ஊடக அறிக்கை

21.05.2020

கோவிட் 19 கொரோனா நச்சுக் கிருமியின் பெரும் தொற்றானது உலகளவில் பல லட்சம் மக்களைப் பாதித்தும், பல்லாயிரக்கணக்கான மக்களைப் பலிகொண்டும் வரும் அபாயச் சூழல் தொடர்கின்றது.

இலங்கையில் இதுவரை ஆயிரம் பேருக்கு மேல் இவ்வைரஸ் கிருமித் தொற்றுக்கு உள்ளானதுடன், 09 பேர் மரணமடைந்தும் உள்ளனர். இத் தொற்று சரியான முறையில் கையாளப்படாது விடப்படுவதனால், பாரிய அழிவுகள் ஏற்படக்கூடிய அபாய நிலை காணப்படுகின்றது.

இதுவரை இப் பெருந்தொற்றினாலும், அதன்மீதான அச்சத்தினாலும், அதைத் தடுக்க முன்னெடுக்கப்படும் ஊரடங்கு மற்றும் முழு முடக்கம் போன்ற நடவடிக்கைகளினாலும் நாட்டின் பொருளாதார, சமூகத் தளங்களில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதில் அதிகம் பாதிப்பை எதிர்கொள்வோர், ஏகப் பெரும்பான்மையினரான உழைக்கும் மக்களே ஆவர். வருமான முடக்கம், உணவுப் பொருட்களின் விலையேற்றமும் தட்டுப்பாடும், விவசாய உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படாமை, வேலையிழப்பு போன்ற பல்வேறு நெருக்கடிகள் இவர்களைப் பாதிக்கின்றன.

அரசாங்கம் வழங்குகின்ற 5,000 ரூபா நிதியானது அனைவருக்கும் சரியான முறையில் சென்றடையவில்லை. குறிப்பாகப் பல்வேறு வகையிலும் ஏமாற்றப்பட்டுவரும் லட்சக்கணக்கான பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இவ் ஐய்யாயிரம் ரூபா நிவாரண நிதியானது மறுக்கப்பட்டுள்ளமை கண்டனத்துக்குரியது. இதிலும் ஆரம்பத்தில் சமுர்த்தி ஊடாகக் கடனாக வழங்கப்பட்ட நிதி தொடர்பான குழப்பம் மக்கள் மத்தியில் நிலவி வருவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

அதேவேளை, அரசின் கொரோனா நிதியத்திற்கு இதுவரை நூறு கோடி ரூபாவுக்கு மேல் சேர்ந்துவிட்டபோதும், அதனைத் தேர்தல் உள்நோக்கத்துடன் ஜனாதிபதி தலைமையிலான ஆட்சியாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந் நிதியத்திற்கு அரசாங்க ஊழியர்கள் தமது ஒரு மாத கால சம்பளத்தை வழங்குமாறு ஜனாதிபதியின் செயலாளரால் விடுக்கப்பட்ட அறிவிப்பானது மிகவும் அபத்தமான ஒன்று.

படிக்க:
♦ ரேசனில் போடும் புழுத்த அரிசிதான் தமிழக அரசின் நிவாரண நடவடிக்கையா ?
♦ ஸ்டெர்லைட் படுகொலை : தூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் !

அதாவது, பல்வேறு ஊழல் மோசடிகளையும் செய்து மக்களின் பணத்தைச் சுருட்டிய அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோரிடமிருந்து ஒரு சதத்தைத்தானும் மீட்க முடியாத இவ் ஆட்சியாளர்கள். அத்தகைய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் எவருக்கும் எதிராக இதுவரை சிறியதானதொரு விசாரணையைக்கூட முன்னெடுக்காத நிலையில், பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல, பல்வேறு நெருக்கடிகளுடன் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவின் சுமையையும் கடன் தொல்லையையும் எதிர்கொண்டு போராடும் அரச ஊழியர்களிடம் அவர்களின் வருமானத்தைக் கோருவதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மேலும், இன்றைய அரசாங்கம் கொரோனா பெருந்தொற்றின் மறைவில் இனவாத, இராணுவ மயமாக்கல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கின்றமை கண்கூடு. இருபதுக்கு மேற்பட்ட இராணுவ அதிகாரிகள் சிவில் நிர்வாக உயர் பதவிகளுக்கு இதுவரை நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

