“இந்த நிலம் என்னுடையது; ஆனால், நான் இந்த நிலத்திற்குரிய உரியவன் அல்ல!” – இந்த வரிகள், வங்க – அசாமிய முசுலிமான காஸி நீல் என்ற இளம் கவிஞனுடையது. அவனது வலி மிகுந்த இந்த வரிகள் இன்று, குடியுரிமைச் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்த பிறகு, அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் மேற்கு வங்கத்திலும் குடியேறி, இந்தியக் குடிமக்களாகவே மாறிவிட்ட வங்கதேச முசுலிம்களின் அவலத்தை, எதிர்கால அச்சத்தைப் பிரதிபலிப்பதாக மாறிவிட்டது.

1955-ல் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டம் இந்திய நாட்டில் பிறந்த அனைவரும் இந்தியக் குடியுரிமை பெறும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. பிரிவினையின்போதும், அதன் பின்னரும் குடிபெயர்ந்தவர்கள் குடியுரிமை பெறுவதற்கும்கூட மதம் வரையறையாக வைக்கப்படவில்லை.

அசாமில் சட்டவிரோதமாகக் குடியேறியிருப்பவர்களை வெளியேற்றும் ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, “இந்தியக் குடியுரிமை பெற விண்ணப்பிப்பவர்களின் பெற்றோர்களில் ஒருவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்” எனக் குடியுரிமைச் சட்டத்தில் நிபந்தனை விதிக்கப்பட்டு, 1987-ல் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

2004-ல் வாஜ்பாயி ஆட்சியில் இந்த நிபந்தனை மேலும் கடுமையாக்கப்பட்டது. குடியுரிமைக்காக விண்ணப்பிப்பவர்களின் பெற்றோர்களில் ஒருவர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும் என்பதோடு, மற்றவர் சட்டவிரோதக் குடியேறியாக இருக்கக் கூடாது என அச்சட்டம் திருத்தப்பட்டது. இந்தத் திருத்தம் இந்தியாவில் குடியேறியிருக்கும் வங்கதேச முசுலிம்களையும், அவர்களது வாரிசுகளையும் ஒதுக்கி, சட்டவிரோத ஊடுருவல் பேர்வழிகளாகக் காட்டும் உள்நோக்கத்தைக் கொண்டிருந்தது.

மோடியின் ஆட்சியில் தற்பொழுது கொண்டுவரப்பட்டிருக்கும் சட்டத் திருத்தமோ, மிகவும் வெளிப்படையாகவே இந்தியாவில் குடிபெயர்ந்து வாழ்ந்துவரும் முசுலிம்களை மட்டும் தனிமைப்படுத்தி, ஒதுக்குகிறது.

“பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து எவ்வித ஆவணங்களுமின்றி, டிசம்பர் 31, 2014 முன்பாக இந்தியாவில் குடியேறியிருக்கும் இந்துக்கள், பௌத்தர்கள், கிறித்தவர்கள், பார்சிக்கள், சமணர்கள் மற்றும் சீக்கியர்கள் ஆகிய மதப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களைச் சட்டவிரோதக் குடியேறிகளாகக் கருதக் கூடாது. மேலும், அவர்கள் மீது கடவுச்சீட்டுச் சட்டம், வெளிநாட்டினர் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தால், அவ்வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்” எனக் குறிப்பிடுகிறது, அத்திருத்தம்.

மேலும், இச்சட்டத் திருத்தத்திற்கு முன்பு இந்தியாவில் குடியுரிமை பெற விண்ணப்பிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் இந்தியாவில் பதினொரு ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை உண்டு. ஆனால், மோடி கொண்டுவந்திருக்கும் இச்சட்டம் குறிப்பிட்ட இந்த ஆறு மதத்தினருக்கு அக்காலக்கெடுவை ஐந்து ஆண்டுகளாகக் குறைத்துவிட்டிருக்கிறது.

