கியூபா ஒரு சிறிய கரிபீயன் தீவு. காலனி ஆதிக்கத்தாலும், ஏகாதிபத்தியத்தாலும் பல நூற்றாண்டுகளாக வளர்ச்சியடையாமல் இருந்த ஒரு நாடு. கடந்த 60 ஆண்டுகளாக அமெரிக்காவின் பிராந்திய பொருளாதார தடைக்கு உட்பட்ட நாடு. இன்று  கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தொற்று நோய் நெருக்கடி நிலையில்  உலக நாடுகள் அனைத்துக்கும்  கியூபா ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறது.

மார்ச் மாத இறுதி நிலவரப்படி கியூபா, தன்னுடைய மருத்துவ குழுக்களை 59 கொரோனா வைரஸ் பாதித்த நாடுகளுக்கு அனுப்பியிருக்கிறது. இத்தாலியில்   கொரோனா  வைரஸ் தொற்று நோய் உச்சத்தில் இருந்த போது தொற்று நோயின் மையமான லோம்பார்டி பிராந்தியத்திற்கு 53 கியூப மருத்துவ நிபுணர்கள் அனுப்பப்பட்டனர். அவர்கள் ஏற்கனவே 2014 ஆம் ஆண்டு மேற்கு ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட எபோலா வைரஸ்  நெருக்கடி நிலையின் போது பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள். பிரான்சுக்கும் ஸ்பெயினுக்கும் இடையில் உள்ள அண்டோரா என்ற பகுதிக்கு 39 கியூப மருத்துவ நிபுணர்கள் அடங்கிய  குழு அனுப்பப்பட்டது. மேற்கூறிய மருத்துவர்கள் அனைவரும் ஹென்றி ரீவ் என்ற மருத்துவ படைப்பிரிவை சேர்ந்தவர்கள்.

இப்படைப்பிரிவு 2005 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இப்படைப்பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள் தொற்று நோய் தடுப்பு  மற்றும் இயற்கை பேரிடர் போது மருத்துவ பணி செய்வதற்கு பயிற்சி பெற்றவர்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஸ்பானிய காலனியாதிக்கத்திற்கு எதிராக கியூபர்களோடு சேர்ந்து போராடிய ஹென்றி ரீவ் என்ற இளம் அமெரிக்கரின் நினைவாக இப்படைப்பிரிவுக்கு பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இப்படைப்பிரிவு  கியூப முன்னாள் அதிபர் காஸ்ட்ரோவால் முன்மொழியப்பட்டது.

கோவிட் -19 வைரஸ்  பாதிப்புக்குட்பட்ட  5 பயணிகள், 682  பயணிகள் மற்றும் 381 பணியாளர்களை கொண்ட பிரிட்டிஷ் கப்பலுக்கு  அமெரிக்கா போன்ற நாடுகள் அனுமதி அளிக்கமால்  இருந்ததை அடுத்து  அது ஒரு வாரம் கடலில் சிக்கித் தவித்தது. ஆனால், அப்பயணிக் கப்பலை கியூபா தன் நாட்டிற்குள் அனுமதித்ததோடு மட்டுமில்லாமல், தன் நாட்டு மருத்துவமனைகளில் பரிசோதனையும், சிகிச்சையும் அளித்து அவர்களின் சொந்த நாட்டிற்கு திரும்ப விமானம் வரை கொடுத்து உதவியது. உலகளாவிய தொற்றுநோயை கையாள்வதில் இன்று கியூபா முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆனால்  உலகிலுள்ள முதலாளித்துவ அரசுகள், கோவிட்-19 தொற்று நோய்க்கு எதிர்வினையாக மக்களை  வீட்டிற்குள்ளே முடங்கியிருக்கச் செய்வதை மட்டும் தங்களுடைய சுகாதாரச் செயல்பாடாக சித்தரிக்கின்றன.