அதேநேரம் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான செயலணிக்கு மருத்துவத் துறையைச் சேர்ந்தோரைத் தலைமையாக நியமிக்காமல், இராணுவத் தளபதியை நியமித்ததன் மூலம் அது இன்னும் ஆழமாக வெளிப்படுத்தப்பட்டது. ஆனால், முறையான விழிப்புணர்வோ, பாதுகாப்பு முன்னேற்பாடுகளோ இன்றிப் படையினர் இப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதன் மூலம், இன்று எமது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இரட்டிப்பாக இவர்களின் இச் செயல் வழிவகுத்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு, மீண்டும் முழு வீச்சுடன் திட்டமிட்டுக் கட்டவிழ்த்து விடப்பட்ட சிங்கள பௌத்த பேரினவாதப் பிரச்சாரம் இப்போதும் தொடர்கின்றது. குறிப்பாக இந் நெருக்கடி நேரத்திலும் முஸ்லீம் மக்களுக்கு எதிராகப் பல இனவாத முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. கைதுகளும் விசாரணைகளும் தடுத்துவைத்தல்களும் முடுக்கிவிடப்பட்டு, சிங்கள மக்கள் மத்தியில் அச்சமும் வெறுப்பும் பரப்பப்படுகின்றன. இஸ்லாமிய பண்பாட்டு நடைமுறைகளில் தலையிட்டு முன்பு பெண்களின் ஆடை தொடர்பாக கட்டுப்பாடுகளை விதித்ததுபோல், இப்போது இறந்தோரைப் புதைக்கும் அவர்களின் வழக்கத்தில் கை வைக்கின்றனர்.

அதேவேளை தற்போதைய கோட்டாபய மகிந்த அரசாங்கமானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் இணங்கிப் போவது போலவும், அடுத்த பாராளுமன்றத்தில் அரசியல் தீர்வு பற்றிப் பேசப் போவதாகவும், சிறைகளில் இருந்து அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதுபோலவும் காட்ட முனைவது, அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கு மக்களின் வாக்குகளை இலக்குவைத்த ஏமாற்று நாடகமேயாகும்.

ஆனால், மலையகத் தமிழ் மக்களுக்கு கொடுத்த ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவதான வாக்குறுதி இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. ஏனெனில், எந்தவொரு ஆட்சியாளரும் தோட்டத் தொழிலாளர்களைத் தொடர்ந்தும் கொத்தடிமைகள் போல நடத்திவரும் தோட்டக் கம்பனிகளின் இலாபத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்துவதை விரும்புவதில்லை.

2015 க்கு முந்திய நிலையைப் போன்று, மீண்டும் இவ் ஆட்சியாளர்களின் குடும்ப சர்வாதிகாரப் போக்கு தொடர்வதுடன், எதிர்வரவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையைப் பெறுவதன் ஊடாகத் தமது எதேச்சாதிகாரத்தைத் தொடர்வதை நோக்காகக் கொண்டே அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

எனவே, இவ் அரசாங்கத்தின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக, இலங்கையின் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், அன்றாட உழைப்பாளர்கள், அரசாங்க தனியார் துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் என அனைத்து உழைக்கும் மக்களும், ஒடுக்கப்படும் தேசிய இனங்களான தமிழ், முஸ்லீம், மலையகத் தமிழ் மக்களும் ஒன்றுபட்டு நிற்கவேண்டும். இந்நிலையில் எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி உழைக்கும் மக்களுடன் நின்று அவர்களின் கோரிக்கைகளுக்காக உறுதியுடன் போராடும்.

இவ் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் அரசியற் குழு சார்பாக அதன் பொதுச்செயலாளர் சி. கா. செந்திவேல் அவர்களால் வெளியிடப்படுகின்றது.

சி.கா. செந்திவேல்,
பொதுச் செயலாளர்,
பு.ஜ.மா.லெ கட்சி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க