தேசிய மக்கள் தொகை பதிவேட்டை (NRC) நடைமுறைப்படுத்துவதற்காக ரூ.3000 கோடிக்கு மேல் நடுவண் அரசு நிதி ஒதுக்கி உள்ளது. ஆனால் இதை செயல்படுத்தப் போவதில்லை என சில மாநில அரசுகள் அறிவித்துள்ளன. விரைவில் தொடங்க உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு, இந்த தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) திட்டம் ஆதாரமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் இயற்றும் எந்த ஒரு சட்டமும் நாடு முழுவதற்கும் செல்லத்தக்கது. அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 256 -இன் படி இதை நடைமுறைப்படுத்த வேண்டியது ஒவ்வொரு மாநில அரசின் கடமையாகும். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு போன்றவற்றை செயல்படுத்த முடியாது என்று சொல்வதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதா என்கிற கேள்வி இங்கு எழுகிறது. ஆனால் இத்தகைய திட்டங்கள் சட்டத்தின் ஒரு பகுதியா என்பதிலிருந்தே இதற்கான விடையைத் தேட வேண்டும்.

இந்தக் கேள்வி மிக முக்கியமானது. அரசியலமைப்புச் சட்டப்படி பார்த்தால் மத்திய அரசின் சட்டத்தை மாநில அரசுகள் மறுக்க முடியாது. சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஒரு மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட முடியும். மத்திய அரசின் உத்தரவை மீறும் மாநில அரசுகளை அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 356 இன்படி கலைப்பதற்கும், குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வருவதற்கும் இடமிருக்கிறது.

அத்தகைய சூழல் இன்னும் உருவாகவில்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA) அதிகாரப்பூர்வமாக எதிர்ப்பதற்குப் பதிலாக, அதைத் திரும்பப் பெறக்கோரி சில மாநில அரசுகள் வெறுமனே தீர்மானங்கள் மட்டும் நிறைவேற்றி உள்ளன. முதன் முதலில் கேரளதான் இது போன்றதொரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தகைய தீர்மானங்களுக்கு சட்டமன்ற விதிகளின்படி எவ்வித அனுமதியும் கிடையாது என்றாலும், ஒரு பிரச்சனையைப் பற்றி விவாதிப்பதற்காக சட்டமன்ற விதிகளைக்கூட நிறுத்தி வைக்க சட்டமன்றத்திற்கு அதிகாரம் உண்டு.

CAA செல்லுமா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் விரைவில் பரிசீலிக்க உள்ளது. துன்புறுத்தலுக்கு ஆளாகி, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள சட்டவிரோதக் குடியேறிகள் குறித்து நீதிமன்றம் எத்தகைய ஒரு தீர்ப்பையும் வழங்கி இப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவரலாம். ஆனால் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஏதோ வகையில் நீண்ட காலத்துக்கு இந்தியர்களை விரட்டிக் கொண்டே இருக்கும். தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டாலும், தாங்கள் முகாம்களில் அடைக்கடுவோமோ அல்லது நாடு கடத்தப்படுவோமோ என்கிற ஒரு சாராரின் அச்சம் மட்டும் நீங்கப் போவதில்லை.

படிக்க:
♦ வீதிக்கு வாங்க ரஜினி | மனுஷ்ய புத்திரன் கவிதை
♦ CAA-வுக்கு எதிராக பேசியதாக மருத்துவர் கஃபீல் கான் மீது தேசத்துரோக வழக்கு !

வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் போதே குடியுரிமைச் சட்ட விதிகள் 2003 இன் கீழ் உருவாக்கப்பட்ட தேசிய மக்கள் தொகை பதிவேட்டை (NPR) உருவாக்குவதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வேலையை முடுக்கி விட்டுள்ளது நடுவண் அரசு. குடியுரிமைச் சட்டம் 1955, விதி 18 இன் கீழ் வரும் துணை விதிகள் 1 மற்றும் 3 இன் படி குடியுரிமைச் சட்ட விதிகள் 2003 உருவாக்கப்பட்டுள்ளன. இதன் பிரிவு 2(l) இன் படி வரையறுக்கப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) என்பது ஒரு கிராமம் மற்றும் நகரப் பகுதிகளில் வசிக்கும் நபர்களின் விவரங்களைக் கொண்ட பதிவேடாகும்.

மாநில அரசின் வருவாய் அலுவலரே உள்ளூர் பதிவாளராகவும் செயல்படுவார்.  இவர்தான் தனது ஆளுகைக்கு உட்பட்ட கிராம மட்டம் வரை வசிக்கும் மக்கள் அனைவரையும் பற்றிய விவரங்களை சேகரித்து தேசிய மக்கள் தொகை பதிவேட்டைத் (NPR) தயாரிப்பார் என துணை விதி 4 சொல்கிறது. தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் (NPR) உள்ள விவரங்கள்தான் உள்ளூர் பதிவேட்டிலும் இருக்கும் என துணை விதி 5 சொல்கிறது. தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சரிபார்க்கப்பட்ட பிறகு அதன் விவரங்கள் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (NRC) சேர்க்கப்படும்.

