குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக தமிழக அரசை தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, கடந்த பிப் 14 அன்று சென்னை வண்ணாரப்பேட்டையில் பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்கள் மற்றும் ஆதரவு அமைப்பினர், தங்கள் குடும்பத்துடன் போராடினர். பகல் 2 மணிக்கு கூடியவர்கள் இரவு வரை கலையாமல் போராடினர், அவர்களை போலீசு வெறிகொண்டு தாக்கி கலைத்தது. அந்தக் கொடூரத்தை சொல்லி மாளாது.
போலீசின் இந்த காட்டுமிராண்டித்தனத்தை, தினத்தந்தி, தினமலர் போன்ற தமிழ் பத்திரிகைகள் ‘லேசான தடியடி’ என்று மைபூசி, அதை, மூன்றாம் பக்கச் செய்தியாக்கி மறைக்கப் பார்க்கின்றன. ’இந்து தமிழ் திசை’ பத்திரிகையோ போராட்டத்தை மூன்றாம் பக்க செய்தியாக்கி போக்குவரத்து இடைஞ்சலை மிகப்பெரும் பிரச்சினையாக சித்தரித்தது. தங்கள் குடியிருப்புக்கு அருகில் அமைதியாக எதிர்ப்பை பதிவிட்ட மக்கள் சற்றும் எதிர்பார்க்காத தாக்குதலால் நாலாபுறமும் சிதறி ஓடுகிறார்கள். சமூக ஊடகங்களில் வெளியான அந்தக் காட்சி, பார்ப்போரை திகிலூட்டியது. இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்களும் இதற்கு தப்பவில்லை. போராடியவர்களை தனித்தனியாக இழுத்துச் சென்று பத்துக்கும் மேற்பட்ட போலீசார் சூழ்ந்துகொண்டு கண்மண் தெரியாமல் தாக்கியது மொத்த தமிழகத்தையும் கலங்கச் செய்தது.
இரவு 8 மணிக்குத் துவங்கிய இந்தக் கொடூரம் 2 மணி நேரத்திற்கும் மேலாகவே நீடித்தது. முஸ்லீம் தலைவர்களும் பலவந்தமாக அடித்து இழுத்துச் செல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகளை அருகமை மண்டபங்களில் அடைத்து வைத்திருந்த செய்தி காட்டுத் தீ போல பரவியது.
செய்தியறிந்து, தமிழ்நாடு முழுதும் உள்ள முஸ்லீம்களும் – ஜனநாயக சக்திகளும் நள்ளிரவிலேயே போராட்டத்தைத் துவக்கினர். ஆனால், பாட்டாளி மக்கள் கட்சி இராமதாசும், ‘முஸ்லீம்கள் பாதிக்கப்பட்டால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன்’ என்ற ரஜினியும் முக்காடு போட்டுத் தூங்கிக்கொண்டிருந்தார்கள் போலும்.
போலீசின் நரவேட்டையை கண்ணுற்ற ஒரு முஸ்லீம் முதியவர் மூச்சடைத்து விழ மருத்துவமனை செல்லும் வழியிலேயே இறந்தார். அவர் மீது எவ்வித தடியடியும் நடத்தவில்லை, இயற்கையாகவே மரணமடைந்தார் என்றது போலீசு. தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஏற்பட்ட கொந்தளிப்பால், கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
எஞ்சியோர் சாலையில் அமர்ந்து மீண்டும் போலீசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஒன்றுசேர்ந்தனர். அடுத்த நாள்(15.02.2020) வண்ணாரப்பேட்டை ரவுண்டானா சென்னையின் ஷாகீன் பாக் ஆனது…
நாங்கள் போராட்டக் களத்தை அடைந்தபோது சாரைசாரையாக மக்கள் வெள்ளம் குவிந்துகொண்டிருந்தது. சில மணி நேரத்தில் இந்த எண்ணிக்கை மூவாயிரம், நான்காயிரம் என பெருகியது. இந்துமத அடையாளங்களோடு வந்து கலந்துகொண்ட பெண்கள் பலரையும் போராட்டத்தில் பார்க்க முடிந்தது. மேலும், முதல் நாளில் போலீசாரின் கொடுந்தாக்குதலுக்கு ஆளான பெண்களும் இளைஞர்களும் கலந்து கொண்டு உணர்ச்சிபூர்வமாக முழக்கமிட்டது நம்மை ஆச்சரியப்படுத்தியது.