முதலாளித்துவத்தின் சுதந்திர சந்தை மட்டுமே செயல்திறனை உறுதி செய்யும் என்று பல ஆண்டுகளாக மக்களுக்கு கூறப்பட்ட கருத்தை, இன்றைய  உலகளாவிய சுகாதார நெருக்கடி, கோவிட்-19 வைரஸ் தொற்று நோய்  மூலம் கேள்விக்குள்ளாக்குகிறது.  கியூபாவின் சுகாதார பங்களிப்பு முதலாளித்துவத்தால் திறமையான விளைவுகளை சாதிக்க முடியாது என்பதை நமக்கு உணர்த்துகிறது. சமூக இலாபத்தால் அளவிடப்படக்கூடியவை மட்டுமே அதிக செயல்திறனை கொடுக்க முடியும். தனியார் இலாபத்தால் கொடுக்க முடியாது  என்பதை உலகம் முழுவதும் உள்ள முன்னேறிய முதலாளித்துவ நாடுகள்  மெய்ப்பித்து வருகின்றன.

கியூபப் புரட்சிக்கு பின்னர், கியூப அரசு, உலகின் வேறு எந்த நாட்டையும் விட அதிகமான மருத்துவர்கள் விகிதத்தை அடைந்தது. அந்நாட்டில் ஆயிரம் பேருக்கு 8 மருத்துவர்கள் இருக்கிறார்கள். இந்தியா பத்தாயிரம் பேருக்கு ஒரு மருத்துவரை பெற்றிருக்கிறது. தன்னை அனைத்து நாடுகளின் தலைமை என்று மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்காவால் கூட கியூபா போன்று மருத்துவர்களின் விகிதத்தை  அதிகரிக்க முடியவில்லை.

கியூபாவில் அனைத்து நிலைகளிலும் இலவச கல்வி அனைவருக்கும் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது. இதன் பயன்கள் உலகளவில் பகிர்ந்தளிக்கப்படுகிறது. கடந்த ஆறு பத்தாண்டுகளாக 40,000 கியூப மருத்துவர்கள் ஏழை நாடுகளில் சுகாதாரப் பணிக்காக வேலை செய்து வந்துள்ளனர். கியூபா தனது தொற்றுநோய்க் கட்டுப்பாடு, பேரழிவு இடர் குறைப்பு போன்றவற்றில் உலக அளவில் அங்கிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அனுபவங்கள் கோவிட்-19 தொற்று நோயை எதிர்த்து வினையாற்ற பயனளிக்கிறது.

கியூபாவின் சுகாதார அமைப்பு நோய் வருமுன் தடுப்பதையே முதன்மையாக கொண்டுள்ளது. குடும்ப மருத்துவர்களின் வலைப்பின்னலானது நோயாளிகளோடு தங்கி வேலை செய்வதன் மூலம் சமூக ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது. இந்த தொற்று நோய்க்கு எதிராகப் போராட சுகாதாரப் பணியாளர்கள் ஒவ்வொரு வீட்டிலும் சென்று சோதனைகள், பரிசோதனைகள், தொடர்பைக் கண்டறிதல், தனிமைப்படுத்துதல், கூடுதல்  மருத்துவ கவனம் தேவைப்படுவர்களுக்கு ஒரு பதிவேட்டை பராமரித்தல் போன்றவற்றை நடத்துகிறார்கள். நாட்டின் பொது சுகாதார இணையதளம் மற்றும்  புது செயலி –கோவிட்-19 Infocu மூலம்  பொதுக்கல்வி பிரச்சாரங்கள், அன்றாடம் வரும் புது தகவல்கள்  போன்றவை மக்களை சென்றடைகிறது.

படிக்க:
♦ கொரோனா – கருத்துப்படங்கள் !
♦ கொரோனா : கியூபாவை எதிர்நோக்கும் பிரேசில் !

உயிர்த் தொழிற்நுட்பத் துறையில் கியூபாவின் சாதனை :

