கோவிட்-19 கொள்ளை நோய் எவ்வகையில் முடியும் ? தற்போது பரிசோதனையில் உள்ள ஏதேனும் வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் வெற்றி பெற்றால், இன்னும் சில மாதங்களில் முடிந்துவிடும் என்பது பொதுவான ஒரு விருப்பம். இன்னும் சில வருடங்களில் ஒரு தடுப்பூசி கிடைக்கப் பெற்றால், நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த வைரசை ஒழித்துவிடமுடியும்.

எனினும் ஒரு கொள்ளைநோய் உண்மையில் இவ்வாறான வகையில் கடந்து செல்லும் என்பதை சொல்ல முடியாது. கொரோனா வைரஸ் பிரச்சினைக்கான சிகிச்சைகள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவதற்கான அறிகுறிகள் தெரிந்தாலும், கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அவை அனைத்து மக்களுக்கும் கிடைக்கக் கூடியதாக இருப்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. சொல்லப் போனால், முந்தைய பிற கொள்ளை நோய்களுக்கான சிகிச்சை முறைகள் மற்றும் தடுப்பு மருந்துகள் எவ்வாறு காப்புரிமைகளின் (Patents) கீழ் புதைக்கப்பட்டு, யார் வாழவேண்டும், யார் சாகவேண்டும் என்பது மருந்து நிறுவனங்களால் எப்படித் தீர்மானிக்கப்பட்டு முடிக்கப்பட்டதோ, அவ்வகையிலேயே கோவிட்-19 கொள்ளை நோயும் முடிவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

ஒரு விஞ்ஞானி பிரேசில் சவோ பவுல், ஹார்ட் நிறுவனத்தில் கோவிட்-19 எதிர்ப்பு மருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள புகைப்படம். (படம் – நன்றி : த கார்டியன்)

பொதுவாக, ஒரு சரக்கின் மீது தனிச்சிறப்பான கட்டுப்பாட்டை செலுத்தவல்ல நிறுவனங்களான ஏகபோகங்களை முதலாளித்துவ சந்தையின் தோல்விகளாகவும், இதனை வணிகப் போட்டிச் சட்டங்களின் மூலமாக தீர்த்துக் கொள்ள முடியும் என்றும் எண்ணுகிறோம். மருத்துவ காப்புரிமைகளும் சட்டப்பூர்வமான ஏகபோகங்களுக்கு நிகரானவையாகும். மருத்துவக் காப்புரிமைகள், மருத்துவம் குறித்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு மூலதனமிடும் மருந்து நிறுவனங்களுக்கான பரிசு.

முக்கியமாக இந்த காப்புரிமைகள் 20 ஆண்டுகளுக்கு மட்டுமே நீடிக்கக் கூடியவை – தற்காலிகமானவை என்றும் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் எதார்த்தத்தில் இந்த மருந்துகளின் சூத்திரங்களில் சிறுமாற்றங்களைச் செய்து அதற்குக் காப்புரிமை பதிவு செய்வதன் மூலம் இந்த காலகட்டத்தை அதிகரித்துக் கொள்கின்றன, மருந்து நிறுவனங்கள். இதன் மூலம் சந்தைப் போட்டியை தவிர்த்து விடுவதோடு, பெரும் மருந்து நிறுவனங்களின் கையில் அதன் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை அளிக்கின்றன.

படிக்க:
♦ கொரோனா நிவாரணப் பணிகளில் மதுரை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் !
♦ கொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்

1996-ம் ஆண்டு அமெரிக்காவில் எச்.ஐ.வி – எயிட்ஸ் நோய்க்கான சிகிச்சையை சில மருந்து நிறுவனங்கள் ஒன்றிணைந்து சந்தைக்குக் கொண்டு வந்தன. மீளூட்டு வைரஸ் எதிர்ப்பு மருந்துகளின் கலப்பை அடிப்படையாகக் கொண்ட சிகிச்சைமுறை எச்.ஐ.வி. வைரசால் உண்டாக்கூடிய மரணத்தை நாட்பட்ட பிணியாக மாற்றவல்லவை. இந்த சிகிச்சையை ஒரு நபருக்கு வழங்க ஆண்டுக்கு 6500 பவுண்டுகள். (1996-ம் ஆண்டில் இந்திய மதிப்பின் படி ரூ.4,55,000). உலகின் பல்வேறு பகுதிகளிலும் இந்த விலைக்குத்தான் விற்கப்பட்டது. சிகிச்சையே எடுக்க முடியாதபடிக்கு விலை இருந்தது. இலட்சக்கணக்கான மக்கள் நோய்வாய்ப்பட்டு இறந்த பின்னர், கடந்த 2004-ம் ஆண்டுதான் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் இந்த சிகிச்சையை பயன்படுத்த முடிந்தது.

