2014 இல் மோடி பிரதமராக பதவி ஏற்றுக்கொண்ட சில மாதங்களில் ஆர்.எ.ஸ்.எஸ். பிரச்சாரக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான ராஜேஷ்வர் சிங், டிசம்பர் 31, 2021 உடன் இந்தியாவிலிருந்து முஸ்லிம்களும் கிறித்தவர்களும் துடைத்தெறியப்படுவார்கள் என்று பிரகடனம் செய்தார். அது உதிரி  சக்திகளின் வெறித்தனமான பேச்சு என்றும் பொருட்படுத்தத்தக்கது அல்ல என்றும் அன்று ஒதுக்கித் தள்ளப்பட்டது.

பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜேஷ்வர் சிங்

ஆனால், ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, இன்று, மோடி அரசு அந்தப் பிரகடனத்தை உண்மையாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத் திருத்தம், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வருவதற்கு முஸ்லிம்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கிறது. இந்த நாடுகளைச் சேர்ந்த மற்ற சிறுபான்மை  மதத்தினர் அனைவருக்கும் அவர்கள் அங்கே மதரீதியாக துன்புறுத்தப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்று இச்சட்டத் திருத்தம் கூறுகிறது. அதாவது, மேற்சொன்ன நாடுகளில் இஸ்லாமிய  மதத்தில் பிறந்த ஒருவர்  வேறு எந்த விதத்தில் துன்புறுத்தப்பட்டாலும், அவர் இந்தியாவுக்குள்  நுழையவோ குடியுரிமை பெறவோ முடியாது என்கிறது இந்த சட்டத் திருத்தம்.

1947-இல் நாட்டுப் பிரிவினையின்போது இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பகுதிக்குக் குடிபெயர்ந்த முஸ்லிம்கள், முஜாகிர்கள் (வந்தேறிகள்) என்று பாகிஸ்தானில் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்பட்டு வருகிறார்கள். இதனை எதிர்த்து அங்கே போராடிவரும் “முத்தா ஹிதா குவாமி” இயக்கம் என்ற கட்சியின் தலைவர் அல்தாஃப் ஹுசேன், பாகிஸ்தான் அரசின் அடக்குமுறை காரணமாகத் தலைமறைவாக இருப்பவர். இவர் இந்தியாவில் அடைக்கலமும் குடியுரிமையும் கோரிய அடுத்த சில நாட்களில் இங்கே இந்த மசோதா நிறைவேற்றப் பட்டிருக்கிறது என்பதுதான் ஒரு விசித்திரம்! ஹூசேனுக்கு பிரிட்டன் குடியுரிமை வழங்கி விட்டது.  ஆனால், இந்திய அரசு அவருடைய கோரிக்கையை என்ன செய்தது என்று நமக்குத்  தெரியவில்லை.

படிக்க:
சனாதன இந்தியாவா, புதிய ஜனநாயக இந்தியாவா ?
♦ கொரோனா தொற்று தமிழகத்தின் உண்மை நிலை என்ன ? | மக்கள் அதிகாரம்

“குடியுரிமைச் சட்ட திருத்தத்தைத் தேசியக் குடிமக்கள் பதிவேட்டுடன் இணைத்துத்தான் பார்க்க வேண்டும்” என்று ஏற்கனவே அமித் ஷா தெளிவாகப் பேசியிருக்கிறார். அதாவது, ஒரு இந்தியர் தேசியக் குடிமக்கள் பதிவேட்டில் தனது குடியுரிமையை நிரூபிக்க முடியவில்லையென்றால், திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தின் கீழ் இந்தியக் குடியுரிமை பெறுகின்ற வாய்ப்பு அவருக்கு உண்டு. ஆனால், முஸ்லிம்களுக்கு மட்டும் இது பொருந்தாது என்கிறது மோடி அரசின் சட்டத் திருத்தம். அதாவது, தேசியக் குடிமக்கள் பதிவேடும், குடியுரிமைச் சட்டத் திருத்தமும் முஸ்லிம்களை இரண்டாம்தரக் குடிமக்களாக்குகின்றன. இந்தியாவில் தற்போது வசித்து வருகின்ற முஸ்லிம்களைத் தவிர்த்த மற்றவர்கள் தேசியக் குடியுரிமைப் பதிவேட்டில் இடம் பெறுவதற்குத் தேவையான ஆவணங்களைக் காட்டத் தவறிய போதிலும், அவர்கள் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தின்படி இந்தியக் குடியுரிமை பெறுவதற்கான வாய்ப்பு உண்டு. இந்த வாய்ப்பு முஸ்லிம்களுக்குக் கிடையாது.

