கொரோனா : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி !

நண்பர்களே, 

டசென்னை மக்கள் உதவிக்குழு சார்பாக ஊரடங்கு அறிவித்த மறுவாரத்திலிருந்து, ஊரடங்கால் வேலை இல்லாது வருமானம் இன்றி சிரமப்படும் மக்களுக்கு உதவுவதற்காக இந்தக்குழு உருவாக்கி, இதுவரை 700 குடும்பங்களுக்கு, அரிசி, பருப்பு, எண்ணெய் என தேவையான மளிகை தொகுப்புகளை; நிவாரண உதவிகளை செய்து வருகிறோம்.

தொடர்ச்சியான ஊரடங்கால் தொழிற்சாலைகள், கடைகள் என எதுவும் இயங்கவில்லை. ஆகையால், இங்கு வேலைப் பார்த்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் வேலை இல்லை.  வருமானம் இல்லை.  சொந்த ஊர்களுக்கு சென்றுவிடலாம் என்றால், ரயில்களோ, பேருந்துகளோ இல்லை.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் என்ன செய்வது? அரசு நம்மைப் பார்த்துக்கொள்ளுமா? என்ற பயம் ஒருபுறம்.

இந்தியா முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள், தங்கள் குடும்பங்களோடு கால்நடையாகவும், சைக்கிளிலும் தொலைதூரங்களில் உள்ள தங்களுடைய சொந்த ஊருக்கு சென்று கொண்டே இருக்கிறார்கள். மத்திய மாநில அரசுகள் கைவிட்டு விட்டன. உச்சநீதிமன்றமும் அலட்சியமாக பதில் சொல்லியது.

படிக்க:
♦ தமிழரின் கலை இலக்கியப் படைப்பாக்க உருவாக்கத்தை விளக்கும் தொல்காப்பியம் | பொ.வேல்சாமி
♦ பொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா !

தமிழ்நாட்டிலும் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடக்கவும், சைக்கிளிலும் செல்ல ஆரம்பித்திருந்தனர். ஆகையால், அவர்களை கண்டடைந்து அவர்களுக்கு உதவி செய்யலாம் என்ற அடிப்படையில் தேட ஆரம்பித்தோம்.

அம்பத்தூர் தொழிற்பேடையில், மணலி பகுதிகளிலும் இருக்கிறார்கள் என செய்தி கேள்விப்பட்டு அங்கு போனால், பலரும் அங்கிருந்து கிளம்பி விட்டார்கள்.  பிறகு மாதவரம் பகுதியில் சிரமப்படும் புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்பதை அறிந்தோம்.

01/06/2020 அன்று காலையில் முப்பது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவியாக ஒவ்வொருவருக்கும் 5 கிலோ கோதுமை மாவு தொகுப்பை வழக்கறிஞர்கள் மில்டன், சரவணன்,  எழுத்தாளர் பாக்கியம் சங்கர், சமூக ஆர்வலர்களும் வந்து வழங்கினார்கள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

நாம் தொடர்ந்து செய்யும் நிவாரண உதவிகள் அறிந்து நமக்கு பல நண்பர்களும், மக்களும் தொடர்ந்து நன்கொடை கொடுத்து வருகிறார்கள். ஊரடங்கால் அவதிப்படும் தொழிலாளர்களின் நிலை உணர்ந்து, தாய்லாந்து நாட்டில் ரயாங் பகுதியைச் சார்ந்த தமிழ் ஆர்வலர்கள் திரு கார்த்திக், திரு. பாலசுப்பிரமணியன், திரு. யுவராஜ், திரு. சங்கர், திரு. அரவிந்தன், திரு. ரமேஷ் பரதன், திரு. மாணிக்கவேல், திரு. சரவணன் பாண்டி, திரு. விக்டர், திரு. மல்லிகார்ஜூனன், திரு. கணபதி. மற்றும் இன்னும் பெயர் வெளியிட விரும்பாத நண்பர்களும்  கடந்த 10 நாட்களில் நன்கொடையாக இதுவரை மூன்று தவணைகளாக ரூ. 80,100 நன்கொடையாக வழங்கியுள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

அவரவர் நட்பு வட்டங்களிலிருந்து உதவிகள் தந்து கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். ஒருபுறம் மக்களின் தேவைகளும் அதிகரித்து கொண்டே போகிறது, இதை கருத்தில் கொண்டு இயன்றவர்கள் நிவாரணங்களை வழங்கிடுமாறு கோருகிறோம் .

மக்கள் பணியில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளுங்கள். சிரமப்படுகிறவர்களும் எங்களை தொடர்புகொள்ளுங்கள்.

வடசென்னை மக்கள் உதவிக்குழு, தொலைபேசி எண்கள் :

  • 9941314359
  • 8825643335
  • 7397468117

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை.