உண்மை மனிதனின் கதை | ஆசிரியரின் பின்னுரை – 01

பின்னுரை

ர்யோல் பிரதேசத்துக்கான போர் சோவியத் சைனியத்தின் வெற்றியில் முடியும் தருவாயில் இருந்தது. வடக்கே இருந்து தாக்கிய முன்னணி ரெஜிமென்டுகள் க்ராஸ்னகோர்ஸ்க்கயா மேட்டிலிருந்து தாங்கள் தீப்பற்றி எரியும் நகரைக் காண்பதாக அறிவித்துவிட்டன. அந்தப் பிரதேசத்தில் நடவடிக்கைகளை நடத்திக் கொண்டிருந்த சண்டை விமான ரெஜிமென்டைச் சேர்ந்த விமானிகள் கடைசி ஒன்பது நாட்களில் நாற்பத்தேழு பகை விமானங்களைச் சுட்டு வீழ்த்தி விட்டார்கள் என்ற தகவல் அப்போது ப்ரியான்ஸ்க் முனைமுக அலுவலகத்துக்கு கிடைத்தது. இந்தக் காலப் பகுதியில் ரெஜிமென்டுக்கு நேர்ந்த இழப்புக்கள் ஐந்து விமானங்களும் மூன்று ஆட்களும் மட்டுமே, ஏனெனில் இரு விமானிகள் சேதமடைந்த விமானங்களிலிருந்து பாராஷூட்டுடன் குதித்து கால்நடையாக ரெஜிமென்டை அடைந்து விட்டார்கள் என்று தகவல் அறிவிக்கப்பட்டது. சோவியத் சைனியத்தின் பிரமாண்டமான தாக்குதல்கள் நடந்து கொண்டிருந்த அந்த நாட்களில் கூட இத்தகைய வெற்றி அசாதாரணமாக இருந்தது.

விமானிகளின் இந்த வீரச் செயல்கள் பற்றிப் “பிராவ்தா” செய்தித்தாளுக்கு எழுதும் நோக்கத்துடன் நான் தகவல் தொடர்பு விமானத்தில் இந்த ரெஜிமென்டுக்குச் சென்றேன்.

நாங்கள் விமான நிலையத்தை அடைந்தபோது மாலை ஆகிவிட்டது. ரெஜிமென்டின் கெடுபிடி நிறைந்த வேலை நாள் முடிந்துவிட்டது. அர்யோல் நகரின் அருகே ஜெர்மானியர்கள் விமான நடவடிக்கைகளைச் சிறப்பாகத் தீவிரப்படுத்தியிருந்தார்கள். ரெஜிமென்ட் சண்டை விமானங்கள் அன்று ஏழு முறை சண்டைப் பறப்புகள் நடத்த நேர்ந்திருந்தது. பொழுது சாயும் தருவாயில் கடைசிக் குழுக்கள் எட்டாவது பறப்புக்குப் பின் திரும்பி வந்திருந்தன. ரெஜிமென்ட் கமாண்டர் சிறு கூடான மேனியர். பழுப்பேறிய நிறமுள்ள துடியான மனிதர். புத்தம் புதிய நீல விமானி உடை அணிந்திருந்தார். அவரது முடி கச்சிதமாக நேர் வகிடு எடுத்து வாரிவிடப்பட்டிருந்தது. அன்று எதுவும் உருப்படியாக எனக்கு தெரிவிக்கும் நிலையில் தான் இல்லை என்றும், காலை ஆறு மணிமுதல் விமான நிலையத்தில் இருப்பதாகவும் தாமே மூன்று முறைப் பறப்பு நடத்தியதாகவும் களைப்பினால் இப்போது நிற்பதே தமக்கு அரும்பாடாக இருக்கிறது என்றும் அவர் ஒளிக்காமல் ஒப்புக் கொண்டார். மற்ற ஸ்குவாட்ரன் கமாண்டர்களுக்கும் பத்திரிக்கைப் பேட்டி அளிக்க அன்று நேரமில்லை. பேட்டியை அடுத்த நாளுக்கு ஒத்திப் போட வேண்டும் என்பதை நான் புரிந்து கொண்டேன். தவிர நேரமாகிவிட்டபடியால் அன்று திரும்பவும் முடியாது என்பது தெளிவாயிருந்தது. சூரியன் பிர்ச் மர முடிகள் மீது தனது கிரணங்களின் உருக்கிய தங்கத்தை ஊற்றிக் கொண்டிருந்தது.