கொரோனா வைரஸுக்கான சிகிச்சைகளுக்கான வாய்ப்பை மருத்துவ ஏகபோகங்கள் எவ்வாறு தடை செய்துள்ளன என்பதை ஏற்கெனவே நாம் பார்த்து வருகிறோம். சுகாதாரப் பணியாளர்களுக்கு போதுமான N95 முகக்கவசங்கள் இல்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் 3M என்ற நிறுவனம் சுவாசப் பாதுகாப்பு உபகரணங்களுக்கான சுமார் 400க்கும் மேற்பட்ட காப்புரிமைகளை வைத்துக் கொண்டு, அதனைப் பிற நிறுவனங்கள் தயாரித்து அமெரிக்காவில் வழங்க முடியும் என்பதை கட்டுப்படுத்துகிறது. இந்த கொள்ளை நோய்ச் சூழலில் காப்புக் கருவிகளின் உற்பத்தியை அதிகரிக்க, 3M நிறுவனம் தனது காப்புரிமைகளை விடுவிக்க வேண்டும் என பல அரசியல்வாதிகள் கேட்டுள்ளனர்.

கோவிட்-19 பரிசோதனைகள் மிகவும் பற்றாக்குறையாக இருப்பதற்கு மத்தியில், ஒரு பிரெஞ்சு பரிசோதனைக் கருவி உற்பத்தியாளர், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் அவசர ஒப்புதலுக்காக ஒரு சோதனைக் கருவியை வடிவமைத்து சமர்ப்பித்தார். ஜப்பானைச் சேர்ந்த சாஃப்ட்பேங்க் குழுமத்தைச் சார்ந்த ஒரு நிறுவனம் அதற்கு எதிராக காப்புரிமை மீறல் வழக்குத் தொடுத்தது. (பின்னர் அது திரும்பப் பெறப்பட்டது)

தற்போது பரிசோதனையில் இருக்கக் கூடிய கொரோனா வைரசிற்கான நம்பிக்கைதரக் கூடிய சிகிச்சைகளில் பெரும்பான்மையானவை காப்புரிமையோடு இணைக்கப்பட்டிருக்கின்றன. இன்ஃப்ளூவன்சா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஃபாவிபிராவிர் , எச்.ஐ.வி சிகிச்சைக்காக கலெட்ரா என்ற பெயரில் விற்கப்படும் ’இயோப்பினவின் மற்றும் ரிட்டொனவிர் மருந்துகளின் கலவை மருந்து’ ஆகியவை குறைந்த காலகட்ட காப்புரிமையைக் கொண்டுள்ளன. கிலீட் எனும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் வரும் 2038 ஆண்டு வரைக்குமான பல முக்கிய மருந்துகளின் காப்புரிமையைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம்தான் எபோலா வைரசிற்கான மருந்தான ரெம்டெசிவிர்-ஐ உருவாக்கியது.

இந்த ரெம்டெசிவிர் மருந்தை கொரோனா வைரசிற்கு மருந்தாக பயன்படுத்துவதைத் தடுக்க இந்நிறுவனம் இம்மருந்திற்கு “ஆதரிக்கப்படவேண்டிய மருந்து” (Orphan Drug) தகுதியைக் கோரியது. “ஆதரிக்கப்படவேண்டிய மருந்து” தகுதியில் உள்ள ஒரு மருந்து என்பது – அரிதான ஒரு நோய்க்கு தயாரிக்கப்படும் மருந்தாகும். அரசாங்க அதனை லாபகரமான முறையில் தயாரிக்க முடியாது என்ற வகையான மருந்தாகும். ஆனால் கோவிட்-19 இதற்கு நேர் எதிரானது. அது அரிதான நோயும் அல்ல. அந்த நிறுவனம் பின்னர் இந்த முயற்சியைக் கைவிட்டது.

படிக்க:
♦ சாபு மண்டல் ஒரு தொழிலாளி – கொரானாவும், முன்னேற்பாடு ஏதும் செய்யாத அரசும் அவரை கொன்றுவிட்டன !
♦ கொரோனா நிவாரணம் : ஏப்ரல் 26 ஞாயிறு அன்று தமிழக அளவில் அரசை வலியுறுத்தும் கவன ஈர்ப்பு நிகழ்வு

கோவிட்-19-க்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால், அது பல காப்புரிமைகளால் அமுக்கப்படுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உண்டு. தற்போது தடுப்பு மருந்துகள்தான் மிகப்பெரிய வியாபாரம். உதாரணத்திற்கு நிமோனியாவினால் ஏற்படும் குழந்தை மரணங்களை எடுத்துக் கொள்ளலாம். தற்போது நிமோனியாவிற்கு இரண்டு தடுப்பு மருந்துகள் நடைமுறையில் இருக்கின்றன. அவை ப்ஃபிசர் மற்றும் க்லாக்சோஸ்மித்க்லைன் ஆகிய இருநிறுவனங்களின் காப்புரிமையால் அழுத்தப்பட்டிருக்கின்றன.

