அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 55
உழைப்புப் பிரிவினை
ஆடம் ஸ்மித் உழைப்புப் பிரிவினையைச் சமூக உழைப்பின் உற்பத்தித் திறனின் வளர்ச்சியில் முக்கியமான காரணியாகச் சித்திரிக்கிறார். கருவிகளும் இயந்திரங்களும் கண்டுபிடிக்கப்பட்டதையும் அவை அபிவிருத்தி செய்யப்பட்டதையும் அவர் உழைப்புப் பிரிவினையோடு இணைக்கிறார்.
ஸ்மித் குண்டூசி தொழிற்சாலையைப் பற்றிய அவருடைய பிரபலமான உதாரணத்தைக் கூறுகிறார்; அந்தத் தொழிற்சாலையில் தொழிலாளர்களின் சிறப்புத் தேர்ச்சியினாலும் நடவடிக்கைகள் அவர்களுக்கிடையே பிரித்துக் கொடுக்கப்பட்டிருப்பதனாலும் உற்பத்தி பல மடங்கு அதிகரிப்பது சாத்தியமானதாகக் கூறுகிறார். அவருடைய புத்தகம் நெடுகிலும் உழைப்புப் பிரிவினை என்பது ஒரு வகையான வரலாற்று ரீதியான முப்பட்டைக் கண்ணாடியாக இருக்கிறது; அதன் மூலமாகவே அவர் பொருளாதார நிகழ்வுப் போக்குகளை ஆராய்கிறார்.
சமூகத்தின் “செல்வம்”, அதாவது பொருள்களின் உற்பத்தி மற்றும் நுகர்வின் அளவு இரண்டு காரணிகளைப் பொறுத்திருக்கிறது என்று ஸ்மித் எழுதுகிறார்.
1) மக்கள் தொகையில் பயனுள்ள உழைப்பில் ஈடுபட்டுள்ளவர்களின் விகித அளவு.
2) உழைப்பின் உற்பத்தித் திறன் ஆகியவை அக்காரணிகளாகும்.
இரண்டாவது காரணியே ஒப்பிட முடியாத அளவுக்கு மிக முக்கியமானது என்று அவர் தொலைநோக்கோடு நம்பினார். உற்பத்தித் திறனை நிர்ணயிப்பது எது என்ற கேள்வியைக் கேட்டு அதற்கு உழைப்புப் பிரிவினையே என்ற பதிலைக் கொடுக்கிறார். இந்தப் பதில் அவருடைய காலத்துக்கு முற்றிலும் தர்க்க ரீதியானதாகும். முதலாளித்துவ வளர்ச்சியில் பட்டறைத் தொழில் கட்டத்தில், இயந்திரங்கள் இன்னும் அபூர்வமாகவும் உடல் உழைப்பே மேலோங்கியுமிருந்த காலத்தில், உற்பத்தித் திறனின் வளர்ச்சியில் முக்கியமான காரணியாக இருந்தது உழைப்புப் பிரிவினைதான்.
உழைப்புப் பிரிவினை இரு விதமாக இருக்கலாம். ஒரு தொழிற்சாலையில் வேலை செய்கின்ற தொழிலாளர்கள் வெவ்வேறு நடவடிக்கைகளில் சிறப்பான அனுபவம் பெறுகின்றனர்; எல்லோரும் சேர்ந்து ஒரு பூர்த்தியடைந்த பொருளை, உதாரணமாகக் குண்டூசியைத் தயாரிக்கின்றனர். இது ஒரு வகை.