ஆக NPR என்பது குடிமக்களைப் பற்றிய விவரம் மட்டுமன்றி கிராம மட்டம் வரை வசிக்கும் அனைவரின் விவரங்களையும் உள்ளடக்கிய ஒரு ஆவணமாகும். NRC -க்கான தரவுகள் இதிலிருந்தே எடுக்கப்படும். எனவே NRC தயாரிப்பதற்கு NPR மிகவும் அவசியமானது. NPR மற்றும் NRC ஆகிய இரண்டும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன என்பதை விதிகள் தெளிவுபடுத்துகின்றன. NRC உடன் CAA சட்டபூர்வமாக இணைக்கப்படவில்லை என்றாலும், பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர்களின் அறிக்கைகள் இவற்றுக்குள்ள இணைப்பை தெளிவு படுத்துகின்றன.

CAA, NRC மற்றும் NPR பற்றிப் பேசும் பொழுது இவை சட்டப்படி செல்லத்தக்கவைதானா? என்கிற முக்கியமான விசயம் மட்டும் விவாதிக்கப்படாமலேயே விடுபட்டுள்ளது.

2003 ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்ட குடியுரிமை சட்ட விதிகளில் NPR நடைமுறை பற்றி பேசப்பட்டாலும், இதன் மூலச் சட்டமான குடியுரிமைச் சட்டம் 1955-ல், எந்த ஒரு விதியிலும் NPR நடைமுறைப்படுத்துவதைப் பற்றி குறிப்பிடப்படவில்லை. இது ஆச்சரியமானது என்றாலும் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

படிக்க:
♦ குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டமும் நீதிமன்றத்தின் பாராமுகமும் !
♦ அஞ்சாதே போராடு ! தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram

குடியுரிமைச் சட்டத்தின் 18-வது பிரிவின் (1) மற்றும் (3) துணைப் பிரிவுகளின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ள NPR குறித்த விதிகள் மிகவும் விசித்திரமானது. குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான விதிகளை உருவாக்கிக் கொள்ளலாம் என்று பிரிவு (1) தெளிவாகக் கூறுகிறது. ஆனால் NPR தயாரிப்பது பற்றி குடியுரிமைச் சட்டத்தில் எங்குமே பேசப்படவில்லை. மூலச் சட்டமான குடியுரிமைச் சட்டத்தில் சொல்லியிருந்தால் மட்டுமே அது பற்றிய விதிகளை உருவாக்க முடியும். விதிகள் உருவாக்குவதற்கு இது மிகவும் முக்கியமானதொரு அம்சமாகும். விதிகள் தனிப்பட்ட முறையில் அதிகாரம் கொண்டவை அல்ல. நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்தில் வழிவகை செய்யப்படவில்லை என்றால் எந்த ஒரு முக்கியமான திட்டத்தையும் இந்த விதிகளை மட்டும் கொண்டு  நடைமுறைப்படுத்த முடியாது. அதிகார முறைகேட்டுக்கு வழிவகுக்கும் இத்தகைய விதிகள் சட்டப்படி செல்லத்தக்கவை அல்ல. சட்டக் கோட்பாடுகளும் கொள்கைகளும் போதுமான அளவு வகுக்கப்பட்டிருந்தால் மட்டுமே சட்டமியற்றும் அதிகாரம் சட்டமன்றத்திற்கு வழங்கப்படுகிறது என டாடா நிறுவனத்திற்கும் அதன் தொழிலாளர்களுக்கும் இடையிலான வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் தெளிவு படுத்தி உள்ளது.

NPR தயாரிப்பதற்கு  குடியுரிமைச் சட்டம் 1955 இல் இடமில்லை என்பதே உண்மை. எனவே அதற்கான விதிகளையும் வகுக்க முடியாது. அதற்கான சட்டக் கொள்கைகளும் கோட்பாடுகளும் முதலில் வகுக்கப்பட வேண்டும். அதன் பிறகுதான் விதிகளை வகுக்க முடியும். இதுதான் துணைச் சட்டங்களை உருவாக்குவதற்கான அடிப்படைக் கொள்கையாகும். விதிகள் என்பவை துணைச் சட்டமாகும், அவை மூலச் சட்டத்திற்கு உட்பட்டிருக்க வேண்டும்.

மூலச்சட்டத்திற்குப் புறம்பாக விதிகள் இருந்தால் அவை முறைகேடானவை எனக்கூறி நீதிமன்றம் அவற்றை இரத்து செய்து விடும். அரசுத் துறைகள் இந்த விதிகளை உருவாக்குவதற்கான அதிகாரத்தை மூலச்சட்டத்திலிருந்தே பெறுகின்றன. எனவே ஒரு குறிப்பிட்ட திட்டம் குறித்து மூலச்சட்டத்தில் இடமில்லை என்றால் அது குறித்த விதிகளை உருவாக்க அரசுத் துறைகளுக்கு அதிகாரமில்லை.

NPR தொடர்பான விதிகள் பாரதூரமான குறைபாடுகளைக் கொண்டதாகவே உள்ளது. விதிகள் வடிவமைக்கப்பட்ட காலத்திலிருந்தே இக்குறைபாடுகள் நீடிக்கின்றன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன்வைக்கப்பட்டதாலேயே இவ்விதிகளில் உள்ள குறைபாடுகளை சரிசெய்துவிட முடியாது. மூலச் சட்டத்தில் வழிவகை செய்தால் மட்டுமே இக்குறைபாடுகளை சரி செய்ய முடியும்.


கட்டுரையாளர் : P.D.T Achary
தமிழில் : 
ஊரான்
நன்றி :  தி வயர். 

குறிப்பு : P.D.T ஆச்சாரி மக்களவையின் முன்னாள் பொதுச் செயலாளர் மற்றும் அரசியலமைப்பு நிபுணர் ஆவார்.