யாருக்கெல்லாம் தந்தையர் நாடாகவும்,  மதரீதியான புண்ணிய பூமியாகவும் இந்தியா இருக்கிறதோ, அவர்கள் மட்டும்தான் இந்தியக் குடிமக்களாக இருக்க முடியும். தந்தையர் நாடாக இந்தியா இருந்த போதிலும், புனித பூமி இந்தியாவுக்கு வெளியில் இருப்பதாக நம்புகிறவர்களை  (மெக்காவைப் புனித பூமியாகக் கருதும் இஸ்லாமியர்கள் மற்றும் ஜெருசலேமைப் புனித பூமியாகக் கருதும் கிறிஸ்தவர்கள்)  “உண்மையான இந்தியர்களாகக் கருதவியலாது” என்பது கோல்வால்கரின் கருத்து.

மதத்தின் அடிப்படையில் குடிமக்களைப் பாகுபடுத்தி, இஸ்லாமியர்களை இந்தியரல்லாதவர்கள் ஆக்குகின்ற கோல்வால்கரின் கருத்தையும், இந்து மகாசபா தலைவர் சாவர்க்கரின் கருத்தையும் நடைமுறைக்குக் கொண்டு வருகிறது மோடி அரசின் குடியுரிமைச் சட்டம். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், “செமிட்டிக் மதங்களான கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்தவர்கள் இந்தியர்களாக இருக்க முடியாது என்றும் அவர்கள் பெரும்பான்மை இந்து மதத்தினரின் தயவில் வாழ வேண்டும்” என்பதுதான் இதன் பொருள்.

நாம் அல்லது நமது தேசியத்தின் வரையறை என்ற தலைப்பில் கோல்வால்கர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்: “இந்துஸ்தானில் (இந்தியாவில்) வசிக்கும் இந்துக்கள் அல்லாதவர்கள் இந்து கலாச்சாரத்திற்கும் மொழிக்கும் மாறிக்கொள்ள வேண்டும். இந்து மதத்தைப் புனிதமாகக் கருதவும் மதிக்கவும் கற்றுக் கொள்ளவேண்டும். இந்து இனத்தையும் அதன் கலாச்சாரத்தையும் போற்றிப் புகழ்வதைத் தவிர வேறு விதமாகச் சிந்திப்பதை நிறுத்த வேண்டும். இந்த மண்ணுக்கும் இதன் தொன்மையான பாரம்பரியத்துக்கும் எதிரான சகிப்பின்மையையும் நன்றி கெட்டத்தனத்தையும் கைவிட்டு, இவற்றின்பால் நேசத்தையும் பக்தியையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.  சுருங்கக் கூறின், வெளிநாட்டுக்காரர்களாக நடந்து கொள்வதை அவர்கள் நிறுத்திக் கொள்ளவேண்டும். அல்லது அவர்கள் இந்து தேசத்துக்குக் கட்டுப்பட்டவர்களாக இங்கே தங்கியிருக்கலாம். மற்றபடி, அவர்கள் இங்கே எந்தவித சலுகைகளையும் கோர முடியாது. குடியுரிமையையும் கோர முடியாது. இதைத் தவிர வேறெந்த விதமான வாய்ப்பும் இவர்களுக்கு வழங்கப்படக்கூடாது. நாம் ஒரு புராதனமான தேசம். புராதனமான தேசங்கள் தமது நாட்டில் குடியேறிய அந்நிய இனத்தாரை எப்படி நடத்துகின்றனவோ, எப்படி நடத்த வேண்டுமோ அவ்வாறு நடத்துவோம்.”

அதேபோல, இந்துத்துவா என்ற சொல்லை உருவாக்கிய சாவர்க்கர், “யார் இந்து?” என்ற தலைப்பில் இவ்வாறு எழுதுகிறார்: சிந்து நதியில் தொடங்கி சமுத்திரங்கள் வரை பரவியிருக்கும் பாரத வர்ஷம் எனப்படும் இந்த மண்ணைத் தனது தந்தையர் நாடாகவும், தனது மதத்தின் தொட்டிலாகவும் புனித பூமியாகவும் கருதுபவனே இந்து. ஒரு பொது தேசம் (ராஷ்டிரம்), ஒரு பொது இனம் (ஜாதி), ஒரு பொது நாகரிகம் (கலாச்சாரம்) இவைதான் இந்துத்துவத்தின் அத்தியாவசியமான கூறுகள். இவற்றைச் சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். சிந்துஸ்தானம் என்பது எவனொருவனுக்கு பித்ரு பூமியாக (தந்தையர் நாடாக) மட்டுமின்றிப் புண்ணிய பூமியாகவும் இருக்கிறதோ, அவனே இந்து. இந்துத்துவ தேசத்தின் முதல் இரண்டு கூறுகளான தேசம், இனம் ஆகியவை தந்தையர் நாடு என்பதைக் குறிக்கின்றன. புண்ணிய பூமி என்பது கலாச்சாரத்தைக் குறிக்கிறது. எந்த மதச் சடங்குகளும் புனித நூல்களும் இந்த மண்ணைப் புனித மண்ணாக ஆக்குகின்றனவோ, அவையனைத்தையும்தான் கலாச்சாரம் என்கிற சொல்லால் குறிக்கிறோம்.

படிக்க:
சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டம் : பல்லிளிக்கும் பொய் வழக்குகள் !
♦ இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகை ! வழக்கறிஞர்கள் கோரிக்கை வெற்றி !

பாகிஸ்தான் என்ற கோரிக்கையை ஜின்னா வைப்பதற்குச் சற்று முன்னரே, புண்ணிய பூமி என்ற அடிப்படையில் இந்தியாவைத் துண்டாடும் இந்தக் கருத்து முன்வைக்கப்பட்டு விட்டது. தங்களது புனித பூமி இந்தியாவுக்கு வெளியில் இருப்பதாகக் கருதுகிறவர்கள் இந்து தேசத்தின் அங்கமாக இருக்க முடியாது என்றால், மற்றவர்களெல்லாம் தனியொரு நாடாக அமைகிறார்களா? அப்படியானால், இந்தியாவுக்குள்ளேயே இரண்டு தேசங்கள் உள்ளனவா என்ற கேள்வி எழுகிறது என்கிறார் வரலாற்றாய்வாளர் ஆதித்ய முகர்ஜி.

இதற்கான விடை 1937-இல் இந்து மகாசபாவில் சாவர்க்கர் ஆற்றிய தலைமையுரையில் இருக்கிறது என ஆர்.எஸ்.எஸ்ஸும், பள்ளிப் பாடநூல்களும் மகாத்மா காந்தி கொலையும் என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார் முகர்ஜி. “இந்தியாவை ஒன்றுபட்ட ஒரு படித்தான தேசமாகக் கருத முடியாது. மாறாக, இந்து – முஸ்லிம் என்று இந்தியாவுக்குள் பிரதானமாக இரண்டு தேசங்கள் உள்ளன” என்று அந்த உரையில் கூறுகிறார் சாவர்க்கர். பண்பாட்டு ரீதியாகவும், மத ரீதியாகவும், தேசம் என்ற அடிப்படையிலும் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பல நூற்றாண்டுகளாக முரண்பாடு நிலவி வருவதாகக் கூறி, இரண்டு தேசங்கள் என்ற தனது கருத்தை நிறுவுகிறார், சாவர்க்கர். வேறு வார்த்தைகளில் கூறுவதாயின், இந்துக்களும் முஸ்லிம்களும் ஒரே தேசத்தில் வாழ முடியாது என்கிறார். இதே கருத்தைத்தான் குடியுரிமைச் சட்டத் திருத்தமும் வலியுறுத்துகிறது.

“முத்தா ஹிதா குவாமி” கட்சியின் தலைவர் அல்தாஃப் ஹுசேன்

பாகிஸ்தானில் ஷியா பிரிவு மற்றும் அகமதியா பிரிவு முஸ்லிம்களுக்கு எதிராகப் பாரபட்சம் காட்டப்படுவது குறித்து ஊடகங்கள் ஏராளமான செய்திகளை வெளியிட்டிருக்கின்றன. இந்தச் சட்டத் திருத்தம் மேற்சொன்ன முஸ்லிம் மதப் பிரிவினருக்கு ஆதரவுக்கரம் நீட்ட மறுக்கிறது. அது மட்டுமல்ல, பிரிவினைக் காலத்தில் இந்தியப் பகுதியிலிருந்து பாகிஸ்தானுக்குச் சென்றவர்களும், அங்கே முஜாகிர்கள் (வந்தேறிகள்) என இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப்படுபவர்களும், அல்தாஃப் ஹுசேனின் தலைமையில் திரண்டிருப்பவர்களுமான ஏழை முஸ்லிம்கள் யாரேனும் மீண்டும் இந்தியாவுக்கே திரும்பிவிட விரும்பினால், அவர்களுக்கும் கதவைச் சாத்துகிறது இந்தச் சட்டத்திருத்தம்.

மதத்தின் அடிப்படையிலான தேசியம் என்பது பித்ரு பூமி (தந்தையர் நாடு) புண்ய பூமி என்கின்ற சாவர்க்கரின் கருத்துகளிலிருந்துதான் வருகிறது. இந்தச் சட்டத்திருத்தம் உதவுவதற்கானதேயொழிய, யாரையும் ஒதுக்குவதற்கானது அல்ல என்கிறார் அமித் ஷா. இதை நான் மறுக்கிறேன். குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை மட்டும் பார்த்தால், அதனால் ஆபத்தில்லை என்பது போலத் தோன்றும். ஆனால், அதனைத் தனியே பார்க்கவியலாது. தேசியக் குடிமக்கள் பதிவேட்டுடன் சேர்த்துப் பார்க்க வேண்டும். அதன் இலக்கு சமூகத்தில் ஒரு பிரிவினரை நாடற்றவர்களாக மாற்றுவதாகும். அசாமில் தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டின் முடிவுகள் அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாகப் போய்விட்டன. அவர்களுக்கு வேறு வழியில்லை. இந்துக்களின் குடியுரிமையை அங்கீகரிக்க வேண்டும். முஸ்லிம்களை நிராகரிக்க வேண்டும். அதனால்தான் ஏற்கனவே கிடப்பில் போட்டு வைத்திருந்த குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை புதுப்பித்துக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்கிறார் முகர்ஜி.

அசாமில் வாழும் பெங்காலி முஸ்லிம்களைக் கரையான்கள் என்று சாடினார்கள் பா.ஜ.க. தலைவர்கள். அந்தக் கரையான்கள் தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டில் இடம் பிடிக்க முடியாமல் மாட்டிக்கொள்வார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அசாமில் நடைபெற்ற குடிமக்கள் கணக்கெடுப்பின் முடிவுகள் முற்றிலும் வேறுவிதமாக அமைந்து விட்டன. இந்தக் கணக்கெடுப்பால் துன்பத்துக்கு உள்ளாக்கப்பட்ட மக்கள் மத்தியிலிருந்து கரையான்களை மதரீதியாகப் பிரிக்கமுடியவில்லை. “குடியுரிமைச் சட்டத் திருத்தமும் குடிமக்கள் பதிவேடும் ஒரு அபாயகரமான சேர்க்கை. சமூகத்தில் வெறுப்பையும் பிளவையும் விதைக்கும் கோல்வால்கர் மற்றும் சாவர்க்கரின் சித்தாந்தத்தை இது நடைமுறைக்கு கொண்டு வருகிறது” என்கிறார் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் வரலாற்றாய்வாளர் ரிஸ்வான் குவைசர்.

