“இங்கே நியாயம் தர்மம் இல்லை… மனுசங்க கிட்ட நியாயம் இல்லை…”

“என் புள்ளைங்க மூனு பேருக்கும் சயனைடு குடுத்துட்டேன்.. இப்போ நாங்களும் சாப்பிட போறோம். என் பொண்ணு மூச்சு திணறுதுடா.. ஏன்டா என்னை இந்த மாதிரி வாழ்க்கையை வாழ வெச்சிட்டீங்க.. சரி.. விடு.. நாங்களும் சாகதான் போறோம் கொஞ்ச நேரத்துல…”

“மூச்சு திணறுதுடா இனிமேல் என்னால் ஒன்னுமே பண்ண முடியாது.. ஜாலியா இருங்க. நீங்களாவது நிம்மதியா வாழ்ந்துட்டு போங்க இந்த உலகத்துல. விழுப்புரத்துல லாட்டரி சீட்டை ஒழிச்சிடுங்கடா..ப்பா.. 3 நம்பரை ஒழிச்சிடுங்க.. என்னை மாதிரி 10 பேராவது உயிரோட பொழைப்பான்.. இங்கே எவனும் யோக்கியம் கிடையாது.. நானும் யோக்கியம் கிடையாது.”

“வாழ்க்கையில யாருக்கும் தொந்தரவு தர மாட்டோம்.. எவனுக்குமே தொல்லை இல்லாம செத்து போகணும்.. இங்க வாழ முடியல.. பட்டறை வேலை செஞ்சு ஒரு மயிரையும் புடுங்க முடியாது.. புரியுதா..”

இறப்பதற்கு முன் அருண் தன் நண்பர்களுக்கு அனுப்பிய வாட்சப் காணொளியில் பேசியதில் இருந்து சில பகுதிகள்.

***

நெஞ்சை உலுக்கும் இந்த உரையாடலை தன் கைபேசியில் பதிவு செய்த அருண், அதைத் தனது நண்பர்களுக்கு அனுப்பி வைத்து விட்டு இறந்து போனார்.

விழுப்புரத்தில் உள்ள சித்தேரிக்கரை பகுதியைச் சேர்ந்த அருண் நகை செய்யும் தொழிலாளி. தன் வீட்டிலேயே ஒரு பட்டறை நடத்தி சிறிய அளவில் தொழில் செய்து வந்தார். அருணின் மனைவி சிவகாமி. இவர்களுக்கு பிரியதர்ஷினி, யுவஸ்ரீ, பாரதி என்று 3 பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்தவள் பிரியதர்ஷினிக்கு ஐந்து வயது, அடுத்தவள் பாரதிக்கு 3 வயது. கடைக்குட்டி யுவஸ்ரீ நான்கு மாதமே ஆன பிஞ்சுக் குழந்தை. அருண் குமாருக்கு சொந்தமாக வீடும் அதில் ஒரு நகைப் பட்டறையும் இருந்துள்ளது.

தற்கொலை செய்து கொண்ட நகை பட்டறைத் தொழிலாளி அருண் மற்றும் அவரது மனைவி சிவகாமி.

ஆரம்பத்தில் நன்றாகச் சென்று கொண்டிருந்த நகைத் தொழில் கடந்த சில ஆண்டுகளில் மெல்ல மெல்ல நலிந்து போயுள்ளது. தொழில் வாய்ப்புகள் அருகி வந்த நிலையில் வேறு வேலைகளும் கிடைக்காமல் அந்தக் குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளது. வறுமையில் இருந்து தப்பிக்க வழி தெரியாது தவித்த அருணுக்கு விழுப்புரத்தில் சட்ட விரோதமாக நடந்து வந்த மூன்று எண் லாட்டரி குறித்து தெரிய வந்துள்ளது. பல லட்சங்கள் வரை பம்பர் பரிசு விழும் என ஆசை காட்டியுள்ளனர். அதனை நம்பி கடந்த பல மாதங்களாக லாட்டரிச் சீட்டு வாங்கி வந்துள்ளார் அருண். 100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்கப்படும் 3 எண்கள் மட்டுமே கொண்ட இந்த லாட்டரிச் சீட்டுகளில் பரிசு விழுந்தால் அன்றன்றைக்கே பணத்தைக் கொடுத்து விடுவார்கள் என்றெல்லாம் ஆசை காட்டி விற்கின்றது சட்ட விரோத கும்பல்.

