அருண் கார்த்திக்
12 மார்ச் அன்று செய்தித்தாள்களில் ‘ஊரடங்கு முடிந்ததும் தொழிற்சாலைகளில் 12 மணி நேர வேலை!’ என்பது போன்ற தலைப்பிட்ட செய்தி வந்தது. தொழிற்சாலைகளில் வேலை நேரத்தை அதிகரிக்க அரசு அமைத்த குழு பரிந்துரை செய்ததாகவும் அந்தப் பரிந்துரையை ஏற்று சட்ட திருத்தங்களை மோடி அரசு கொண்டு வரப் போவதாகவும் அந்த கட்டுரை கூறியிருந்தது. இதனால் உற்பத்தி செலவு குறையும் என்றும் அதனால் தொழிற்சாலைகள் சிறப்பாக செயல்பட முடியும் என்றும் விளக்கம் கூறியிருந்தது.

இந்த மாதிரி அறிவுரைகளைக் கூறும் பொருளாதார வல்லுனர்கள் என கூறப்படுபவர்கள் கண்டிப்பாக மூளையை முதுகில் வைத்திருப்பவர்களாக இருக்க வேண்டும்! நடப்பதைப் பற்றி எந்த புரிதலும் இல்லாதவர்கள் மட்டுமே இவ்வாறு யோசனை கூற முடியும்.

கொரோனா வைரஸ் வருவதற்கு முன்பாகவே பொருளாதாரம் மந்த நிலையில் தான் இருந்தது. Consumption எனப்படும் நுகர்வு சமீபத்திய வரலாற்றில் காணப்படாத அளவு குறைந்திருந்தது. நடுத்தர மக்கள் வாங்கும் இரு சக்கர நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமல்லாமல் கீழ்தட்டு மக்கள் வாங்கும் பிஸ்கட், பற்பசை முதல் உள்ளாடை வரை அனைத்தும் விற்பனை சரிவை சந்தித்து இருந்தது. பொருளாதாரம் ஒரு சங்கிலித்தொடர் என்பதால் இந்த சரிவு மற்ற துறைகளையும் பாதித்தது. எடுத்துக்காட்டாக சரக்கு வாகனங்களின் விற்பனை 50 சதவீதத்துக்கு மேல் சரிவை கண்டது. இந்த தேக்க நிலையினால் நிறுவனங்கள் வங்கிகளில் இருந்து வாங்கிய கடனை கட்ட முடியாமல் வராக்கடனாக மாறியது. வங்கிகளின் கணக்குகளில் வராக்கடன் அதிகரிப்பதால் வங்கிகள் கடன் கொடுப்பதை குறைக்க தொடங்கின. இவ்வாறு நீண்டு கொண்டே சென்றது.

இவை அனைத்துக்கும் காரணம் அடித்தட்டு மக்களால் பொருட்களை வாங்க முடியாமல் போனதுதான். பொருளாதாரத்தில் இதற்கு demand side constraint என்று கூறுவார்கள். அதாவது சந்தையில் பொருட்கள் இருக்கின்றன ஆனால் அதை வாங்குவதற்கு ஆட்கள் இல்லை, அதாவது தேவை இல்லை, என்பதுதான் இதற்குப் பொருள். பொதுவாக இந்த விற்பனை குறைவுக்கு பொருளாதாரத்தில் இன்னொரு காரணம் கூறப்படுவது உண்டு. அதற்குப் பெயர் supply side constraint. அதாவது, போதுமான அளவு பொருட்கள் சந்தையில் இல்லாததால் விற்பனை குறைவது. எந்த வகையில் விற்பனை குறைகிறதோ அதற்கு ஏற்றாற்போல் அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பொருட்கள் சந்தையில் இல்லாமல் இருப்பதனால் விற்பனை குறைகிறது என்றால் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களால் வாங்க முடியாமல் விற்பனை குறைகிறது என்றால் மக்களின் வாங்கும் திறனை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

படிக்க:
♦ கடலூர் : தூய்மைப் பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுத்த மக்கள் அதிகாரம் !
♦ கொரோனா “ரெட்அலர்ட்” பகுதியில் பணி செய்த அனுபவம் !