கடைசி விமானங்கள் தரையில் இறங்கலாயின. எஞ்சின்களை நிறுத்தாமல் அவற்றை ஓட்டப் பாதையிலிருந்து நேரே காட்டோரத்துக்குச் செலுத்தினார்கள் விமானிகள். அங்கே மெக்கானிக்குகள் அவற்றை கைகளால் திருப்பினார்கள். முகட்டின் மேல் புல் பற்றைகள் பரப்பப்பட்டுப் பசேலென்றிருந்த காப்பிடத்துக்குள் விமானம் நின்ற பிறகே, களைத்து வெளிறிய விமானி தன் அறையிலிருந்து மெதுவாக வெளியே வந்தான்.

கடைசியாக நிலையம் சேர்ந்தது மூன்றாவது ஸ்குவாட்ரன் கமாண்டரின் விமானம். விமானி அறையின் ஒளிபுகும் வளைமுகடு திறக்கப்பட்டது. முதலாவது அங்கிருந்து வீசப்பட்டுப் புல் மேல் விழுந்தது பெரிய கருங்காலிக் கைத்தடி. அதன் மேல் தங்கக் கூட்டெழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. பிறகு, பழுப்பேறிய அகன்ற முகமும் கரிய முடியும் கொண்ட ஒருவன் வலிய கரங்களால் விளிம்பைப் பற்றிச் சட்டென எழுந்து லாவகமாக மறுபுறம் தாண்டி இறக்கை மேல் நின்றான். அங்கிருந்து சிரமத்துடன் தரையில் இறங்கினான். ரெஜிமென்டிலேயே சிறந்த விமானி என்று யாரோ என்னிடம் சொன்னார்கள். மாலை நேரத்தை வீணாக்க விரும்பாமல் அப்போதே அவனிடம் உரையாட நான் தீர்மானித்தேன். எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது, உயிரோட்ட முள்ள கரிய ஜிப்ஸிக் கண்களால் அவன் என்னைக் குதூகலம் பொங்க நோக்கினான். அந்த விழிகளில் தணியாத இளமை உற்சாகம் பெருக்கெடுத்தது. அதே சமயம், வாழ்க்கையில் நிறைய அடிபட்டுத் தேறிய அனுபவ சாலியின் அலுப்பும் விவேகமும் தென்பட்டன.

அவன் புன்னகையுடன் சொன்னான்; “கொஞ்சம் கருணை காட்டுங்கள்! மெய்யாகவே சொல்லுகிறேன், நிற்க மாட்டாமல் தள்ளாடுகிறேன். காதுகளில் நொய்யென்று இரைகிறது. நீங்கள் சாப்பிட்டாயிற்றா? இல்லையா? ரொம்ப நல்லதாயிற்று! சாப்பாட்டு அறைக்குப் போய், சேர்ந்து உண்போம். ஒரு பகை விமானத்தை வீழ்த்தியதற்கு இருநூறு கிராம் வோத்கா இரவு சாப்பாட்டின் போது கொடுப்பது எங்கள் ரெஜிமென்டில் வழக்கம். இதன்படி எனக்கு இன்று நாநூறு கிராம் வோட்கா கிடைக்கும். நம் இருவருக்கும் போதும். என்ன, போவோமா? சாப்பிட்டுக் கொண்டே பேசுவோம், உங்களுக்கு அவ்வளவு ஆவலாயிருந்தால்.”

நான் இசைந்தேன். கரவற்ற இந்தக் குதூகல இளைஞனை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. காட்டின் ஊடாக நேரே சென்ற ஒற்றையடிப் பாதையில் நாங்கள் நடந்தோம். அந்த இளைஞன் விரைவாக நடந்தான். நடு நடுவே குனிந்து காட்டுப் பெர்ரிப் பழங்களைப் பறித்து உடனே வாயில் போட்டுக் கொண்டான். அன்று அவன் மிகவும் களைத்துப் போனான் போலும், ஏனெனில் சிரமத்துடன் அடியெடுத்து வைத்தான். ஆனால் தனது விந்தைக் கைத்தடியை அவன் ஊன்றிக் கொள்ளவில்லை. கைத்தடி அவன் முழங்கையில் தொங்கிற்று. எப்போதாவது அதை எடுத்து ஈப்பொறிக் காளானை அடித்து முறித்தான், அல்லது ஏதோ புதரின் ரோஜா நிறக் கொண்டை மேல் அடித்தான். பள்ளத்தாக்கைத் தாண்டி வழுக்கலான செங்குத்துக் களிமண் மேட்டில் நாங்கள் ஏறிய போது விமானி புதர்களை ஆதரவாகப் பிடித்துக் கொண்டு மெதுவாக ஏறினான். ஆனால் அப்போதும் தடியை ஊன்றிக் கொள்ளவில்லை.