படிக்க :
♦ பா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் !
♦ வீதிக்கு வாங்க ரஜினி | மனுஷ்ய புத்திரன் கவிதை
கூட்டத்தின் எதிர்வினை பல்வேறு தொடர்முழக்கங்களால் எதிரொலித்தது. முஸ்லீம் பெரியவர்கள், வயது முதிர்ந்த பெண்கள் உரத்த குரலில், ‘அல்லாஹ் ஹு அக்பர்’ என முழங்கினாலும்! இளைஞர்களும் சிறுவர்களும், ‘இன்குலாப் சிந்தாபாத், ஆசாதி… ஆசாதி’ என்றும் கரம் உயர்த்தி முழங்கினர்.
அவர்களிடம் பேசியபோது, “அடக்குமுறைக்கு கடுகளவும் அஞ்சமாட்டோம், உரிமைக்கு உயிர் கொடுக்கவும் தயங்கமாட்டோம்” என்று ஆவேசமாக பேசி முழக்கமிடத் தொடங்கினர்.
கூட்ட நெரிசலில் நிற்கமுடியாமல் திணறிய நாம் ஒருவழியாக பெண்கள் பகுதியை அடைந்தோம். முஸ்லீம் மக்களோடு இணைந்து முழக்கமிட்ட இந்துப் பெண்களை அணுகினோம்.
“அவுங்க முஸ்லீமா இருந்தா என்ன? அத பத்தி கவலை இல்லை, நாங்க இதுநாள் வரைக்கும் அப்படி பழகல. கூடவே உறவாடுற அவங்களை வேற்றாளாவா பார்க்க முடியும்? ஒன்னாதான் உழைக்கிறோம், ஒன்னாதான் கஷ்டப்படுறோம். எங்களோட நல்ல நாளுக்கு அக்கா தங்கச்சியா வந்து போறாங்க, அவங்க வீட்டுக்கும் நாங்க போறோம்.
எங்க குடும்பத்துக்கு ஒன்னுன்னா, பக்கத்தில் உள்ள சொந்தக்காரங்க அவங்கதான். கோடைக்காலத்துல தண்ணி, கரெண்ட் இல்லாது தவிக்கும்போதும், கொசுக்கடி, மழை, வெயிலுன்னு எல்லாக் காலத்துலயும் ஒன்னாதான் கஷ்டப்படுறோம்.
இந்துன்னு சொல்றதுனால எங்களுக்கு வானத்திலேருந்து எதுவும் விழப்போறதில்ல. உழைக்கிறோம், ஒருத்தருக்கொருத்தர் உதவி செஞ்சிருக்கிறோம். நான் பக்கத்துல இருக்குற பிஸ்கெட் கம்பெனிக்கு போயி குடும்பத்த காப்பாத்துறேன். அதே கம்பெனிக்குத்தான் அவங்க புர்கா போட்டுகிட்டு வர்றாங்க. ரெண்டு பேருமே மாடா உழைக்கிறோம். இதிலே என்ன வித்தியாசம்?” என்றார் தீர்க்கமாக.
அப்போது, பக்கத்தில் இருந்த முஸ்லீம் மூதாட்டி, “அதோ அந்த அம்மா எங்க தெருதான், என் பொண்ணு மாதிரி” என்றார். அங்கு பொட்டு, மாங்கல்யம், அணிந்தபடி சக பெண்களிடம் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த பவானியை அணுகினோம்.
படிக்க :
♦ ஜாமியா நூலகத்தில் டில்லி போலீசு வெறியாட்டம் ! சிசிடிவி காட்சிகள் வெளியீடு
♦ தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) சட்ட அங்கீகாரம் இல்லாத அதிகார முறைகேடா ?
