2020, நவம்பர் – 26 : அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்வோம் !

ன்பார்ந்த உழைக்கும் மக்களே,
வருகின்ற நவம்பர் 26-ம் தேதி அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. மோடி அரசின் தொடர்ச்சியான மக்கள் விரோத நடவடிக்கைகளே இந்தப் போராட்டத்திற்கான அறைகூவலாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

குறிப்பாக, மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, கார்ப்பரேட் முதலாளிகளது லாபத்தை அதிகரிக்கும் வேலைகளை மட்டுமே செய்து வருகிறது. கொரோனா நெருக்கடியால் பிழைப்பில்லாமல் மக்கள் அல்லல்பட்டு வரும் சூழலிலும், முதலாளிகளது சொத்து மதிப்பு 17% அதிகரித்துள்ளது. சந்தைப் போட்டி, விலை குறைப்பு, விளம்பரங்கள் மூலம் விற்பனையை அதிகரித்து லாபத்தை உயர்த்துவது என்ற நிலை காலாவதியாகிவிட்டது. தொழிற்சாலை உற்பத்தி குறைந்த கொரோனா பொது முடக்க நிலையிலும் முதலாளிகளது லாபம் உயர்கிறது. அதற்கேற்ற வகையில் தான் மோடி அரசு சட்டங்களை வடிவமைத்து வருகிறது.

படிக்க :
♦ தொழிலாளர் சட்டத் திருத்த மசோதா : ஒரு பார்வை | பா. விஜயகுமார்
♦ காவிரி – மின்சாரம் – தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தப் பார்க்கும் மோடி அரசு !

தொழிலாளர் சட்டத் திருத்தங்களும் அதனடிப்படையில் தான் செய்யப்படுகிறது. ஏற்கெனவே இருக்கின்ற 44 தொழிலாளர் நலச் சட்டங்களும் தொழில் நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகளை மட்டும் வரையறுக்கவில்லை. தொழில் நிறுவனங்கள் அவற்றைக் கடைப்பிடிக்கத் தவறும்பட்சத்தில், ஆலை நிர்வாகம் மீது விதிக்கப்பட வேண்டிய தண்டனைகள், அபராதங்கள் குறித்தும் அவற்றில் கூறப்பட்டிருக்கிறது. இதனுடன் இச்சட்டங்களின் அமலாக்கம் குறித்துக்  கண்காணிக்கவும், தொழிலாளி தனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக முறையிடும்போது அதனை விசாரிப்பதற்கு முறையாக இயங்கக்கூடிய கண்காணிப்பு மற்றும் விசாரணை அமைப்புகளையும் அவற்றின் அதிகாரங்களையும் வரையறுத்திருக்கிறது. ஏட்டளவில் மட்டுமே உள்ள இச்சட்ட விதிகளை கூட கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக திருத்தி தனது கார்ப்பரேட் சேவையை நிருபிக்கிறது மோடி அரசு.

தொழிலாளர் சட்டத் திருத்தம் பற்றிய தொழிற்சங்கங்களின் கருத்தை ஒரு பேச்சுக்குக் கூட கேட்கவில்லை. அரசின் தொழிலாளர் துறை அதிகாரிகளின் பரிந்துரைகள் கூட ஏற்கப்படாமல் குப்பைக் காகிதமாக்கிவிட்டு, ஒவ்வொரு திருத்தத்தையும் கார்ப்பரேட்டுக்களின் கையசைவுக்கு ஏற்றபடி மாற்றியுள்ளது மோடி கும்பல்.  இனி, தொழிலாளர்களுக்கென காகிதத்தில் உள்ள சட்டங்களைக் கூட பேசக் கூடாது, தொழிலாளர்கள் சங்கம் அமைத்து அமைப்பாகத் திரளக் கூடாது, பணிக்காலத்தில் குறைந்தபட்ச ஊதியம் கிடையாது, பணி மூப்புக்குப் பிறகான வயதான காலத்தில் ஓய்வூதியம், பணிக்கொடை என எதுவும் கேட்கக்கூடாது என்பதை சட்டரீதியாகவே நிலைநாட்டியுள்ளது.