இப்போது இந்தியா சந்தித்து வரும் சரிவு மக்களின் வாங்கும் திறன் குறைந்து இருப்பதால் இருக்கும் சரிவு. இதுதான் சரிவுக்குக் காரணம் என்று நம்மால் எப்படி உறுதியாக கூற முடிகிறது? அனைத்து துறைகளிலும் உள்ள தொழிற்சாலைகள் அவை உற்பத்தி செய்யக்கூடிய அளவில் எத்தனை சதவீதத்திற்கு உற்பத்தி செய்கின்றன என்பதை வைத்து இதை முடிவு செய்வார்கள். இதை திறன் பயன்பாடு (capacity utilisation) என்று சொல்வார்கள். தற்போதைய நிலையில் இந்தியாவில் வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் தொடங்கி பல துறையில் செயல்படும் தொழிற்சாலைகள் மிகவும் குறைந்த திறன் பயன்பாட்டில் இயங்குகின்றன.

இதற்கு எல்லாவற்றுக்கும் மேலாக முக்கியமான குறியீடு ஒன்று உள்ளது. நாட்டிலுள்ள மின்சார உற்பத்தி ஆலைகள் அவர்களுடைய உற்பத்தி அளவில் எத்தனை சதவீதம் உற்பத்தி செய்கின்றன என்பதுதான் அந்தக் குறியீடு. இதற்கு plant load factor என்று பெயர். எடுத்துக்காட்டாக, 100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய ஒரு ஆலை 50 மெகாவாட் உற்பத்தி செய்கிறது என்றால் அந்த ஆலை 50% plant load factor-இல் இயங்குகிறது என்று பொருள். கடந்த ஆண்டு இந்தியாவில் உள்ள அனைத்து மின் உற்பத்தி ஆலைகளிலும் இந்த plant load factor வரலாறு காணாத அளவு குறைவாக இருந்துள்ளது. இதற்குப் பொருள் என்னவென்றால் நாட்டில் மின்சார உற்பத்தி திறன் இருக்கிறது ஆனால் அந்த மின்சாரத்தை வாங்கி உபயோகப்படுத்த ஆர்வமில்லாமல் இருக்கிறது. இன்னும் அனைத்து வீடுகளும் மின்சார மயமாக்கப்படாத ஒரு நாட்டில் மின்சாரத் தேவை குறைவது என்பது வேறு ஏதோ பெரிய பிரச்சனையை காட்டுகிறது.

இதற்கும் அதே பொருள் தான். மக்களிடம் வாங்கும் திறன் இல்லை அதனால் உற்பத்தியாளர்கள் பொருட்களை உற்பத்தி செய்வதில்லை. அதனால் உற்பத்தியாளர்கள் மின்சாரத்தை பயன்படுத்துவது குறைந்துள்ளது.

பிரச்சனை இவ்வளவு பெரிதாக இருந்தாலும் இதற்கு தீர்வு மிக எளிதானது. மக்களின் வாங்கும் திறனை அதிகரித்தால் இந்த பொருளாதார சுழற்சி என்பது மீண்டும் நகர தொடங்கிவிடும். எளிதாக சொல்ல வேண்டுமென்றால் சாதாரண மக்களின் கைகளில் அதிகப்பணம் புழங்கினால் அவர்கள் இயல்பாகவே அதிக பொருட்களை வாங்குவார்கள். அது அதிக உற்பத்திக்கு வழிவகுக்கும். அது வேலைவாய்ப்பை சிறிதளவேனும் அதிகரிக்க வழிவகை செய்யும். இதை demand side intervention என்று கூறுவார்கள்.

இது ஒன்றும் கம்யூனிச அல்லது சோசலிச கொள்கை அல்ல, முதலாளித்துவ அறிஞர்கள் கூறும் தீர்வு தான் இது. ஜான் மேனார்டு கீன்ஸ் என்ற பொருளாதார அறிஞர் வகுத்த கொள்கைகள் தான் இது. முதலாளித்துவத்தின் சொர்க்க பூமி என்று கருதப்படும் அமெரிக்காவிலேயே 1930களில் பொருளாதார தேக்க நிலை வந்த பொழுது பிராங்க்ளின் ரூசவெல்ட் என்ற அதிபரால் அமல் படுத்தப்பட்டு பெரும் வரவேற்பை பெற்ற கொள்கைகள் தாம் இவை!

ஆனால், இந்திய அரசு இதை எதையும் செய்யாமல் நேரெதிரான வேலைகளை செய்து வருகிறது. வாங்கும் திறனை அதிகரிப்பதற்கு பதிலாக உற்பத்தியை அதிகரிப்பதற்கு வேலைகளை செய்கிறது. அதாவது குறைந்த வட்டியில் கடன்கள் கொடுப்பதன் மூலமும் வருமானவரி விலக்கு அளிப்பதன் மூலமும் மற்ற முறைகளில் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலமும் உற்பத்தியை அதிகரிப்பார்களாம். உற்பத்தி அதிகரித்தால் விலை குறைந்து மக்கள் வாங்கத் தொடங்கி விடுவார்களாம். Supply side intervention என்று இதற்குப் பெயர்.