“எங்க வீட்டுக்காரரே என்ன எதுவும் சொல்லல. போகட்டுமான்னு கேட்டதுக்கு போய் வான்னு சொன்னாரு. நாங்க முஸ்லீமாவோ இந்தாகவோ இருந்தா உங்களுக்கென்ன? வெயில் காலத்துலயும், மழைக் காலத்துலயும் நாங்க படுற கஷ்டத்த பாத்திருக்கீங்களா?
போன வெள்ளத்தில 7 நாள் வீட்டச் சுத்தி தண்ணி. அப்போ இந்துன்னு சொல்ற யாரும் வரல, இந்த முஸ்லீம் பசங்கதான் அக்கா அக்கான்னு ஓடிவந்து உதவுனாங்க. கரெண்ட் இல்லாம இருட்டுல இருந்த எங்களுக்கு மெழுகுவர்த்தி, பால் பாக்கெட், சோத்து பொட்டலமுன்னு என்னன்னமோ எடுத்து வந்து கொடுத்தாங்க.
ஏதோ, குடியுரிமை ரத்துன்னு சட்டம் சொல்றாங்களே, அத சொல்லி இவங்க படுற வேதனைய எங்களால பார்க்க முடியல. அதான் போராட்டமுன்னு சொன்னதும், நானும் வர்றேண்டின்னு அவங்ககூட வந்துட்டேன்.
யாரோ, எச்ச ராசா, நொச்ச ராசாவாமே, எங்ககிட்டே பேசச்சொல்லுங்க, செருப்பால அடிப்பேன். ஏன் நாங்க ஒன்னா இருக்கக்கூடாதா? அவங்களுக்கு எங்கே நோகுது?
அவர் அருகே இருந்த நந்தினி என்பவர், “நானும் இந்துதான். இப்ப என்ன வேணும்?” என்று நம்மை முறைத்தார்.
“ஒன்னுமில்ல, தெரிஞ்சுக்கத்தான்” என்று சமாளித்தோம். நாம் கூட்டத்திலிருந்து ஓரமாக வந்தபோது, பொட்டுவைத்த இளம் பெண், உட்கார இடம்தேடி அலைந்துகொண்டிருந்தார். “எதற்கு இங்கு வந்திருக்கிறீர்கள்?” என்றோம்.
நம்மை வித்தியாசமாக ஏற இறங்க பார்த்தவர், “முஸ்லீம்களுக்கு ஆதரவு தெரிவிக்கணுமுன்னு தோனுச்சு வந்தேன். நான் ஐ.டி. -யில வேலை பார்க்கிறேன். என்கூட வேல பாக்குற நெறைய பேரு வந்திருக்காங்க. இது என்னோட கடமையா நினைக்கிறேன். இந்த நேரத்துல அவங்ககூட இருக்கனுமுன்னு மனசுக்கு தோனுது. நாம கேக்கலன்னா வேறு யாரு இருக்காங்க? நாம படிச்சது எல்லாம் அப்ப பொய்யா?” என்று நம்மையே கேள்வி கேட்டார். மேலும் தொடர்ந்தார்.
“டெல்லியில் இந்தியா கேட் போயி பாருங்க. அதுல சுதந்திரத்துல உயிர்த்தியாகம் பண்ணுனவங்கங்கன்னு ஒரு லிஸ்ட் இருக்கும். அதுல 80% பேரு முஸ்லீம்தான். அப்போ அவங்க ஜனத்தொகையோ நாட்டுல வெறும் 20% தான். இப்ப பேசுற யாரும் (மோடி வகையறா) அப்போ எங்கே போனாங்க. வெள்ளக்காரங்கிட்டே இவங்க (சங்கிகள்) என்ன ஆதாரம் காமிச்சு உயிர் தப்பினாங்கன்னு நமக்குத் தெரியாதா? இப்ப முஸ்லீமுக்கு ஆதாரம் கேக்குறாங்க.
ஏதாவது செஞ்சு அவங்க கூட இருக்குறோமுன்னு நாம காமிக்கணும். போலீசு இங்கே வந்து அடிச்சா நான் என்ன பண்ண முடியும்? ஒருபக்கம் பயம்தான். வேறு என்ன செய்யிறது? அவங்க அடிவாங்கும்போது நாமளும் வாங்கினா என்ன தப்பு? அவங்க அப்படி நம்மள விட்டுற மாட்டாங்க, அந்த தைரியத்துல இங்கே வந்தேன்” என்றார் கண்கள் பிரகாசிக்க.
