தொற்றுநோய் தடுப்பும் அதற்கெதிராக காப்புரிமையும் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ், அர்ஜுன் ஜெயதேவ், அச்சால் பிரபாலா

(ஏப்ரல் 27, 2020, பிசினஸ் ஸ்டாண்டர்டு நாளேட்டில் வெளியான கட்டுரையின் தமிழாக்கத்துடன் கூடுதலாக சில விவரங்கள்)

***

ஒரு புதிய உலகத்தைக் கற்பனை செய்து பாருங்கள் !

ந்த உலகத்தில் அனைத்து நாடுகளையும் இணைக்கும் வலைப்பின்னலைக் கொண்ட மருத்துவத்துறை வல்லுனர்கள், உருவாகிவரும் தொற்றுநோய்க் கிருமிகளின் பாணிகளைக் கண்காணிக்கிறார்கள்; அவற்றை காலமுறைப்படி அவ்வப்போது புதிய தரவுகளுடன் செழுமைப்படுத்தி, ஒரு புதிய சூத்திரத்தை – விதிமுறையை நிறுவுகிறார்கள். அக்கிருமிக்கு எதிராக நோய்த்தடைக் காப்பு மருந்தை செலுத்தி அதை அழித்து, அதன் பின்னர் இந்தத் தகவல்களை உலகெங்குமுள்ள நிறுவனங்களுக்கும் நாடுகளுக்கும் கொடுக்கிறார்கள் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்!

மேலும், இந்தப் பணியானது அறிவுசார் சொத்துரிமை (intellectual-property – IP) ஏதுமின்றி, மக்களை நிர்கதியான நிலைக்குத் தள்ளி உச்சகட்ட லாபத்தைக் கொள்ளையிடும் ஏகபோக மருந்து நிறுவனங்களின் சுரண்டல் ஏதுமின்றி நடந்தால் எப்படியிருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்!

இதுவொரு கற்பனாவாத மாயக்கதையாகத் தோன்றலாம். ஆனால், கடந்த 50 ஆண்டுகளில் ஃபுளூ காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து எவ்வாறு தயாரிக்கப்பட்டது என்பதற்கான உண்மையான விளக்கம்தான் இது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) கீழ், உலகளாவிய குளிர்க் காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் மறுமொழி அமைப்பின் (Global Influenza Surveillance and Response System – GISRS)  நிபுணர்கள் ஆண்டுக்கு இருமுறை கூடி, உருவெடுக்கும் ஃபுளூ கிருமிகளின் புதிய பாணிகளைப் பற்றிய தரவுகளைக் கொண்டு விவாதித்து, அவற்றைப் பகுத்தாய்கிறார்கள். இவற்றின் மூலம் ஒவ்வொரு ஆண்டிலும் போடப்படும் புதிய நோய்த்தடைக் காப்பு மருந்துகளில் எத்தகைய பாணிகளைச் சேர்க்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறார்கள். ஏறத்தாழ 110 நாடுகளில் விரிவடைந்துள்ள இத்தகைய வலைப்பின்னலுக்கு பெரும்பாலும் இந்நாடுகளின் அரசாங்கங்களே (பகுதியளவுக்கு சில அறக்கட்டளைகளும் உள்ளிட்டு) நிதியுதவியைச் செய்கின்றன. யேல் பல்கலைக்கழக சட்டத்துறைக் கல்விக் கழகத்தின் பேராசிரியரான எமி காப்சைன்ஸ்கி (Amy Kapczynski) கூறுவது போல இது “திறந்தவெளி அறிவியல்” ஆகும்.

ஏனென்றால், உலகளாவிய குளிர்க் காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் மறுமொழி அமைப்பானது (GISRS), லாபத்தைக் குவிப்பதைவிட மனித உயிர்களைப் பாதுகாப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. இது, நோய்த்தடை காப்பு மருந்துகளை வளர்த்தெடுப்பதற்கான செயற்பாட்டு அறிவாற்றலுடன் அதனை விநியோகிப்பதிலும், சேகரிப்பதிலும், விளக்குவதிலும் ஆற்றலைக் கொண்ட தனித்துவமான அமைப்பாகும். கடந்த காலத்தில் இந்த அமைப்பின் அணுகுமுறையானது, ஆராய்வதற்கு முன்னரே உண்மையென ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும், அதன் சாதகங்கள் வெகுவிரைவிலேயே தெளிவாகத் தெரிகின்றன.

படிக்க:
♦ கொரோனா எதிர்ப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் மக்களுக்கு கிடைக்குமா ?
♦ காவிரி – மின்சாரம் – தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தப் பார்க்கும் மோடி அரசு !

