கு பெண் குழந்தைகள். நித்தியானந்தாவின் முன்னாள் சீடர். கடந்த 2013-ம் ஆண்டு தனது நான்கு பெண் குழந்தைகளையும் பெங்களூரு, பிடதியில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் சேர்த்துள்ளார் ஷர்மா. அப்போது அவரது மூத்த மகளின் வயது 15தான். பின்னர் ஏதோ காரணங்களுக்காக நித்தியானந்தாவுடன் ஷர்மாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தனது மகள்களை தன்னோடு அனுப்பி வைக்குமாறு ஆசிரமத்தில் கேட்டுள்ளார். ஆனால், அங்குள்ள நிர்வாகிகள் ஷர்மாவின் பிள்ளைகளை அவரோடு அனுப்பாமல் அகமதாபாத்தில் நித்தியானந்தாவுக்கு சொந்தமான யோகினி சர்வக்ய பீடம் என்கிற ஆசிரமத்திற்கு இந்த ஆண்டு (2019) துவக்கத்தில் அனுப்பி வைத்துள்ளனர். குருகுலமாக செயல்பட்டு வந்த இந்த ஆசிரமம், அகமதாபாத்தில் உள்ள “தில்லி பப்ளிக் ஸ்கூல்” வளாகத்தில் நடத்தப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க :
♦ குழந்தைகள் கடத்தல் : நித்தியானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம் !
♦ கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட SVS கல்லூரி வாசுகி பாஜக-வில் இணைந்தார் !

இதற்கிடையே ஆசிரம நிர்வாகிகளிடம் சண்டையிட்டு தனது பிள்ளைகள் நால்வரில் இளையவர்கள் இருவரை மட்டும் மீட்டு வந்துள்ளார் ஷர்மா. தற்போது 21 வயதாகும் மூத்த மகளும், இரண்டாவது மகளும் ஷர்மாவோடு வர மறுத்துள்ளனர். தன்னுடைய பிள்ளைகள் ஆசிரமத்தில் கொடுமை செய்யப்படுவதாகவும், அவர்களை மீட்டுத் தருமாறும் கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார் ஷர்மா. இதையடுத்து ஷர்மாவின் மூத்த மகள் பேசுவது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது நித்தி தரப்பு. அந்த வீடியோவில், தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருடன் பாலியல் ரீதியில் உறவு வைத்துக் கொள்ள தனது பெற்றோர் வற்புறுத்துவதாகவும், தாங்கள் ஆசிரமத்திலேயே தங்க விரும்புவதாகவும் அந்தப் பெண்கள் பேசியுள்ளனர்.

இந்த வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து அகமதாபாத் ஆசிரமத்தில் கடந்த மாதம் (நவம்பர்) 30-ம் தேதி போலீசார் சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது வேறு மூன்று குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். ஆசிரமத்தின் நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சோதனைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய போலீசார், நித்தியானந்தா நாட்டை விட்டு சென்றிருக்க கூடும் என்றும், ஷர்மாவின் முதல் இரண்டு மகள்களும் அவருடன் சென்றிருக்க வேண்டும் என்றும் கூறினர். பின்னர் பத்திரிகைகளில் வெளியான தகவல்கள் அவ்விரு பெண்களும் நித்தியானந்தாவுடன் கரீபியன் தீவுகளுக்கு அருகே இருப்பதாகத் தெரிவித்தன.

ஏற்கெனவே பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டுகள் இருக்கும் நித்தியானந்தா தற்போது பிணையில் இருப்பதாகவும், எந்த நாட்டிற்கு ஓடி ஒளிந்தாலும் அவரை கைது செய்தே தீருவோம் என்றும்  குஜராத் போலீசார் பத்திரிகைகளில் தெரிவித்து வருகின்றனர்.

எந்த போலீசார்?  குஜராத் போலீசார்!! எந்த குஜராத்? பாஜக-வின் குஜராத்!!

ஹிந்து சாம்ராஜ்ஜியத்தின் பரிசோதனைச் சாலையான குஜராத்தின் போலீசார், ஒரு ஹிந்து துறவியின் மீதே நடவடிக்கை எடுக்கத் துணிந்துள்ளது.

வைரமுத்து – ஆண்டாள் விவகாரம் துவங்கி கடந்த காலங்களில் எப்போதெல்லாம் ஹிந்து ’ஸமூகத்திற்கு’ அபாயம் நேரிட்டதோ அப்போதெல்லாம் களமிறங்கி கம்பு சுழற்றுவதில் நித்தியானந்தாவும் அவரது சிஷ்யைகளும் முன்னணியில் நின்றதை யாரும் மறந்திருக்க முடியாது. ரஞ்சிதா விவகாரத்தை அடுத்து ஊரே நித்தியை காறித் துப்பிய நிலையில் அவரது “ஆன்மீக” சொற்பொழிவுகளுக்கு இடம் கொடுத்தது பாஜக ஆதரவாளர் நடத்திய லோட்டஸ் தொலைக்காட்சி என்பதையும் மறந்து விடக்கூடாது.

இந்து சாமியார்களுக்கும் இந்துத்துவ பரிவாரங்களுக்கும் இடையே உள்ள உறவு அப்படியொன்றும் இலைமறை காய் கிடையாது. ஜக்கி, ஸ்ரீ ஸ்ரீ, பாபா ராம்தேவ், மலையாள தேசத்து கட்டிப்புடி சாமியாரிணி, ராம் ரஹீம், பாபா ராம்பால், அசாரம் பாபு, நாகா சாமியார்கள், கங்கைக் கரையோர கஞ்சா குடிக்கிகள், பிரயாகையின் பிணந்தின்னி சாமியார்கள், பழனி படிக்கட்டில் வீற்றிருக்கும் நட்டு கழண்ட கேசுகள் – இப்படி கார்ப்பரேட் பாரின் சரக்கில் இருந்து லோக்கல் பேட்டரி சரக்கு வரை எல்லா சாமியார் மடங்களிலும் இந்துத்துவ பரிவார அமைப்புகள் துண்டைப் போட்டு வைத்துள்ளது ஊர் அறிந்த ரகசியம் தான். அந்த வகையில் ஆன்மீக ஜோடிகள் நித்தியானந்தா மற்றும் ரஞ்சிதாவோடு இந்த கும்பலுக்கு உறவிருந்ததில் ஆச்சர்யமில்லை.

படிக்க :
♦ கதவை திற… நாற்றம் வரட்டும் ! – நித்தியானந்தா கார்ட்டூன்
♦ ஜே.என்.யூ : விடுதி கட்டண உயர்வைக் கண்டித்து தேர்வு புறக்கணிப்பு !

நகமும் சதையுமாக, சொறிநாயும் உண்ணியுமாக தொடர்ந்த இந்த உறவில் விரிசல் ஏற்பட்டது ஏன்? நித்தியின் ஆன்மீக ஆராய்ச்சியை தடுக்க குஜராத் போலீசுக்கு துணிச்சல் வந்தது எப்படி? போன்ற விவரங்களெல்லாம் சிவ ரகசியம் என்பதால் நம்மைப் போன்றவர்கள் எந்தக் காலத்திலும் அறிந்து கொள்ளவே முடியாது. ஆனால், நித்தியானந்தா உருவாக்கி இருக்கும் இந்து ராஷ்டிரத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சில சுவாரசியமான தகவல்களைத் தருகின்றது.

***

நித்தியானந்தாவின் கைலாயத்தில் உள்நாட்டு பாதுகாப்பு, உள்துறை அமைச்சகம், ரிசர்வ் வங்கி, சுகாதாரத் துறை, கல்வித் துறை என பல்வேறு அரசு துறைகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் பொறுப்பான அதிகாரிகள் அல்லது அமைச்சர்கள் இருப்பார்கள். இந்த நாட்டிற்கென்று இரண்டு நிறங்களில் பாஸ்போர்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த நாட்டிற்குள் இந்துக்கள் மட்டுமே வாழ முடியும். மேற்படி “நாட்டை” சட்ட ரீதியாக உலகம் முழுவதும் பிரகடனப்படுத்த தேவையான அனுமதியை ஐ.நா சபையிடம் பெறுவதற்கான புரோக்கர் வேலைகளை  மேற்கொள்ளும் பொறுப்பு, அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