இச்சட்டத் திருத்தம் இந்துக்களுக்குத் தனிச் சலுகை அளிக்கும் விதத்தில் கொண்டுவரப்படவில்லை எனக் காட்டுவதற்காகவே, அந்நிய மதமென ஆர்.எஸ்.எஸ். கும்பலால் கூறப்படும் கிறித்தவம் இதில் சேர்க்கப்பட்டிருக்கிறது. மேலும், இச்சட்டத் திருத்தத்தில் ஆறு மதங்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதனின் உள்நோக்கம், அசாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் குடியேறியிருக்கும் வங்கமொழி பேசும் இந்துக்களுக்கு உடனடியாகக் குடியுரிமை வழங்குவதுதான்.

வங்க தேசத்திலிருந்து இந்தியாவில் குடியேறியிருக்கும் முசுலிம்கள் இந்தியக் குடியுரிமை பெற பலவிதமான ஆவணங்களைக் காட்டித் தாங்கள் சட்டவிரோதக் குடியேறிகள் இல்லை என நிரூபிக்க வேண்டியிருக்கும் நிலையில், வங்கமொழி பேசும் இந்துக்கள் எந்தவொரு ஆவணமும் இன்றி, தமது மத அடையாளம் ஒன்றை மட்டுமே வைத்துக்கொண்டு குடியுரிமை பெறுவதற்கு இச்சட்டத் திருத்தம் வழி ஏற்படுத்திக் கொடுக்கிறது.

பாபர் மசூதி நிலத்தை இந்துத் தரப்பிற்கு வாரிக் கொடுக்க மத நம்பிக்கை; இந்துக்களுக்குக் குடியுரிமை வழங்க மத அடையாளம் – இதன் பிறகும் இந்தியாவை மதச்சார்பற்ற நாடு என நம்புவதற்கு ஏதாவது பொருளுண்டா?

படிக்க:
மோடி – அமித்ஷாவுக்கு காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது : போராட்டக்களத்தில் பேசும் பதாகைகள் !
♦ குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்தியர்கள் நாங்கள் எதிர்க்கிறோம் ! – வழக்கறிஞர் பாலன்

துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் அல்லது அத்தகைய அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருக்கும் மதச் சிறுபான்மையினர் என்ற மனிதாபிமான அடிப்படையில்தான் ஆறு மதத்தினருக்குக் குடியுரிமை வழங்கச் சலுகை அளிக்கப்பட்டிருப்பதாக மோடி அரசு கூறினாலும், மோடி அரசு நிறைவேற்றியிருக்கும் திருத்தத்தில் மதச் சிறுபான்மையினர் என்றோ, அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பவர்கள் என்றோ குறிப்பிடப்படவில்லை. அச்சட்டத் திருத்தம் மத அடையாளத்தை மட்டுமே பேசுகிறது.

பாகிஸ்தானில் இந்துக்களைவிட, அஹமதியா முசுலீம்கள்தான் கொடூரமான அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் மதச் சிறுபான்மையினர். பர்மிய இராணுவம் ரோஹிங்யா முசுலிம்கள் மீது இனப் படுகொலை நடத்தியிருப்பது உலகெங்கிலுமே அம்பலமாகியிருக்கிறது. ஈழத் தமிழர்கள் சிங்கள பேரினவாதத்தால் இனப் படுகொலைக்கு ஆளாகியுள்ளனர்.