இவ்வாறு உற்பத்தியை அதிகரிக்க ஊக்குவிப்பதன் ஒரு அங்கம்தான் தொழிலாளர்களுடைய சம்பளத்தை குறைப்பது. சம்பளத்தில் நேரடியாகவும் குறைக்கலாம் வேலை நேரத்தை அதிகரிப்பதன் மூலமும் மறைமுகமாக குறைக்கலாம். கடந்த காலங்களிலும் பெருநிறுவனங்களுக்கு வருமான வரி சலுகை, குறைந்த வட்டியில் கடன் போன்றவற்றை மோடி அரசு கொடுத்து பொருளாதாரத்தை நிமிர்த்தும் முயற்சி செய்தது. ஆனால் அவை எதுவும் எடுபடவில்லை.

இவர்கள் கையாலாகா தனத்திற்கு பாவப்பட்ட கொரோனா பழியை ஏற்றுக் கொண்டது. சாதாரண காலங்களிலேயே செயல்படாத இந்த முயற்சிகள் இப்போது நாம் சந்திக்கும் இக்கட்டான சூழலில் எப்படி செயல்படும் என்று இவர்கள் நம்புகிறார்கள் என்று தெரியவில்லை. எல்லாம் செயல்பட்டுக் கொண்டிருந்த பொழுதே சாதாரண மக்களிடம் பணம் இல்லாமல் இருந்தது. அதனால் அவர்கள் பொருட்களை வாங்காமல் இருந்தனர். இப்போது எல்லாம் ஸ்தம்பித்து போன பிறகு அவர்கள் கையில் சுத்தமாக காசே இருக்காது, பட்டினி கிடக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. இந்த சமயத்தில் ஒரு முதலாளித்துவ பொருளாதார அறிஞரை கேட்டாலும் கூட மக்கள் கையில் பணம் போய் சேர வேண்டும் என்று தான் கூறுவார்கள். பொருளாதார வலதுசாரிகள் என்று கருதப்பட்ட டிரம்ப் முதல் போரிஸ் ஜான்சன் வரை அனைவரும் மக்களிடம் ‘நீங்கள் வீட்டிலேயே இருங்கள், உங்களுக்கு தேவையானதை அரசு செய்யும், உங்களுக்கு மாதம் இவ்வளவு என்று பணத்தையும் நாங்கள் தருகிறோம்’ என்று கூறுகிறார்கள். ஆனால் இந்திய அரசு மட்டும் அறிவாளி தனமாக வேலை நேரத்தை எப்படி அதிகரிப்பது என்று பேசிக் கொண்டிருக்கிறனர்.

அரசு இவ்வாறு செய்வதன் மூலம் வரப்போகும் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்க போகின்றது. ஏற்கனவே புலம்பெயர் தொழிலாளர்கள் உணவு இல்லாததால் வன்முறையில் ஈடுபட்டதாக குஜராத்திலிருந்து செய்தி வந்துள்ளது. நிலைமை மோசமாக ஆக இது நாடு முழுதும் பரவும் அபாயம் உள்ளது.

வேதனை என்னவென்றால் இந்த நிலையிலும் கூட அமெரிக்க எஜமானர்கள் எப்படி திருப்தி செய்வது என்றே நமது ஆட்சியாளர்கள் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். மண்ணில் தலையை புதைத்துக்கொண்ட நெருப்புக்கோழி என்று ஒரு எடுத்துக்காட்டு சொல்வார்கள், நம்ம ஆட்சியாளர்களோ மண்ணில் தலையை புதைத்துக் கொண்டது மட்டுமல்லாமல் கண்ணையும் மூடிக்கொண்டு இருப்பது போல் தெரிகிறது.

நாம் இதை எல்லாம் சொன்னால், இப்படிப்பட்ட இக்கட்டான நேரங்களில் கூட அரசை குறைகூறுவதிலேயே குறியாக உள்ளீர்கள் என்று நடுநிலையாளர்கள் நம்மை குறை கூறுகிறார்கள்.

அய்யன் திருவள்ளுவரே எப்போதும் போல இதற்கும் பதில் சொல்லியுள்ளார்!

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்

அருண் கார்த்திக்