அடுத்தது சமூகத்தில் தனி ஆலைகளுக்கும் பிரிவுகளுக்கும் இடையே உள்ள உழைப்புப் பிரிவினை – முற்றிலும் வேறு விதமான தாகும். கால்நடைகளை வளர்ப்பவர் கால்நடைகளை வளர்க்கிறார்; அவற்றைக் கசாப்புக் கடைக்காரரிடம் இறைச்சிக்காக விற்பனை செய்கிறார். கசாப்புக் கடைக்காரர் அவற்றைக் கொன்று அவற்றின் தோலைத் தோல் வியாபாரியிடம் விற்பனை செய்கிறார். அவர் அந்தத் தோலைப் பதனிட்டு செருப்புத் தைப்பவரிடம் விற்பனை செய்கிறார்……
ஸ்மித் இந்த இரண்டு வகைகளைச் சேர்ந்த உழைப்புப் பிரிவினையையும் குழப்பிக் கொள்கிறார். முதல் வகையில் வாங்குவதும் விற்பனை செய்வதும் இல்லை, ஆனால் இரண்டாவது வகையில் அவை உள்ளன-அவற்றுக்கிடையே உள்ள இந்த அடிப்படையான வேறுபாட்டை அவர் பார்க்கவில்லை. அவர் மொத்த சமூகத்தையுமே ஒரு பிரம்மாண்டமான தொழிற்சாலையாகவும் உழைப்புப் பிரிவினை என்பது “நாடுகளின் செல்வத்தின்” நன்மைக்காக மனிதர்கள் ஈடுபடுகின்ற பொருளாதார ஒத்துழைப்பின் சர்வாம்ச வடிவமாகவும் கருதினார். அவர் முதலாளித்துவ சமூகத்தை சாத்தியமான ஒரே சமூகமாகவும் இயற்கையானதாகவும் அழிவில்லாததாகவும் பொதுவான முறையில் கருதினார். உண்மையில் ஸ்மித் கண்ட உழைப்புப் பிரிவினை தனி வகையில் முதலாளித்துவ ரீதியானது என்பது அதன் முக்கியமான கூறுகளையும் விளைவுகளையும் நிர்ணயிக்கிறது. அது ஏதோ சமூகத்தின் முன்னேற்றத்தை மட்டும் ஊக்குவிக்கவில்லை ; மூலதனத்துக்கு உழைப்பு கீழ்ப்படுவதை வளர்த்து வலுப்படுத்தியது.
படிக்க :
♦ இந்திய மெய்யியல் வரலாற்றில் தமிழர்களின் இடம் என்ன ? | பொ.வேல்சாமி
♦ மோடி ஆட்சியில் வருமான வரி ஏய்ப்பு, பண மோசடிக்கு இனி குற்றவிலக்கு !
மற்ற பல பிரச்சினைகளைப் போலவே இந்தப் பிரச்சினையிலும் ஸ்மித் இரு பக்கத்தன்மை கொண்டவராக இருக்கிறார். அவர் தம்முடைய நூலின் தொடக்கத்தில் முதலாளித்துவ உழைப்புப் பிரிவினையை வாயாரப் புகழ்கிறார்; ஆனால் இன்னொரு பகுதியில் அது தொழிலாளியின் மீது மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறதென்று வாதிடுகிறார்.
“உழைப்புப் பிரிவினை முன்னேற்றமடைகின்ற பொழுது உழைத்துப் பிழைக்கின்ற மிகப் பெரும் பகுதியினர், அதாவது மக்களில் பெருந்திரளானவர்களின் வேலையானது ஒரு சில மிகச் சுலபமான – பெரும்பாலும் ஒன்று அல்லது இரண்டு நடவடிக்கைகளோடு நின்றுவிடுகிறது….. அவனுடைய (தொழிலாளியினுடைய-ஆ-ர்) சொந்தத் தொழிலில் அவனுக்குள்ள கைத்திறன் அவனுடைய அறிவு, சமூக, போராட்டத் தகுதிகளை இழந்து இவ்விதமாக அடையப்படுவது போலத் தோன்றுகிறது. ஆனால் முன்னேற்றமும் நாகரிகமும் அடைந்த ஒவ்வொரு சமூகத்திலும் உழைக்கின்ற ஏழைகள், அதாவது மக்களில் மிகப்பெரும் பகுதியினருக்கு ஏற்படுகின்ற நிலை இது தான். இதைத் தடுப்பதற்கு அரசாங்கம் ஏதேனும் முயற்சிகளைச் செய்யவில்லை என்றால் இந்த நிலை தவிர்க்க முடியாததாகும்.” (1) மூலதனத்துக்கு, முதலாளித்துவ உற்பத்திக்கு எந்த ஆதரவும் இல்லாத ஒட்டுப் பகுதியாக, மார்க்ஸ் குறிப்பிட்ட “பகுதி உழைப்பாளியாகத்” தொழிலாளி மாற்றப்படுகிறான்.