தொற்று நோயைப் பொறுத்தவரையில், மிக முக்கியமான சிகிச்சைக்கான அறிவைப் பகிர்ந்து கொள்வதில் உலகளாவிய அறிவியல் சமூகமானது குறிப்பிட்டத்தக்க விருப்பத்தைக் காட்டுகிறது. மருத்துவ பரிசோதனைகளை ஒருங்கிணைத்தல், புதிய மாதிரிகளை உருவாக்குவதில் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றைக் கொண்டிருப்பதோடு, தங்கள் கண்டுபிடிப்புகளை உடனடியாக வெளியிடவும் அவை விருப்பத்தைக் காட்டுகின்றன.

இத்தகைய புதிய ஒத்துழைப்பான சூழலில், வர்த்தக ரீதியான மருந்து நிறுவனங்கள் பல தலைமுறைகளாக இத்தகைய அனைவருக்குமான அறிவுவளத்தை தனியார்மயமாக்கி, பூட்டி வைத்துக் கொண்டு, உயிர் காக்கும் மருந்துகள் மீது எவ்விதத் தடையுமின்றி ஆதிக்கத்தையும் நீட்டித்துக் கொண்டுள்ளன. தேவையற்ற, அற்பமான அல்லது இரண்டாம்தர காப்புரிமைகளைக் கொண்டு, பொதுப்படையான மருந்துகளின் (generics) உற்பத்திக்கும் ஒப்புதலுக்கும் எதிராக அணிசேர முயற்சிக்கின்றன. இவற்றை நாம் எளிதாக மறந்துவிடுகிறோம்.

கோவிட் -19 இன் வருகையினூடாக, நோய்த்தடுப்பு மருந்துகளில் இத்தகைய ஏகபோகமானது, இப்போது மனித உயிர்களின் இழப்பில் வந்து கொண்டிருக்கிறது என்பது மிகவும் வேதனையானது. கிருமியைப் பரிசோதிக்கும் தொழில்நுட்பத்தில் ஏகபோகக் கட்டுப்பாடானது தடைக்கல்லாக உள்ளது.

உதாரணமாக, 3M (த்ரீ எம்) என்ற அமெரிக்க ஏகபோக நிறுவனம், கொரோனா நோய்த்தொற்றுத் தடுப்பு முகக் கவசங்களை “சுவாசக் கருவி” அல்லது “N95” என்று குறிப்பிடுகிறது. இது, 441 காப்புரிமைகளைக் கொண்டுள்ளது. இதனால், புதிய தயாரிப்பாளர்கள் மருத்துவத் தரத்திலான இத்தகைய முகக் கவசங்களை உற்பத்தி செய்வது மிகவும் கடினமாகிவிடுகிறது. (குறிப்பாக, சுகாதார தொழிலாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார் ஆகியோருக்கு கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள N95 முகக் கவசங்கள் மிக அவசியமானவை. இந்நிலையில் காப்புரிமை என்ற பெயரில் இந்நிறுவனம் N95 முகக் கவசங்கள் தயாரிப்பதை ஏகபோகமாக்கிக் கொண்டுள்ளது. இம்முகக்கவசங்கள் தயாரிக்கும் முதல் 10 சர்வதேச நிறுவனங்களில் எட்டு நிறுவனங்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவை. இந்தியாவில் கூட ரூ.150-க்கு விற்கப்பட்ட N95 முகக் கவசங்கள் தற்பொழுது ரூ.500 வரை விற்கப்படுவதாக எக்கானாமிக் டைம்ஸ் நாளேடு தெரிவிக்கிறது.)

இதைவிடக் கொடுமை என்னவென்றால், கொரோனாவுக்கு மிகவும் உறுதியான சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்படும் ரெம்டெசிவிர் (remdesivir), ஃபெவிபிராவிர் (favipiravir), லோபினாவிர் அல்லது ரிடோனா விர்  (lopinavir/ritonavir) எனப்படும் மருந்துகள் உலகின் பெரும்பகுதிகளில் பல்வேறு வகையான காப்புரிமைகளுடன் தீவிரமான செயல்பாட்டில் உள்ளன. ஏற்கெனவே இத்தகைய காப்புரிமைகள், போட்டியைத் தடுக்கின்றன; புதிய மருந்துகளின் விநியோகத்தையும் மலிவு விலையில் அவை கிடைப்பதையும் தடுத்து அச்சுறுத்துகின்றன.