ஆர்ப்பாட்டத்தில் ஓரமாக அமர்ந்திருந்த முஸ்லீம் இளைஞர்களிடம் பேச்சு கொடுத்தோம்.
“சார் நீங்க எந்த பத்திரிகை?” என்று ஆரம்பித்து, நிறுத்தாமல் பேசிக்கொண்டிருந்தனர். இடையிடையே “ஏன் சார் எங்கள மட்டும் விடாம அசிங்கப்படுத்துறீங்க. எங்க உயிரையும் வாங்கிட்டு, மானத்தையும் வாங்குறீங்க. இது நியாயமான்னு யாரு சார் கேக்குறீங்க. நாங்க இன்னும் எவ்வளவுதான் பணிஞ்சு போறது” என்றனர்.
“பகல் 2 மணியிலிருந்து எல்லோரும் அங்கேதான் இருந்தோம். சாயாங்காலம் கலைஞ்சிடுவோம், பெண்களா இருப்பதால் போய்விடுவோம் என்று போலீசு நினைத்தது. நாங்கள் போக மாட்டோம், இரவு இங்கேதான் படுக்கப்போகிறோம் என்று சொன்னதும், பேய் பிடித்தது மாதிரி ஆனார்கள் போலீஸ்காரர்கள்.
நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது ஜனங்க கத்திக்கொண்டு ஓடினர். போலீசு லத்தி சார்ஜ் செய்கிறார்கள் என்பது தெரியும். குழந்தைகள், பெண்கள், முதியோர் என்று கூட பார்க்காமல் போலீசு எங்களை துரத்தியடித்தது. ஒரு மணிநேரத்தில் அந்த இடமே மயான அமைதியானது.
அடிவாங்கியவர்கள் மற்றவர்களை உதவிக்கு ஃபோனில் அழைக்க முடியவில்லை. யாருக்குமே ஃபோன் போகல. பிறகுதான் தெரிந்தது, ஃபோன் வேலை செய்யவில்லைன்னு. போனை செயலிழக்க வைக்க ஜாமர் கருவியை பொருத்தி விட்டுத்தான் அடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
அவர்கள் நடத்தும் குரூரத்தை லைவாக சோசியல் மீடியாவில் காட்டி விடுவோம் என்று பயந்திருக்கிறார்கள். இதன் பிறகுதான் பல நண்பர்கள் சொன்னார்கள். மாடியிலிருந்து லைவ் முயற்சிக்கும் போது, ஃபோன் எர்ரர் வந்தது என்று. அதனால், இந்த விஷயம் உடனே வெளியே போக முடியவில்லை.
நாங்கள் வக்கீல் படிக்கும் மாணவர்கள்தான். இந்தக் கருப்புச் சட்டத்தை அரசு வாபஸ் வாங்காமல் விட மாட்டோம். இந்திய தேசியக் கொடிக்காக உயிர் கொடுத்தவர்கள் நாங்கள். அது எங்களை காப்பாற்றும் என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அதனால்தான் கையிலேந்திருக்கிறோம்” என்று உணர்ச்சியில் வார்த்தை வராமல் தடுமாறினர். வரும் கண்ணீரை மறைக்க தலைகுனிந்து கொண்டனர்.
கூட்ட மேடையில் பேசிய பல கட்சித் தலைவர்கள், ஜனநாயகக் கட்சிகள், அறிவுத்துறையினர், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் என அனைவரும் ஒரே குரலில் பேசினார்கள். தன்மானமும் சுயமரியாதையும்தான் உயிரைவிட மேலானது, என்று எங்கள் முன்னோர்கள் வழிகாட்டியிருக்கிறார்கள். அந்தப் போராட்ட வழியில் எங்கள் உயிரைக் கொடுத்து இந்தச் சட்டத்தை எதிர்ப்போம் என்று உணர்ச்சி மேலிட பேசினர்.