கோல்வால்கரால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்பதுதான் ஒரே ஒரு வேறுபாடு. நாம் இந்த நாட்டை ஆளக்கூடிய காலம் ஒன்று வரும் என்று கூட அவர் நினைத்துப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அது அவருடைய கற்பனைக்கு அப்பாற்பட்டதாக மட்டுமல்ல, நம் எல்லோருடைய கற்பனைக்கும் அப்பாற்பட்டதாகத்தான் இருந்தது. “1952-இல் இந்து மகாசபா சுறுசுறுப்பாக இயங்கி வந்த காலத்திலேயே, அதன் ஆகப் பெரும்பான்மையான வேட்பாளர்களால் தேர்தலில் வெற்றி பெற இயலவில்லை. பிந்தைய நாட்களிலும்கூட தேர்தலில் அவர்கள் தோல்வியைத்தான் தழுவினர். ஏனென்றால், இந்த வெறுப்பரசியலை அன்றைய இந்து சமூகம் அங்கீகரிக்கவில்லை. இன்றைய இந்து சமூகம் வெறுப்பரசியலை அங்கீகரிப்பதோடு நிற்கவில்லை, அதற்கு மேலேயும் சென்று விட்டது” எனக் குறிப்பிடும் ரிஸ்வான் குவைசர், இந்த சட்டத்தை முறியடிப்பதற்கான வழிகளை நாம் கண்டறிய வேண்டும். இல்லையேல், இந்தியா என்பது இந்துக்களுக்கு மட்டும்தான் என்ற சாவர்க்கர், கோல்வால்கரின் கனவு நனவாகிவிடும் என எச்சரிக்கிறார்.

கோல்வால்கர்: ஆர்.எஸ்.எஸ். -ஸும்  இந்தியாவும் என்ற நூலின் ஆசிரியரான ஜோதிர்மயா சர்மா இது தொடர்பாக ஒரு சம்பவத்தை சுட்டிக்காட்டுகிறார். 1954-இல் சிந்தி இனத்தவர் மத்தியில் பேசிய கோல்வால்கர், நாக்பூரில் அவர் எதிர்கொண்ட ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டாராம். பிராமணர்களுக்கும் பிராமணரல்லாதாருக்கும் இடையிலான முரண்பாடுகள் குறித்த பிரச்சினைகளைப் பேசுவதற்கு அங்கே ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம். அந்தக் கூட்டத்துக்கு அவர் சென்றிருந்தாராம். இவர் உள்ளே நுழையும்போது அங்கே ஒரு முஸ்லிம் உரையாற்றிக் கொண்டிருந்தாராம். துணுக்குற்றுப்போன கோல்வால்கர், இந்தக் கூட்டத்திற்கு ஒரு முஸ்லிமை எப்படி அழைத்தீர்கள்? என்று கூட்ட ஏற்பாட்டாளர்களிடம் கேட்டாராம். அதற்கு அவர்கள், முஸ்லிம்களும் பார்ப்பனரல்லாதவர்கள்தானே என்று பதிலளித்தார்களாம். பிராமணர்களுக்கும் பிராமணரல்லாதவர்களுக்கும் இடையில் பிரச்சனைகள் இருக்கலாம். அது இந்து சமூகத்துக்குள் இருக்கும் பிரச்சனை. ஆனால், முஸ்லிம்கள் பிராமணர்களுக்கு மட்டும் எதிரிகள் அல்ல, மொத்த இந்து சமூகத்துக்குமே எதிரிகள். நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால், முஸ்லிம்களை மட்டும் விலக்கி வையுங்கள் என்று அவர்களுக்கு அறிவுரை கூறினாராம் கோல்வால்கர்.

அன்று கோல்வால்கர் எதைச் சொன்னாரோ அதைத்தான் குடியுரிமைச் சட்டத் திருத்தம் இன்று அமல்படுத்துகிறது.

(ஃபிரண்ட்லைன், ஜன.3, 2020 இதழில் ஜியா உஸ் சலாம் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)

மொழியாக்கம்: கதிரவன்

புதிய ஜனநாயகம், பிப்ரவரி 2020


மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க