கொரானா ஊரடங்கை பயன்படுத்தி பல்வேறு ‘கல்விச் சீர்திருத்தங்களை’ மோடி அரசு செய்து வருகிறது. அதில் மிக முக்கியமானது இணையவழிக் கல்வித் திட்டமாகும். தேசியக் கல்விக் கொள்கையை ஒட்டி மே மாதம் பேசிய பிரதமர் மோடி இணையவழிக் கல்வி, இந்த கல்விக் கொள்கையின் மையமாக இருக்கும் என்றும் இணையவழிக் கல்வி, கல்வியின் தரத்தை மேம்படுத்துவதோடு இந்தியாவின் கல்வியை உலகத் தரத்திற்கு மேம்படுத்தும் என்றும் கூறினார்.
அதன் தொடர்ச்சியாக கடந்த ஏழு மாதங்களாகவே UGC, MHRD, NCERT மற்றும் AICTE போன்ற உயர் அமைப்புகளிலிருந்து வரும் சுற்றறிக்கைகள் பள்ளி மற்றும் உயர் கல்வியில் இணையவழிக் கல்வி முறையை முன்தள்ளுவதையே நோக்கமாக கொண்டுள்ளன. இணையவழிக் கல்வி முறைதான் மாற்றுக் கல்விமுறை என்று ஆளும்வர்க்க பிரதிநிதிகளும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால் எதார்த்தமோ இவர்கள் கூற்றுக்கு மாறாக உள்ளது.
படிக்க :
♦ புதிய தேசிய கல்வி கொள்கையின் நோக்கம் என்ன ? | பேராசிரியர் அனில் சத்கோபால் | CCCE
♦ கல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE
பீகார், சட்டீஸ்கர், ஒரிசா, ஜார்கண்ட் மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வு அரசுப் பள்ளிகளில் படிக்கக் கூடிய கிராமப்புற மாணவர்களில் 80% மாணவர்களுக்கு, ஊரடங்கு காலத்தில், கல்வி கிடைக்கவில்லை எனக் கூறுகிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இணையவழியில் வகுப்புகள் நடக்காததாலும் அவர்களின் குடும்ப வறுமை காரணமாகவும் கணிசமான அளவு மாணவர்கள் வேலைக்கு செல்வதாக ‘தி வயர்’ பத்திரிகை கூறுகிறது.
ஒரிசா மாநில பள்ளிக் கல்வி அமைச்சரோ, அம்மாநிலத்திலுள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் 33.33% மாணவர்கள் மட்டுமே இணையவழியில் கல்வி பெறுவதாகவும் மீதமுள்ள 66.67% மாணவர்கள் ஊரடங்கு காலகட்டத்தில் கல்வி கிடைக்கவே இல்லை என்றும் கூறுகிறார். உயர்கல்வியின் நிலையோ இன்னும் கேலிக்கூத்தானது. அரசு உயர்கல்வி நிறுவனங்களில் இணையவழி கல்விக்கான எவ்வித கட்டமைப்பு வசதிகளும் இல்லை. இவற்றில் மாணவர்களின் வருகைப் பதிவே 40% க்கும் குறைவுதான். தனியார் கல்லூரிகளின் நிலையை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறோம்.
இவையெல்லாம் இங்கொன்றும் அங்கொன்றுமாக தெரியவருகின்ற செய்திகள். இணையவழிக் கல்விமுறை பயன்படுத்தி கணிசமான எண்ணிக்கையிலான மாணவர்களை கல்வியிலிருந்தே விலக்கி வைத்துள்ளது மோடி அரசு. கணிணிகளும் இணையவசதிகளும் இந்தியக் குடும்பங்களில் பரவலாக இல்லை என்பது அரசுக்குத் தெரியும். தேசிய மாதிரி கணக்கெடுப்பு 2017-18 அறிக்கையின் படி 5-24 வயதிற்குட்பட்டவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட குடும்பங்களில் 8% குடும்பங்களில் மட்டுமே கணிணியும் இணையவசதியும் உள்ளது.
கடந்த எட்டு மாதகால அனுபவமோ மோடியின் கூற்றைப் பொய் என நிருபித்துள்ளது. இணையவழிக் கல்வி கிராமப்புற-ஏழை மாணவர்களை கல்வியிலிருந்து வெளியேற்றி இருக்கிறதே ஒழிய அது கல்வியின் தரத்தை உயர்த்தவில்லை. ஆனால் ஆளும் வர்க்கமோ இணையவழிக் கல்வியை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது.
உதாரணமாக இணையவழியில் பட்டப்படிப்புகளை வழங்குவதற்கான அனுமதியை சில கல்லூரிகளுக்கு UGC சமீபத்தில் வழங்கியுள்ளது. இதற்குப் பின்னால் தனியார் கல்வி முதலாளிகள், இணையதள நிறுவனங்கள், கல்வி தொழில் நுட்ப நிறுவனங்கள் மற்றும் நிதி மூலதனங்களின் நலன்களே ஒழிந்துள்ளன.
இணையவழிக் கல்வி : கல்விக் கொள்ளைக்கான நவீனத் திட்டம் என்ற தலைப்பில் மேனாள் மதுரைக் கல்லூரி முதல்வர் பேரா.இரா. முரளி அவர்கள் பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் முகநூல் பக்கத்தில் 10.11.2020 அன்று மாலை 6.30 மணிக்கு நேரலையில் சிறப்புரையாற்றுகிறார்.
Zoom Meeting ID : 857 3356 3148
Passcode : 921647
Facebook ID : Cordination Commitee for Common Education- Tamil Nadu
பங்கேற்கத் தவறாதீர்கள் !
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு – தமிழ்நாடு
உயர்கல்வி பாதுகாப்பு இயக்கம் – தமிழ்நாடு
9444380211, 9600582228, 9443852788