மறுபுறம், தொழிற்சங்கம் அமைப்பது, கூட்டுப்பேர உரிமை, அதற்கான சட்டப்பூர்வ தொழிலாளர் நடவடிக்கைகளை ஒடுக்கும் வகையில் வேலைநிறுத்த உரிமையை அடியோடு ஒழித்துவிட்டது. தொழிற்சங்கம் மற்றும் தொழிலாளர் மீதான தண்டனை நடவடிக்கைகளைக் கடுமையாக்கியுள்ளது. இவற்றை எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி, நாடாளுமன்றத்தில் உள்ள தனது பெரும்பான்மை பலத்தின் மூலம் அவசர சட்டங்களாகக் கொண்டு வந்து விவாதங்கள் ஏதுமின்றி நிறைவேற்றி விட்டது.

தொழிலாளர் உரிமையை ஒழித்துக் கட்டி தொழிற்துறைக் கார்ப்பரேட்டுக்களுக்கு முதல்சுற்று வேலையை முடித்த மோடி அரசு, வேளாண் சட்டத் திருத்தங்கள் மூலம் விவசாயிகளின் உரிமைகளை ஒழித்து, விவசாயத்தில் கார்ப்பரேட்டுக்களைப் புகுத்த இரண்டாம் சுற்று வேலையைத் துவங்கியுள்ளது. இந்தியா விவசாய நாடாக இருந்தும், விவசாயிகள் பெரும்பான்மையாக இருந்தும் விவசாயத் தொழில் லாபமீட்டும் தொழிலாக இல்லை. இதற்கு அரசின் விவசாயக் கொள்கைகளும், விவசாயச் சட்டங்களும் தான் காரணம். தற்போது இத்துறையில் கார்ப்பரேட்டுக்கள் ஈடுபட உள்ளதால், அவர்களுக்கு ஏற்ற வகையில்தான் திருத்தங்களைச் செய்துள்ளது மோடி அரசு.

அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம், விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம், விவசாயிகளுக்கு (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) விலை உத்திரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவை சட்டம் ஆகியவை விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் எனவும், இந்த மசோதாக்களின் விதிகள், ‘விவசாய விளை பொருட்களில் தடையற்ற வர்த்தகத்தை அனுமதிப்பதோடு, விவசாயிகள் தங்களது விருப்பப்படி தனியார் முதலீட்டாளர்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்’ எனவும் கூறுகிறது. எனவே, விவசாயிகள் ‘முன்னை’ விட அதிகம் பயனடைவார்கள் எனவும் அரசு கூறுகிறது.

ஆனால், அரசாங்கத்தின் வாக்குறுதிகளை விவசாயிகள் யாரும் நம்பவில்லை. சந்தையை நிர்ணயிக்கும் முதலாளிகளிடம் பேரம் பேசும் திறன் விவசாயிகளிடம் இல்லை. சாகுபடி செய்ததை சேமித்து வைக்கும் அடிப்படை கட்டமைப்பு வசதியுமில்லை. சேமித்து வைத்து விற்பனை செய்யும்வரை விவசாயிகளை கடன் தொல்லை விட்டுவைப்பதில்லை. கார்ப்பரேட் தயவில்தான் விவசாயிகள் வாழவேண்டிய நிலை இருக்கும். பாஜக அரசால் கொண்டு வரப்பட்டிருக்கும் புதிய வேளாண் சட்டங்கள் இந்த நிலைமையை இன்னும் மோசமாக்கவே செய்யும். இதனை அனுபவித்து வரும் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்டு நாடு முழுவதும் பரந்துபட்ட அளவில் விவசாயிகள் இந்த வேளாண் மசோதாக்களை எதிர்த்து போராடி வருகின்றனர்.