“கைலாசா என்கிற எல்லைகள் அற்ற இந்த தேசம் உலகெங்கிலும் உள்ள உரிமை பறிக்கப்பட்ட இந்துக்கள் தங்களது மத நம்பிக்கைகளை பின்பற்றவும், உண்மையான இந்து மத கோட்பாடுகளின் படி வாழவும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும்” என்று அறிவிக்கின்றது அதிகாரப்பூர்வ இணையதளம். மேலும், இந்துக்கள் தங்களது நம்பிக்கைகளை பின்பற்ற உலகெங்கும் (இந்தியா உட்பட) உள்ள தடைகள், மற்றும் 5000 ஆண்டுகளாக நடந்து வரும் “இந்து ஹாலோகாஸ்ட்” (இன அழிப்பு) குறித்த தகவல்களையும் மேற்படி இணையதளம் பட்டியலிடுகின்றது. “இந்துக்கள்” அனுபவித்து வரும் கொடுமைகளுக்கு நித்தியானந்தா தன்னையே ஒரு வகை மாதிரியாக பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே ரஞ்சி உடன் நித்தி நடத்திய ஆன்மீக ஆராய்ச்சிகளின் போது கதவைத் திறந்து காமெராவை நுழைத்த மத துரோகிகளுக்கு கைலாயத்தில் இடம் கிடைக்காது என்பது நிச்சயம். எந்த தொந்திரவுகளும் இன்றி நித்தியானந்தா போன்ற இந்துக்கள் தங்கள் மத வழக்கங்களின் படி வாழ ஒரு தேசம் உருவாகி விட்டது – அதாவது இந்து ராஷ்டிரம் அமைந்தே விட்டது. இப்போது ஒரு சிக்கல் எழுகின்றது. இந்து மதத்திற்கு கிறிஸ்தவ, இசுலாமிய, பௌத்த, சீக்கிய மதங்களில் உள்ளதைப் போல் ஒரு சட்டபுத்தகம் இல்லை. அதே போல் எந்த சட்டங்கள் எந்த காலகட்டங்கள் வரை, யாருக்கெல்லாம் செல்லுபடியாகும் என்பதை வரையறுக்கும் நூல்களோ – இவையெல்லாவற்றையும் கண்காணித்து கட்டுப்படுத்தும் ஒற்றை நிறுவனமோ இல்லை.

இந்து மதத்தில் இருப்பதெல்லாம் “மரபுகள்”. சமீபத்திய சபரிமலைத் தீர்ப்பின் படி அந்த மரபுகளைக் கூட யாரும் எப்படியும் எந்தக் காலத்திலும், என்ன நோக்கத்திற்காகவும் உருவாக்கி விட முடியும் என்று தெரிகிறது. உதாரணமாக அசைவம் தின்னக் கூடாது என்பதும் மரபு தான் – கோவிலிலேயே அசைவம் சமைத்து தின்னலாம் என்பதும் மரபு தான். அதிகாரத்தில் இருப்பது யார் என்பதைப் பொறுத்து ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு விதமாக அமல்படுத்திக் கொள்ளலாம். பாஜக போன்ற கட்சிகள் கையில் அதிகாரம் கிடைக்கும் போது முன்னதே மரபு என அமல்படுத்தப்படும்; அதை உச்சநீதிமன்றமும் அங்கீகரிக்கும்.

சரி, கைலாயம் என்கிற இந்து ராஷ்டிரத்தில் எம்மாதிரியான இந்து மரபுகள் எல்லாம் பின்பற்றப்படும்?

நிச்சயம் “ஆன்மீக ஆராய்ச்சிக்கு” பிரதான இடம் இருக்கும். அந்த “நாட்டின்” ரிசர்வ் வங்கி “க்ரிப்டோ” கரன்சியை ஏற்றுக் கொள்ளும் என்று அறிவித்திருப்பதால் நிழல் உலக தாதாக்கள், சட்டவிரோத ஆயுத வியாபாரிகள், சர்வதேச மாஃபியாக்கள், விபச்சார கும்பல் போன்றோருக்கு அது திறந்த மடமாக இருக்கும். அதைப் போன்ற தொழில்களே தர்மம், மரபு என்றும் எழுதி வைத்துக் கொள்ளலாம். யாரெல்லாம் இந்துக்களோ அவர்களே அந்த நாட்டின் குடிமக்களாக இருப்பார்கள் என்பதால், யாரெல்லாம் இந்துக்கள் இல்லை என்பதையும் அவர்களே தீர்மானிப்பார்கள் என்பதால் – தீண்டாமைச் சுவர் எழுப்பும் சிரமத்தை தவிர்த்துக் கொள்ளலாம்.

படிக்க :
♦ ஜெயேந்திரன் – நித்தியனாந்தா கும்பமேளா சந்திப்பு !
♦ பொறுக்கி நித்தியாவின் புகழ் பாடும் கொலைகார மோடி !

இந்து ராஷ்டிரத்தில் அனைவருக்கும் இலவச கல்வி – அதுவும் வேதங்களை அடிப்படையாக கொண்டது. இந்து ராஷ்டிரத்தின் பள்ளிகளில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து யானை முகமாக மாற்றிக் கொள்வது குறித்த பாடங்கள் இருக்கும். இந்துக்கள் தங்களுடைய பாரம்பரிய கலாச்சாரத்தை அமைதியான முறையில் பின்பற்றுவதற்கு கைலாயம் ஒரு சிறந்த இடம் என்கிறார்கள் – எனவே போலீசு தொந்திரவு இல்லாமல் வேத முறைப்படி சோம-சுரா பானங்களைக் காய்ச்சிக் கொள்ளலாம்.

ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடம் செல்ல வேதங்களில் சொல்லப்பட்டுள்ளதைப் போன்ற பறக்கும் கம்பளங்கள், ரதங்கள் போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். மகாரிஷி சுஷ்ருதரின் மருத்துவ முறைகளைப் பின்பற்றி கான்சருக்கும், அல்சருக்கும் பச்சிலை வைத்தியம் செய்யப்படும். பிள்ளைப் பேறு வேண்டி அசுவமேத யாகம் செய்யலாம். கணவனை இழந்த பெண்களை உயிரோடு  தீயிலிட்டு எஞ்சிய சாம்பலை ஒரு சொம்பில் வைத்து அந்த சொம்புக்கு ஒரு கோவில் கட்டிக் கொள்ளலாம்.  பெண் குழந்தைகள் பிறந்த உடனேயே திருமணம் செய்து வைத்து விடலாம்.

மொத்தத்தில் செத்து செத்து விளையாடலாம்.

ஆர்.எஸ்.எஸ் கும்பல் பல்லாண்டுகளாக முயன்றும் இந்தியாவில் இன்னமும் முழுமை பெற்று விடாத அவர்களின் “இந்து ராஷ்டிர” திட்டத்தை நித்தியானந்தா “ஜஸ்ட் லைக் தட்” நிறைவேற்றி முடித்துள்ளார். ஒருவேளை குஜராத் போலீசாரின் திடீர் ஆவேசத்திற்கு இதுவே கூட காரணமாக இருக்க கூடும். எனினும், இதுவரை நூற்றி முப்பது கோடி இந்துக்களுக்கென்று ஒரு தேசம் இல்லையே என்ற ஏக்கத்தோடு அலைந்து கொண்டிருந்த பரிவாரங்களுக்கு இப்போது நிம்மதி ஏற்பட்டிருக்கும். இந்துக்களுக்கென்று ஒரு தேசம் உருவாகி விட்டது.

ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்கள் இனிமேல் நிம்மதியாக கைலாயத்திற்கு டிக்கெட் வாங்கிச் சென்று விடலாம். நமக்கும் நிம்மதியாக இருக்கும்.


சாக்கியன்

3 மறுமொழிகள்

 1. புகார் கொடுத்தவர் சர்மா என்பதால்தான் இந்த விரைவான நடவடிக்கையாக இருக்கும் அல்லது பூணூல் அணிந்தவர்களால் இதுவரை அடைய முடியாத இந்து ராஜ்ஜியம் என்ற லட்சியத்தை பூணூல் போடாத தமிழ்நாட்டை சேர்ந்தவர் அடைந்து விட்டதன் அதிர்ச்சியாக கூட இருக்கும்.

 2. …வடகிழக்கு மாநிலம் பர்மா தாண்டி தாய்லாந்து வரை சாலைப் பயணம், அங்கிருந்து கப்பல் பயணம் என்று இப்போது தென் அமெரிக்கத் தீவில் இருக்கும் நித்யானந்தா மோடியோடும் மோதத் தயாராகிவிட்டார் என்பதைத்தான் அவர் ஐ.நா. சபைக்கு அனுப்பியிருக்கும் கடிதம் காட்டுகிறது. தனது நாட்டுக்கு அங்கீகாரம் கேட்டு ஐ.நா.வுக்கு நித்யானந்தா அனுப்பியிருக்கும் கடிதம். சர்ச்சைகளின் இன்னொரு பக்கத்தைக் காட்டுகிறது.
  (நித்தி சர்ச்சை தொடரும்)…..
  இப்படியாக…நவீண இராமபிரான் வனவாசம் முடிந்து சிம்மாசனம் ஏறிவிட்டார்.இனி அவரை இந்திய கிரிமினல் கோடு எல்லாம் தீண்டமுடியாது!
  சாட்சாத் மோடி சென்ற பாதையும் இதுதான். மோடியை குஜராத் கிரிமினல் என்று அனுமதி மறுத்த அமெரிக்கா பிறகு பிரதமர் ஆனதும் ஹவ் டு மோடி என்று ஆர்பரித்தது எப்படி?
  நல்லெண்ண பயணமாக மோடி நித்தி தேசத்திற்கு சென்று இரு தேசத்து உறவையும் மேம்படுத்தினாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை!
  ஜெய்!ஶ்ரீ ராம்!!

 3. Why you are wasting your time on writing this type of articles about this – Mad Psycho Criminals!!!
  IF WE HAVE POWER IN OUR HAND THIS PSYCHO COULD NOT BEEN ESCAPED A SINGLE SECOND…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க