(கொரோனா தொற்றுக்கான பரிசோதனை தடுப்பு மருந்துகள் மற்றும் நோயாளிக்கான தற்காலிக மருந்துகள் என மேற்கூறியவற்றை உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. ஹைட்ராக்ஸி க்ளோரோ க்வைன் (HCQ) என்பது மலேரியாவுக்கான மருந்தாகும். தற்போது கொரோனா தொற்றுநோய்த் தடுப்புக்கும் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மிரட்டலுக்கு அடிபணிந்து ஹைட்ராக்ஸி க்ளோரோ க்வைன் (HCQ) மருந்தை மோடி அரசு அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தது. ரெம்டெசிவிர் எனும் மருந்து எபோலா நோயைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால், அது சரியாகச் செயல்படவில்லை என்ற போதிலும் தற்போது கொரானாவிற்கு எதிராக நல்ல திறனுடன் செயல்படுவதாக கருதப்படுகிறது. இதனால், ரெம்டெசிவிர் மருந்தினை தயாரிக்கும் ஜிலீட் (Gilead) நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு அதிகரிக்க தொடங்கி விட்டது.)

இப்போது இரண்டு எதிர்காலங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றை நாம் தெரிவு செய்ய வேண்டியுள்ளது.

முதலாவதாக, நாம் வழக்கம் போலத் தொடர்ந்து பெரிய மருந்து நிறுவனங்களைச் சார்ந்திருப்போம்; மருத்துவ பரிசோதனைகள் மூலமாக கொரோனாவுக்கான சில ஆற்றல் மிக்க சிகிச்சைகள் கிடைக்கும் என்று நம்பியிருப்போம்; மேலும், இதர தொழில்நுட்பங்கள் மூலம் நோயைக் கண்டறிதல், சோதித்தறிதல், நோயாளியைக் காப்பாற்றுதல் முதலானவை உருவாகும் என்று நம்பிக்கை வைப்போம்.

எதிர்காலப் போக்கில், இத்தகைய கண்டுபிடிப்புகளுக்கு ஏகபோக மருந்து விநியோக நிறுவனங்கள் கட்டுப்பாட்டைச் செலுத்துவதற்கு காப்புரிமையானது அனுமதிக்கும். இந்த ஏகபோக நிறுவனங்கள்  மருந்துகளை மிக அதிக விலைக்கு விற்பார்கள்; அதன் மூலம் நோயாளிகளைக் காப்பாற்றும் கடமையைக் கைவிடுமாறு நிர்பந்திப்பார்கள். இவற்றில் பொதுமக்களின் தலையீடு வலுவாக இல்லாத நிலையில், மனித உயிர்கள் பறிக்கப்படும் கொடுமை தொடரும். குறிப்பாக வளரும் நாடுகளில் இது தீவிரமாக இருக்கும்.

எந்தவொரு கோவிட் -19 தடுப்பு மருந்துக்கும் இதே பிரச்சினை பொருந்தும். அமெரிக்க மருத்துவரும் கிருமியியல் துறையின் முக்கிய ஆய்வாளருமான ஜோனாஸ் சால்க்-இன் (Jonas Edward Salk) போலியோ தடுப்பூசியானது உடனடியாகவே இலவசமாகக் கிடைத்தது. அவ்வாறின்றி, இன்று சந்தைக்கு வரும் பெரும்பாலான தடுப்பூசிகள் காப்புரிமை பெற்றவையாக உள்ளன. எடுத்துக்காட்டாக, Pneumococcal conjugate vaccine (PCV13) எனப்படும் பன்முகப் பாணிகளைக் கொண்ட தற்போதைய நிமோனியா தடுப்பூசியானது குழந்தைகளுக்கு போடப்படுகிறது. இது பல நூறு டாலர்கள் விலையைக் கொண்டது. ஏனெனில், இது ஃபைசர் (Pfizer) என்ற மருந்து நிறுவனத்தின் ஏகபோகச் சொத்தாக உள்ளது. கவி (Gavi) எனப்படும் தடுப்பூசி மருந்து நிறுவனங்களின் கூட்டணியானது, வளரும் நாடுகளில் தடுப்பூசியின் சில செலவுகளை மானியமாக வழங்குகிறது என்றாலும், ஏராளமான மக்களால் அதைக்கூட விலை கொடுத்து வாங்க முடியாத நிலைமையே நீடிக்கிறது.