இந்த மேற்கோளின் கடைசி வாக்கியம் நம் கவனத்தைக் கவர்கிறது. சுதந்திர உற்பத்திக்கு நிபந்தனையில்லாமல் ஆதரவு கொடுக்கின்ற ஒருவரிடம் இதை நாம் எதிர்பார்க்கவில்லை. முதலாளித்துவத்திடம் ஒரு ஆபத்தான போக்கு இருப்பதை ஸ்மித் உணர்ந்திருக்கிறார் என்பதே இங்கேயுள்ள உண்மையாகும். எல்லாவற்றையுமே இயல்பான போக்கைப் பின்பற்றுமாறு விட்டுவிட்டால் மக்கள் தொகையில் கணிசமான பகுதி சீரழிந்து விடுகிற ஆபத்து ஏற்படும். இதைத் தடுப்பதற்கு அரசைத் தவிர வேறு விதமான எந்த சக்தியையும் அவர் பார்க்க முடியவில்லை.
உழைப்புப் பிரிவினையையும் பண்டப் பரிவர்த்தனையின் நிகழ்ச்சிப் போக்கையும் வர்ணித்த பிறகு ஸ்மித் பணத்தைப் பற்றிய பிரச்சினையை எழுப்புகிறார். பணம் இல்லையென்றால் முறையான பரிவர்த்தனை என்பது இயலாததாகும். அவர் நான்காம் அத்தியாயத்தில் பணத்தின் தன்மையையும் மற்ற பண்டங்களிலிருந்து வேறுபட்ட ஒரு விசேஷமான பண்டமாக – எக்காலத்துக்கும் உரிய சமமதிப்பு என்பதாக அது தோற்றமெடுத்த வரலாற்றையும் உணர்வு பூர்வமாக விவாதிக்கிறார். இது ஒரு சிறிய அத்தியாயமாகும். ஸ்மித் பணத்தையும் கடன் வசதியையும் பற்றி அடிக்கடி எழுதுகிறார். எனினும் இந்தப் பொருளாதார இனங்கள் அவருடைய எழுத்தில் அற்பமான பாத்திரத்தையே வகிக்கின்றன.
படிக்க :
♦ முதலாளிகளின் மூலதனம் எங்கிருந்து வந்தது?
♦ நடுநிசி நடுவழியில் மேல்கோட்டை பறித்த வழிப்பறிக்காரர்கள் !
பணத்தைப் பொருளாதார நிகழ்வுப் போக்குகளை சுலபமாக்குகின்ற தொழில் நுட்பக் கருவியாக மட்டுமே அவர் பார்க்கிறார்; அதை “செலாவணியின் மாபெரும் சக்கரம்” என்று அழைக்கிறார். கடன் வசதியை மூலதனத்தைச் சுறுசுறுப்பாக்குகின்ற சாதனமாக மட்டுமே கருதுகின்றார், அதைப் பற்றி ஒரு சிறிதே கவனம் செலுத்துகிறார். அவர் பணத்தையும் கடன் வசதியையும் உற்பத்தியிலிருந்து பரிணமிக்கச் செய்தார், உற்பத்தியோடு சார்ந்த வகையில் அவற்றின் கீழ்நிலைப் பாத்திரத்தைக் கண்டார் என்பதில் தான் அவர் கருத்துக்களின் சிறப்பு அடங்கியிருக்கிறது. ஆனால் இவையும் ஒரு தரப்பான, குறுகிய கருத்துக்களாக இருந்தன. பணவியல் மற்றும் கடன் காரணிகள் அடைகின்ற சுதந்திரத்தையும் உற்பத்தியின் மீது அவை செலுத்துகின்ற தலைகீழான மாபெரும் தாக்கத்தைப் பற்றியும் அவர் குறைத்து மதிப்பிட்டார்.
நாடுகளின் செல்வத்தின் முதல் நான்கு அத்தியாயங்களும் படிப்பதற்குச் சுலபமானவை, அவற்றிலுள்ள செய்திகளும் சுவாரசியமானவை. ஸ்மித்தினுடைய போதனையின் மூலப் பகுதியான மதிப்புத் தத்துவத்துக்கு அவை ஒரு விதத்தில் அறிமுகமாகப் பயன்படுகின்றன. அதன் தொடக்கத்தில் இந்தப் பொருள் “மிக அதிகமான அளவுக்கு சூக்குமத்தன்மை” கொண்டிருக்கின்ற படியால் வாசகர் “பொறுமையாகவும் கவனத்தோடும்” படிக்க வேண்டுமென்று ஸ்மித் மனதாரக் கேட்டுக் கொள்கிறார்.
(தொடரும்…)
அடிக்குறிப்புகள் :
(1) A. Smith, The Wealth of Nations, Vol. II, London, 1924, pp. 263, 264.
தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:
அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983