வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் நவம்பர் 5-ம் தேதியன்று சுமார் 500-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து இந்திய அளவிலான சாலை மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளன.

மத்திய மோடி அரசின் வேளாண் திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் கடுமையான போராட்டங்களை நடத்திவரும் சுமார் 500-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து குறுக்கு வழியில் நிறைவேற்றப்பட்ட வேளாண் திருத்தச் சட்டத்தையும் நிறைவேற்றப்படவிருக்கும் மின்சார திருத்த மசோதா 2020-ஐயும் திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் சாலை மறியல் போராட்டத்தை முன்னெடுக்க முடிவெடுத்துள்ளனர்.

அனைத்திந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் கமிட்டியின் சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் ஒன்று கூடிய பல்வேறு விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளின் கூட்டத்தில் நவம்பர் 5-ம் தேதியன்று நாடு தழுவிய சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

மேலும் நவம்பர் 26-27 தேதிகளில் “டெல்லி சலோ” (டெல்லியை நோக்கிச் செல்வோம்) போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் “சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் ம்ற்றும் மின்சார திருத்தச் சட்டம் – 2020 ஆகியவற்றை ரத்து செய்யக் கோரி நாடு முழுவதும் நடைபெறவுள்ள போராட்டத்தில் மாநில மற்றும் மண்டலவாரியாக பெருமளவிலான மக்களை ஒன்றுதிரட்டி கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளது.

வரும் நவம்பர் 5 அன்று நடைபெறவுள்ள இந்தப் போராட்டம், மத்திய அரசு அலுவலகங்களுக்கு முன்னரும், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் அலுவலகங்களுக்கு முன்னரும், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு முன்னரும் நடத்தப்படவேண்டும் என அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

படிக்க :
♦ வெங்காய விலை உயர்வு : வேளாண் திருத்தச் சட்டத்தின் முன்மாதிரி !
♦ உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் வேளாண் சந்தை சீர்திருத்தங்கள் !

பஞ்சாப் மாநிலத்தில் நடத்தப்பட்ட போராட்டங்களை ஒடுக்க, மத்திய அரசு பஞ்சாப் மாநிலத்திற்கான சரக்கு இரயில்களை தடுத்து நிறுத்தியது அப்பட்டமான மிரட்டலாகும் என்றும் இது ஜனநாயக அரசுக்கான தகுதியை இழந்துவிட்டது என்றும் தங்களது அறிக்கையில் விவசாய அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த அக்டோபர் 21 அன்று பஞ்சாப் விவசாயிகள், தங்களது இரயில் மறியல் போராட்த்திலிருந்து சரக்கு இரயில்களுக்கு விலக்கு கொடுத்த பின்னரும், மத்திய அரசு இன்றுவரை சரக்கு இரயில் போக்குவரத்துக்கான தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

சரக்கு இரயில் போக்குவரத்தைத் தடை செய்ததன் மூலம் பஞ்சாபிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் செய்து அதன் மூலம் விவசாயிகளைப் பணிய வைக்கும் உத்தியை மோடி அரசு கைக்கொண்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து தங்களது இரயில் மறியல் போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர் விவசாயிகள்.  எனினும் தொடர்ச்சியான போராட்டங்களை அறிவித்து தங்களது கோரிக்கையில் ஊன்றி நிற்கின்றனர்.

மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்ப் பெறும் வரையில் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபடுவது என முடிவெடுத்து களமிறங்கியிருக்கும் விவசாயிகளின் போராட்டத்தை நாமும் ஆதரிப்போம் ! அது நம் கடமையுமாகும்.


கர்ணன்
செய்தி ஆதாரம் : தி வயர்

 

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க