கியூபா உயிர்தொழிநுட்பத்துறையில் மிக பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளது. 1980 களின் முற்பகுதியிலேயே அந்நாட்டு மருத்துவ விஞ்ஞானிகளை வைரஸ் எதிர்ப்பு மருந்து (interferon)  கண்டுபிடிப்பதற்கான  பணியில் ஈடுபடுத்தியதன் மூலம், கியூப அரசு உயிர்தொழில்நுட்பத்துறையில் ஆரம்ப மற்றும் தனித்துவமான வளர்ச்சியை ஊக்குவித்தது. காஸ்ட்ரோ தலைமையிலும் அவரது தொலைநோக்கு பார்வையாலும் 1981-லேயே டெங்டை தடுப்பதற்கு இண்டர்ஃபெரான் கண்டறியப்பட்டது. முதலாளித்துவ பெரிய மருத்துவ நிறுவனங்கள் மூலம் உருவாக்கப்பட்ட இண்டர்ஃபெரான் ஆல்ஃபா 2B, அவற்றின் தயாரிப்புகள் ஒரு பொதுவான உட்பொருள்களை பகிர்ந்துகொள்கின்றன, ஆனால் கியூப இண்டர்ஃபெரான் ஆல்ஃபா 2B ஒரு தனித்துவமான தயாரிப்பு. கியூபர்கள் தான் இந்த மருந்தை ஒரு வெகுஜன வைரஸ் எதிர்ப்பு பொது சுகாதாரப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக முதலில் பயன்படுத்தினர்.

முதலாளித்துவ உயிர்த்தொழிற்நுட்பத்துறையின் இலாப வேட்டை:

அமெரிக்காவில் உலகின் முதல் உயிர் தொழில்நுட்பத்துறையானது சான் பிரான்ஸ்கோவில்  ஜெனிடெக் என்ற  நிறுவனத்தின் மூலதன உதவியோடு  1976 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் பிறகு 1980 ஆம் ஆண்டு ஏ.எம்.ஜென் என்ற மற்றொரு நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. சர்வதேச அளவில் உயிரித்தொழிநுட்பத்துறையானது 2009 ஆம் ஆண்டு வரை அதன் தயாரிப்பு பொருட்கள் விற்பனையில் இலாபம் ஈட்டவில்லை. ஆயினும் கூட  பில்லியன் கணக்கான டாலர்கள் அத்துறையில் கொட்டப்பட்டன. பயோடெக் நிறுவனங்கள்  ஒரு இலாபகரமான தயாரிப்புகளில் மட்டுமே ஆராய்ச்சியை செலுத்துகின்றன. அதன் தயாரிப்பு இலாபத்தை நிறைவேற்றாவிட்டால் அந்நிறுவனங்களின் வளர்ச்சி தடைப்படும். மேலும் அதன் பங்கு வீழ்ச்சி அடைவதோடு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை திரும்ப பெறுகின்றனர்.

கியூபாவின் உயிர்த்தொழில்நுட்பமும் அரசின் ஆதரவையையும், பொது நிதியுதவியையும் பெறுவதால் மட்டுமே  தனித்துவமானதல்ல. அந்நாட்டில் 1960 களில் இருந்தே சுகாதாரம், கல்விக்காக முன்னுரிமை கொடுப்பதற்கான உத்தியை அரசு வடிவமைத்திருப்பதோடு, பொருளாதாரத்தை அதன் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டிருப்பதால் தான் கியூப உயிர்த் தொழிற்நுட்பத்துறை தனித்துவமாக இருக்கிறது.

உயிர்த் தொழில்நுட்பத் துறையில் கியூபாவின் தன்மை:

கியூபாவில் உயிர்த் தொழில்நுட்பத் துறை அமெரிக்காவின் ஜெண்டெக்கிற்கு  ஐந்து ஆண்டுகளுக்கு பிறகே ஆரம்பிக்கப்பட்டது. அக்காலக் கட்டத்தில் பெரும்பாலான வளரும் நாடுகளுக்கு அத்துறையின் புதிய தொழிற்நுட்பங்களான டி.என்.ஏ மறுசீரமைப்பு, மனித மரபணு சிகிச்சை, போன்றவற்றை அணுகுவதிலும் ஈடுபடுவதிலும்  சிறிதளவே வாய்ப்பிருந்தது. ஆனால் கியூபா  பொது  சுகாதாரத் துறையிலும் தேசிய வளர்ச்சி திட்டத்திலும் தான் மேற்கொண்ட உத்தி காரணமாக  உயிர்தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சியடைந்தது. இத்துறைக்கு தேவையான தொழிற்நுட்பங்கள், உபகரணங்கள், பொருட்கள், நிதி மற்றும் அறிவு பரிமாற்றம்  போன்றவற்றை அமெரிக்கா தடுத்தபோதிலும் கியூபா இதை சாத்தியப்படுத்தியது. கியூப அரசுக்கு மட்டுமே சொந்தமான இத்துறை,  தனியார் நலன்கள் அல்லது ஊக முதலீடுகள் எதுவும் இல்லாமல் அரசு மூதலீட்டில் மட்டுமே நிறுவப்பட்டது. அத்துறையில் பங்குதாரர்கள் அனைவரும் அந்நாட்டின் உள்ள 11 மில்லியன் கியூபர்களே என்றார் கியூபாவின் மூலக்கூறு நோய் எதிர்ப்பு மையத்தின் தலைவர்.