கிராமப்புறங்கள் வரை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் அரசு கொள்முதல் செய்த நிலை படிப்படியாக ஒழிக்கப்பட்டுவிட்டது. தற்போது உள்ள அரசின் மூலமான கொள்முதலும் படிப்படியாக குறைந்து வருகிறது. அல்லது வியாபாரிகள் – அரசு அதிகாரிகளின் கூட்டுச்சதி மூலம், அரசின் கொள்முதல் தடுத்து மண்டி வியாபாரிகளின் கொள்ளைக்கு திருப்பப்படுகிறது.

குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் இருக்கும் போதே அரசு கொள்முதல் உறுதிசெய்யப்படாத பயிர்களை திறந்தவெளி சந்தையில் குறைந்த விலைக்கு விற்று விவசாயிகள் நட்டமடைகின்றர். அதனால், தாங்கள் கண்ணும் கருத்துமாக வளர்த்த காய்கறிகளை வீதியில் கொட்டுவது, வயலிலேயே பயிர்களை எரிப்பது, அதன் மீதே உழுது அழிப்பது என பெற்ற பிள்ளையையே கொல்லும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். பிள்ளையைக் கொல்ல முடியாதவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

விதை, உற்பத்தி முதல் கொள்முதல் வரை, விவசாயம் மொத்தமும் கார்ப்பரேட்டுக்களின் கையில் போனால், தொழிலாளர்களைப் போலவே விவசாயிகளும் அவர்களுக்கு நவீன கொத்தடிமைகளாக மாற்றப்பட்டு விடுவர். மோடி அரசின் தொழிலாளர் மற்றும் வேளாண் சட்ட திருத்தங்கள் தொழிலாளி – விவசாயிகளுக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும் பிரச்சனை அல்ல. உணவு உண்ணும் ஒவ்வொரு மனிதனின் பிரச்சனை.

மனிதனின் உயிர் வாழ்வுக்கு ஆதாரமான உணவுப் பொருட்கள் மீதான கட்டுப்பாடுகள் கார்ப்பரேட்டுக்களின் கையில் போகும். கார்ப்பரேட்டுக்கள் வைப்பது தான் விலையாக இருக்கும். எந்த விலையாக இருந்தாலும் வாங்க முடிந்தவர்கள் மட்டுமே அதை சாப்பிட்டு உயிர் வாழ முடியும். ஏழைகளாக இருக்கும் பெரும்பான்மை அடித்தட்டு உழைக்கும் மக்கள் செத்து மடிய வேண்டியது தான்.

இவற்றை எல்லாம் மறைக்க இந்திய – சீன எல்லைப் பிரச்சினை, ராமன் கோவில், கந்த சஷ்டி கவசம், வேல் யாத்திரை என இடத்திற்கு ஏற்ற வகையில் மக்களின் மத உணர்வையும், தேசிய வெறியையும் தூண்டி விட்டு திசை திருப்பி வருகிறது ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல். இதை எதிர்ப்பவர்களையும், கேள்வி கேட்பவர்களையும் மிரட்டுவது, கொலை செய்வது, ஊபா போன்ற கொடிய சட்டங்களைக் கொண்டு ஒடுக்குவது தனது பாசிச நடவடிக்கைகளை ஏவி வருகிறது.

எனவே, உழைக்கும் மக்களுக்கு ஒட்டுமொத்த எதிரியாக நம் முன் நிற்பது மோடி என்ற தனிநபர் அல்ல. மாறாக, மோடியை இயக்கும் ஆர்.எஸ்.எஸ். காவி சித்தாந்தமும், கார்ப்பரேட் அரசியலும் இணைந்த கார்ப்பரேட் காவி பாசிசம் தான். இந்த கார்ப்பரேட் – காவி பாசிசத்தை ஒட்டு மொத்தமாக வீழ்த்த, நவம்பர் 26 – அகில இந்திய வேலை நிறுத்தத்தை, அரசியல் போராட்டமாக மாற்றுவோம் !

* ஆலைகளையும், வயல்களையும் விட்டு வீதியில் இறங்குவோம் !
* மீண்டும் ஒரு டெல்லிக்கட்டைத் துவக்குவோம் !

இவண்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தமிழ்நாடு – புதுவை.
தொடர்புக்கு : 94444 42374

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க