சாப்பாட்டு அறையை அடைந்தோமோ, அவனுடைய களைப்பெல்லாம் எங்கோ பறந்துவிட்டது. அவன் ஜன்னல் அருகே உட்கார்ந்து கொண்டான். குளிரான சிவந்த சூரிய அஸ்தமனம் அங்கிருந்து தெரிந்தது. விமானிகளின் குறிகளின் படி மறுநாள் காற்று வீசும் என்பதை இது முன்னறிவித்தது. இளைஞன் பெரிய குவளை நீரை ஆர்வமாக, ஓசையுடன் பருகினான். அழகிய சுருள் கூந்தல் கொண்ட உணவு பரிமாறுபவளிடம் கேலியாகப் பேசினான். மருத்துவமனையிலிருக்கும் தனது ஒரு நண்பன் மேல் உள்ள காதலால் உணவு பரிமாறுபவள் சூப்பில் அளவு மீறி உப்பு போட்டுவிட்டாள் என்று நகையாடினான். விருப்புடன் நிறைய சாப்பிட்டான், ஆட்டு விலாவெலும்புகளை வலிய பற்களால் ஒட்ட கறுவினான். பக்கத்து மேஜைகளைச் சுற்றி அமர்ந்திருந்த தோழர்களுடன் கேலிப் பேச்சுக்களைப் பரிமாறிக் கொண்டான். மாஸ்கோ செய்திகளை என்னிடம் விசாரித்தான். புதிய இலக்கிய வெளியீடுகள் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பினான். மாஸ்கோ தியேட்டர்களில் என்னென்ன நிகழ்ச்சிகள் நடக்கின்றன என்று ஆர்வத்துடன் கேட்டான். தான் அந்தத் தியேட்டர்களுக்கு ஒரு தடவைக் கூடப் போனதில்லை என்று அங்கலாய்த்தான். இங்கே ”புயல் மேகங்கள்” என்று அழைக்கப்படும் பில்பெர்ரி ஜெல்லியை நாங்கள் சாப்பிட்டு இரவில் முடித்ததும் அவன் கேட்டான்:

“நீங்கள் இரவில் எங்கே தங்கப் போகிறீர்கள்? இடம் இன்னும் நிச்சயமாகவில்லையா? நிரம்ப நல்லது. எனது நிலவறையில் தங்குங்கள்!” இவ்வாறு சொல்லிக் கண நேரம் முகத்தைச் சுளித்தான். பின்பு விளக்கினான்: “என் அறைக் கூட்டாளி இன்று பறப்பிலிருந்து திரும்பவில்லை… ஆகவே படுக்கை காலியாக இருக்கிறது. புதிய படுக்கைத் துணிகள் கிடைக்கும். போவோம் வாருங்கள்.”

அவன் எல்லாருடனும் கலகலப்பாகப் பழகுவதை விரும்புவன், புதிய ஆளுடன் உரையாடவும் அவன் அறிந்தவற்றை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும் அடங்கா ஆர்வம் உள்ளவன் என்பது தெளிவாகப் புலப்பட்டது.

நான் அவன் அறையில் தங்க இசைந்தேன். நாங்கள் பள்ளத்தாக்கிற்கு வந்தோம். அதன் இரு சரிவுகளிலும் மட்கிய இலைகள், ஈரக் காளான்கள் ஆகியவற்றின் மணம் வீசிய காட்டுப் புதர்களின் மறைவில் தோண்டப்பட்டிருந்தன நிலவறைகள்.