எனினும், சொன்னபடி லாட்டரியில் எந்த பரிசும் விழாத நிலையில் கடனாளியாகி உள்ளார் அருண். இந்நிலையில் இம்மாதம் 12-ம் தேதி அன்று இரவு தனது குழந்தைகளுக்கு நகை செய்ய பயன்படுத்தும் சயனைடு விஷத்தைக் கொடுத்து கொன்றுள்ளார். அதன் பின் தனது கைபேசியில் தனது கடன் பிரச்சினைகள் குறித்தும்; அதனால் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்று விட்டதையும் பேசி பதிவு செய்துள்ளார். மேலும், தானும் மனைவியும் அடுத்து விஷம் அருந்த உள்ளதாகவும் பேசி பதிவு செய்து அதைத் தன் நண்பர்களுக்கு அனுப்பி உள்ளார்.

வீடியோவைப் பார்த்து பதறிப்போன நண்பர்கள் அருணின் வீட்டைத் தேடி ஓடோடி வந்துள்ளனர். பூட்டப்பட்டிருந்த வீட்டை உடைத்து உள்ளே சென்றபோது அங்கே அருணும், அவரது மனைவியும், 3 குழந்தைகளும் சடலமாக கிடந்துள்ளனர். தகவல் அறிந்து வந்த விழுப்புரம் தாலுகா காவல்துறையினர் 5 பேரின் உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நகைத் தொழில் நசிவு காரணமாக ஏராளமான தொழிலாளர்கள் லாட்டரிச் சீட்டிற்கு அடிமையாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக அத்தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் கூறுகிறார்கள். 3 நம்பர் லாட்டரிச் சீட்டால் ஒரு குடும்பமே உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

படிக்க:
♦ நெல்லை : இசக்கிமுத்துக்களின் மரணத்திற்கு எப்போது பழி தீர்ப்போம் ?
♦ அமித்ஷாவின் பச்சைப் பொய் : பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதா ?

***

மிழ்நாட்டில் குட்கா, கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் விற்க தடை உள்ளது. ஆனால், ஆளும் கட்சி அமைச்சர்கள் மற்றும் போலீசு அதிகாரிகள் ஆசீர்வாதத்தோடு எல்லா இடங்களிலும் இவை நீக்கமற நிறைந்துள்ளன. அதே போல் லாட்டரிக்கும் சட்டரீதியான தடை உள்ளது – என்றாலும் தமிழகம் முழுவதும் சட்டவிரோத லாட்டரிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மாதிரிப் படம்

சட்டவிரோத மூன்று எண் மற்றும் ஒற்றை எண் லாட்டரி சீட்டுகளை நடத்துபவர்கள் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மாஃபியா கும்பலாகச் செயல்பட்டு வருவதோடு போலீசார், உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் வரை கீழிருந்து மேல் வரை முறையாக லஞ்சம் கொடுத்து விடுகின்றனர் (இது குறித்து விகடன் பத்திரிகையின் நிருபர்கள் நடத்திய கள ஆய்வை இந்த இணைப்பில் பார்க்கலாம்)

மக்கள் கூடும் இடங்களில் சட்ட விரோத லாட்டரி கம்பெனியின் ஏஜெண்டுகள் மக்களை அணுகுகின்றனர். ஒரு துண்டுச் சீட்டில் மக்கள் சொல்லும் மூன்று எண்களை எழுதி சீல் வைத்துக் கொடுத்து விட்டு அவர்களின் வாட்சப் எண்களை வாங்கிக் கொள்கின்றனர். மூன்று எண்கள் என்பது ஒரு செட் – இதன் விலை 60 ரூபாயில் இருந்து 100 ரூபாய் வரை இருக்கலாம். பம்பர் பரிசுத் தொகைக்கு ஏற்ப ஒரு செட்டின் விலையை நிர்ணயிக்கின்றனர். இவ்வாறு மூன்று எண்கள் கொண்ட நான்கு அல்லது ஐந்து செட்டுகளை அப்பாவி மக்கள் வாங்கிச் செல்கின்றனர். ஒரு தொழிலாளி இவ்வாறு நாளொன்றுக்கு ஏறத்தாழ 300 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாய் வரையும் கூட லாட்டரிக்காக செலவிடுகிறார்.

சீட்டில் கொடுக்கப்பட்ட மூன்று எண்களுக்கு பரிசு விழுந்தால் குறைந்தபட்சமான ஒரு தொகையும், கடைசி இரண்டு எண்களுக்கு பரிசு விழுந்தால் அதை விட கூடுதலான தொகையும், கடைசி எண்ணுக்கு விழுந்தால் மேலும் அதிகமான தொகையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மூன்று எண்களும் ”குலுக்கலில்” தெரிவானால் பம்பர் பரிசு என்கிறார்கள். இந்த “குலுக்கல்” ஆன்லைன் மூலமாக கேரளாவில் நடப்பதாக ஏஜெண்டுகள் சொன்னாலும், அது இங்கே தமிழகத்தில் தான் நடக்கிறது. ஒவ்வொரு நாள் மாலை, 6:00 மணிக்கு சீட்டுகளை வாங்கிச் சென்றவர்களின் வாட்சப் எண்ணுக்கு முடிவுகளை அனுப்புகின்றனர். பரிசு விழுந்தவர்கள் சீட்டைக் கொடுத்து பணத்தைப் பெற்றுச் செல்லலாம்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இவ்வாறான சட்டவிரோத லாட்டரிச் சீட்டு நடத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்தின் இரண்டு அமைச்சர்களுக்கு இந்த சட்ட விரோத லாட்டரிச் சீட்டு கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும், அவர்களுக்கும் பல்வேறு மட்டங்களில் உள்ள அதிகாரிகளுக்கும் முறையாக மாதா மாதம் கமிஷன் சென்று விடுவதாகவும் விகடன் பத்திரிகையின் செய்தி தெரிவிக்கிறது.

