மிழக அரசியல் சூழலில், இங்கு தேசியக் கட்சிகளுக்கு எவ்வித தனித்த சிறப்பான வாழ்வும் இல்லை என்பது சிறு குழந்தைக்குக் கூட தெரியும். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அரசியலில் ஈடுபட்டிருக்கும் குஷ்புவுக்கும் இது நன்றாகவே தெரியும். மேலும் தமிழகத்தில் பாஜக-வுக்கு இருக்கும் ஆதரவு நிலை என்ன என்பதும் குஷ்புவுக்கு நன்றாகத் தெரியும். அனைத்தையும் தாண்டி குஷ்பு ஏன் பாஜகவில் இணையவேண்டும்?

சொல்லப்போனால், காங்கிரசில் இருக்கும் பூசல்களின் அளவிற்கு பாஜகவிலும் உட்கட்சிப் பூசல்கள் அதிகம்; காங்கிரசில் பெண்களுக்குக் கொடுக்கப்படும் அரைகுறை முக்கியத்துவத்தில் பத்தில் ஒருபங்கு கூட பாஜகவில் கொடுக்கப்படாது. தனித்து நின்றால் காங்கிரசுக்குக் கூட பத்து ஓட்டு கிடைக்கும். ஆனால் தமிழகத்தில் பாஜகவுக்கு அதுகூட கிடைக்காது. இது எல்லாம் தெரிந்தும் குஷ்பு ஏன் பாஜக-வில் சேர்ந்தார்?

சொந்த ஊருக்குள் வெறும் வாய்ச்சவடால் அடிக்கத் தெரிந்தவர்களே ஏதேனும் ஒரு ஓட்டுக் கட்சியில் சேர்ந்து ஒரு வட்டம், மாவட்டம், எம்.எல்.ஏ., என ஏதாவது ஒரு பதவி கிடைத்துவிடாதா என ஏங்கிக் காத்துக் கொண்டிருக்கும் போது, ஒட்டு மொத்த தமிழகம் முழுவதும் பிரபலமாக அறியப்பட்ட குஷ்புவுக்கு அப்படி ஒரு எதிர்பார்ப்பு இருக்கத்தானே செய்யும்.

படிக்க :
♦ முருகன் – பாஜக – தமிழ் இந்து | ஒரு நாடகக் காதல் கதை !
♦ நெல்லை கண்ணன் கைது ! பாஜக ‘சிறப்புச்’ சேவையில் தமிழக அரசும் நிர்வாகமும் !

நியமன எம்.பி சீட்டுக்கு உத்தரவாதம் வழங்கப்பட்டதை ஒட்டியே குஷ்பு பாஜகவில் இணைந்தார் என்று கூறப்படுகிறது.  எப்படியாவது தமிழகத்தில் காலூன்றி விடவேண்டும் என மெனக்கெட்டுக் கொண்டிருக்கும் சங்க பரிவாரக் கும்பல் “எதைத் தின்றால் பித்தம் தெளியும்?” என்ற நிலையில்தான் தமிழக தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகியிருக்கிறது. அதனையொட்டியே, தலித் சமூகத்தைச் சேர்ந்த முருகனை தலைவராக நியமித்தது. கட்சியை ’வளர்க்க’, முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை முதல் கூலிப் படை மாஃபியாக்கள், கஞ்சா வியாபாரிகள் வரையில் அனைவரையும் கட்சிக்குள் அரவணைத்து ஒன்றிணைத்திருக்கிறது.

ஒருவேளை எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக முடிவு செய்தால், அத்தனை தொகுதிகளிலும் நிறுத்துவதற்கு முதலில் ஆட்கள் இருக்கிறதா என்பதே பரிசீலிக்கப்பட வேண்டிய முக்கியக் கேள்விதான். ஆகவே பாஜக-வைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் காலூன்ற அது விட்டெறியும் பல கற்களில் குஷ்புவும் ஒரு கல், அவ்வளவுதான். இதனால் பாஜகவுக்கும் கூடுதலாக நான்கு ஓட்டுக்கள் கிடைக்கும். குஷ்புவுக்கும் தனது நோக்கம் நிறைவேறியிருக்கும்.

மத்தியில் ஆளும் பாஜக – சங்க பரிவாரக் கும்பல், இந்தியா முழுவதும் பாசிசத்தை அமல்படுத்துவதில், குறிப்பாக தமிழகத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர தீவிரம் காட்டும் சூழலில், தமிழகத்தின் அரசியல் களத்தில் இருப்பவர்களின் முன் இரண்டு வழிகளே இருக்கின்றன. ஒன்று பாஜக-வை எதிர்ப்பது, அல்லது பாஜக-வோடு ஐக்கியமாகிவிடுவது.

நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்த குஷ்பு

பாஜக-வை எதிர்ப்பது என எடுத்துக் கொண்டால், முதலில் குறைந்தபட்ச கொள்கைப் பிடிப்பு இருக்க வேண்டும். தமக்கென தனிப்பட்ட கொள்கை இல்லையென்றாலும் கூட, இந்தச் சூழலில் பாசிச எதிர்ப்பையாவது உறுதியாக பற்றிக் கொள்ள வேண்டும். அப்படி ஒரு கொள்கைப் பிடிப்பு இல்லாதவர்கள், பாஜக-வை எதிர்க்கும் களத்தில் வேறொரு காரணத்திற்காகவும் இருக்கலாம். தொட்டறியத்தக்க பலன்கள் (பதவி, காண்ட்ராக்ட்) உறுதியாகக் கிடைக்கும் எனற உத்தரவாதம் இருக்க வேண்டும்.

இந்த இரண்டுமே இல்லாத நிலையில் குஷ்பு பாஜக-வில் ஐக்கியமாவதுதானே எதார்த்தமாக இருக்க முடியும்? ஆனால் காங்கிரசில் இருந்து வெளியேறிய குஷ்பு, சோனியாகாந்திக்கு எழுதிய கடிதத்தில், நியமன எம்பி பதவிக்காக காங்கிரசில் இருந்து விலகி பாஜக-வில் சேரப் போவதாக ஏதும் எழுதவில்லை. மாறாக, தனது பதவி விலகலுக்கான காரணமாக, பொதுமக்களால் அங்கீகரிக்கபடாத சிலர் கட்சிக்காக ‘உண்மையாகஉழைக்கும் தம்மைப் போன்றவர்களை நசுக்க விரும்புவதாக எழுதியிருக்கிறார்.

பொதுமக்களால் அங்கீகரிக்கப்படாத சிலர் என குஷ்பு யாரையாவது சொல்லிவிட்டுப் போகட்டும், அது நமது பிரச்சினையல்ல; இதைக் கூறும் குஷ்பு பொதுமக்களால் அங்கீகரிக்கப்பட்டவரா என்பதில்தான் பிரச்சினை. தமிழக பொதுமக்களில் பெரும்பான்மையினருக்கு குஷ்புவை நன்கு தெரியும் என்பதனால் குஷ்பு பொதுமக்களால் அங்கீகரிக்கப்பட்டவர் ஆகிவிட்டாரா ?

படிக்க :
♦ தி.மு.கவில் குஷ்புவா, குஷ்புவுக்கான தி.மு.கவா?
♦ “கற்பு”, கட்டற்ற பாலுறவு: குஷ்பு, திருமா, ராமதாஸ் – யார் சரி?

காங்கிரஸ் கட்சியில் இருக்கும் ஜோதிமணி, விஜயதாரணி போன்ற வேறு சில பெண் தலைவர்களை எடுத்துக் கொள்வோம். ஓட்டுக் கட்சியாக இருந்தாலும் தமது தொகுதி சார்ந்த அல்லது தமிழகம் சார்ந்த ஒவ்வொரு பிரச்சினையிலும் மக்களோடு களத்தில் இறங்கி நிற்பவர்கள்; அவர்கள் ஓட்டுக்காக நிற்கிறார்கள் என்றாலும்கூட களத்தில் இறங்கி நிற்கிறார்கள். ஆனால் அப்படி ஒரு வரலாறே இல்லாத குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இத்தனை ஆண்டுகளாக செய்து வந்தது என்ன ?

தேர்தல் சமயத்தில் பொதுக்கூட்ட மேடைகளை தனது நட்சத்திர மதிப்பைக் கொண்டு அலங்கரிக்கவும், அவ்வப்போது ஏதேனும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தவும்தான் காங்கிரசுக்கு குஷ்பு பயன்பட்டுவந்தார். மற்றபடி, இருக்கும் கொஞ்சநஞ்ச வாக்குகளைக் காப்பாற்றிக் கொள்ளும் – ஓட்டுக் கட்சிகளுக்கு அவசியமான – பணியில் அவர் ஈடுபட்டதுமில்லை. ஈடுபாடு காட்டியதுமில்லை.

இவருக்கு இருக்கும் ஒரே தகுதி, இவர் பிரபல்யமானவர்; கலைத் துறையின் மூலமாக பொதுமக்களுக்கு நன்கு அறியப்பட்டவர் என்பதுதான். கொள்கையில் பற்றுறுதி ஏதுமின்றி, தமது பிரபல்யத்தையே பெரும் தகுதியாகக் கருதிக் கொண்டு அதற்கு பொருத்தமான ‘முன்னேற்றத்தை’ எதிர்பார்த்திருந்த குஷ்பு, கட்சியிலிருந்து ஓடிப் போகாமல் இருந்திருந்தால்தான் நாம் அதிசயித்திருக்க வேண்டும் !

சரண்

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க