இந்தியாவில், ஆண்டுதோறும் நிமோனியா காய்ச்சலால் 1,00,000-க்கும் அதிகமான குழந்தைகள் மரணமடைகின்றன. மருந்துகள் இலவசமாகவோ, அல்லது மலிவாகவோ கிடைத்தால் இந்த அவலத்தைத் தடுக்க முடியும். ஆனால், இந்தத் தடுப்பூசி மருந்தானது ஃபைசர் (Pfizer) நிறுவனத்துக்கு 500 கோடி டாலர் வருவாயைத் தந்து கொண்டிருக்கும்போது, அதை அப்பன்னாட்டு ஏகபோக நிறுவனம் இழக்க முன்வருமா?

இரண்டாவதாக, மருந்துகள் இலவசமாகவோ, மலிவாகவோ கிடைக்கும் நோக்கத்திற்கு நடப்பிலுள்ள கட்டமைப்பானது பொருந்தாது என்பதை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். இக்கட்டமைப்பில், தனியார் ஏகபோகங்கள் அறிவுத் திறனிலிருந்து லாபம் பெறுகின்றன. இந்த அறிவுத் திறனானது பெரும்பாலும் பொதுத்துறை நிறுவனங்களால் உருவாக்கப்படுகிறது. உயிர் காக்கும் மருந்துகளைப் பெறுவதற்கான வாய்ப்பை மக்களுக்கு மறுப்பதன் மூலம், ஏகபோகங்கள் மக்களைக் கொலை செய்கின்றன என்று பொதுச் சுகாதார வழக்குரைஞர்களும் பிற அறிஞர்களும் நீண்டகாலமாகவே வாதிட்டு வந்துள்ளனர்.

இதற்கு மாறாக, ஒரு மாற்று கட்டமைப்பு உருவாகும் போதுதான் உயிர் காக்கும் மருந்துகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் மக்களுக்குக் கிடைக்கும். ஃபுளூ காய்ச்சலுக்கான மருந்தின் வருடாந்திர உற்பத்திக்கு உதவும் கட்டமைப்பு போன்றதுதான் அந்த மாற்றுகட்டமைப்பு அமையும்!

இத்தகைய மாற்று அணுகுமுறைகளுக்கு ஆதரவாக ஏற்கனவே சில இயக்கங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, கோஸ்டாரிகாவின் அரசாங்கம் அண்மையில் உலக சுகாதார அமைப்பை (WHO) அழைத்து, கோவிட் -19 சிகிச்சைகளுக்கான அறிவுசார் சொத்துரிமைகளைப் பொதுவாக்கிக் கொள்ளும் தன்னார்வ மையத்தை நிறுவுமாறு கோரியது; இது பல உற்பத்தியாளர்கள் புதிய மருந்துகளை விநியோகிக்க அனுமதியளிப்பதாகவும், நோயைக் கண்டறிவதை மலிவான விலையில் செய்வதாகவும் அமையும் என்று எடுத்துக் கூறியது.

காப்புரிமைகளைப் பொதுவாக்கிக் கொள்ளுதல் என்பது, புதிய யோசனை அல்ல. மருந்துகள் காப்புரிமை மையத்தின் மூலம், ஐக்கிய நாடுகள் சபையும் உலக சுகாதார அமைப்பும் பல ஆண்டுகளாக எச்.ஐ.வி / எய்ட்ஸ், ஹெபடைடிஸ்-சி (மஞ்சள் காமாலை) மற்றும் காசநோய்க்கான சிகிச்சைகளுக்கான வாய்ப்பை அதிகரிக்க முயன்று வருகின்றன. மேலும், கோவிட் -19 ஐ உள்ளடக்கும் வகையில் இப்போது இத்திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளன.

தற்போது உயிர்காக்கும் மருந்துகள் எவ்வாறு உருவாக்கப்பட்டு மக்களுக்குக் கிடைக்குமாறு செய்யப்படுகிறதோ, அந்த முறையை மாற்றியமைக்கும் திட்டமாகும். பரஸ்பர ஒத்துழைப்பையும் பகிர்ந்கொள்ளப்பட்ட அறிவையும் அடிப்படையாகக் கொண்டு, ஏகபோகத்தால் இயக்கப்படும் இக்கட்டமைப்பை மாற்றுவதே இதன் குறிக்கோளாகும்.

சிலர் கோவிட் -19 நெருக்கடியைத் தனித்தன்மை வாய்ந்தது என்று நிச்சயமாக வாதிடுவார்கள்; அல்லது கட்டாய உரிமங்கள் பெறவேண்டிய அச்சுறுத்தல் காரணமாக, மருந்து நிறுவனங்கள் சிறப்பாக நடந்து கொள்ளுமாறு நிர்பந்தத்தை ஏற்படுத்தக் கூடிய வழிமுறையை இது உருவாக்குகிறது என்று வாதிடுவார்கள்.