படிக்க:
இசக்கிமுத்து வழியில் தீக்குளித்த ஆசைத்தம்பி ! போலீசின் இலஞ்ச வெறிக்குப் பலி !
♦ மகன், மகள், தாயுடன் திருப்பூர் விவசாயி முத்துச்சாமி தற்கொலை !

***

ண மதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி வரி விதிப்பு என மத்தியில் ஆளும் மோடி அரசு நடத்திய பொருளாதார சர்ஜிக்கல் தாக்குதலின் விளைவாக சிறு குறு தொழில்கள் முற்றாக அழிந்து விட்டன. கிராமப்புற பொருளாதாரம் மொத்தமாக நலிந்து விட்டது. அதே நேரம் சிறு நகரங்களில் மக்கள் சொந்தமாக நடத்தி வந்த நகைப் பட்டறை உள்ளிட்ட சிறு பட்டறைத் தொழில்களும் முடங்கி விட்டன. இந்த சாதனைகளை எல்லாம் தனது முதல் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றி முடித்து விட்ட பிரதமர் நரேந்திர மோடி, தனது இரண்டாவது ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் எஞ்சிய தொழில்துறைகளின் மேல் கவனத்தை திருப்பி உள்ளார். இதன் விளைவாக பெரும் ஆலைகளில் ஆட்குறைப்பு, வேலைப் பறிப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பல கோடி தொழிலாளர்கள் பஞ்சைப் பராரிகள் ஆக்கப்பட்டு வருகின்றனர்.

மாட்டு வளைய மாநிலங்கள் என வருணிக்கப்படும் இந்தி பேசும் வட மாநிலங்களில் இவ்வாறு பிழைக்க வழியற்ற நிலையில் நிர்கதியாக்கப்பட்ட ஏழைகளுக்கு பசு பயங்கரவாதப் படைகள் வேலை வாய்ப்பு வழங்கப்படுகின்றது. பாகிஸ்தான் வெறுப்பு, இசுலாமிய வெறுப்பு என அந்த மாநிலங்களில் உதிரிகளாக்கப்படும் மக்கள் தொடர்ந்து ஏதாவது ஒரு “அரசியல்” நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தமிழ் நாட்டில் பாரதிய ஜனதாவுக்கும் இந்துத்துவத்துக்கும் செல்வாக்கு இல்லை என்பதால் அவர்களின் அடிமைகளான எடப்பாடி பன்னீர் ஜோடியின் அடிமையரசு இது போன்ற சட்ட விரோத லாட்டரிகள் மூலம் தொழில் இழந்த வேலை இழந்த வாழ்க்கை இழந்த மக்களை “கவனித்து” கொள்ளும் பணியை ஆற்றி வருகின்றனர்.

அருணின் வாட்சப் வீடியோவைக் கேட்டால் நெஞ்சம் பதறுகின்றது. ஆசையாகப் பெற்று பார்த்துப் பார்த்து வளர்த்த ஒரு பெண் குழந்தையின் வாயில் அவளின் தந்தையே நஞ்சைப் புகட்டுவதை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. அப்படி ஒரு நிலைக்கு அருணை தள்ளி விட்ட இந்த அடிமை அரசை என்ன செய்யலாம் நண்பர்களே?


சாக்கியன்
செய்தி ஆதாரம் : நியூஸ் 18.

2 மறுமொழிகள்

  1. சும்மா அரசாங்கத்தை குறை சொல்ல வேண்டாம். சட்ட விரோத லாட்டரி என்று தெரிந்தும் கடன் வாங்கி லாட்டரி வாங்கியது யார் தவறு….பேராசை பெருநஷ்டம்.

  2. சில்லாக்கிடும்மா அவர்கள் இந்திய ராஜபக்சேவின் ஆதரவாளர் போலும்…சயனைடு கரைசலில் கரைந்து போன ஐந்து உயிர்களுக்கும் யார்தான் பொறுப்பு?சயனைடைக்காட்டிலும் ஆபத்தானவை அதிமுக எனும் இந்த காவி அடிமைகள்..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க