படிக்க:
கொரோனா : மனநலம் குறித்த உரையாடலைத் தொடங்குவோம் | மருத்துவர் ருத்ரன்
♦ அமெரிக்கா : கொரோனாவுக்கு பலியாகும் கருப்பின ஏழை மக்கள் !

இந்நாட்டின் உயிர்த் தொழில்நுட்பம் பொது சுகாதாரத் துறையின் தேவைக்கேற்ப இயக்கப்படுகிறது. அரசின் சுகாதாரத் துறையோடு இது ஒருங்கிணைக்கப் பட்டிருப்பதால் இலாபத்தை நோக்கமாக கொண்டிருக்கவில்லை. இத்துறை ஆராய்ச்சி, கண்டுப்பிடிப்புகள், சோதனைகள், பயன்பாடுகள் என்று விரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இன்று கியூபாவில் பயன்படுத்தும் மருந்துகளில் 70% மருந்துகள் அமெரிக்காவின் தடை காரணமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது.

அந்நாட்டில் பல்வேறு உயிர்த் தொழிற்நுட்ப நிறுவனங்களுக்கிடையே ஆராய்ச்சிகள் மற்றும் புதிய விசயங்கள் பகிரப்படுவதால் போட்டியை விட ஒத்துழைப்பே அவைகளுக்கிடையே நிலவுகிறது. ஆனால் பெரும்பாலான நாடுகளில் பல்வேறு வணிகத்துறையின் அறிவியலாளர்கள் குழு, அறிவியல் மூலம்  தங்களது திட்டத்தை  உற்பத்தி சார்ந்த ஆராய்ச்சிகளுக்கும் சந்தைப்படுத்தலுக்கும் மட்டுமே  மேற்கொள்கின்றன.

கியூபன் சிகிச்சை :

இந்த தனித்துவமான கியூப  சுகாதாரஅமைப்பின் பலன்கள் என்ன? கடந்த 26 ஆண்டுகளில் கியூப வல்லுநர்கள் உலக அறிவுசார் சொத்துடைமை அமைப்பிலிருந்து (WIPO) பத்து தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளனர். முதல் பதக்கம் 1989 ஆம் ஆண்டு மூளைத்தண்டுக் காய்ச்சல் தடுப்பூசிக்காக ( Meningitis B vaccine ) வழங்கப்பட்டது. மற்றது Hib தடுப்பூசிக்காக கொடுக்கப்பட்டது.  உலகம் முழுவதும் நீரிழிவு கால புண்களால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை  422 மில்லியன் ஆகும். இந்த நோயின் சிகிச்சைக்கான மருந்தை (Heberprot-P) கியூபா கண்டுபிடித்ததன் மூலம் பத்து வருடங்களில் 71,000 கியூபர்களும், மற்ற 26 நாடுகளை சேர்ந்த 1.3 இலட்சம் நோயாளிகளும் சிகிச்சை பெற்றுள்ளனர். மற்ற ஒரு WIPO விருதானது சொரியாஸிஸ் நோயின் மருந்துக்கு (Itolizumab)கொடுக்கப்பட்டது. இதன் மூலம் உலகம் முழுவதும்  ஒரு இலட்சம் பேர் சிகிச்சையடைந்திருக்கின்றனர்.