ஆனால், உடனடியாக இலாபம் பார்க்க வேண்டும் என்று கருதாத முன்னணி ஆராய்ச்சியாளர்களைத் தவிர, பெரிய மருந்து நிறுவனங்கள் மட்டும் அவற்றின் பொறுப்புணர்வைப் புரிந்து கொள்ளவில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக, ரெம்டெசிவிர் (remdesivir) மருந்தைத் தயாரிக்கும் நிறுவனமான ஜிலீட் (Gilead), “அனாதை மருந்து” என்று கைவிடப்பட்ட மருந்தின் நிலைக்கு விண்ணப்பித்ததன் மூலம் தற்போதைய கொரோனா நெருக்கடிக்குத் தீர்வு காண முயன்றது. இந்த விண்ணப்பத்தை ஏற்று அனுமதியளித்திருந்தால், இது அந்நிறுவனத்திற்கு ஒரு வலுவான ஏகபோக நிலையை உருவாக்கியிருக்கும். மேலும், பல லட்சம் டாலர் அளவுக்கு வரி விலக்கும் கிடைத்திருக்கும். (பொதுமக்களின் கடும் கண்டனத்தைத் தொடர்ந்து, பின்னர் அந்நிறுவனம் தனது விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றுள்ளது.)

மிக நீண்ட காலமாக, இன்றைய அறிவுசார் சொத்துரிமையின் ஆட்சி மிக அவசியமானது என்ற கட்டுக்கதையை நாம் பெற்றுள்ளோம். உலகளாவிய குளிர்க் காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் மறுமொழி அமைப்பினுடைய (GISRS) பயன்பாடுகளின் நிரூபிக்கப்பட்ட வெற்றியும் மற்றும் பிற “திறந்த அறிவியல்” செயல்பாடுகளும் அது உண்மையல்ல என்பதைக் காட்டுகிறது. கோவிட் -19 இறப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ள நிலையில், ஒவ்வொரு ஆண்டும் பல லட்சக்கணக்கான மனிதர்களை துன்பத்திற்கும் மரணத்திற்கும் சந்தடியில்லாமல் தள்ளுகின்ற ஒரு அமைப்பின் அறிவுத் திறனுக்கும் அறநெறிக்கும் எதிராக நாம் கேள்வி எழுப்ப வேண்டும்.

புதிய அணுகுமுறைக்கான நேரம் இது. ஏற்கெனவே பல கல்வியாளர்களும் கொள்கை வகுப்பாளர்களும் இதற்காக முன்வந்துள்ளனர். அவர்கள் வெறுமனே லாபத்திற்கானதாக அல்லாமல், சமூகத்துக்குப் பயனுள்ள மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்கான, நம்பிக்கைக்குரிய பல்வேறு ஆலோசனைகளுடன் முன்வந்துள்ளனர். இதனைத் தொடங்குவதற்கான ஒரு சிறந்த நேரம் வேறெப்போதும் இருந்ததில்லை

– புதியவன்

***

கட்டுரையாளர்கள் பற்றிய சிறு குறிப்பு : 

ஜோசப் இ ஸ்டிக்லிட்ஸ், அர்ஜுன் ஜெயதேவ், அச்சால் பிரபாலா
  • ஜோசப் இ ஸ்டிக்லிட்ஸ், பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்; கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்.
  • அர்ஜுன் ஜெயதேவ், அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியர்; புதிய பொருளாதார சிந்தனைக்கான நிறுவனத்தின் மூத்த பொருளாதார நிபுணர்.
  • அச்சல் பிரபாலா, ஷட்டில்வொர்த் அறக்கட்டளையின் ஆய்வு மாணவர்.
  • எமி காப்சைன்ஸ்கி, அமெரிக்காவைச் சேர்ந்த பெண் பேராசிரியர்; உலகளாவிய மருத்துவ – சுகாதார நீதிக்கான அமைப்பு, ஆய்வு ஒருங்கிணைப்பும் வெளிப்படைத் தன்மைக்குமான கூட்டுத்துவ அமைப்பு, யேல் பல்கலைக்கழக அரசியல் பொருளாதாரத் துறை ஆகியவற்றின் இணை இயக்குநர்; தகவல் கொள்கை, அறிவுசார் சொத்துரிமைச் சட்டம், அனைத்துலகச் சட்டம், அனைத்துலக நல்வாழ்வு முதலானவற்றில் ஆய்வுகளைச் செய்து வருபவர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க