விளக்கின் புகையும் சுவாலை எரியத் தொடங்கி நிலவறைக்குள் வெளிச்சம் பரப்பியும் அறை இடமகன்றதாகவும் வசிக்க வசதியுள்ளதாகவும் காணப்பட்டது. மண் சுவர்களில் அமைந்த பிறைகளில், மணம் வீசும் புதிய வைக்கோல், அடைத்த நீர் கவறாத் துணி மெத்தைகள் மேல் கச்சிதமாக விரிக்கப் பட்டிருந்தன இரண்டு படுக்கைகள். அறையின் மூலைகளில் நின்றன இளம் பிர்ச் கன்றுகள். அவற்றின் இலைகள் இன்னும் வாடவில்லை. இந்தக் கன்றுகள் “நறுமணத்திற்காக” வைக்கப் பட்டிருந்ததாக விமானி விளக்கினான். படுக்கைகளுக்கு மேலே மண்சுவரில் ஒழுங்கான குறடுகள் அமைந்திருந்தன. அவற்றில் செய்தித்தாள் விரிப்புக்கள் மேல் புத்தக அடுக்குகளும், குளியல், சவர சாதனங்களும் வைக்கப்பட்டிருந்தன. ஒரு கட்டிலின் தலைமாட்டில் ஒளிபுகும் பிளாஸ்டிக் கண்ணாடிச் சட்டங்கள் போட்ட இரண்டு நிழல் படங்கள் மாட்டப்பட்டிருந்தன. நேர்த்தியான வேலைப்பாடுள்ள இந்தச் சட்டங்கள் விமானி தன் கைப்பட செய்தது என்பது தெரியவந்தது.

போர் நடவடிக்கைகள் ஓரளவு ஓய்ந்திருந்த நேரங்களில் கைத்தேர்ச்சியுள்ள ரெஜிமென்ட்காரர்கள் பொழுதைக் கழிப்பதற்காக இம்மாதிரிச் சட்டங்களைப் பகை விமானத் துண்டுகளிலிருந்து ஏராளமாக செய்வதுண்டு. மேஜையின் மேல், ராஸ்ப்பெர்ரிப் பழங்கள் நிறைந்த இராணுவ உணவுப் பாத்திரம் புர்டாக் இலையால் மூடி வைக்கப்பட்டிருந்தது. ராஸ்பெர்ரிப் பழங்கள், பசிய பிர்ச் கன்றுகள், வைக்கோல், தரையில் பரப்பப்பட்டிருந்த பிர்ச் மர கிளைகள் ஆகியவற்றிலிருந்து இன்பமான செழு மணம் வீசிக் கிளு கிளுப்பு ஊட்டியது. நிலவறையில் இனிமையும் ஈரிப்பும் உள்ள குளுமை பரவியிருந்தது. வெளியே பள்ளத்தாக்கில் தாலாட்டுவது போலச் சிலம்பின தத்துக் கிளிகள். இதமான சோர்வு உடல் முழுவதிலும் பரவியது. எனவே, ராஸ்ப்பெர்ரிப் பழங்களைத் தின்று கொண்டே உரையாடுவது என்று திட்டமிட்டிருந்த நாங்கள் அந்தத் திட்டத்தை காலை வரை ஒத்திப் போடத் தீர்மானித்தோம்.

படிக்க :
கைலாசா : நித்தியானந்தா உருவாக்கிய ஹிந்து ராஷ்டிரம் !
பாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை | காணொளி

விமானி வெளியே போனான். அவன் உரத்த சத்தத்துடன் பல் தேய்த்ததும், காடெல்லாம் ஒலிக்கும் படி தொண்டையை கனைத்துச் செருமியவாறு குளிர் நீரைத் தலையில் கொட்டிக் கொண்டதும் கேட்டது. குதூகலமும் புத்துணர்ச்சியும் சுடர் விடத் திரும்பி வந்தான் அவன். நீர்த் துளிகள் அவனது தலைமயிரிலும் புருவங்களிலும் காணப்பட்டன. விளக்கைச் சற்றுத் தணித்து விட்டு அவன் உடையைக் கலையலானான். ஏதோ பொத்தென்று தரையில் விழுந்தது. நான் திரும்பிப் பார்த்தேன். அங்கேக் கண்டதை என்னால் நம்ப முடியவில்லை. தரையில் பொய்க் கால்களை வைத்தான் அவன். கால்கள் இல்லாத விமானி! அதிலும் சண்டை விமானமோட்டி! இன்று மட்டுமே ஏழு போர்ப் பறப்புகள் நிகழ்த்தி இரண்டு பகை விமானங்களை வீழ்த்தியவன்! இது முற்றிலும் நடக்க முடியாததாகத் தோன்றியது.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க