இந்தியா ப்ஃபிசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்தை பயன்படுத்துகிறது. ஒரு குழந்தைக்கான முழு திட்டத்திற்கான மருந்தின் விற்பனை விலை $250 (இன்றைய ரூபாய் மதிப்பில் ரூ. 19,125) ஆகும். ஆனால் கவி (GAVI) எனும் உலகளாவிய தடுப்பூசி / நோயெதிர்ப்புக் கூட்டணி நிறுவனத்தினால் மானிய விலையில் 8 பவுண்டுக்கு (ரூ. 756) இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் கோடிக்கணக்கில் இம்மருந்தின் தேவை இருக்கும் சூழலில், இந்த மானியவிலையும் கூட கட்டுப்படியானதாக இல்லை. இதன் காரணமாக குழந்தைகளில் வெகு சிறிய பங்கினரே இந்த தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடிகிறது. நிமோனியாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்து 40 ஆண்டுகள் கழிந்த பிறகும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் இந்த நோய்க்கு 1,27,000 குழந்தைகள் உயிரிழக்கின்றன. நிலைமை இப்படி இருக்கையில் இந்த தடுப்பு மருந்து மட்டும் ப்ஃபிசர் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு 4.5 பில்லியன் பவுண்டு (ரூ. 42,562 கோடி) வருமானத்தை ஈட்டித் தந்து கொண்டிருக்கிறது.

மருத்துவ சிகிச்சைகளின் மீதான ஏகபோக கட்டுப்பாட்டைக் கையாளுதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுத்து வருவதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. காப்புரிமைகளுக்கு உரிமம் பெறுதல் கட்டாயமாக்கப்படுவது பிரபலமாகி வருகிறது. சட்டப்பூர்வமான வகையில் அந்த நாடுகள் ஒரு பொருளின் மீதன காப்புரிமையை தற்காலிக ரத்து செய்யலாம். கொள்ளை நோய் சூழல், கட்டாய உரிமத்தை அவசியப்படுத்துவதாக கடந்த மாதத்தில் சிலி அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து பிற நாடுகளும் இதைப் பின்பற்றின.

இஸ்ரேல் இயோப்பினவிர் மற்றும் ரிட்டோனவிர் ஆகிய தடுப்பு மருந்துகளுக்கு கட்டாய உரிமம் வழங்கியுள்ளது. கோவிட்-19 தொடர்பான அனைத்து காப்புரிமைகளுக்கும் சுகாதார அமைச்சர் கட்டாய உரிமம் வழங்கவேண்டும் என ஈக்குவேடார் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. கனடாவும், ஜெர்மனியும் தங்களது காப்புரிமை சட்டத்தில் விரைவான கட்டாய உரிமம் வழங்குவதற்கான திருத்தத்தை மேற்கொண்டுள்ளன. பிரேசில் கட்டாய உரிமத்தகை எளிமைப்படுத்துவதற்கான சட்டத்திருத்தத்தை தனது காப்புரிமை சட்டத்தில் மேற்கொள்வதற்கான வழிமுறையில் உள்ளது.

இந்த நடவடிக்கைகள் பயனுள்ளவைதான் என்றாலும் ஒவ்வொரு நாடும் தனியாகவே இந்நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதாகிறது. மேலும் கொரோனா வைரஸ் சிகிச்சைகளைப் பெறுவதற்கு காப்புரிமைகள் மட்டும் தடையாக இல்லை. உலகளாவிய கோவிட்-19 தொழில்நுட்ப சேர்மம் (Global Covid-19 Technology Pool) ஒன்றை உருவாக்குவதற்கான முன்மொழிதலை கோஸ்டா ரிகா நாடு உலக சுகாதார நிறுவனத்திடம் முன்வைத்திருக்கிறது. இந்த தொழில்நுட்ப சேர்மத்தில், தேவையான காப்புரிமை, வடிவமைப்புகள், வர்த்தக ரகசியங்கள் மற்றும் மென்பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அறிவுசார் சொத்துரிமைகளும் அனைத்தும் உட்கொண்டுவரப்படும். அந்த சேர்மம் தங்களது கண்டுபிடிப்புகளை பகிர்ந்து கொள்ளவும், உலகளாவிய அளவில் அது கிடைக்கச் செய்யவும் அரசாங்கங்களை ஊக்கப்படுத்தும்.