தாயிலிருந்து சேய்க்கு எச்.எய்.வி பரவமால்  தடுப்பதில்  கியூபா உலகில் முதல் இடத்தில் இருப்பதாக 2015ல் உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. தன்னுடைய உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மருந்தைக் கொண்டு (antiretroviral) எய்ட்ஸ் தொற்று நோயைத் தடுத்தது. கடந்த பத்து வருடங்களில் உலகம் முழுவதும் நூறு மில்லியன் கியூப ஹெபடைஸிஸ்-பி தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. அமெரிக்காவிற்கு முன்பே பிறவி தைராய்டு சுரப்பு குறைபாடு இல்லாத நாடாக கியூபா மாறியது. மேலும் அல்சைமர் நோய்க்கான பயோமார்கர் பரிசோதனைகளையும் அந்நாட்டின் மூளை நரம்பியல் துறை வெற்றிகரமாக கண்டுபிடித்துள்ளது. கியூபாவின் பயோடெக் நிறுவனங்களின் மூலம் தயாரிக்கப்படும் 200 வகையான மருந்துகள் 49 வளரும் நாடுகளுக்கு மலிவான விலையில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கியூபாவின் அரசுக்கு சொந்தமான உயிர்த் தொழிற்நுட்பத் துறைக்கும் முதலாளித்துவ நிறுவனங்களின் இலாப நோக்கத்திற்கும் இடையிலான வேறுபாடு தொற்று நோய் மூலம் வெளிப்பட்டிருக்கிறது. கியூபா நம் அனைவருக்கு பாடம் கற்பித்துக் கொண்டிருக்கிறது.

பிரேசிலின் முன்னாள் அதிபர்  லூலா டா சில்வா ஆட்சியின் போது பிரேசில் மக்கள் நலனுக்காக பத்தாயிரத்திற்கும் அதிகமான கியூப மருத்துவர்கள் பணிபுரிந்தனர். இம்மருத்துவர்கள் பிரேசில் நாடு முழுவதும் குறிப்பாக பழங்குடிகள் மத்தியில் தங்கி எண்ணற்ற உயிர்களை காப்பாற்றினர். ஆனால் அதன் பிறகு பிரேசிலின் வலது சாரி ஆட்சியாளர் பொல்சானரோ ஆட்சிக்கு வந்த பிறகு அவர் கொண்டு வந்த தனியார்மய சுகாதார நடவடிக்கைகளினாலும், கியூப மருத்துவர்கள் தங்கள் நாட்டில் புரட்சியை தூண்டிவிடுவதற்காக தங்கி உள்ளனர் என்ற பொய்க் குற்றச்சாட்டுகளினாலும் 2019 முற்பகுதியில் கியூப மருத்துவர்கள் பிரேசிலை விட்டு வெளியேற ஆரம்பித்தனர்.

இப்போது தொற்று நோய் பரவி வருவதால் பிரேசில் கடுமையான சுகாதார நெருக்கடியின் கட்டத்தில்  உள்ளது. கடந்த மார்ச் மாதம் 15ம் தேதியன்று பிரேசிலின் சுகாதாரத் துறை செயலர் ஜோவா கபார்டோ, தங்கள் நாட்டிற்கு கியூப மருத்துவர்களை திரும்ப அனுப்புமாறு கியூப அரசைக் கேட்டுக் கொண்டார். பிரேசிலின் தொழிலாளர் கட்சியின் தலைவர் லூலா டா சில்வா, பிரேசில் அதிபர் பொல்சனோரா கியூப மருத்துவர்களைப் பற்றி முன்பு பொய்க்குற்றச்சாட்டை கூறியதற்காக பிரேசில் மக்களிடமும், கியூப மருத்துவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்  என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ஒரு நாட்டின் ஆரோக்கியம் அதன் பொது சுகாதாரக் கட்டமைப்பில் இருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறது கியூபா. முதலாளித்துவ நாடுகளிலோ சுகாதாரம் என்பது தனியார் நிறுவனங்களின் இலாபம் ஈட்டும் வர்த்தகமாக இருக்கிறது. கொரோனா வைரஸை அழிக்கும் வல்லமை சோசலிசக் கட்டமைப்புகளுக்கு மட்டுமே இருக்கிறது என்பதை நம் காலம் ஓங்கி உணர்த்துகிறது.

– பரணிதரன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க