கூட்டத்தில் பேசிய வி.சி.க மாநில துணை பொதுச் செயலாளர், ஆளூர் ஷாநவாஸ், தனது பேச்சின் மையமாக, இந்து, முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தினார். “மிருக பலம்கொண்டு மோடி அரசு முஸ்லீம்கள் மீதான தொடர் வேட்டையை நடத்தி வருகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இது தொடர்கிறது. காஷ்மீர், முத்தலாக், பாபர் மசூதி, சி.ஏ.ஏ போன்ற அவமானகரமான இழிவுகள், அரசியல் சட்டம் மற்றும் உச்சநீதி மன்ற துணையுடன் அதிகாரபூர்வமாக முஸ்லீம்கள் மீது ஏவப்படுகிறது.
இவ்வளவுக்கும் முஸ்லீம்களிடம் கனத்த மவுனமே நிலவியது. கடைசியில் இப்போதுதான் மோடி அரசு விக்கித்து மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைகிறது. அதற்குக் காரணம், நம்முடைய இந்து சகோதரர்கள் மோடி அரசுக்கு எதிராக நம்மோடு களத்தில் இறங்கியதுதான்.
பெரியார், அம்பேத்கர் மற்றும் இடதுசாரிகள் வழங்கிய இந்த ஜனநாயக ஒளியை அணையவிடாமல் நாம் முன்னெடுக்க வேண்டும். நாம் நமது மத அடையாளங்களை துரந்துவிட்டு, நம்முன் உள்ள ஜனநாயகக் கடமைக்காக ஒன்றிணைய வேண்டும்” என்று சங்கிகளின் முஸ்லீம் – இந்து மத பிளவுக்கு ஆப்பறைந்தார்.
மறுபுறம் தமிழகத்தின் மரபுரிமையாக வரும் ஜனநாயக அறிவுத்துறையினரை கண்டு சகிக்காத பிரபல சங்கி ஊடகங்கள், மோடிக்கு எதிரான மதச்சார்பற்ற போராட்டங்களை முஸ்லீம் சாயம்பூசி பின்னிழுக்கப் பார்க்கின்றனர். ஆர்ப்பாட்டத்தில் போலீஸ் மீது கல்லெறிந்தனர். போலீஸ் படுகாயமடைந்தனர் என்று உண்மையை மடைமாற்றுகின்றனர்.
ஜனநாயக விரோத பாசிச மோடி கும்பலை நாம் தோலுரிப்பது போல், அவர்களுக்கு பட்டுப் பாவாடை விரிக்கும் இந்த சங்கி ஊடகங்களையும் உடன் அம்பலப்படுத்த வேண்டும். அதற்கு மோடி எதிர்ப்புப் போராட்ட அலைகளை அதன் செய்திகளை தீயாக எங்கும் பரப்புவோம்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
– வினவு களச்செய்தியாளர்
எதனைப் பற்றியும் பேச விரும்பவில்லை. நீதிமன்றங்களும்…. சுப்ரீம் கோர்ட் உட்பட.. பத்திரிக்கை… எலக்ட்ரானிக் மீடியாக்களும் விலை போனாலும் பரவாயில்லை… தங்களின் ஆத்மாவையே காவிகளுக்கு அர்ப்பணிப்பு செய்தபின் எதனைப் பதிவேற்றம் செய்வது…? பார்ப்போம்… பொறுத்திருந்து பார்ப்போம். வரலாறு மன்னிக்காது… வரலாறு பொல்லாதது… வரலாறு ஈவு இரக்கமற்ற பாடங்களை… கொடூரமான பாடங்களை கற்பிக்கும் அழகான அற்புதமான ஆசான்… நம்பிக்கை தானே வாழ்க்கை…
கேரளாவின் சாபக்கேடு…? அந்த இயற்கையின்… இறைவனின் தேஷத்தில் சமீப காலமாக… சதாசிவம் என்றும் ஆரிஃப்… என்றும் வைரஸ்கள் கேரளாவின் பாரம்பரிய அறிவு ஜீவிகளை அவலப்படுத்தும் அவமானகரமான ஒட்டுண்ணி ஆளுநர்கள் (Parasites Governors) இதுவும் கடந்து போகும்…!!!