இந்த முன்மொழிதல் திட்டமாக நிறைவேறுவதிலிருந்து வெகுதூரம் பின் தங்கியிருந்தாலும், இதற்கான ஆதரவு வளர்ந்து வருகிறது. சமீபத்தில் நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்தின் ஆட்சியாளர்கள் இந்த கருத்தாக்கத்திற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்கள். உலக சுகாதார மையத்தின் இயக்குனர் ஜெனரல் கோஸ்டா ரிக்காவின் இந்த முன் மொழிதலை வரவேற்றிருக்க, யூனிடெய்ட் (UNITAID) அமைப்பும் இத்திட்டத்திற்கு நிதியுதவி அளிப்பதாக அறிவித்திருக்கிறது.

இது ஒரு கொள்ளைநோய் என்ற வகையில், எந்த ஒரு கார்ப்பரேட்டும் தம்மை கோவிட்-19-க்கான ஏகபோகமாக நிலைநாட்டிக் கொள்ள முடியாது. கோவிட்-19 சிகிச்சைகள் ஏகபோக கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டிருந்தால் அனைவருக்கும் சிகிச்சை சென்றடைவதில் நாம் உண்மையில் வெற்றி பெறுவோம். இது ஒருவேளை நடந்தால், கோவிட் 19 மட்டுமல்லாது பிற நோய்களிலிருந்து தப்பிப் பிழைக்க இத்தகைய மருந்தக அமைப்புதான் நமக்குத் தேவை என்பதை நாம் உணர முடியும்.

வினவு செய்திப் பிரிவு

கட்டுரையாளர்கள் : அச்சல் பிரபலா, எல்லென் டி ஹோயென்
தமிழாக்கம்: நந்தன்
மூலக்கட்டுரை, நன்றி :  த கார்டியன். 

பின்குறிப்பு : இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் UNITAID மற்றும் GAVI ஆகிய அமைப்புகள் பில்-மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் துணையுடன் நடத்தப்பட்டு வரும் அமைப்புகள் ஆகும். ஒருபுறம் இதுபோன்ற அறக்கட்டளைகள் மூலம் மருத்துவத்தை அனைவருக்கும் கிடைக்கச் செய்ய முயற்சிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் பில் கேட்ஸ், இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் மருந்து ஏகபோகங்களையும் கையில் வைத்துக் கொண்டிருக்கிறார். பெரும்பான்மையான மக்களை உயிருடன் மட்டும் வைத்திருப்பது என்ற அளவில் பராமரித்து வரும் இத்தகைய அறக்கட்டளைகளின் புரவலர்கள்தான் மருந்தக ஏகபோகங்களில் முதலீட்டாளர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கொள்ளை நோய் என்ற வகையில் கோவிட்-19-ஐ எதிர்கொள்ள ஒன்றிணைய முனைந்திருக்கும் சில நாடுகளும் கூட சாதாரண நிலைமைகளில் எக்காரணம் கொண்டும் காப்புரிமைகளை ரத்து செய்வது அல்ல, கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக் கூட துணியாது. உலக முதலாளித்துவக் கட்டமைப்பில் ஆதிக்கம் செலுத்தும் மருந்து நிறுவனங்களின் ஏகபோகத்தை ஆதராத்துடன் அம்பலப்படுத்தும் விதமாகவே இக்கட்டுரையை தமிழாக்கம் செய்து வெளியிடுகிறோம்.

3 மறுமொழிகள்

  1. மேல்தட்டு மற்றும் உயர்நடுத்தர வர்க்கத்தினர் கொரோனாவால் தனக்கு ஆபத்து வராமல் இருப்பதற்காக இன்றைக்கு ஏழைகளைப் பசியோடு ‘ஊரடங்கிக்’ கிடைக்கச் சொல்லுகிறார்கள்.

    நாளைக்கு மருந்து கண்டுபிடிக்கப் பட்டதும் ஏழைகள் அதைத் தொட்டுப் பார்க்கக் கூட முடியாத அளவில் விலை நிர்ணயம் செய்யப்படலாம். அப்போது ஊரடங்கு தொடராது.

    அப்படியானால் ஊரடங்குக்கும் மருத்துவ ஆராய்ச்சிக்கும் என்ன அர்த்தம்.

  2. இம்முறை அவ்வாறு விட முடியாது. அனைவருக்கும் கட்டாய தடுப்பூசி போட்டால் தான் ஏழைகளாக இருந்தாலும் பணக்காரனாக இருந்தாலும் அனைவருமே பிழைக்க முடியும்

    • தடுப்பூசி போட்டால் அவர்களுக்கு ஏன் இந்த பிரச்சினை மீண்டும் வரப்போகிறது.

Leave a Reply to Khan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க