இவர்களையெல்லாம் ஒதுக்கிவிட்டுக் கொண்டுவரப்பட்டிருக்கும் இச்சட்டத் திருத்தம் யூதர்களுக்கு இசுரேல் போல, இந்துக்களுக்கு இந்தியா என்பதை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது. அதற்கேற்ப, இச்சட்டத் திருத்தத்தில் கூறப்பட்டிருக்கும் நிபந்தனைகள், வரம்புகளை எதிர்காலத்தில் மாற்றும் அதிகாரத்தையும் மைய அரசிற்கு அளித்தே இச்சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

“இந்துக்கள் அல்லாதவர்கள், எந்தவொரு உரிமையினையும் சலுகையினையும் கோராமல், இந்து தேசத்திற்குக் கீழ்ப்படிந்து இந்த நாட்டில் வாழலாம்” என ஆர்.எஸ்.எஸ்.- சித்தாந்த குரு கோல்வால்கர் கூறியிருப்பதற்கு ஏற்ப, இந்து இந்தியாவை உருவாக்குவதுதான் ஆர்.எஸ்.எஸ்.- இறுதி நோக்கம். அதனை நோக்கிச் செல்லும் திசையில் எடுத்து வைக்கப்பட்டிருக்கும் அடுத்த அடிதான் இந்தச் சட்டத் திருத்தம்.

நாடெங்கும் குடிமக்கள் பதிவேட்டினை நடைமுறைப்படுத்தப் போவதாக அமித் ஷா அறிவித்திருப்பதையும் இந்தப் பின்னணியிலிருந்துதான் பார்க்க முடியும்.
அதேசமயம், இச்சட்டத் திருத்தத்தின் உடனடி நோக்கம் அசாம் மாநிலத்தில் நடத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெறாமல், சட்டவிரோதக் குடியேறிகளாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் வங்கமொழி பேசும் இந்துக்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கி அம்மாநிலத்தில் இந்து வாக்குவங்கியை உருவாக்கிப் பராமரிப்பதுதான்.

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக அசாம் மாநிலத் தலைநகர் கவுஹாத்தியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)

“மார்ச் 21, 1974-க்கு பிறகு அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் அனைவரையும், மத வேறுபாடின்றி வெளியேற்ற வேண்டும்” என்பதுதான் அசாம் மக்களின் கோரிக்கை. ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த சமயத்தில் போடப்பட்ட அசாம் ஒப்பந்தமும் அதனைத்தான் கோருகிறது.

ஆனால், மோடி அரசோ அந்த ஒப்பந்தத்தைச் சிதைக்கும் நோக்கில் அசாம் மாநிலத்தில் குடியேறியிருக்கும் வங்கமொழி பேசும் இந்துக்களுக்குச் சலுகை அளிக்கும் விதத்தில் இச்சட்டத் திருத்தத்தை உருவாக்கியிருக்கிறது. மேலும், அசாம் ஒப்பந்தத்தில் விதிக்கப்படிருந்த காலக்கெடுவையும் இந்துக்களுக்கு மட்டும் டிச.31, 2014 என நைச்சியமாக மாற்றியமைத்துவிட்டது.

இச்சட்டத் திருத்தம் வடகிழக்கு மாநிலங்களின் அனைத்துப் பகுதிகளுக்கும் பொருந்தாது என மோடி அரசு விளக்கம் அளித்தாலும், அச்சமாதானத்தை அசாமியர்கள் யாரும் நம்பவில்லை. இச்சட்டத் திருத்தத்துக்கு எதிராக அசாமில் தொடங்கிய போராட்டம் திரிபுரா, மணிப்பூர், நாகலாந்து, அருணாச்சலப் பிரதேசம் எனப் பரவி வருகிறது.

இந்திய அரசு என்பது இந்து அரசுதான் என்பதை இச்சட்டத் திருத்தத்தின் மூலம் சட்டபூர்வமாகவே பிரகடனப்படுத்தியிருக்கிறது, மோடி அரசு. அயோத்தி, காஷ்மீர் விவகாரங்களும் இந்த நடவடிக்கையும் முஸ்லிம் மக்களுக்கு மட்டுமே எதிரானவை என்று கருதிக் கொண்டிருப்போர், இது ஓர் பேரழிவின் தொடக்கம் என்பதை விரைவிலேயே அனுபவித்து உணர்ந்து கொள்வார்கள்.

– புதிய ஜனநாயகம், டிசம்பர் 2019

மின்னூல் :

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart